குடும்பத்தினர்
அனைவரும் மெய்யாத்தாவின் அறையில் கூடி இருக்க சொந்தங்கள் யாருக்கும் இந்த
விவரங்கள் எதுவும் தெரிய வேண்டாம் என்று எண்ணி கதவை தாளிட்டு விட்டு குடும்ப பஞ்சாயத்து தொடங்கி வைக்கப்பட்டது.அதில்
குற்றவாளிக் கூண்டில் பார்த்திபன் இருக்க,அவனுக்கு எதிரில் பாஸ்கர் நின்று
கொண்டிருந்தான்.அவனது கண்களில் இருந்த ஆத்திரத்தை மொத்த குடும்பமும் உணர்ந்தது.
“நீயாடா இப்படி
செஞ்ச?”நம்ப முடியாமல் கேட்டார் ராஜன்...
“எனக்கு வேற
வழி தெரியலை அப்பா..எனக்கு அவளை ரொம்பவே பிடிச்சு இருந்தது.ஆனா அவங்க அண்ணன்
அவளுக்கு வேற இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டார்.அவளும் அதுக்கு
சம்மதம் சொல்லிட்டா...எங்கே எனக்கு கிடைக்காம போய்டுவாளோன்னு பயத்தில் அப்படி
செஞ்சிட்டேன்”
“நீங்க பேசுறது
உங்களுக்கே நியாயமா படுதா...நானும் தான் உங்க தங்கச்சியை காதலிச்சேன்..அதுக்காக
இப்படியா திடுதிப்புன்னு அவ கழுத்தில தாலியை கட்டிட்டேன்...உங்க எல்லாருக்கும்
பொறுமையா எடுத்து சொல்லி உங்க சம்மதம் கிடைச்ச பிறகு தானே அவ கழுத்தில் நான் தாலி
கட்டினேன்”
“உங்க
நிலைமையும் என் நிலைமையும் வேற வேற பாஸ்கர்...உங்க பேச்சை நாங்க எல்லாரும் காது
கொடுத்து கேட்டோம்...இங்கே அப்படி இல்லையே...சுகன்யாவுக்கு நாங்க வேற மாப்பிள்ளை
பார்க்க ஆரம்பிச்சு இருந்தா நீங்க என்ன செஞ்சு இருப்பீங்க?”
“வேணாம்
பார்த்திபா...நீங்க செஞ்ச தப்பை சரிகட்ட முயற்சி செய்யாதீங்க...இன்னைக்கு உங்க
முன்னாடி தானே திருமணப் பேச்சையே ஆரம்பிச்சு வச்சேன்...அவளை பொண்ணு பார்க்க
வந்தாங்களா..இல்லை நிச்சயம் தான் முடிஞ்சு போச்சா?...எதுவுமே இல்லையே...வெறும்
வாய் வார்த்தையா பேசினதுக்கு அவசரப்பட்டு எப்படி நீங்க சட்டுன்னு என்னோட தங்கச்சி
கழுத்தில் தாலி கட்டலாம்?”
‘ஆமா...அப்படியே
பொறுமையா பேசி இருந்தாலும் உன் தங்கச்சி என்னை கல்யாணம் செஞ்சுக்க சம்மதம் சொல்லி
இருப்பா பாரு...’என்று மனதுக்குள் எண்ணியவன் வெளியே முகத்தில் எதையும் காட்டிக்
கொள்ளாமல் பேசினான்.
“தப்பு தான்
மச்சான்...மன்னிச்சுருங்க...அவ எனக்கு கிடைக்காம போய்டுவாளோன்னு பயத்தில் இப்படி
நடந்துகிட்டேன்.”என்று அமைதியாகவே தன்னுடைய தவறை ஒத்துக்கொள்ள அடுத்து என்ன
பேசுவது என்றே பாஸ்கருக்கு புரியவில்லை.
“உங்க
தங்கச்சியை அப்படியே நான் இழுத்துட்டு போய் கல்யாணம் செஞ்சு இருந்தாலும் அதில்
ஒண்ணும் தப்பு இல்லை பார்த்திபா..ஏன்னா...நான் அவளை காதலிச்சதை விட அதிகமாவே அவ
என்னை காதலிச்சா...இங்கே அப்படி இல்லையே...இப்ப வரை ஏன் தங்கச்சி கண்ணில் இருந்து
அழுகை நிற்கலையே?”
‘உன்
தங்கச்சியும் என்னை விரும்புகிறாள் பாஸ்கர்..ஆனா அதை என்னால இந்த சபையில் சொல்ல
முடியாது...ஏற்கனவே ஒருமுறை அவளிடம் வாய் தவறி சொன்ன ஒற்றை வார்த்தை தான் என்னை
அவள் வாழ்வில் இருந்து பிரித்து வைத்திருக்கிறது..மறுபடியும் அதே தவறை நான் செய்ய
மாட்டேன்’ என்று எண்ணிக் கொண்டவன் மௌனமாகவே இருந்தான்.
ஆனால் அவன்
முகத்தில் பௌர்ணமியை மணந்தது குறித்து குற்றவுணர்ச்சி என்பது கடுகளவும்
இல்லை.அவனுக்கு வேறு வழி இல்லையே...
‘அவள்
பிடிவாதக்காரி...என்னுடைய ஒற்றை வார்த்தைக்காக நான்கு வருடம் என்னை பார்க்கவே
வராதவள்...இப்பொழுது வேறு ஒருவனை மணக்கவும் சம்மதித்து விட்ட பின் அவளின் பிடிவாதம்
அதிகமாகத் தான் ஆகி இருக்குன்னு எனக்கு தெரிஞ்ச பின்னாடி அப்படியே மௌனமாக அவளை
வேறு ஒருவனுக்கு தாரை வார்த்துக் கொடுக்க என்னால முடியாது மச்சான்’
“ஏன்
தம்பி...ஊருல இருக்கிற எல்லார்கிட்டயும் என் பையனைப் போல ஒருத்தன் உண்டான்னு நான்
பெருமை பேசிக்கிட்டு இருக்கேன்..நீ என்னடான்னா ஒரே நாள்ல இப்படி ஒரு காரியத்தை
செஞ்சு வச்சு இருக்கியே...அதுவும் உன் தங்கச்சி கல்யாணத்தப்போ...இதனால அவ வாழ்க்கை
பாதிக்கப்படுமே அப்படிங்கிற எண்ணமே இல்லையா உனக்கு?
நீ கட்டினது
சுகன்யாவோட நாத்தனாரை...அவ வாழ்க்கையும் சிக்கலாகிடுமே...ஒரே நேரத்தில் இரண்டு
தங்கச்சி வாழ்க்கையையும் கேள்வி குறி ஆக்கிட்டியேடா... உன்கிட்டே இருந்து இப்படி
ஒரு பொறுப்பில்லாத் தனத்தை நான் எதிர்ப்பார்க்கலை தம்பி”என்று அழுகையினூடே
பேசினார் செல்வி.
“அம்மா...”என்று
ஏதோ பேச வந்தவனை ஒற்றை கை உயர்த்தி தடுத்தவர் , “நீ எதுவும் பேச வேண்டாம்” என்று
சொல்லிவிட்டு கணவருக்கு பின்னால் போய் நின்று கொள்ள பார்த்திபன் தவித்துப் போனான்.
பார்த்திபன்
ஒற்றை ஆளாக எல்லாருக்கும் பதில் சொல்ல ஒரு அளவிற்கு மேல் சுபத்ராவின் மாமனார்
பரமசிவம் அவனுடைய சார்பாக பேசினார்.
“தாலி கட்டி
முடிச்சாச்சு பாஸ்கர்...அதுவும் மொத்த ஊரையும் வச்சுக்கிட்டு...இனி அதை மாத்த
முடியாது.என்ன தான் பார்த்திபன் செஞ்சது தப்பாவே இருந்தாலும் அவங்களுக்கு இடையில்
ஏற்பட்ட இந்த முடிச்சு கடவுளால் போடப்பட்டது.இதையே பேசி பிரச்சினை ஆக்காமல்
அடுத்து என்ன செய்றதுன்னு யோசிங்க”
அவரது பேச்சைத்
தொடர்ந்து மெய்யாத்தாவும் பேரனுக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார்.
“சரி
பாஸ்கர்...அவன் தான் இவ்வளவு தூரம் சொல்றானே...அவனும் உன் தங்கச்சியை விரும்பித்
தானே கல்யாணம் செஞ்சு இருக்கான்...அவனுக்கு என்ன குறைச்சல்? அவனைப் பத்தி நான்
சொல்லித் தான் உனக்கு தெரியணுமா?நீ பார்த்த மாப்பிள்ளையை விட ஆயிரம் மடங்கு
சிறந்தவன் என் பேரன்...”
“அதெல்லாம்
சரிதான் பாட்டி...ஆனா...பௌர்ணமி...”
“இனி யார்
நினைச்சாலும் நடந்த கல்யாணத்தை மாத்த முடியாது பாஸ்கரு...அவ தான் இந்த வீட்டு
மூத்த மருமக...என் மேல உனக்கு நம்பிக்கை இருந்தா இதை இப்படியே விடு...”
“தப்பா
எடுத்துக்காதீங்க பாட்டி...என் தங்கச்சி மனசார இங்கே இருக்க சம்மதிக்கலைன்னா நான்
அவளை இங்கே இருக்க விட மாட்டேன்...என்னோட கூட்டிட்டு போய்டுவேன்”
“அவ்வளவு
தானே...நீங்க எல்லாரும் கொஞ்சம் வெளியில் இருங்க...பாஸ்கர் நீயே போய் அவளை மட்டும் இங்கே அனுப்பி வை”என்று
சொல்லி விட எல்லாரும் அறையை விட்டு வெளியேறி காத்திருந்த நேரம் அழுது அழுது
வீங்கிய முகத்துடன் பௌர்ணமியை அழைத்து வந்தான் பாஸ்கர்.
அவளது
முகத்தைப் பார்த்ததும் பார்த்திபனின் உள்ளம் துடித்தது.அருகில் சென்று அணைத்து
ஆறுதல் கூறத் துடித்தவன் சூழ்நிலை கருதி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
அவள் மட்டுமாக
உள்ளே நுழைய பாஸ்கர் அறையின் வாசலிலேயே நின்று விட்டான்.அறைக்குள் அவள் சென்று சில
பல நிமிடங்கள் கழித்து கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவளின் முகத்தில் தெளிவு
இருந்தது.
“பாட்டி
எல்லாரையும் உள்ளே கூப்பிடறாங்க”கரகரத்த குரலாக இருந்தாலும் அவள் குரலில் இருந்த
தெளிவு பார்த்திபனை சிந்திக்க வைத்தது.
“பாஸ்கர்..உன்
தங்கச்சிகிட்டே நீயே கேளு...அவளுக்கு சம்மதமா
இல்லையான்னு?”என்று கூறிவிட்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து
கொண்டு அடுத்து நடக்கும் விஷயங்களை வேடிக்கைப் பார்க்கத் தயாரானார் மெய்யாத்தா.
“குட்டிமா...உன்னோட
சந்தோசம் தான் எனக்கு முக்கியம்...உனக்கு பிடிக்காத இந்த கல்யாணத்தை மதிச்சு நீ
இங்கே இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை...நீ என்னோடவே வந்து
தங்கிக்கலாம்...அதுக்கு அப்புறம் உனக்கு பார்த்த அந்த பையன் வீட்டிலேயே பேசி நானே
உனக்கு வேற கல்யாணத்தையும்...”
“வேண்டாம்
அண்ணா...நான் இங்கேயே இருக்கேன்.என்னோட கல்யாணம் முடிஞ்சு போச்சு.அதை யாராலும் இனி
மாத்த முடியாது...”
“இருந்தாலும்
உனக்கு இது பிடிக்காத கல்யாணம் ...”
“அண்ணா...தேவை
இல்லாத பேச்சுக்கள் வேண்டாம்...நான் தான் முடிவா சொல்றேனே...இனி இதுதான் என்னுடைய
புகுந்த வீடு...இதை இத்தோடு விடு...பிரச்சினையை பெருசு பண்ணாதே” என்று அவள் முடித்து
விட அதற்கு மேல் பாஸ்கர் தொடர்ந்து பேசி அவளை வற்புறுத்தவில்லை.அவனுக்கே கொஞ்சம்
குழப்பமாக இருந்தது.சற்று நேரம் முன்பு வரை அழுகையில் கரைந்தவள் இப்பொழுது
இப்படிப் பேசவும் அவன் திகைத்துத் தான் போனான்.
“அதுதான் அவளே
சொல்லிட்டாளே பாஸ்கர்...அப்புறமும் என்ன?தங்கச்சிக்கு கல்யாணம் நடந்து
முடிஞ்சுடுச்சு...சந்தோசமா இருக்க வேண்டியது தானே”என்று மெய்யாத்தா சொல்லிவிட
அதற்குப்பிறகு யாரும் அவரது பேச்சை மறுத்து பேசவில்லை.
கருத்துரையிடுக