மாலையில் ஈஸ்வரி கொடுத்த பலகாரங்களை உண்ட பின், “அப்படியே கொஞ்சம் காற்றாட நடந்துவிட்டு வரேன்மா” என்று சொல்லி சென்றவனின் கால்கள் நேராக அவனை தோப்பிற்கு தான் இழுத்து சென்றது.
செல்லும் வழி எங்கும் மனதில் ஒரு பரபரப்பு. அவளுக்கு அந்த இடத்தை அவர் எங்களுக்கு விற்க ஒத்துக்கொண்ட விஷயம் தெரிந்து இருக்குமா? என்னை பார்க்க அவள் தோப்பிற்கு வருவாளா?’ என்ற எதிர்ப்பார்ப்போடு தான் அங்கே சென்றான்.
நேரம் தான் போய்க் கொண்டே இருந்ததே தவிர அவள் வரவில்லை. இருட்டிய பிறகு இனி அவள் இங்கே வர வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்தவன் தளர்ந்த நடையுடன் வீட்டை நோக்கி சென்றான். இரவு உணவை கூட சாப்பிட்டதாக பெயர் பண்ணிக் கொண்டு எழுந்து விட்டான்.
அறைக்குள் சென்றவன் உறக்கம் வராமல் தவித்தான். தனக்குள் தோன்றும் இந்த உணர்விற்கு பெயர் என்ன என்று புரிந்து கொள்ள முடியாமல் திணறினான். உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து மெல்ல சிந்திக்க ஆரம்பித்தான் ஹரிஹரன்.
பெயர் தெரியா அந்த பெண்ணின் மீது தனக்கு ஏற்பட்டு இருப்பது நேசமா இல்லை வெறும் ஈர்ப்பா? அவளை நேரில் பார்க்கும் பொழுதெல்லாம் அள்ளி அணைத்துக் கொள்ள அவன் கைகள் பரபரத்தது.அவளை காணாமல் கடக்கும் நொடிகளின் கணம் கூடிக்கொண்டே போனது.ஹரிஹரன் குழம்பித் தவித்தான். அவனால் இனம் காண முடியவில்லை. ஹரிஹரனுக்கு இந்த உணர்வு புதிதாக இருந்தது. அதை எப்படி இனம் காண்பது என்று புரியாமல் தவித்தான். இதை போய் யாரிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வது? தாயிடமா அல்லது தந்தையிடமா?
இரவெல்லாம் தூங்காமல் விடிய விடிய இதே சிந்தனையில் இருந்தவன் விடியலின் போது தான் ஒரு முடிவுக்கு வந்தான். ‘இந்த விஷயத்தை முதலில் ஆறப் போட வேண்டும். கண்ணில் படாதது கருத்தில் இருந்தும் மறைந்து விடும் என்று ஒரு வார்த்தை உள்ளது இல்லையா? அதைப் போல இங்கிருந்து கிளம்பிய பிறகும் இவள் நினைவு தனக்கு வராமல் இருந்தால் இது வெறும் இனக் கவர்ச்சி மட்டும் தான்’என்று உறுதி செய்து கொள்ளலாம் என்று நினைத்தான்.
அதுவரை அந்த பெண்ணின் மனதை கலைக்கும் விதமாக தான் நடந்து கொள்ள கூடாது என்ற உறுதியையும் எடுத்துக் கொண்டான். (இதுக்கு முன்னாடி கூட அந்த பெண்ணை இனி பார்க்கவே கூடாதுன்னு நீ ஒரு உறுதிமொழி எடுத்த ராசா... அதை ஏற்கனவே காற்றில் பறக்க விட்டாச்சு. இதையாவது ஒழுங்காக காப்பாற்றுகிறாயா என்று பார்க்கலாம்).
விடிந்ததும் குளித்துவிட்டு நேராக தாயை தேடிச் சென்றான் ஹரிஹரன். விடிய விடிய தூங்காததால் சிவந்து இருந்த மகனின் முகத்தை பார்த்ததும் கொஞ்சம் பதட்டமானார் ஈஸ்வரி.
“என்ன தம்பி கண் எல்லாம் இப்படி சிவந்து போய் கிடக்கு. ராத்திரி சரியா தூங்கலையா?”
“அது ஒண்ணும் இல்லைமா... முதன்முதலா தொழிலில் ஒரு வெற்றி. அதுவும் உங்க இரண்டு பேர் முகத்திலயும் எவ்வளவு சந்தோசம். விடிய விடிய அதையே நினைச்சுக்கிட்டு இருந்தேனா அந்த சந்தோசத்துல தூக்கம் வரல” சட்டென்று வாயில் தோன்றிய ஒரு பொய்யை சொல்லி சமாளித்தான்.
“நல்ல பிள்ளை போ... இதற்காக தூக்கத்தை கெடுத்துக்க கூடாது தம்பி. இது ஆரம்பம் மட்டும் தான் இது போல இன்னும் எவ்வளவோ வெற்றிகளை நீ அடைய போகிறாய் பார்” அந்த தாயுள்ளம் மகனை எண்ணி பெருமை கொண்டது.
“முதல் தடவை இல்லையா அது தான் கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுட்டேன் போல மாம். இனி இப்படி நடக்காது” என்று எதையோ சொல்லி சமாளித்தவன் மெல்ல தாயிடம் பேச்சுக் கொடுத்தான்.
“மாம் அதான் அந்த இடத் தகராறு தான் நல்லபடியா முடிஞ்சுதே... எப்போ ஊருக்கு கிளம்பறோம்?” அவனுக்கு உடனே அங்கிருந்து கிளம்பும் எண்ணம் இல்லையென்றாலும் எப்பொழுது அந்த ஊரில் இருந்து கிளம்புவதாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது.
“நீ சொன்ன மாதிரி அந்த இடத்தோட ஒனருக்கு வேறு இடம் பார்க்கணும் இல்லையா? அது ஒண்ணும் கஷ்டம் இல்ல. புரோக்கர் நிறைய இடம் இருக்கு. இன்னைக்கு முடிஞ்சுடும்னு சொன்னார். நாளைக்கு ஒரு நாள் இருந்து ரெஜிஸ்ட்ரேஷனை முடிச்சுட்டு கிளம்பிட வேண்டியது தான்”
“இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருக்கலாமே மாம்... இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு” தயங்கித் தயங்கி தாயிடம் கேட்டான் ஹரிஹரன்.
“எனக்கும் இந்த இடம் பிடிச்சு தான் தம்பி இருக்கு. ஆனா நாம் இங்கேயே தங்கிட முடியாது இல்லையா? அப்பாவுக்கு அங்கே ஊரில் நிறைய வேலை இருக்கு. நாம் போய்த் தானே ஆகணும். வேணும்னா நீ மட்டும் ஒரு இரண்டு நாள் இங்கேயே தங்கிவிட்டு வாயேன். சாப்பாடு எல்லாம் நம்ம காவக்காரன் ஏற்பாடு செஞ்சுடுவார்”
“அதெல்லாம் வேணாம் மாம். பரவாயில்லை. மறுபடி அப்பாவுக்கு வொர்க் எல்லாம் ப்ரீ ஆனதும் ஒருநாள் எல்லாரும் சேர்ந்து வரலாம்” மனமில்லாமல் தான் சொன்னான் ஹரிஹரன்.உண்மையில் அவனுக்கு தொடர்ந்து இங்கே இருக்க பயமாக இருந்தது.அதிலும் தனியே அங்கே இருந்தால் தன்னை மீறி அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு விடுவோமோ என்ற பயம் அவனை ஆட்டுவித்தது.
“சரி தம்பி. கண்டிப்பா இன்னொரு முறை வரலாம். உனக்காக இங்கேயே ஒரு மாதம் தங்கலாம். சரிதானா”
“சரிம்மா... நான் நம்ம தோப்பு வரை போய்ட்டு வந்திடறேன்மா”
“என்ன தம்பி காலையில் டிபன் கூட சாப்பிடாமல் அங்கே போறியா? ஒரு அரை மணி நேரம் பொறு. டிபன் செஞ்சு தரேன். சாப்பிட்டு விட்டு கிளம்பு”
“அதெல்லாம் வேணாம் மாம். அதான் நம்ம தோப்பு முழுக்க பழமா கனிஞ்சு தொங்குதே. அதை பறிச்சு சாப்பிட்டுக்கறேன். இன்னைக்கு ஒரு நாள் தானே இதெல்லாம் செய்ய முடியும்” அவன் மனதில் நினைத்தது இன்று மட்டும் தானே அவளை பார்க்க முடியும் என்ற எண்ணத்தில் தான். அவனது தாயோ மகன் அந்த தோப்பை பற்றி மட்டும் சொல்வதாக நினைத்துக் கொண்டார். மெல்ல நடை போட்டு தோப்பிற்குள் நுழையப் போனவனை தடுத்தது அந்த குரல். வேறு யார்? அவள் தான்!
“ஒரு வழியா அந்த இடத்தை வாங்கிட்டீங்க போல” அவள் குரலில் மகிழ்ச்சியும் இல்லை அதே நேரம் வேதனையும் இல்லை. பொதுவாக கேட்டாள்.
“ஆமா... ரொம்ப தேங்க்ஸ். உன்னால தான் அதை வாங்க முடிஞ்சது. நேத்திக்கே உனக்கு தேங்க்ஸ் சொல்லலாம்னு தேடினேன். நீ தான் வரவில்லை” குறைபட்டுக் கொண்டான் ஹரிஹரன்.
“ஓ அதுவா நேத்து சாயந்திரம் எங்க அய்யனுக்கு லேசா தலைவலி இருந்துச்சா அதனால வீட்டை விட்டு அவர் வெளியில் போகல. அதனால நானும் வீட்டிலேயே தங்கிட்டேன்”
“இப்போ அவருக்கு தலைவலி குணமாகிடுச்சு போல” என்றான் லேசான சிரிப்புடன்.
“உங்களுக்கு எப்படி தெரியும்?” கேள்வியாக நிமிர்ந்தாள் அவள்.
“அது தான் நீ நகர்வலம் கிளம்பி விட்டாயே... அதை வைத்து தான் சொல்றேன்” சீண்டல் இருந்தது அவனின் குரலில்.
“கிண்டலா? உங்க நல்ல நேரம் இன்னைக்கு நான் என்னோட கவட்டையை வீட்டுலேயே மறந்து வச்சுட்டேன். இல்லைனா இன்னைக்கும் உங்க தலையை என்னோட கல்லு குறி பார்த்து இருக்கும்”
“அதில் வருத்தம் போல அம்மையாருக்கு... வேணும்னா ஒண்ணு செய்யலாம். நான் இங்கேயே இருக்கேன். நீ உங்க வீட்டுக்கு போய் கல்லை எடுத்துக் கொண்டு வந்து அடி. நான் வாங்கிக்கறேன்”
“இன்னைக்கு இல்லாவிட்டால் என்ன? நாளைக்கு அடிச்சுக்கறேன்” அவள் விளையாட்டாகத் தான் சொன்னாள்.
“ஹ்ம்ம் நாளை நீயும் வருவாய்... கல்லும் இருக்கும். நான் தான் இங்கே இருக்க மாட்டேன். ஊருக்கு கிளம்பி விடுவேன்” என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை நன்கு உற்றுப் பார்த்தான். அவள் முகத்தில் கவலையின் சாயல் எதுவும் தெரிகிறதா என்று.
“அப்படியா... சரி மறுபடி நீங்க எங்க ஊருக்கு வரும் போது என்னோட கல்லு ரெடியா இருக்கும்” என்று சொல்லி சலங்கையென சிரித்தாள்.
அவளின் பதிலில் ஒரு நொடி அவனது மனம் சுருங்கித் தான் போயிற்று. ‘என்னை விட்டு பிரிவதில் இவளுக்கு வருத்தம் இல்லையா?’என்று கலங்கியவன் நொடியில் தன்னை சமாளித்துக் கொண்டான்.
‘அவளுக்கு எப்படியும் மிஞ்சிப்போனால் ஒரு பதினாறு இல்லை பதினேழு வயது இருக்கும். இந்த வயதில் குழந்தைத்தனம் மாறாமல் விளையாட்டுத் தனமாக இருப்பவளை தவறாக நினைக்கக் கூடாது. என்னுடைய மனதை பற்றி எனக்கே உறுதியாக தெரியாத பொழுது அவளை குழப்ப வேண்டாம்’ என்ற முடிவுக்கு வந்தான்.
“சரி இப்பொழுதாவது உன் பேரை சொல்லலாமே?”
“அது எதுக்கு உங்களுக்கு?”
“பேர் தானே கேட்டேன். அதை கூட சொல்லக் கூடாதா?”
“இப்படி தெரியாதவங்ககிட்ட எல்லாம் பேர் சொன்னா எங்க அய்யன் திட்டுவாங்க” அவள் இயல்பாகத் தான் சொன்னாள். ஆனால் ஹரிஹரனின் முகம் தான் சட்டென இருண்டது.
“ தேங்க்ஸ்” என்று விறைப்பாக சொன்னவன் அவளை திரும்பியும் பாராமல் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்.
‘என்ன நினைச்சுகிட்டா இந்த பொண்ணு? பேர் தானே கேட்டேன். ஏதோ முன்னே பின்னே தெரியாதவன் கிட்ட சொல்ற மாதிரி என்கிட்டயும் சொல்றா... அப்படினா அவளுக்கு நான் யாரோ தானா? அவளுக்கு என் மேல் துளி கூட நல்ல எண்ணம் இல்லையா?’ இப்படி நினைக்க நினைக்க அவள் மேல் மனதை செலுத்திவிட்டு இப்பொழுது மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கும் தன்னுடைய நிலையை எண்ணி கோபம் கொண்டவனாய் அங்கிருந்து விறுவிறுவென நடந்து தோப்பிற்குள் நுழைந்தான்.
அவளை திரும்பியும் பாராமல் விடுவிடுவென நடந்து கொண்டே இருந்தவனின் காதில் அவளது குரல் மெலிதாக ஒலித்தது.
“என் பேர் நிலா... வெண்ணிலா”
நடந்து கொண்டே இருந்தவன் நின்று அவளை திரும்பி பார்த்தான். தான் சட்டென தான் கோபமாக கிளம்பி வந்ததும் இருந்த இடத்தை விட்டு அசையாமல் கண்களில் லேசான பயத்தோடு நின்று தாவணியின் நுனியை விரல்களில் சுற்றுவதும் பின் பிரிப்பதுமாக இருந்தாள். அதை பார்த்த ஹரிஹரனின் முகத்தில் இருந்த கோபம் மறைந்து மென்புன்னகை தோன்றியது.
அது அவளின் பெயரை அவள் சொன்னதற்காக மட்டும் இல்லை தன்னுடைய கோபம் அவளை பாதிக்கிறதே’ என்பதை எண்ணித்தான். சிரித்த முகமாகவே அவளை நோக்கி தன்னுடைய நடையை திருப்பியவன் துளைக்கும் பார்வையுடன் அவளுக்கு அருகில் வந்து நின்றான்.
தேவதை வருவாள்...
கருத்துரையிடுக