“நிலா” வாயிற்குள் ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டான்” அழகான பெயர்” அவளிடமே அவளது பெயரை பாராட்டி சொல்லவும் வேறு செய்தான்.
“அழகான பொண்ணுக்கு அழகான பேர் தான் வைப்பாங்க” கழுத்தை லேசாக நொடித்துக் கொண்டாள் வெண்ணிலா.
“அது தான் எனக்கும் அதிசயமா இருக்கு. அழகான பெயர் அதை உனக்கு வச்சு இருக்காங்களே... ஒருவேளை பேர் வைக்கும் போது நீ குப்புற படுத்து இருந்தியோ” கண்களில் சிரிப்புடன் கேட்டான்.
“இதுக்கு தான் நான் என்னோட பேரை சொல்ல மாட்டேன்னு சொன்னேன். இப்ப பாருங்க கிண்டல் பண்ணுறீங்க” அவளது சிணுங்கல் கூட அவனுக்கு சலங்கை ஒலியென இசைத்தது.
கையை காலை உதைத்துக் கொண்டு அவள் கோபப்படும் விதம் கூட அவனை அவள் பால் மேலும் ஈர்த்தது.அவளது சின்ன சின்ன செயல்களையும் வெகுவாக ரசித்தான்.ஓடிசென்று அவளை கட்டிக் கொள்ள வேண்டும் என்று மனம் பரபரக்க முயன்று வேறு பேச்சை பேசி மனதை திசை திருப்ப முயன்றான்.
“என்ன படிக்கிற?” அவளை சமாதானப்படுத்தும் விதமாக பேச்சை மாற்றினான் ஹரிஹரன்.
“இந்த வருஷம் பன்னிரெண்டாவது போறேன்”
“ஆஹா... ரொம்ப பெரிய படிப்பு தான்” அவன் கண்களில் இன்னும் சிரிப்பு அதிகமாகியது.
“பின்னே எங்க ஊர்லயே நான் தான் அதிகம் படிச்சு இருக்கேன் தெரியுமா? இன்னும் படிப்பேன்”
“கேட்கவே சந்தோசமா இருக்கு. பெண்கள் நிறைய படிக்கணும். நிறைய படிச்சு சொந்தக் காலில் நிற்க கத்துக்கணும். அது தான் நல்லது. அடுத்து என்ன படிக்கலாம்னு இருக்க?”
“தெரியலியே” குழந்தையென கைகளை விரித்து பதில் சொன்னாள் வெண்ணிலா.
“என்ன இப்படி சொல்ற? உனக்கு எதுவும் ஆசை இல்லையா? இந்த படிப்பு படிக்கணும்னு” ஹரிஹரினுக்கு ஆச்சரியமாக இருந்தது. அது எப்படி இந்த காலத்தில் ஒரு பெண் தன்னுடைய எதிர்காலத்தில் என்ன படிக்கப் போகிறோம் என்று கூட யோசிக்காமல் இருப்பாள் என்று நினைத்தான்.
“இது என்ன மாதிரியான பதில்? உனக்குன்னு எதுவும் ஆசை லட்சியம் அப்படி எல்லாம் எதுவும் இல்லையா?”
“அதெல்லாம் எதுக்கு?”அசட்டையாக பதில் வந்தது.
அவளுடைய பதிலில் அவனுக்கு தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. ‘இவளுக்கு உண்மையில் இதெல்லாம் தெரியவில்லையா இல்லை என்னை குழப்ப இப்படி பேசுகிறாளா?’
“அப்புறம் ஏன் படிக்கிற?ஒருவேளை இந்த வருஷம் படிப்பு முடிஞ்சதும் உங்க வீட்டில் உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சுடுவாங்களா?” தன்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக கேட்டாலும் இரண்டாவது கேள்விக்கு உண்டான பதிலை அவனது மனம் நிச்சயம் ஆவலுடன் எதிர்பார்த்தது என்பது நிஜம்...
“எங்க அய்யன் படிக்க சொன்னார் அதான் படிக்கறேன்.எங்க அய்யன் என்னை இப்பவே வேற வீட்டுக்கு அனுப்ப மாட்டார்.அவரால என்னைப் பிரிஞ்சு இருக்க முடியாது.எனக்கும் அப்படித்தான்.அதனால நாங்க இரண்டு பெரும் என்னோட படிப்பை ஒரு சாக்கா வச்சு இருக்கோம்” அவளது குரலில் அவளையும் அறியாமல் தந்தையின் பாசம் குறித்து பெருமை வழிந்தோடியதை குறித்துக் கொண்டான் ஹரிஹரன்.
“நாளை உங்க அப்பா படிக்க வேண்டாம்னு சொன்னா?”வேண்டுமென்றே இடக்காக கேள்வி கேட்டான்.
“நிப்பாட்டிடுவேன்” யோசிக்காமல் பதில் வந்தது அவளிடமிருந்து.
“உனக்கு டாக்டர் ஆகணும் என்ஜினியர் ஆகணும்னு எல்லாம் ஆசை இல்லையா?”
“இல்லை”
“ஒருவேளை உங்க அப்பா சொன்னா?”
“படிப்பேன்”
“ஒருவேளை உனக்கு பிடிக்காத படிப்பை எடுத்து உங்க அப்பா படிக்க சொன்னா அப்போ என்ன செய்வ?”
“அய்யன் சொன்ன பிறகு அது எனக்கு பிடித்து விடும்”
“இது என்ன மாதிரியான பதில் நிலா? உனக்குன்னு எந்த ஆசையும் இல்லையா?”
“தனிப்பட்ட எந்த ஆசையும் நிறைவேறாதுன்னு தெரிஞ்ச பிறகும் ஏன் ஆசைப்படணும்.அதுவும் இல்லாம இங்கே எல்லாருக்கும் எங்க அப்பா சொல்றது தான் வேத வாக்கு.அப்படி ஊருக்கே எது சரி,எது தப்புன்னு சொல்றவருக்கு தன்னோட பொண்ணுக்கு எது நல்லதுன்னு தெரியாதா?”
“என்ன சொல்ற நிலா? உன்னோட விருப்பத்துக்கு உங்க வீட்டில் தடை சொல்வாங்களா?”
“...”
“கேட்கிறேன் இல்ல. பதில் சொல்லு நிலா” பதில் சொல்ல ஊக்கினான் ஹரிஹரன்.
“தடுக்க மாட்டாங்க.ஆனா அப்பா பேச்சை மீறி ஒரு விஷயத்தை செய்து அவரை வருத்தப்பட வைக்க எனக்கு விருப்பம் இல்லை. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் இன்னைக்கு எங்க ஊர் அம்மன் கோவிலில் திருவிழா. ரொம்ப விசேஷமா இருக்கும். முடிஞ்சா இன்னிக்கு போய் பாருங்க... வருஷா வருஷம் எங்க அய்யனுக்கு தான் முதல் மரியாதை கிடைக்கும்” என்று சொன்னவள் அவனுடைய பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து துள்ளி ஓடி மறைந்து விட்டாள்.
‘என்ன பெண் இவள்? இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போதே இப்படி போய் விட்டாள்! அது என்ன இப்படி பிடிப்பு இல்லாமல் பேசுகிறாள். ஒருவேளை இவள் வீட்டில் இவளுக்கு அந்த அளவிற்கு சுதந்திரம் இல்லையோ? இல்லை இவளாகவே இப்படி இருக்கிறாளா? என்று நினைத்தவன் அவள் போகும் பாதையை திரும்பி திரும்பி பார்த்தபடியே நடந்தவன் தோப்பிற்கு போகாமல் வீட்டிற்கு திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
(பின்னே அவனுக்கு இதற்கு மேல் தோப்பில் என்ன வேலை? அது தான் வந்த வேலை முடிந்து விட்டதே )
ஹரிஹரனுக்கு என்று தனிப்பட்ட ஆர்வம் இல்லாவிட்டாலும் அவள் சொன்ன காரணத்திற்காகவே எப்படியாவது இன்று போய் திருவிழாவை பார்த்து விட வேண்டும் என்று நினைத்தான் ஹரிஹரன்.
கிளம்பிப்போய் அரை மணி நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்து விட்ட மகனை புரியாமல் பார்த்த தாயின் முகத்தை புன்முறுவலுடன் எதிர்கொண்டான் ஹரிஹரன்.
“ஒண்ணும் இல்லை மாம்... என்ன தான் நம்ம தோப்பு பழங்கள் ருசியா இருந்தாலும் என் மம்மியோட கை மணத்திற்கு ஈடு ஆகுமா? அதான் இங்கேயே உங்க கையால் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று ஓடி வந்து விட்டேன்” என்று சொல்லியவாறே தாயின் கழுத்தை கட்டிக் கொண்டான்.
“போடா வாலு... ஐஸ் வச்சது போதும். போய் அப்பாவை சாப்பிடக் கூட்டிக் கொண்டு வா”
“நான் ஏன் கூப்பிடணும்... அதோ அவரே வர்றாரே... ம் சீக்கிரம் மாம் பசிக்குது சாப்பாடு எடுத்து வைங்க”
“இதுக்குத்தான் அப்பவே சொன்னேன். சாப்பிட்டு விட்டு கிளம்புன்னு. எங்கே என் பேச்சை கேட்குற நீ” அவர் என்னமோ உணவு உண்ணாமல் சென்றதை பற்றித்தான் சொல்கிறார் என்று நினைத்து ஹரிஹரன் இயல்பாக சிரித்தான்.
ஆனால் அவர் குறிப்பிட்டது திருமணத்திற்கு அவன் சம்மதிக்காததை என்பது அவருக்கும் விஸ்வநாதனுக்கும் மட்டுமே புரிந்தது. மனைவியை பார்வையாலே கண்டித்த விஸ்வநாதன் மகனிடம் திரும்பி பேச ஆரம்பித்தார்.
“நாளைக்கு ஊருக்கு கிளம்பனும் ஹரி அம்மா சொன்னாளா?”
“ஹ்ம்ம் சொன்னாங்க டாடி... நான் இன்னைக்கு நைட் வந்து என்னோட திங்க்ஸ்சை பேக் பண்ணி வச்சிடறேன். அப்புறம் டாடி ஒரு சின்ன அப்பிளிகேஷன்”
“என்ன தம்பி?”
“இந்த ஊரில் இன்னைக்கு திருவிழான்னு ஊர்க்காரங்க சொன்னாங்க. நாமும் அதில் கலந்து கொள்வோமா? ஆர்வமாக கேட்டான் ஹரிஹரன்.
“என்ன தம்பி புதிதாக திருவிழாவில் எல்லாம் கலந்துக்கணும்னு சொல்ற?” விளையாட்டாக தான் கேட்டார் விஸ்வநாதன்.
“அது என்னப்பா அப்படி சொல்லிட்டீங்க! இதெல்லாம் நம்மோட கலாச்சாரம், பண்பாடு. இதை பத்தி எல்லாம் தெரிஞ்சுகிறது அவசியம் இல்லையா? நம்ம ஊரில் எல்லாம் இந்த அளவுக்கு கொண்டாடுவார்களா என்பது சந்தேகம் தான். அது மட்டும் இல்லாம...”
“தம்பி தம்பி போதும்... உனக்கு என்ன இப்போ இந்த திருவிழாக்கு போகணும் அவ்வளவு தானே... சரி போகலாம். அதுக்கு ஏன் மூச்சை இப்படி இழுத்து பிடிச்சு பேசிக்கிட்டே போற... எல்லாரும் கிளம்பி சாயந்திரம் போகலாம் சரிதானா?”
“சரிப்பா” என்று மகிழ்ச்சியோடு தலை ஆட்டினான் ஹரிஹரன். கை அதன் போக்கில் உணவை சாப்பிட்டு கொண்டு இருந்தாலும் அவன் மனம் முழுக்க மாலையில் தான் காணப் போகும் அந்த தேவதையையே சுற்றி வந்தது.
தேவதை வருவாள்...
கருத்துரையிடுக