திருவிழாவிற்கு கிளம்புகிறேன் என்று காலையில் இருந்தே வீட்டை ஒரு வழி ஆக்கிக் கொண்டு இருந்தான் ஹரிஹரன். என்ன உடை அணிவது என்று யோசித்து , யோசித்து வீடு முழுக்க ஊரில் இருந்து எடுத்து வந்த அத்தனை துணியையும் சிதற அடித்து வைத்து விட்டான். அவன் உடையை தேர்ந்து எடுத்த பிறகு தாயிற்கும் தந்தைக்கும் அவனே உடையை தேர்வு செய்து வைத்தான். அதைத்தான் போட்டாக வேண்டும் என்ற கட்டளை வேறு.
மகனின் நடவடிக்கை அனைத்தையும் சிரிப்போடும் ஆராய்ச்சியோடும் பார்த்துக் கொண்டு இருந்தனர் தாயும் தந்தையும். ஒருவழியாக மாலை நாலு மணி அளவில் தயாராகி கீழே வந்தான் ஹரிஹரன். இளம் நீல வண்ண ஷர்ட்டும் ஆகாய நீல நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்து இருந்தான். ஒரு கையை பேன்ட் பாக்கெட்டிற்குள் நுழைத்தவாறே நிதானமான நடையோடு மாடியில் இருந்து இறங்கி வந்தான். கண்களில் மட்டும் ஒரு சிறு பரபரப்பு.
தாயையும் தந்தையும் இரு பக்கமும் நடக்க விட்டு நடுவில் நடந்து வந்தான்.பெற்றவர்களின் கருத்தை கவராத வண்ணம் வேடிக்கை பார்ப்பதற்காக நகர்வது போல திருவிழா கூட்டத்திற்குள் புகுந்து கொண்டான். இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் அவனையும் அறியாமல் அவன் கண்கள் நாலாபுறமும் சுழன்று தன்னவளை தேடிக் கொண்டு இருந்தது.
நாலாபுறமும் பார்வையை சுழல விட்டவன் ஓரிடத்தில் வந்து பார்வையை நிறுத்தினான். கண்கள் அகலாது பார்வையை திருப்ப அவன் எடுத்த முயற்சிகள் எதுவும் அவன் மூளையை எட்டவில்லை போலும்.அவனது மனோதிடத்தை முற்றிலும் குலைக்கும் வண்ணம் பேரெழிலுடன் கோவில் வாசலில் இருந்து ஒரு நாலைந்து கடை தள்ளி இருந்த ஒரு வளையல் கடை முன் அவளுடைய பட்டாளத்துடன் நின்று வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தாள் வெண்ணிலா.
பச்சை நிற பட்டுப் பாவாடையும் சிவப்பு நிற தாவணியும் அவளை சுற்றி தழுவி இருக்க, நீண்ட கூந்தலை இரட்டை சடையாக பின்னி அதில் சரம் சரமாக மல்லிகை பூவை இருபுறமும் வழியுமாறு போட்டு இருந்தாள். எப்பொழுதும் அவள் கண்களுக்கு மை தீட்டியது இல்லை.
இன்று விசேஷ நாளின் காரணமாக கண்களில் மையிட்டு கை முழுக்க கண்ணாடி வளையல்கள் கலகலக்க, பட்டுப் பாவாடை தாவணியில் பட்டாம்பூச்சியென இருந்தாள்.செவ்வரளியை ஒத்த நிறத்தில் இருந்த அவளது அதரங்கள் ஹரிஹரனை பாடாய் படுத்தியது. அந்த இடத்தில் இருந்த அனைவரும் அன்போடும் பிரம்மிப்போடும் தன்னையே பார்த்தும் அது எதையும் கொஞ்சமும் உணராதவளாய் தன்னுடைய படையோடு சலசலத்துக் கொண்டு இருந்தாள் வெண்ணிலா.
சாதாரணமாக அவள் இருந்தாலே அவளை பார்க்கும் பொழுது ஹரிஹரனின் உள்ளத்தில் தாளம் தப்பி இதயம் துடிக்கும். இன்றைய அவளது அலங்காரமோ அவனை ஒரே அடியில் குப்புற வீழ்த்தியது எனலாம். வெகு சிரமப்பட்டு தன்னை சமாளித்துக் கொண்டு அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்து அவளை நோக்கி ஒரு எட்டு வைத்த பிறகு தான் புரிந்தது தான் தனியே வரவில்லை என்பது.
“அப்பா நீங்க ரெண்டு பேரும் கோவிலுக்குள்ள போய் சாமி கும்பிட்டு விட்டு வாங்க... அது வரை நான் இங்கே வெளியில் சுத்தி பார்த்துக்கிட்டு இருக்கேன்”
“சாமி உள்ளே இருக்கு. உனக்கு என்ன வெளியில் வேலை. நீயும் உள்ளே வா தம்பி சேர்ந்து சாமி கும்பிடலாம்” என்றார் ஈஸ்வரி.
“என்னோட சாமி வெளியே தான் இருக்கு” என்று வாயிற்க்குள் முணுமுணுத்தவன் வெளியே இயல்பாக பேசினான்.
“நான் சும்மா இந்த கடை எல்லாம் சுத்திப் பார்த்துட்டு வரேன்மா” என்று கூறியவன் எங்கே நின்று பேசினால் வேறு ஏதாவது சொல்லி தடுத்து விடுவார்களோ என்று எண்ணி அங்கிருந்து விறுவிறுவென வெளியேறினான்.
விஸ்வநாதனும் ஈஸ்வரியும் ஒருவரை ஒருவர் பார்த்து ஏதோ புரிந்தார் போல சிரித்துக் கொண்டு கோவிலை நோக்கி நடக்க தொடங்கினர். அவர்களும் இந்த வயதை கடந்து வந்தவர்கள் தானே!.மகனின் இந்த திடீர் நடவடிக்கைக்கு என்ன காரணமாக இருக்கும் என்று இருவரும் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டனர்.
ஹரிஹரன் மீண்டும் அதே கடைக்கு வந்து பார்த்த பொழுது அவள் அங்கே இல்லை. ‘எங்கே போனாள்?’ என்று தேடியவனின் கண்களுக்கு இரண்டு கடை தள்ளி இருந்த ஒரு ஐஸ் வண்டியும் அதை சுற்றி வளைத்துக் கொண்டு நின்ற அவளும் அவளுடைய பட்டாளமும் சிக்கியது. நொடியும் தாமதிக்காமல் மின்னலென விரைந்து அவளின் முன் போய் நின்றான்.
“ஹே! இங்கே என்ன பண்ணுற?”
“பார்த்தா தெரியலை... ஐஸ் வாங்கி சாப்பிடறோம். அண்ணா எனக்கு சிவப்பு ஒண்ணு, பச்சை ஒண்ணு தாங்க... இவனுக்கு ஆரஞ்சு” என்று அவள் பாட்டிற்கு ஐஸ் வண்டிக்காரனிடம் அடுக்கிக்கொண்டே போனாள். சுற்றி இருந்த அவளின் பட்டாளம் இது எதையும் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் பாட்டிற்கு குச்சி ஐஸை சுவைத்துக் கொண்டு இருந்தனர்.
“நிலா நீ என்ன சின்ன குழந்தையா? இப்படி எல்லாம் ரோட்டில் விற்கும் உணவுப்பொருட்களை எல்லாம் வாங்கி சாப்பிடக்கூடாது என்று உனக்கு தெரியாதா?” அக்கறையுடன் கடிந்து கொண்டான்.
“தெரியுமே... அதெல்லாம் உங்களை மாதிரி பட்டணத்துக்காரங்களுக்கு தான். நான் இங்கேயே பிறந்து வளர்ந்தவள் என் உடம்பு தாங்கும்” என்று சொல்லியவாறே கை முஷ்டியை தூக்கி அவனிடம் காட்டினாள். அவள் செய்த விதம் சிரிப்பு வந்தாலும் அடக்கிக்கொண்டு அவளையே ஆசையாகப் பார்த்துக் கொண்டு இருந்தான் ஹரிஹரன்.
அவளது இதழ்களுக்குள் மூழ்கி கரையும் அந்த குச்சி ஐஸாக தான் இல்லையே என்று ஏங்கியது அவன் மனம்.குச்சி ஐஸை பிடுங்கி எறிந்துவிட்டு அவளது அந்த இதழ்களை தான் சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் நேரம் கூடக்கூட அவனுக்குள் அதிகரித்துக்கொண்டே போனது.இதுநாள் வரை மனதளவில் அவன் போட்டு வைத்து இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் சர்வ அலங்காரத்துடன் அவளைப் பார்த்த அந்த நொடியிலேயே தூள் தூளானது.
ஹரிஹரனின் மனம் இப்பொழுது உறுதியாக நம்பியது. ‘எனக்கானவள் இவள் தான்.இவள் ஒருத்தியால் மட்டுமே என் உள்ளத்தில் காதலையும் கொண்டு வர முடிந்தது’.தாபத்துடன் அவளை அணுக சொல்லி அவனது உடலின் செல்கள் அனைத்தும் குத்தாட்டம் போட முயன்று அவனது மனதுக்கு கடிவாளம் போட்டான்.
பட்டுப் பாவாடை தாவணியில் கையில் இருந்த குச்சி ஐஸை ரசித்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தவள் ஹரிஹரனின் ஆசைப் பார்வையை கொஞ்சமும் உணரவேயில்லை. சிலபல குச்சி ஐஸை உள்ளே தள்ளிவிட்டு போதும் என்று ஆன பிறகு தான் மீண்டும் தன் அருகில் இருந்த ஹரிஹரனை பார்த்தாள்.
“உங்களுக்கும் வேணுமா?” குழந்தையாக கேட்டாள் அவள்.
ஹரிஹரன் முதலில் அவள் கேள்வியை உணரவேயில்லை. ஹரிஹரனின் கண்கள் அவள் இதழை தாகத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தது.அவள் ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டு இருக்க, அவனோ அவளை ரசித்துக் கொண்டு இருந்தான்.
அவன் பார்வை முழுதும் அவள் இதழில் தான் இருந்தது.பேசியே அவனை வேரோடு சாய்த்த அந்த அதரங்கள் இன்று பேசாமல் அவனை சாய்த்தது.அவள் உண்ட ஆரஞ்சு நிற குச்சி ஐஸ் அவளின் நாக்கோடு சேர்த்து உதட்டையும் ஆரஞ்சு நிறமாக மாற்றி இருந்தது.
பெருமுயற்சி செய்து அவளின் இதழில் இருந்து கண்களை எடுத்தவன் தன்னை நிலைபடுத்திக் கொள்ள சில வினாடிகள் எடுத்துக் கொண்டு ,அவளின் கேள்வியை நினைவு படுத்திக் கொண்ட பின்னரே அவளுக்கு பதில் அளித்தான்.
“வேணாம் வேணாம்... ஆமா உங்க வீட்டு ஆட்கள் எல்லாரும் எங்கே? யாரையும் காணோம்? உங்க அப்பாவிற்கு தான் முதல் மரியாதை நடக்கும்ன்னு சொன்ன அதெல்லாம் முடிஞ்சுடுச்சா?”
“ஐயையோ! மறந்தே போயிட்டேன். இந்நேரம் பூஜை ஆரம்பிச்சு இருக்குமே” என்று பதறியவள் கையில் இருந்த ஐஸ் குச்சிகளை தூக்கிப்போட்டு விட்டு வேறு எந்த சிந்தனையும் இன்றி அவளுடைய தம்பியின் கையை பிடித்துக்கொண்டு நேரே கோவிலை நோக்கி ஓடினாள்.
அவளின் பதட்டத்தை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் மெல்ல அவள் சென்ற திசையிலேயே சென்று கோவிலில் பூஜை நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
அங்கே கோவிலில் அப்பொழுது தான் பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்க மெல்ல நடந்து சென்றவள் அங்கே சன்னிதானத்திற்க்கு அருகில் நெருங்கி நின்று கொண்டு இருந்த அந்த குடும்பத்தை நோக்கி ஓடினாள். அவளை பார்த்ததும் பட்டி வேஷ்டி சட்டையில் நின்று கொண்டு இருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த மனிதர் திரும்பி அவளைப் பார்த்து வாஞ்சையாக சிரித்தார்.
“வா தாயி” என்று அவளின் தலையை பாசமாக வருடிக் கொடுத்தார் அவர். லேசான சிரிப்போடு அவரை எதிர்க்கொண்டு அவரின் அருகிலேயே பசை போட்டு ஒட்டிக் கொண்டாள் வெண்ணிலா. அங்கே போன பிறகு அவளின் பார்வை மறந்தும் வேறு புறம் திரும்பவில்லை.
அவர் தான் அவளின் அப்பாவாக இருக்கக்கூடும் என்று எண்ணிக் கொண்டாள்.அவருக்கு அருகிலேயே மங்களகரமான முகத்துடன் அகலக்கரை வைத்த பட்டுப்புடவையில் இருந்த பெண்மணி தான் நிச்சயம் வெண்ணிலாவின் தாயாராக இருக்க வேண்டும் என்று அவன் மனம் உறுதியாக சொன்னது அவர்கள் இருவரும் ஒரே ஜாடையில் இருந்தது தான் அதற்குக்காரணம்.
அவர்களுக்கு அருகிலேயே நின்று கொண்டு இருந்த வேறொரு குடும்பம் அவளது சித்தப்பா குடும்பமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன் பொறுமையாக அங்கே நடந்த நிகழ்வுகளை கவனிக்கத் தொடங்கினான்.
வெண்ணிலாவின் அப்பாவுக்கு கோவிலின் வழக்கமான அனைத்து விதமான முதல் மரியாதைகளும் செய்யப்பட்டுக் கொண்டு இருந்தது. இது அனைத்தையும் கூட்டத்தில் ஒருவனாக இருந்து பார்த்துக் கொண்டு இருந்தான் ஹரிஹரன். அதெல்லாம் முடிந்ததும் சன்னதியில் இருந்த அத்தனை கூட்டமும் கோவில் வாசலை நோக்கி நகர ஆரம்பித்தது.
அங்கேயும் அவர்களை பின் தொடர்ந்தான் ஹரிஹரன். அங்கே கோவில் மரத்திற்கு பூஜைகள் நடந்து கொண்டு இருக்கும் போதே திடீரென மழை வலுக்க மொத்த கூட்டமும் ஆளுக்கு ஒரு திசைக்குத் தெறித்து ஓடியது.
அங்கே அனைவரும் அருகில் இருந்த கோவில் மண்டபத்தில் ஒதுங்க, மழையில் நனைய ஆசைப்பட்ட வெண்ணிலாவின் மூன்று வயது தம்பி கணேசன் அங்கிருந்து ஓட அவனைப் பிடிக்க வெண்ணிலா அவர்களில் இருந்து பிரிந்து ஹரிஹரன் மட்டுமே தனித்து மழைக்காக ஒதுங்கி நின்ற அந்த ஒற்றைக் கூரையின் கீழே அவளும் வந்து நின்றாள்.
தேவதை வருவாள்...
கருத்துரையிடுக