அத்தியாயம் 28
‘எப்படி
இருவரும் வேறு வேறு ஆளாக இருக்க முடியும்? அவர் பெயர் ஹரின்னு தானே சொன்னார்? இவரோட பேரும் ஹரி தான். ஆனா இவர் ஏன் கொஞ்சமும் என்னை
தெரிந்தது போல காட்டிக் கொள்ளவில்லை? இவரின் ஒவ்வொரு செயல்களும் எனக்கு அவரைத் தான் நினைவு
படுத்துகிறது. ஆனால் இவருக்கு ஏன் என்னை அடையாளம் தெரியவில்லை.
இருவரும் ஒரே
ஆள் தானா? இல்லை நான் தான்
குழப்பிக் கொள்கிறேனா? இவரை பார்த்த நொடி முதல் எனக்குள் இந்த குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் இதற்கு உண்டான பதில் தான் என்னிடம் இல்லை. இதை எப்படி தெரிந்து கொள்வது? அவரிடமே கேட்டு
தெரிந்து கொள்வோமா?’ என்று ஆயிரம் யோசனைகள் அவளுக்குள்.
என்னவென்று
அவரிடம் கேட்பாய்? சில வருடங்களுக்கு முன் என்னிடம் காதல் சொன்னது நீங்கள் தானா என்றா?’ அவளது மனசாட்சி
அவளை கேலி பேசியது.
‘ அவர் நல்லா இருக்கணும்னு தானே நீ அவரை விட்டு
விலகி வந்தாய். இப்போ எதுக்கு இப்படி தேவை இல்லாமல் குழம்பிக் கொண்டு இருக்கிறாய்.
அவனாக சொன்னால் ஒழிய இதை தெரிந்து கொள்ள வேறு வழி இல்லை’ என்பதை உணர்ந்தவள் மெல்ல
எழுந்து அன்றைய பயண அலுப்பின் காரணமாக உடனே தூங்கியும் விட்டாள்.
நல்ல
உறக்கத்தின் பயனாக புத்துணர்வோடு எழுந்தவள் குளித்ததும் காபியை அறைக்கே வரவழைத்து
குடித்தாள். கிராமத்தில் யாருக்கும் தன்னை அடையாளம் தெரிந்து விடக் கூடாது
என்பதற்காக வேண்டுமென்றே அவள் வழக்கமாக அணியும் உடையை தவிர்த்து வேறு உடையை
அணிந்தாள். இந்த ஊருக்கு வருவதாக முடிவான பின், அளவை கூட சரி பார்க்காமல் சில
அல்ட்ரா மாடல் உடைகளை தன்னுடைய தோழியின் மூலம் வாங்கி வரச் சொல்லி இருந்தாள்.
அந்த உடையில்
இருந்து தான் ஒரு உடையை இப்பொழுது அணிவதற்கு தேர்ந்தெடுத்து அணிந்து இருந்தாள்.
அதன் அழகு, நிறம், அளவு இப்படி
எதையுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாது இயந்திரத் தன்மையுடன் அணியத் தொடங்கினாள் வெண்ணிலா.
கறுப்பு நிறத்தில் முட்டியை தொடும் குட்டை
பாவாடையும், அடர் சிவப்பு
நிறத்தில் உடலை இறுக்கிப் பிடித்த ஸ்லீவ்லெஸ் டாப்பும் அணிந்து கொண்டாள். இது
போன்ற உடைகள் அவள் இதுவரை அணிந்தது இல்லை. முட்டி வரை அணியக்கூடிய ஹை ஹீல்ஸ்
பூட்ஸையும் அணிந்தவள் கண்ணாடி முன் நின்று தன்னை சரிபார்த்து கொண்டாள்.
ஏதோ ஒன்று
குறைவது போல தோன்ற நல்ல அடர் சிகப்பில் லிப்ஸ்டிக்கை எடுத்து தன்னுடைய உதடுகளில்
தீட்டிக் கொண்டாள். வழக்கத்தை விட அதிகமாகவே மேக்கப் செய்து கொண்டாள். அறையை
விட்டு வெளியேறும் முன் முகத்தை மறைக்க கூலிங்கிளாசும், வட்ட வடிவத்தில் பாதி முகத்தையே மறைக்கக் கூடிய அளவில் இருந்த
பெரிய தொப்பியையும் அணிந்து கொண்டு அறையை
விட்டு வெளியேறினாள்.
ஹரிஹரன் பத்து
மணிக்கு போனால் போதும் என்று சொல்லி இருக்க சீக்கிரமே கிளம்பி விட்ட காரணத்தினால்
அறையிலேயே இருக்க பிடிக்காமல் வெளியே வந்தவள் நேராக நீச்சல் குளத்திற்கு சென்றாள்.
அங்கே குழந்தைகள் குளிக்கும் இடத்தில் அமர்ந்தவள் சர்வரிடம் ஜூஸ் சொல்லிவிட்டு
அவள் பாட்டிற்கு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.
அவள் மனம் கடந்த
காலத்தில் திளைத்துக் கொண்டு இருந்தது. குழந்தையாக தான் இருந்த பொழுது ஆறுகளில்
குளித்த நினைவுகளில் மனம் சிக்கி சுழன்றது.எந்த கவலையும்,கஷ்டமும் தெரியாமல்
பட்டாம் பூச்சி போல சிறகு விரித்து பறந்த அந்த நாட்கள் மீண்டும் கிடைக்காதா என்று
ஏங்கத் தொடங்கினாள் வெண்ணிலா.
அவள் போக்கில் சிந்தித்துக் கொண்டு இருந்தவள்
சுற்றுபுறத்தை கவனிக்கத் தவறி விட்டாள். அங்கிருந்த ஒரு சில ஆண்களின் எண்ணிக்கை
நேரம் கடக்க கடக்க அதிகரிக்க ஆரம்பித்தது. எல்லாரும் அவளை காட்டி குசுகுசுவென
தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டு இருந்தனர்.
அது எதையும்
அவள் உணரவில்லை. அவள் தாய் தந்தையோடு மகிழ்ச்சியாக தான் இருந்த அந்த நொடிகளை
மீண்டும் வாழ்ந்து விட துடித்தாள். கண்களை துயரத்தோடு இறுக மூடிக் கொண்டு அமர்ந்து
இருந்தாள்.
அவளது துன்பமோ, துயரம் நிறைந்த
கண்களோ சுற்றி இருந்த கழுகுகளின் கண்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கு தெரிந்தது
எல்லாம் அழகை வாரி இறைத்துக் கொண்டு இருந்த அவளது மேனி மட்டும் தான். விகாரமான
சிரிப்புடனும், அருவறுக்கும்
பார்வையுடனும் வெண்ணிலாவை சுற்றியே வட்டம் அடித்துக் கொண்டு இருந்தன அந்த
கழுகுகள். ஏதோ யோசனையில் மூழ்கி இருந்த வெண்ணிலாவின் கரங்கள் சுண்டி இழுக்கப்பட்டன
ஹரிஹரனால்.
“வா” ஒற்றை வார்த்தை தான். ஆனால் அதில் அத்தனை ஆத்திரம்
இருந்தது. அவள் மறுத்து பேசக் கூட இடம் தராமல் அவளது கையை பிடித்து தரதரவென
இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்று கதவை தாளிட்டு அவளை சோபாவில் தள்ளினான். அவனின்
இந்த தீடீர் செய்கையால் அதிர்ந்து போய் இருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு
திரும்பினாள்.
“என்ன இப்படி அநாகரீகமாக நடந்துக்கறீங்க?”
“பேசாதே... ஒரு வார்த்தை பேசினா உன்னை அப்படியே கொன்னு
புதைச்சுடுவேன்” ஒற்றை விரலை
உயர்த்தி மிரட்டியவன் அவள் கண்களுக்கு நரசிம்ம அவதாரமாகவே தோன்றினான். கப்பென்று
வாயை இறுக மூடிக் கொண்டாள்.
“என்ன நினைச்சுக்கிட்டு இருக்க? இது என்ன அமெரிக்காவா? இது கிராமம். இங்கே பேச்சு, நடை, உடை பாவனை எல்லாத்திலயும் ஒரு கண்ணியம் இருக்கணும்.
புரிஞ்சுதா?”
“இப்போ நான் என்ன செய்துட்டேன் இப்படி பேசறீங்க?”
“என்ன செய்தாயா?” கோபமாக அவளின் அருகே வந்தவன் அவளின் கையைப் பிடித்து
எழுப்பி நேரே அங்கிருந்த ஆளுயர கண்ணாடியின் முன் அவளை கொண்டு வந்து நிறுத்தினான்.
“நல்லா பார்... இப்படித்தான் டிரஸ் பண்ணுறதா?” அடக்கப்பட்ட
ஆத்திரத்துடன் பேசினான் ஹரிஹரன்.
கண்ணாடியில்
தன்னுடைய முழு உருவத்தை பார்த்த வெண்ணிலா அதிர்ந்து தான் போனாள். தன்னை யாருக்கும்
அடையாளம் தெரியக்கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருந்த வெண்ணிலா தன்னுடைய
முகத்தில் மட்டுமே கவனத்தை செலுத்தி இருந்தாள். தன்னுடைய முழு உடையையும் இப்பொழுது
தான் கவனித்தாள். தனக்குள்ளேயே கூனிக்குறுகி அப்படியே அமர்ந்து விட்டாள்.
அவளுடைய ஆடை
அவளுடைய அழகையும், அபாயமான வளைவுகளையும் அப்பட்டமாக எடுத்துக் காட்டியது. கண்ணாடியில் முகத்தை
மட்டுமே பார்த்த தான் முழு உருவத்தையும் பார்க்காமல் விட்டதை எண்ணி தன்னையே நொந்து
கொண்டாள்.
அவளின் அதிர்ந்த
முகத்தை பார்த்ததும் ஹரிஹரனின் கோபம் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது. அவள் எதற்காக
அப்படி உடை அணிந்து இருக்கிறாள் என்பதையும் அவனால் உணர முடிந்தது. மேற்கொண்டு
எதையும் பேசி அவளை காயப்படுத்த விரும்பாமல் தன்மையாகவே அவளிடம் பேசினான்.
“நீ நாகரீகமா இருக்கிறது தப்பு இல்லை. ஆனா அதுக்கான இடம் இது
இல்லை. அங்கே இருந்தவர்கள் அத்தனை பேரும் உன்னை தான் ஒரு மாதிரியாக பார்த்துக்
கொண்டு இருந்தார்கள். அதையும் நீ உணரவில்லை... இப்படித்தான் பொது இடத்தில் சுற்றிலும்
என்ன நடக்கிறது என்பதை கொஞ்சமும் உணராமல் நடந்து கொள்வதா? இதற்குத்தான் நான் நேற்று இரவே உன்னிடம் படித்து படித்து
சொன்னேன். இனியாவது இப்படி நடந்து கொள்ளாதே” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர முற்பட்டவனை தடுத்து
நிறுத்தியது வெண்ணிலாவின் ஆத்திரம் நிறைந்த குரல்.
ஏற்கனவே தன்
மீது சுய பச்சாதாபத்தில் இருந்த வெண்ணிலா ஹரிஹரனின் குற்றச்சாட்டில் ஆத்திரம்
அடைந்தாள். அவள் என்னவோ வேண்டுமென்றே இப்படி செய்ததை போல பேசுகிறானே என்ற எண்ணம்
தோன்றவும் சண்டைக் கோழியாக சிலிர்த்துக் கொண்டாள்.
“ஒரு பொண்ணு கொஞ்சம் நாகரீகமா டிரஸ் பண்ணி இருந்தா
ஆண்களுக்கு சிந்தனை எல்லாம் இப்படித் தான் போகுமா? நான் எப்படி இருந்தால் உங்களுக்கு என்ன? என் இஷ்டம்.
நான் எப்படி வேணா டிரஸ் பண்ணுவேன்”
“நீ இப்போ என்னுடைய பாதுகாப்பில் தான் இருக்கிற வெண்ணிலா...
அதை மறந்து விடாதே” விழியிடுங்க அவளை பார்த்து பேசினான்.
“என்ன?... உங்க பாதுகாப்பில் நான் இருக்கிறேனா? இப்படி எல்லாம்
வேற உங்களுக்கு நினைப்பு இருக்கா? என்னை காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும். உங்கள் உதவி
எனக்குத் தேவை இல்லை” அவளுடைய குரலில் அலட்சியம் இருந்தது.
ஹரிஹரனை அவளுடைய
குரலில் இருந்த அலட்சியம் சீண்டி விட்டு இருந்தது. “அப்படியா” என்று தாடையை தடவியவன் அழுத்தமான நடையுடன் மெல்ல அவள்
அருகில் நெருங்கினான்.
என்ன செய்ய
உத்தேசித்து இப்படி நெருங்குகிறான் என்பதை அவள் உணரும் முன்னமே அவனுடைய கைகள் அவளை
வளைத்து அணைத்து இருந்தது. அணைத்த நிலையில் இருந்து கொஞ்சமும் மாறாமல் அவளை
சுவருக்கு அருகில் இழுத்து சென்றவன் அவளது கைகள் இரண்டையும் அவளுடைய தலைக்கு மேலே
ஒற்றைக் கையால் அனாயாசமாக இறுகப் பிடித்துக் கொண்டான்.
அவனை கோபமாக
முறைத்துப் பார்க்க எண்ணி அவளது கண்களை நேருக்கு நேர் சந்தித்தவள் அதில் வழிந்த
தாபத்தில் வாயடைத்துப் போனாள். ஐந்து வருடங்களாக ஹரிஹரனின் மனதில் பொங்கிக் கொண்டு
இருக்கும் தாப நெருப்பு அவனது மூச்சுக் காற்றில் கலந்து அவள் மீது வெம்மையை
தெளிக்க, பாவையவள்
சித்தம் கலங்கித் தான் போனாள்.
ஏனெனில்
இப்பொழுது அவன் கண்களில் அவள் பார்த்துக் கொண்டு இருக்கும் காதல் சில
வருடங்களுக்கு முன் ஹரிஹரன் தன்னிடம் காதல் சொன்ன அந்த கணங்களில் இருந்ததை விட
இப்பொழுது அதிகரித்து இருந்தது. ‘இது அவன் தான். அவனே தான். ’ அவள் மனம் ஆனந்தக்
கூச்சலிட்டு உறுதி செய்தது.
ஒற்றைக் கையால்
அவளது கன்னங்களை பற்றியவன் அவள் முகத்தில் ஒவ்வொரு இடத்தையும் அங்குலம் அங்குலமாக
அளந்தான். பார்வையை மெல்ல கீழிறக்க வெண்ணிலா தான் தவித்துப் போய் கண்களை இறுக
மூடிக் கொண்டாள்.
ஹரிஹரன் அவளை
தொடுவதற்கு முன் வெறுமனே அவளை பயமுறுத்த மட்டும் தான் எண்ணி இருந்தான்.ஆனால்
மூச்சுக் காற்றை உணரும் தூரத்தில் எப்பொழுது அவளை பார்த்தானோ அப்பொழுதே அவனின்
உள்மனதில் இத்தனை நாளாய் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்த காதல் வேட்கை
அவனுக்குள் தீயை பற்ற வைத்தது.
மெல்ல அவளின்
அதரங்களை நோக்கி குனிந்தவன் கடைசி நொடியில் தன்னை சமாளித்துக் கொண்டு
நிமிர்ந்தான். ஏற்கனவே ஒரு முறை இப்படி ஒரு காரியத்தை செய்தது அவனுடைய நினைவில் ஆட
வெகுவாக பிரயத்தனப்பட்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்.
மூடிய இமைக்குள்
ஆடிய கருவிழிகள் அவனை மேலும் அழைக்க, கை வளைவுக்குள் இருக்கும் தன்னுடைய காதலியை ஆலிங்கனம்
செய்து அவளின் இதழில் தன்னுடைய கிறுக்கலை எழுத முடியாமல் தடுத்த தன்னுடைய விதியை
நொந்து கொண்டு அவளது முகத்துக்கு நேராக சொடுக்கு போட்டான்.
“இது தான் உன்னை நீயே காப்பாற்றிக் கொள்ளும் லட்சணமா?” அவனுடைய குரலில்
கோபமோ,குத்தலோ இல்லை. ஆனால் அவனுடைய வார்த்தைகள் வெண்ணிலாவை காயப்படுத்தியது
நிஜம்.
சட்டென
நிகழ்விற்கு திரும்பியவள் தன்னுடைய கைகளை அவனிடம் இருந்து பிரித்துக் கொள்ள
போராடினாள். அவளுடைய தற்காப்புக் கலைகள் எதுவும் அவனிடம் செல்லுபடியாகாமல் போக, அவனை நோக்கி
விரலை கூட அசைக்க விரும்பாத தன்னுடைய மனதை எண்ணி கோபம் கொண்டாள். தன் மீது எழுந்த
ஆத்திரத்தில் அவனை உறுத்து விழித்தாள்.
“இனியாவது இப்படி அசட்டுத்தனமாக பேசாமல் ஒழுங்காக நடந்து
கொள். ஒருத்தன் வந்தா நீ சமாளிப்பாய். ஐந்து பேர் வந்தா... உன்னுடைய
புத்திசாலித்தனத்தை கொஞ்சம் இப்படி நல்ல விதமாகவும் பயன்படுத்தினாய் என்றால் நான்
கொஞ்சம் சந்தோசப் படுவேன். என்ன நடந்தாலும் சரி எதுக்காகவும் உன்னுடைய சுயத்தை நீ
இழக்கக்கூடாது வெண்ணிலா. அது ரொம்ப பெரிய தப்பு. சீக்கிரம் வேற டிரஸ் மாத்திட்டு
வா. நாம் கிளம்பலாம். டிபனை கூட நாம் அங்கேயே போய் சாப்பிட்டுக்கலாம்” என்று
சொல்லிவிட்டு ஹரிஹரன் அங்கிருந்து வெளியேற வெண்ணிலா அவனுடைய கடைசி வரிகளில்
உறைந்து போய் இருந்தாள்.
‘புத்தியை
நல்லவிதமா பயன்படுத்த சொன்னாரே... அப்படின்னா என்ன அர்த்தம்? அவருக்கு
என்னுடைய கடந்த காலத்தில் நடந்தது எதுவும் தெரிந்து விட்டதோ’
கருத்துரையிடுக