12
“எனக்குத் தெரியலை அண்ணா...நான் அவங்க எனக்கு முன்னாடி வந்து
இருப்பாங்கன்னு நினைச்சேனே...”என்ன சொல்வதென்றே புரியாமல் முழித்தாள் சுபத்ரா.
“என்ன நடந்துச்சு சுபத்ரா...தெளிவா சொல்லு...”தங்கையையும் அதட்ட
முடியாமல் மனைவியின் நிலையையும் அறிந்து கொள்ள முடியாமல் கையைப் பிசைந்தான்
பார்த்திபன்.
“அண்ணா...நாங்க ஓடைக்கு தண்ணி எடுக்கப் போனப்போ ஓடைக்கு அந்தப்பக்கம்
ஏதோ பயங்கரமான சத்தம் கேட்டுச்சு...நானும் அண்ணியும் பயந்து போய் தண்ணி எடுக்கிறதை
நிறுத்திட்டு தண்ணியை விட்டு வெளியே வந்து என்ன சத்தம்ன்னு
பார்த்தோம்...அப்போ...அப்போ..அந்தப் பக்கமா ஒரு ஒத்தை காட்டெருமை வந்துக்கிட்டு
இருந்துச்சு...எங்களைப் பார்த்ததும் வெறி வந்த மாதிரி ஆக்ரோஷமா எங்களை நோக்கி ஒடி
வர ஆரம்பிச்சுது.
நானும் அண்ணியும் பயந்து போய் ஒடி வர ஆரம்பிச்சோம்...அண்ணி என் கூடவே
வந்துட்டு தான் இருந்தாங்க...ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பி பார்த்தப்போ அவங்க
என் பின்னாடி வரலை...ஒருவேளை எனக்கு முன்னாடியே இங்கே வந்து இருப்பாங்களோனு
நினைச்சு தான் வேகமா ஒடி வந்தேன்” என்று மூச்சு வாங்கிக் கொண்டே அவள் சொல்ல
பார்த்திபனின் தலை கிறுகிறுத்தது.
அவள் பேசியதை கேட்ட அடுத்த நொடி எதைப் பற்றியும் யோசிக்காமல்
காட்டுக்குள் ஓடை இருந்த பக்கம் ஓடத் தொடங்கினான் பார்த்திபன்...
எங்கு பார்த்தாலும் மரங்கள்...மரங்கள்..மரங்கள் மட்டுமே முதலில் ஓடை
இருந்த பகுதிக்கு சென்றவன் அங்கிருந்து எந்தப் பக்கமாக ஓடத் தொடங்கி இருப்பார்கள்
என்பது புரியாமல் ஒவ்வொரு திசையாக பைத்தியம் பிடித்தவனைப் போல அவளைத் தேடத்
தொடங்கினான்.
“பொம்மிம்மா” என்ற அவனின் கதறல் காடு முழுக்க எதிரொலித்தது.
எந்த திசை செல்வது செல்கிறோம் என்பது கூட நினைவில் இல்லாமல் வெறி வந்த
மாதிரி ஓடியவன் ஒரு இடத்தில் அப்படியே ஆணி அடித்தவன் போல நின்று விட்டான்.
சற்று தொலைவில் இருந்த குன்றின் மேல் அவளது புடவை தலைப்பு மட்டுமாக
காற்றில் ஆட...உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினான் பார்த்திபன்.
குன்றின் மேலேயே விழுந்து கிடந்தாள் பௌர்ணமி.எருமைக்கு பயந்து
குன்றின் மீது ஏறும் பொழுது கால் தடுக்கி விழுந்து விட்டாள் போல...கை,கால்களில்
ஆங்காங்கே சிராய்ப்பு ஏற்பட்டு இருக்க,நெற்றியின் வலது புறத்தில் காயம் ஏற்பட்டு
இருந்தது.அவளது நெஞ்சில் காதை வைத்து பதைபதைப்புடன் கேட்க அவளது இதயத்தின் துல்லியமான ஒலியை கேட்ட
பின்னரே இவனுக்கு உயிர் வந்தது.
கைகளில் அவளை அள்ளிக் கொண்டவன் இப்பொழுது எப்படி வெளியே செல்வது என்று
சற்று நேரம் மலைத்துப் போய் யோசித்துக் கொண்டிருந்தவன் இப்படியே வெறுமனே அமர்ந்து
இருப்பதும் ஆபத்து என்ற விபரீதம் புத்திக்கு உறைத்தது அவனுக்கு.
குன்றின் மீது ஏறிப் பார்க்கும் பொழுது ஏதேனும் வழி கண்ணுக்கு
புலப்படலாம் என்று எண்ணியவன் அவளையும் சேர்த்து சுமந்து கொண்டே ஏறத் தொடங்கினான்.
குன்றின் மீது ஏறி நின்றதும் மனைவியை கீழே அமர வைத்தவன் ‘முதலில் இவளை
கண் விழிக்க செய்தாக வேண்டும்.அப்படி இல்லையென்றால் வெளியே போகும் வழியையாவது
கண்டுபிடிக்க வேண்டும்’என்ற யோசனையில் இருந்தவன் சுற்றும் முற்றும் திரும்பிப்
பார்த்தான்.காதுகளை கூர்மையாக்கிக் கொண்டு அருகில் ஏதேனும் சத்தம் கேட்கிறதா என்று
உற்றுக் கவனித்தான்.
சற்று நேரம் அப்படியே இருந்தவன் காட்டுப்பகுதியில் வெகுநேரம் இப்படி
அமர்ந்து இருப்பதும் ஆபத்துத் தான் என்பதால் அவளை தோளில் துண்டைப் போல தூக்கிப்
போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
மலையின் மீது ஏறும்பொழுது அவனுக்கு சிரமமாக இருந்தாலும் அதைப் பற்றி
எதுவும் பொருட்படுத்தாமல் முடிந்த அளவு வேகமாக நடந்தான் பார்த்திபன்...இன்னும்
கொஞ்சம் உயரத்திற்கு போன பிறகு ஒரளவிற்கு சுற்றிலும் இருக்கும் இடங்கள் கண்ணுக்கு
புலப்படத் தொடங்க...நாலா திசைகளிலும் கண்களை சுழல விட்டான்.
அவனுடைய கண்ணுக்கு நேர் எதிரில் பதர் காளியம்மன் சிலையின் கிரீடத்தின்
பின் பகுதி தெரியவே அதை வைத்து தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை உத்தேசமாக
கணித்து விட்டான்.
எப்படியும் இந்நேரம் அவனது உறவினர்களும்,பண்ணை ஆட்களும் அவனை தேடிக்
கொண்டு காட்டிற்குள் வந்து இருப்பார்கள்...முதலில் அவர்களுக்கு தகவல் சொல்லி
விடுவோம் என்று நினைத்து மொபைலை எடுத்து பார்த்தவன் நொந்து போனான்.
போனில் டவர் ஒரு பாயின்ட் கூட இல்லை...
‘விளம்பரத்தில் மட்டும் நடுக்கடல்ல இருந்தா கூட நெட் கிடைக்கும்ன்னு
சொல்றீங்க...இங்கே என்னடான்னா டவர் பல்லை காட்டி இளிக்குது’என்று திட்டித்
தீர்த்தவன் சிலை எங்கே இருக்கிறது என்பதை வைத்து அந்த திசையை நோக்கி செல்ல
ஆரம்பித்தான்.
தோளில் பூமாலையாக கிடந்தவள் இன்னும் முழிக்கவே இல்லையே என்ற
எண்ணத்துடன் வேகமாக நடந்தவனை பாதி வழியிலேயே எதிர்கொண்டனர் அவனது
சொந்தங்கள்.கத்தி,அருவாள் போன்ற கூரிய ஆயுதங்களுடன் அவர்கள் இருவருக்கும்
பாதுகாப்பு அரண் போல மற்றவர்கள் சூழ்ந்து கொள்ள தங்கை மயங்கிக் கிடப்பதை பார்த்த
பாஸ்கர் பதறிக் கொண்டு அவளை வாங்க முயல,வேகமாக மறுத்து விட்டான் பார்த்திபன்.
கருத்துரையிடுக