“என் பொண்டாட்டியை நான் தான் தூக்கிட்டு வருவேன்”என்று அழுத்தமாக
சொன்னவன் அவளை கையில் ஏந்திக் கொண்டு கோவிலுக்கு பத்திரமாக கொண்டு வந்து
சேர்த்தான்.
அதுவரையில் அவளுக்கு என்ன ஆனதோ என்று பதறிக் கொண்டிருந்த அனைவரும்
அப்பொழுது தான் கொஞ்சம் நிம்மதி அடைந்தார்கள்.
நெற்றியில் பார்த்திபன் கட்டி இருந்த கைக்குட்டையை எடுத்து விட்டு
காயம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பரிசோதித்து பக்கத்தில் இருந்து
அரிவாள்மனைப் பூண்டு செடியை கசக்கி காயத்தில் வைத்து கட்டினார்கள்.
“மூலிகை சாறை தடவி இருக்கோம் பார்த்திபா..இனி ரத்தப் போக்கு
இருக்காது”என்ற தகவலை சொல்லி அவனை ஆறுதல் படுத்தினர்.
சிகிச்சை முடிந்ததும் பௌர்ணமியின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளது
மயக்கத்தை தெளிய வைக்க அவர்கள் முயற்சி செய்து கொண்டு இருந்தனர்.
என்ன தான் நாம் நல்லவர்களாக இருந்தாலும் நம்மை சுற்றி இருக்கும்
எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.எப்பொழுதடா
சந்தர்ப்பம் வாய்க்கும் என்று காத்திருக்கும் சில பாம்புகள் சமயம் கிடைக்கும்
பொழுது கொத்தி விட தவறுவதில்லை.
ஆம்..அப்படியும் ஒரு சில மனிதர்கள் நம்மை சுற்றிலும் இனிமையாகப்
பேசிக் கொண்டு இருக்கத் தான் செய்கிறார்கள்.அப்படிப்பட்ட ஒரு நல்ல உள்ளமும்
அப்பொழுது அந்த கூட்டத்தில் இருந்தது தான் வினையாகிப் போனது.
அது பார்த்திபனின் ஒன்று விட்ட மாமா ராமன் தான்...அவருக்கு
வெகுநாட்களாக தன்னுடைய மகளை பார்த்திபனுக்கு மணம் முடித்துக் கொடுக்க வேண்டும்
என்ற எண்ணம் இருந்தது.சுபத்ராவின் கல்யாணத்திற்கு முதல் நாள் கூட இதைப் பற்றி அவர்
ராஜனிடம் பேசினார்.
ராஜன் அவர் பேசியதை மறுத்தும் பேசவில்லை..அதே சமயம் விருப்பம்
இருப்பது போலவும் பேசவில்லை.எதுவாக இருந்தாலும் சுபத்ராவின் திருமணம் முடிந்தவுடன்
பேசிக் கொள்ளலாம் என்று அவர் சொல்லி விட ராமனும் மௌனமாகி விட்டார்.
‘எப்படியும் தனது மகளைத் தான் பார்த்திபன் மணந்து கொள்வான்’ என்று
எண்ணிக் கொண்டிருக்க அவரது கற்பனைகளை தவிடு பொடியாக்கி விட்டு அவர் கண் முன்னாலேயே
பௌர்ணமியின் கழுத்தில் தாலி கட்டி விட்டான் பார்த்திபன்.அந்த ஆத்திரம் முதல் நாள்
இரவில் இருந்தே அவர் மனதில் இருந்தது.இப்பொழுது நடந்த இந்த சம்பவத்தால் மனம்
மகிழ்ந்து போனவர் அவர் மட்டுமே.
‘ஹப்பாடா...காட்டில் தொலைந்து போய் விட்டாள்.இந்நேரம் அந்த காட்டெருமை
அவளை குத்தி கொன்று இருக்கும்.அடுத்த முஹூர்த்தத்திலேயே பார்த்திபனுக்கும்
என்னுடைய மகளுக்கும் திருமணத்தை நடத்தி விட வேண்டியது தான்.’என்று அவர்
மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருக்க...இந்த பார்த்திபன் அவளை மீட்டுக்கொண்டு
வந்து விட்டானே...’ என்ற ஆத்திரத்தில் இருந்தவர் அவரின் கோபத்தை எல்லாம்
பௌர்ணமியின் மீது காட்டி அதன் மூலம் பார்த்திபனை பழி வாங்கத் துடித்தார்.
அவருடைய பாம்பு நாக்கு தன்னுடைய விஷத்தை கக்கத் தொடங்கியது.
“என்ன பார்த்திபா...உண்மையில் உன்னுடைய பொண்டாட்டி காட்டெருமைக்கு
பயந்து ஒடி தான் அடிபட்டதா?இல்லை உன்னுடன் வாழப் பிடிக்காமல் ஓடிப் போக முயற்சி
செய்யும் பொழுது இப்படி அடி பட்டு விட்டதா?”குரூரத்துடன் வினவ உறவினர்களின் மொத்த
பார்வையும் பார்த்திபனின் மேல் விழுந்தது.
“மாமா”ஒற்றை விரல் உயர்த்தி எச்சரித்தவனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து
பேசினார் ராமன்.
“என்னை ஏன் மிரட்டுற பார்த்திபா...இவ குடும்ப லட்சணம் ஒரு மாதிரியானது
தானே...இவங்க அம்மாக்காரி எப்படியெல்லாம் இருந்தாளோ...வயித்துல பிள்ளையை
உருவானதும் ஏற்கனவே கல்யாணமாகி மனைவியை இழந்த மனுஷனை மயக்கி கைக்குள்ளே போட்டு
இல்ல இரண்டாம் தாரமா வாக்கப்பட்டு வந்தா...”என்று அமிலம் போன்ற சொற்களை
வீச...பார்த்திபன் கை முஷ்டிகளை இறுக கட்டிக் கொண்டு தன்னுடைய கோபத்தை அடக்கிக்
கொண்டான்
‘பேசுவது அவனுடைய அம்மாவின் அண்ணன் முறையில்
இருப்பவர்...அதுவுமில்லாமல் தன்னை விட வயதில் மூத்தவரை எப்படி கை நீட்ட முடியும்’
என்று எண்ணி அவன் அமைதி காக்க...அதையே சாதகமாக எடுத்துக் கொண்டார் அவர்...
“அம்மாவை மாதிரியே தானே பொண்ணும் இருப்பா...நீ பாட்டுக்கு சட்டுன்னு
அவ கழுத்தில் தாலியை கட்டிட்டியே...எதுக்கும் டாக்டர் கிட்டே போய் ஒரு செக்கப்
பண்ணி பார்த்துடு...இல்லைன்னா...வேற யாரோட பிள்ளைக்காவது உன்னோட பேரை இனிசியலா
போட்டுடப் போறா”என்றார் வக்கிரமாக...
“மாமா”என்று ஆத்திரத்துடன் எழுந்த பார்த்திபனைக் கண்டு அவரின் சப்த
நாடியும் ஒடுங்கியது.மதம் கொண்ட யானையின் ஆக்ரோஷத்துடன் தன் முன்னே வந்தவனைக்
கண்டு அவர் உள்ளே பயந்தாலும் வெளியே தைரியமாக இருந்தார்.
‘என்ன தான் இருந்தாலும் பார்த்திபன் வயதில் பெரியவர்கள் மீது மரியாதை
வைத்து இருப்பவன்.கண்டிப்பாக கை நீட்ட மாட்டான்’ என்று நினைக்க பார்த்திபனுக்கு
முன் ராமனை ஓங்கி ஒரு அறை விட்டார் ராஜன்.
“ஏதோ உன் பொண்ணை என் பையன் கல்யாணம் செஞ்சுக்கலையே அப்படிங்கிற
வருத்தத்தில் பேசுற...போனா போகுதுன்னு விட்டா...ரொம்ப பேசுற...அவ என்னோட
மருமக..அவளைப் பத்தி இனி ஒரு வார்த்தை பேசினா ஊருக்குள்ளே நீ காலடி எடுத்து வைக்க
முடியாது சொல்லிட்டேன்”
“மாப்பிள்ளை...நேத்து
வந்தவளுக்காக என்னை கை நீட்டி அடிச்சுட்டீங்களே...இது உங்களுக்கே நல்லா
இருக்கா? தங்கச்சி...நீயாவது உன் புருஷனை ஒரு வார்த்தை கேட்க மாட்டியா?”சண்டையை
ஊதி பெரிதாக்க முயன்றார் ராமன்.
“நான் சொல்லி என்னைக்கு அண்ணா உங்க மச்சான் கேட்டு இருக்காரு...அவர்
எப்பவுமே அம்மா பிள்ளை தானே...இன்னைக்கு காலையில கூட சொன்னேன்...இந்த ராமன் அண்ணா மூஞ்சியில்
நேத்தில இருந்து எள்ளும் கொள்ளும் வெடிக்குது..அவரைக் கோவிலுக்கு கூட்டிட்டு போக
வேணாம்னு தலைப்பாடா அடிச்சுகிட்டேன்...கேட்டா தானே...
எங்க மாமியார் தான் சொன்னாங்க...ஆயிரம் தான் இருந்தாலும் அவனும்
எனக்கு பையன் மாதிரி...அப்படி எதுவும் செய்ய மாட்டான்னு...இப்ப பாருங்க கடைசியில்
நான் பயந்த மாதிரியே ஆகிடுச்சு” சாந்தமாக பேசிக் கொண்டே முகத்தில் கரியை பூசுவது
எப்படி என்று நிரூபித்தார் செல்வி.
இது அத்தனையும் ஒருபுறம் இருக்க கோபத்தோடு பார்வையை திருப்பிய
பார்த்திபன் அரண்டு போனான்.
Nice
பதிலளிநீக்குகருத்துரையிடுக