அத்தியாயம் 30
இரவு பகலாக தலையை பிய்த்துக் கொள்ளாத
குறையாக யோசித்த துரைசாமி இரவோடு இரவாக
வெளியூரில் இருந்து ஆட்களை வரவழைத்தவர் மேகலாவின்
தென்னந்தோப்பை நெருப்பிட்டு கொளுத்த சொன்னார்.
நெருப்பை அறிந்து உள்ளூர் மக்கள் அணைக்கும் முன் முக்கால்வாசி மரங்கள்
நெருப்புக்கு இரையாகி விட்டது.
சத்யன் விவரம் அறிந்து அங்கே வந்து
பார்க்கும் பொழுது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது கூட புரியாத நிலை அவனுக்கு.
அதற்குக் காரணம் ராஜன்.. காவலுக்கு இருந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் ராஜனையும்
அடித்து இருந்தார்கள். தோப்பு நெருப்புக்கு இரையானத்தில் கூட சத்யனுக்கு அவ்வளவு
வருத்தமில்லை.
போன வாரம் தான் அந்த ராஜன் குடும்ப
வறுமையின் காரணமாக அவனிடம் இரவு நேரப் பணிகள் ஏதாவது தர முடியுமா என்று கேட்டு
வந்தான்.
நன்றாக படிக்கக்கூடிய பையன்... படிப்பு
செலவை அம்மாவிடம் பேசி விட்டு தானே ஏற்றுக் கொள்வதாக சொன்ன பொழுது கூட உடனே
மறுத்து விட்டான்.
ஸ்காலர்ஷிப் கிடைத்து இருப்பதால்
காலேஜ் பீஸ் உள்ளிட்ட தேவைகள் இல்லை எனவும், தினமும் கல்லூரிக்கு போய் வர ஆகும் செலவு, புத்தகங்கள், நெட்டில் தேடித் தேடி நிறைய படிக்க
வேண்டி இருப்பதால் அது தொடர்பான செலவுகள்... இது போன்ற இதர செலவுகளுக்காகத் தான்
இந்த வேலைக்கு வருவதாகவும், வேலை கொடுத்தால் மட்டும் போதும் என்று மட்டும்
சொன்னான்.
அந்த வயதில் படிப்பின் மீது அவனுக்கு
இருக்கும் ஆர்வத்தையும், இலவசமாக எதையும் வாங்கிக் கொள்ள மறுக்கும் அவனது சுய
மரியாதையையும் வெகுவாக மதித்தான் சத்யன்.
வேலைக்கு வந்த நாட்களில் இரவு வரும்
பொழுதே கையில் ஒரு நோட்டும், புத்தகமும் டார்ச் லைட்டும் எடுத்துக் கொண்டு வருவதை
பார்த்து இருந்தான்.
சில நேரங்களில் சத்யன் தாமதமாக வீட்டுக்குத் திரும்பும் நேரங்களில் தோப்பு
வாசலில் கட்டிலைப் போட்டு அதில் டார்ச்சை வைத்து படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து இருக்கிறான்.
தான் நன்றாக படிப்பதன் மூலம்
தன்னுடைய குடும்பத்தை முன்னேற்றி விட முடியும் என்று உறுதியாக எண்ணி அதற்காக
கடுமையாக உழைத்தவனும் கூட... நெருப்பு வைக்க வந்த அடியாட்களை தடுக்க முயன்றதால்
அவனை பின் மண்டையில் பலமாக தாக்கி இருந்தார்கள்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவனை
உடனடியாக காப்பாற்றும் பொருட்டு தன்னிடம் இருந்த காரில் அவனை ஏற்றி அனுப்பி வைத்து
விட்டாலும் சத்யனின் மனது நிலையாக இல்லை.
உடனடியாக கிளம்பி அவனைப் பார்க்க போக
முடியாத நிலை.
போலீஸ் ஒரு பக்கமும், தீயணைப்பு துறையினர் ஒரு பக்கமும்
இருந்தார்கள். நெருப்பு வைத்து கொளுத்த முயன்ற ஆட்கள் ஊரை விட்டு தப்பி செல்ல
முடியாதபடி போலீஸ் ஒரு பக்கமும், அவனுக்கு நம்பிக்கையான ஆட்கள் ஒருபுறமும் ஊரை சுற்றி
வளைத்து தேடிக் கொண்டிருந்தார்கள். ஓரளவு நிலைமை கட்டுக்குள் வந்ததும் போலீசில்
தகவல் சொல்லி விட்டு வேகமாக மருத்துவமனை நோக்கி விரைந்தான்.
அவசர சிகிச்சை பிரிவில் அவனுக்கு
முன்பாக சென்று அங்கே காத்திருந்த அஞ்சலியைப் பார்த்ததும் ஒரு நொடி அதிர்ந்து
அடுத்த நொடி அவன் முகம் மென்மையானது.
தினமும் ராஜனைப் பற்றி வீட்டில்
அவளிடமும் சொல்லி இருக்கிறானே... தகவல் தெரிந்ததும் பார்க்க ஓடி வந்து இருக்கிறாள்
என்பது புரிய மனைவியின் கனிந்த மனதை எண்ணி பூரித்துப் போனான். ஆனால் அவள் வந்தது
குற்ற உணர்ச்சியினால் என்பதை பாவம் அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லையே.
சத்யனைப் பார்த்ததும் வேகமாக எழுந்து
நின்றாள் அஞ்சலி.
“நீ ஏன் அஞ்சலி இந்த நேரத்துல இங்கே
எல்லாம் வந்துக்கிட்டு... உனக்கே இன்னும் உடம்பு பூரணமா குணம் ஆகலை. நான்
பார்த்துக்க மாட்டேனா?”என்றான் செல்ல கண்டிப்புடன்.
“அந்தப் பையன்... ராஜன்.. அவனுக்கு
தலையில் பயங்கரமான காயம்னு எல்லாரும் சொல்றாங்க...”
“அதெல்லாம் எதையும் போட்டு யோசிச்சு
உன்னோட உடம்பை கெடுத்துக்காதே அஞ்சலி”
“இல்லைங்க... நேத்து நீங்க பேசும்
பொழுது கூட அந்த பையனை சன்டே வேலைக்கு வர
வேண்டாம்னு சொல்லிட்டேன்னு தானே சொன்னீங்க?”
“நான் அப்படித்தான் அவன் கிட்டே
சொல்லி இருந்தேன் அஞ்சலி. அவன் தான் பிடிவாதமா நேத்து பக்கத்து தோப்பில் இருந்த பழத்தை எல்லாம் யாரோ
சின்ன பிள்ளைங்க வந்து சேதாரம் பண்ணிட்டு போய்ட்டாங்க. அதனால நான் இங்கேயே
இருக்கேன். வீட்டுக்கு போனாலும் இதையே நினைச்சு எனக்கு தூக்கம் வராது. நாளைக்கு
எல்லா பழத்தையும் லோடு ஏத்தி அனுப்பிட்டா அப்புறம் கவலை இல்லைன்னு சொன்னான். பாவிப்பய... அவன் நேரம் அவனை இங்கே கொண்டு வந்து படுக்க
வச்சுடுச்சு பாரு” என்று மனம் நொந்து போய் பேச, அஞ்சலியின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைக் கண்டு
பதறிப் போனான்.
“அஞ்சலி... அழாதே மா... வேண்டாம்.
உடம்பு தாங்காது. இப்போ தான் உனக்கு கொஞ்சம் கொஞ்சமா உடம்பு குணம் ஆகி
இருக்கு.”என்று அவளை சமாதானம் செய்து கொண்டு இருக்கும் பொழுது மருத்துவர் வெளியே
வர அவர்களது பேச்சு அத்துடன் நின்று போனது.
“ராஜனுக்கு எப்படி இருக்கு டாக்டர்.
ஒன்னும் பயமில்லை தானே?”
“அந்த பையனை தலையில் பலமா தாக்கி
இருக்காங்க.. நரம்பு நிறைய இடத்துல சேதாரம் ஆகி இருக்கு... மூளையில் ரத்தம் வேற
உறைஞ்சு கட்டியாகி இருக்கு. அந்தப் பையன் எழுந்து பழையபடி நடமாடணும்னா குறைஞ்சது
இரண்டு வருசம் ஆகும். அதுவும் என்னால உறுதியா சொல்ல முடியாது. அதே நேரம் இதுக்கு
அப்புறம் தான் அந்த பையனுக்கு நீங்க நிறைய செலவு பண்ணி வைத்தியம் பார்க்க வேண்டி
இருக்கும். குறைஞ்சது ஒரு அஞ்சு
ஆபரேஷனாவது செஞ்சா தான் இவன் கண்ணே முழிப்பான்” என்று சொல்லி விட்டு செல்ல அருகில்
இருந்த ராஜனின் பெற்றோர்கள் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழத் தொடங்கி
விட்டார்கள்.
பணத்தைக் கொடுத்து விடலாம். ஆனால்
அவனை உறுதியாக பழைய படி மீட்டு விட முடியும் என்று மருத்துவர் உத்திரவாதம்
கொடுக்காததால் சத்யனும் சோர்ந்து தான் போனான்.
அஞ்சலி ஒரு நொடி கூட யோசிக்கவில்லை.
ராஜனின் பெற்றோரிடம் போய் நின்றாள்.
“இதோ பாருங்கம்மா... உங்க பையனை
பழையபடி உங்க பிள்ளையாகவே மீட்டுக் கொடுக்கிறது என்னோட பொறுப்பு. அதுக்கு எவ்வளவு
செலவானாலும் பரவாயில்லை நான் தர்றேன். வெளிநாட்டுக்கு அனுப்ப சொன்னாலும் சரி தான்.
நீங்க உங்க உங்க பிள்ளை கூட துணைக்கு இருந்தா போதும்.” என்று உறுதிபட சொன்னவளைப்
பார்த்து சத்யன் கூட ஒரு நொடி வியந்து தான் போனான்.
அஞ்சலி கருமி இல்லை தான்.ஆனால் அதே
நேரம் பணம் செலவழிப்பதில் கொஞ்சம் கறார் தான். வேண்டாத செலவுகள் செய்ய மாட்டாள்.
அதே நேரம் வேண்டிய பொருட்களை வாங்காமல் இருக்கவும் மாட்டாள். அப்படிப்பட்டவள்
ராஜனுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யவும் தயாராக இருந்தது அவனை ஆச்சரியத்திற்கு
உள்ளாக்கியது.
சொன்னதோடு மட்டும் இல்லாமல்
அடுத்தடுத்த வேலைகளை உடனடியாக சத்யனை செய்ய வைத்து அடுத்த அரை மணி நேரத்தில்
தகுந்த பாதுகாப்போடு சென்னையில் இருந்த மருத்துவனைக்கு ராஜனை ஒரு மருத்துவ குழு
சகிதம் அனுப்பியும் வைத்து விட்டாள்.
சத்யனுக்கு ஒரு நொடி கூட அஞ்சலியின்
மீது வருத்தமோ, சந்தேகமோ எழவில்லை என்பது தான் அங்கே வருத்தமான விஷயம். தான் என்ன செய்ய
சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு செய்யும் கணவனின் அன்புக்கு தான் ஏற்றவள் தானா
என்ற சந்தேகம் அவள் மனதில் வந்து போனது.
ஆனாலும் இப்பொழுது அவளுக்கு
இருக்கும் ஒரே குறி துரைசாமி மட்டும் தான்.அதற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்கு
அவள் தயாராகி விட்டாள்.
உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல்
மெல்ல தன்னை மீட்டுக் கொண்டவள் அடுத்தததாக அவளது அப்பாவின் மூலம் காவல்துறை உயர்
அதிகாரிகளை முடுக்கி தீ வைத்தவர்களை பிடிப்பதற்கு தேடுதல் வேட்டையை நடத்த ஏற்பாடு
செய்தாள்.
அன்றைய மாலைப் பொழுதில் ஊருக்குள்
புதிதாக ஒரு வேனில் வெளியூர் ஆட்களைப் பார்த்ததாக ஊர் எல்லையில் டீக்கடை
வைத்திருக்கும் நபர் ஒருவர் கூற, சத்யனும் அவனது ஆட்களும் அந்த வேனையும் அதில் வந்த
நபர்களையும் சல்லடைப் போட்டுத் தேடத் துவங்கினர்.
ராஜனுக்கு ஊருக்குள் இருந்த
நன்மதிப்பு அங்கிருந்த எல்லாரையும் தீ வைத்த நபர்களை தேட வைத்தது.
மற்ற எல்லா இடத்திலும் ஊர்க்காரர்களை
தேடும்படி பார்த்துக் கொண்ட அஞ்சலி, துரைசாமியின் வீடு இருந்த பகுதியை மட்டும் சத்யனை
நேரில் சென்று பார்க்கும்படி மறைமுகமாக வற்புறுத்தினாள்.
“இல்லைங்க... நம்ம வீட்டுப்
பக்கத்துல எங்கே, எப்படின்னு மத்தவங்களை விட உங்களுக்குத் தானே நல்லாத்
தெரியும்.நீங்களும் கூட போங்க” என்று அவனை அனுப்பி வைத்தவள் அடுத்து வரப் போகும்
செய்திக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.
அவள் நினைத்தது போலவே நடக்கவும்
செய்தது. சத்யனும் அவன் உடன் சென்ற ஆட்களும் கூலிப்படையினரை கையும், களவுமாக பிடித்து வைத்து இருந்தனர்.
அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி
துரைசாமியை போலீசார் கைது செய்தனர்.
தகவல் தெரிந்ததும் முதல் ஆளாக காவல்
நிலையத்திற்கு சென்று விட்டாள் அஞ்சலி. கண் குளிர பார்க்க வேண்டிய காட்சி அல்லவா!
அங்கே துரைசாமி ஒன்றும் அவளின்
ஆசைக்கு ஏற்றபடி கம்பிகளுக்கு அப்பால் ஒன்றும் இருக்கவில்லை. மாறாக
இன்ஸ்பெக்டருக்கு எதிரில் அமர்ந்து தெனாவெட்டாக பேசிக் கொண்டு இருந்தார்.
“இந்தா பாருங்க இன்ஸ்பெக்டர் அவனுங்க
யாரையும் எனக்கு தெரியவே தெரியாது. நானே நேத்து ராத்திரி எல்லாம் சரியா தூக்கம்
இல்லாம விடியற்காலையில தான் வீட்டுக்கு வந்தேன். வந்து அப்போ தான் தூங்க
ஆரம்பிச்சுட்டேன். அதுக்குள்ளே நீங்க வந்து என்னை கூட்டிட்டு வந்துட்டீங்க”
“எல்லாம் சரி தான் சார். உங்க
மனைவியோட தோப்பை எரிச்சவங்க உங்க வீட்டில் தானே ஒளிஞ்சு இருந்தாங்க.”
“அது தானே சார் அவங்களுக்கு
பாதுகாப்பான இடம்.. யாரோ அவங்களை ஏவி விட்டு இந்த வேலையை செய்ய சொல்லி இருக்காங்க. தப்பிச்சு
போறதுக்குள்ளே எல்லாரும் சுத்தி வளைச்சுட்டீங்க.. வேறே எங்கே போனாலும் அவங்களை
கண்டுபிடிச்சுடுவாங்க. என்னோட வீட்டுல யாரும் தேட மாட்டாங்கனு நினைச்சு
இருப்பாங்க.”
“இத்தனை பேர்,,, அதுவும் வேன்ல உங்க வீட்டுக்கு
வந்து இருக்காங்க. உங்களுக்கு எதுவுமே தெரியாதுன்னு நீங்க சொல்றது நம்புற மாதிரியா
இருக்கு.”
“சார் நான் ஊர்ல பெரிய மனுசன் என்னைப் பார்க்க
தினமும் எவ்வளவோ பேர் வருவாங்க. அது மாதிரி யாரோ வந்து இருக்காங்கனு நினைச்சு
என்னோட வேலைக்காரன் கதவை திறந்து விட்டு இருக்கான். அதை வச்சு எப்படி என் மேல
குற்றம் இருக்குனு சொல்வீங்க? எறிஞ்சு போனது என் மனைவியோட தோப்பு... உண்மையில்
எனக்குத் தானே நஷ்டம்?”
“சாமார்த்தியமா பேசுற மாதிரி
நினைச்சு பேசாதீங்க... அப்புறம் எதுக்காக அந்த ஆளுங்க நீங்க தான் தோப்பை எரிக்க
சொன்னதா சொல்றாங்க?”
“சார் சும்மா எவனோ கூலிக்கு வேலை
செய்றவன் சொல்றதை வச்சு நீங்க எப்படி அந்த மாதிரி ஒரு முடிவுக்கு வரலாம்? ஆதாரம் என்ன இருக்கு?” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு
கேட்டவரை இன்ஸ்பெக்டர் யோசனையுடன் பார்க்க, சத்யன்
நெற்றியை சுருக்கினான்.
அஞ்சலி பெரிதாக எதைப்பற்றியும்
அலட்டிக் கொள்ளவில்லை. அவள் அங்கே வந்தது கணவனையும், மாமனாரையும் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் நினைத்ததைப் போலவே துரைசாமிக்கு
எதிராக கூலிப்படையினர் சொன்னதை நிரூபிக்கும் விதமாக எந்த ஆதாரமும் இல்லை என்று
அடித்து பேசி, வக்கீலின் உதவியுடன் அன்றைய தினமே வீட்டுக்கு திரும்பி விட்டார்.
வீட்டுக்குத் திரும்பும் வரையில்
சத்யன் அஞ்சலியிடம் எதுவுமே பேசவில்லை.
கணவனின் கையில் கட்டயாப்படுத்தி காபி
கோப்பையை திணித்தவள் அவனாக பேச்சை தொடங்கட்டும் என்று அமைதியாக இருந்தாள்.
“அஞ்சலி உனக்கு என்ன தோணுது?”
“எதைப் பத்தி கேட்கறீங்க?” தெரிந்தும் தெரிந்தது போல காட்டிக்
கொள்ள விரும்பவில்லை அவள்.
“அப்பா ஏதாவது செஞ்சு இருப்பாரா?”
“சே! சே! அவர் எதுக்குங்க அப்படி செய்ய போறார்?”
“எனக்கு என்னவோ கொஞ்சம் சந்தேகமா
இருக்கு அஞ்சலி... அவர் குரல்ல கொஞ்சம் கூட வேதனையோ வருத்தமோ இல்லை.”
“ஏங்க.. போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு
விசாரிக்கும் பொழுது டென்ஷனா இருந்து இருப்பாரா இருக்கும். எல்லாத்தையும் சந்தேகக்
கண்ணோடு பார்க்கக் கூடாதுங்க... ஆயிரம் தான் இருந்தாலும் அவர் உங்களுக்கு அப்பா...
சின்ன வயசுல இருந்து உங்களையும் , உங்க தங்கச்சியையும் எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு
வளர்த்து இருப்பார்”
துரைசாமியைப் பற்றி நல்லவிதமாக
சொல்லுவதாக பேர் பண்ணிக் கொண்டு சிறுவயதில் இருந்து அவர் மேகலாவுக்கு இழைத்த
அநீதியையும், சஹானாவை படுத்திய பாட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக அவன் கண் முன்னே வரவழைத்து
வெற்றி கண்டாள் அஞ்சலி.
“அவரை சின்ன வயசுல இருந்து பார்த்து
வளர்ந்தவன் அஞ்சலி நான். எனக்குத் தெரியும். அவர்கிட்டே ஏதோ தப்பா இருக்கு.”
அடுத்த நாள் வீட்டிற்கு வந்த
மேகலாவிடமும் அவருக்கு தகுந்தாற்போல் பேசி, அவர் மனதிலும்
நல்ல முறையில் சந்தேகத்தை விதைத்தாள் அஞ்சலி.
அடுத்தடுத்து சில நாட்கள்
இடைவெளியில் மேகலாவிற்கு சொந்தமான சொத்துக்களில் அவ்வபொழுது ஏதேனும் கலாட்டா
நடக்கத் தொடங்கியது.
திருட்டு, பொருள் சேதம், வேலையாட்களின் உயிருக்கு ஆபத்து...
என்று தினமும் ஒன்றாக நடக்க நடக்க... மேகலாவும், சத்யனும் அதற்கு காரணம் துரைசாமி என்று இருவருமே முழுமனதாக நம்பத்
தொடங்கினார்கள்.
கருத்துரையிடுக