அத்தியாயம் 33
“என்ன பேச்சையே காணோம்... சொல்லுங்க... என்னோட மொத்த
குடும்பத்தோட சாவுக்கும் நான் தான் காரணம். இப்ப என்ன செய்ய போறீங்க... இன்னும்
நான் தேவதை அப்படின்னு உளறிக்கிட்டு இருக்காம போய் வேலையை பாருங்க...”
“நீ பொய் சொல்ற நிலா... எதையாவது சொல்லி என்னை தள்ளி நிறுத்த
நீ இப்படி எல்லாம் உன் மேலேயே பழி போட்டுக்கிற” அதிர்ச்சியில் இருந்து மீண்டு விட்ட ஹரிஹரன் அப்பொழுதும்
அவளை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை”
“சொன்னா நம்புங்க... நான் ஒரு கொலைகாரி... கொலைகாரி...”
என்று ஆவேசம் வந்தவள் போல முகத்தில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள் வெண்ணிலா.
அவளின் வேதனையை சகிக்க மாட்டாமல் அவளை தாவி அணைத்தான் ஹரிஹரன்.
“வேண்டாம் நிலா... இப்படி உனக்குள்ளேயே எல்லாத்தையும்
ஒளிச்சு வச்சு கஷ்டப்படாதே... எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லுடா. என்ன நடந்து
இருந்தாலும் சரி. நான் உன்னை வெறுக்கவும் மாட்டேன். உன்னை விட்டு விலகவும்
மாட்டேன்” என்று உறுதி
அளித்தவன் அப்படியே மாமரத்தின் கீழ் அமர்ந்து கொண்டு அவளை தன்னுடைய மடியில்
கிடத்திக் கொண்டான்.
அவனது கைகள்
ஆதரவாக அவளது தலையை வருட கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே
இருந்தது. எவ்வளவு நேரம் அழுதாளோ அவளுக்கே தெரியாது. கண்களில் இருந்து கண்ணீர்
வற்றி அழுகை குறைந்து விசும்பல்கள் அடங்கும் வரை ஹரிஹரன் அவளை தடுக்கவில்லை.
அழுது
ஓயட்டும்... அப்பொழுது தான் அவளது மனபாரம் குறையும் என்று ஆறுதலாக அவளது தலையை
கோதிக் கொண்டு இருந்தான். வெண்ணிலாவும் இத்தனை நாள் மனதில் தேக்கி வைத்துக் கொண்டு
இருந்த அத்தனை துக்கத்தையும் ஒட்டுமொத்தமாய் அழுகையில் கரைத்துக் கொண்டு
இருந்தாள்.
“என்ன நடந்தது நிலா... என்கிட்டே சொல்ல மாட்டாயா?”
கண்களை ஒருமுறை
இறுக மூடித் திறந்த வெண்ணிலா அவனின் மடியில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்டாள்.
விலகி அமரப் போனவளை கண்களாலேயே தடுத்து தன்னுடைய தோளில் சாய்த்து அமர வைத்துக்
கொண்டான் ஹரிஹரன்.
“இப்படியே பேசு நிலா... ப்ளீஸ்” இறைஞ்சலாக ஒலித்தது அவன் குரல். வெண்ணிலாவிற்கும் அவனுடைய
அருகாமை தேவையாய் இருக்கவே அவனை விட்டு விலகாமல் அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள்
வெண்ணிலா.
“ஏன் வெண்ணிலா நம்ம கல்யாணத்தை நிறுத்த சொன்ன? உனக்கு என்னை
பிடிக்கலையா? இ... இல்லை நான்
பொறுக்கின்னு எதுவும் முடிவு பண்ணிட்டியா” கரகரப்பான குரலில் கேட்டான் ஹரிஹரன்.
வெண்ணிலாவின்
உடல் அதிர்வதை அவன் உணர்ந்தாலும் அவளே பேசட்டும் என்று மெளனமாகவே இருந்தான்.
“சொல்றேன் ஹரி... ஆரம்பத்தில் முதலில் உங்களை பார்த்தப்போ
என் மனசில் எந்த விதமான எண்ணமும் இல்லை. கடைசி நாள் நீங்க ஊருக்கு போறேன்னு
சொன்னப்போ கூட எனக்கு உங்க மேல எந்த எண்ணமும் இல்லை. உண்மையை சொல்லணும்னா அப்போ
அந்த வயசில் எனக்கு இதையெல்லாம் யோசிக்கத்
தெரியலை.
நீங்க அ...
அன்னைக்கு நடந்துகிட்ட விதம் உங்களை கெட்டவரா தான் எனக்கு யோசிக்க வச்சது. அதே
நேரம் அதுக்கு முன்னாடி நாம சந்திச்ச எந்த ஒரு தருணத்திலயும் ஒருமுறை கூட நீங்க
வரம்பு மீறினது இல்ல. பார்வையில் கூட ஒரு கண்ணியம் இருந்தது. எனக்கு அது
ரெண்டையும் பிரிச்சுப் பார்க்கத் தெரியாம குழம்பினேன். கடைசி நாள் நீங்க ஊருக்கு
போகும் போது பேசின ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு.
ஒருவேளை நீங்க
கெட்டவரா இருக்கிற பட்சத்தில் என்னிடம் விளக்கம் சொல்லாமலே கூட நீங்க போய்
இருக்கலாமே. அது தான் என்னை யோசிக்க வச்சது. நீங்க ஊரை விட்டு போய் மாசக் கணக்கு
ஆன பிறகும் என்னால கடைசி நாள் நீங்க பார்த்த பார்வையை மறக்க முடியலை. உங்க
கண்களில் இருந்து காதல் அருவி போல வழிந்து கொண்டு இருந்தது.
அதுக்கு
அப்புறம் நாம ரெண்டு பேரும் பேசி பழகிய அந்த நாட்களை எனக்குள்ளேயே பத்திரமா பொத்தி
வைச்சுகிட்டேன். அத்தனை முறை என்கிட்டே கல்லால் அடி வாங்கியும் ஒருமுறை கூட
கோபப்படாத உங்க சுபாவம், குழந்தைகளுக்கு முனியன் கிட்ட சொல்லி பழம் பறிச்சு தர
சொன்னது, என் தம்பியை
காப்பாத்த கொஞ்சம் கூட யோசிக்காம ஓடி வந்தது,
நாங்க உடைச்ச
உங்க கார் கண்ணாடியை நீங்களே யாருக்கும் தெரியாமல் சரி செஞ்சு வச்சதோட மட்டும்
இல்லாம எங்க வீட்டிலயும் அதை பத்தி சொல்லாம இருந்தது, என் பிரண்டோட இடத்தை வாங்கியது அதுவும் அவங்களோட மனசு கோணாத
மாதிரி, அ... அப்புறம்
அன்னைக்கு மழையில... தப்பு செஞ்சிட்டோம்னு தெரிஞ்சு மன்னிப்பு கேட்டதோட ஒரு
நிமிஷம் கூட அங்கே இருக்காம கொட்டுற மழையில் நனைஞ்சுக்கிட்டே வெளியே போனது...
இப்படி எல்லாமே எனக்கு நினைவில் நல்லா பதிஞ்சு போச்சு...
நீங்க சொன்ன
மாதிரியே இரண்டு வருஷம் கழிச்சு கண்டிப்பா வருவீங்கன்னு என் உள்மனசு அடிச்சு
சொன்னுச்சு. இரண்டு வருஷம் எப்போ முடியும்னு நானும் ரொம்ப ஆவலா காத்துக்கிட்டு
இருந்தேன். உங்க முகத்தை பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கும்.
நீங்க என்கிட்டே கொடுத்துட்டு போன கார்டை
எடுத்து எத்தனையோ முறை உங்களுக்கு போன்ல பேசலாம்னு நினைச்சு நம்பரை டயல்
பண்ணுவேன். ஆனா போனை வேற யாராவது எடுத்துட்டா என்ன பண்றதுன்னு பயம் வந்துடும்.
அப்படியே கட் பண்ணிடுவேன். எப்படியும் நீங்க நேரே வருவீங்கன்னு நான் ரொம்ப ஆசையா
காத்துக்கிட்டு இருந்தேன். ஆனா நீங்க வரலை. உங்களுக்கு பதிலா புரோக்கர் தான் வந்தார்.
முதலில் எங்க
வீட்டில் எல்லாருக்கும் சந்தோசம் தான். ஆனா அப்பா தான் உறுதியா எந்த முடிவும்
சொல்லாம இருந்தார். கல்யாணம் செய்து கொடுத்தா நான் அவரை விட்டு ரொம்ப தூரம்
போய்டுவேன் அப்படின்னு ரொம்ப வருத்தப்பட்டார். வீட்டில் உள்ள மத்த எல்லாருக்கும்
உங்க வீட்டில் சம்பந்தம் செய்து கொள்வதில் ரொம்பவும் இஷ்டம் தான். அப்பாவுக்கும்
கூட இஷ்டம் தான். ஆனா என்னை விட்டு பிரியணுமேன்னு நினைச்சு ஒரு முடிவு எடுக்க
முடியாம திண்டாடினார்.
கடைசியில் என்னை
தனியா எங்களோட தென்னந்தொப்புக்கு கூட்டிட்டு போய் பேசினார். “உனக்கு இந்த பையன்
வேண்டாம் தாயி அவ்வளவு தொலைவில் உன்னை கட்டிக் கொடுத்துட்டு இந்த அப்பனால இருக்க
முடியுமா” அப்படின்னு கேட்டார். நான் பதில் எதுவுமே பேசலை. எனக்கு எப்பவுமே எங்க
அய்யனை மறுத்து பேசி எப்பவுமே பழக்கம்
இல்லை. அதனால் அப்படியே நின்னுக்கிட்டு இருந்தேன்.
“நம்ம பெரியசாமி
பையன் நம்ம ஊர்ல தான் வாத்தியாரா இருக்கான். அவனை உனக்கு வீட்டோட மாப்பிள்ளையா
கட்டி வச்சிடட்டுமா தாயி... நீயும் என்னோடவே இருப்ப” என்று பேசிக்கொண்டே போனவர் அப்பொழுது தான் பார்த்தார்.
என்னோட முகத்தில் இருந்த கண்ணீரை.
“ஆத்தா...” அதிர்ச்சியின் உச்சத்தில் வெளிவந்தது அவர் குரல்.
“அப்பா” என்று கதறலோடு அவர் மார்பில் அடைக்கலம் ஆனாள் வெண்ணிலா.
அவள் அழுவதை
பொறுக்க முடியாமல் மெல்லிய குரலில் கேட்டார் அவர்.
“ஏன் தாயி உனக்கு இந்தப் பையனை பிடிச்சு இருக்கா?”
அழுகையை
நிறுத்தாமல் அப்பொழுதும் விசும்பிக் கொண்டே இருந்தாள் வெண்ணிலா.
“அய்யன் கேட்கிறேன்ல பதில் சொல்லு தாயி” குரலை
உயர்த்தாமல் கனிவாக கேட்டார்.
“ம்” என்ற மெல்லிய முணுமுணுப்பு மட்டுமே வெண்ணிலாவிடம் இருந்து.
ஒரு நிமிடம்
அசைவற்று நின்றவர் தன்னுடைய தோளில் சாய்ந்து இருந்த மகளை வலுக்கட்டாயமாக பிரித்து
நிறுத்தினார்.
“இதுக்கு ஏன் கண்ணு இம்புட்டு அழுகை... என் ஆத்தா நீ கேட்டு
நான் இல்லைன்னு சொல்லிடுவேனா? இனி கவலையை விடு கண்ணு. அந்த பையனுக்கும் உனக்கும் தான்
கல்யாணம். அதை நடத்தி வைக்கிறது என் பொறுப்பு. இதுக்கு போய் கண்ணை
கசக்கிக்கிட்டு...
என்ன உன்
ஜாதகப்படி நீ இன்னும் ஒரு மூணு மாசம் காத்திருக்கணும். அது பரவாயில்லையா? இல்லை
மாப்பிள்ளையை உடனே வந்து பரிசம் போட சொல்லிடுவோமா” என்று கிண்டலாக கேட்க அங்கே நிற்காமல் மானை போல துள்ளிக்
குதித்து ஓடிய மகளையே வாஞ்சையோடு பார்த்துக் கொண்டு இருந்தார் அவர்.
கருத்துரையிடுக