அத்தியாயம் 34
“அப்புறம் என்ன ஆச்சு நிலா? உங்க வீட்டிலயும் எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க... உனக்கும்
என்னை பிடிச்சு இருந்தது. அப்புறமும் ஏன்?” ஹரிஹரனால் அதற்கு மேலும் மெளனமாக இருக்க முடியாமல் வாயை
திறந்து கேட்டே விட்டான்.
வெண்ணிலா இதழ்
பிரிக்காமல் சோகையாய் சிரித்தாள். “இது அத்தனையும் சரியாக இருந்தால் போதுமா? அது தான்
எல்லாருடைய நிம்மதியையும் குழி தோண்டி புதைக்கிறதுக்கு நான் ஒருத்தி இருக்கிறேனே
அது போதாதா”
“ச்சு... சும்மா இப்படி உளறாம என்ன நடந்ததுன்னு சொல்லு
வெண்ணிலா?”
வெண்ணிலாவின்
கண்கள் தொலை தூரத்தை வெறிக்க அவள் கண் முன்னே காலங்கள் பின்நோக்கி செல்ல
ஆரம்பித்தது.
“நீங்க இப்ப பார்ட்னரா இருக்கீங்களே ஒரு கம்பெனி அதோட ஓனர்
எங்க ஊருக்கு வந்து இருந்தார். அவர் எங்க அப்பாவோட பால்ய காலத்து நண்பர். எங்க
ஊரில் புதுசா ஏதோ ஹோட்டலும், தீம் பார்க்கும் கட்டப் போறதா சொல்லி எங்க அப்பாக்கிட்டே
பேசிட்டு இருந்தார்.
எனக்கு என்னவோ
ஆரம்பத்தில் அவர் பேசியதுமே அது பிடிக்காமல் போச்சு... கிட்டத்தட்ட பலநூறு ஏக்கர்
நிலத்தை அழிக்க வேண்டி இருக்கும்னு அவர் சொன்னதும் எனக்கு கோபம் வந்துடுச்சு.
ஏன்னா அன்னைக்கு அதை மறுத்து எங்க அய்யன் எவ்வளவோ பேச முயற்சி செய்தார். அதை
எல்லாம் வந்து இருந்தவர் கண்டுக்கவே இல்லை. அப்பாவுக்கு ரொம்ப சங்கடமா போச்சு.
இதுக்கு
முன்னாடி அப்பா யார்கிட்டயும் பேசிக்கிட்டு இருக்கும் போது வீட்டு பெண்கள்
குறுக்கே போய் பேசினது கிடையாது. ஆனா அன்னைக்கு அவர் பேசினது பொறுக்காம நான்
இடையில் வந்து பேச ஆரம்பிச்சேன்.
“நிறுத்துங்க ஐயா... எங்க ஊரு உலகத்துக்கே படியளக்கிற
சாமி... அன்னபூரணி மாதிரி இந்த ஊரில் மட்டும் இல்லாம உலகத்தில் இருக்கிற யாரோட
வயிறும் வாடாம பார்த்துக்கிறவ எங்க ஊர் பூமா தேவி. அவளைப் போய் இப்படி அழிக்க
நினைக்கறீங்களே? இது கொஞ்சம் கூட
நல்லா இல்லைங்க. இதுக்கு நான் ஒருநாளும் ஒத்துக்க மாட்டேன்... எங்க அய்யனும்
சம்மதிக்க மாட்டார்” என்று படபடவென பொரிந்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
“இந்த பொண்ணு யாருடா? இப்படி பட்டாசா பொரிஞ்சு தள்ளுது...” அவர் கண்களில்
வியப்பும் ஆர்வமும் வெளிப்படையாகவே தெரிந்தது.
“என் பொண்ணு தான் டா. அவளுக்கு இந்த ஊரில் இப்படி யாராவது
இதை கட்டறேன்னு, அதை
இடிக்கிறேன்னு சொன்னா கொஞ்சமும் பிடிக்காது. அதான் சட்டுன்னு அப்படி பேசிட்டா...
ஏற்கனவே பக்கத்துக்கு ஊரில் இப்படி தான் ஒரு கம்பெனி வந்து பேக்டரி கட்டி அந்த
ஊரில் சுத்தமா நிலத்தடி நீரே இல்லாம போச்சு. அதை கேள்விப்பட்டதில் இருந்து என்
பொண்ணுக்கு இப்படி யாராவது பேசினால் கோபம் வந்திடும்.
நீ அதை எல்லாம் மனசில் வச்சுக்காத... அவ
விருப்பத்துக்கு மாறா நானும் இதை செய்ய மாட்டேன்டா. தப்பா எடுத்துக்காதே...” மெதுவாகவே
சொன்னாலும் அதில் அத்தனை உறுதி இருந்தது.
“ஓ... சரிடா... இடம் தான் தர மாட்டே... உன் பொண்ணையாவது
தருவியா?” கேலி போலவே
கேட்டார்.
“நீ... நீ என்னடா சொல்ற?”
“நிஜமாத் தான் சொல்றேன்டா. எனக்கு உன் பொண்ணோட தைரியம் ரொம்ப
பிடிச்சு இருக்குடா. என் சின்ன பையன் சிவாவுக்கு இவளை கல்யாணம் செஞ்சு
கொடுக்கலாம்னு ஒரு ஐடியா. உனக்கு சம்மதமா?”
“அது... அது வந்து”
“என்னடா இதுக்கும் இழுக்கிற... என் மேலயும் என் பையன்
மேலயும் உனக்கு நம்பிக்கை இல்லையா?”
“ஐயோ அப்படி எல்லாம் இல்லைடா. வ... வந்து... அவளுக்கு
ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்தாச்சு டா”
“ஓ... இத்தனை வருஷ நம்மோட நட்புல முதல்முறையா உன்கிட்ட நான்
கேட்டு நீ இல்லைன்னு சொல்லிட்டே... சரிடா. நான் ஒரு பிசினஸ்மேன். இதை இப்படியே
விட்டுட்டு திரும்பி போனா அது என்னோட மனசை பாதிக்கும். வேணும்னா இப்படி செய்யலாமா?” முதலில் இருந்த
வருத்தம் இப்பொழுது இல்லை அவர் குரலில்.
“எப்படிடா?”
“உறவுமுறையில் தான் எனக்கு சம்மந்தி ஆக மாட்டேன்னு
சொல்லிட்ட. அதுக்கு பதிலா தொழில்ல என்னோட பார்ட்னரா சேர்ந்துக்கோ...”
குறுக்கிட்டு
பேச முனைந்த நண்பனை கையசைவில் தடுத்து விட்டு தொடர்ந்து பேசலானார்.
“இதே ஊரில் நான் மண்புழு உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை
ஆரம்பிக்கறேன். அதில நீ பார்ட்னரா சேர்ந்துக்கோ... இந்த தொழிலால் கண்டிப்பாக உங்க
ஊரின் அழகும், தூய்மையும்
கெட்டுப் போகாது. சுற்றி உள்ள எல்லா ஊர் விவசாயிகளுக்கும் இயற்கை உரம் கிடைக்கும்.
அதே நேரம் உள்ளூர் ஆட்களுக்கும் வேலை கிடைக்கும் என்ன சொல்ற?”
“நான் யோசிச்சு சொல்றேன்டா...”
“ம்... நல்லா யோசிச்சு எல்லார்கிட்டயும்... முக்கியமா உன்
பொண்ணுக்கிட்டயும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வா. நான் நாளைக்கு சாயந்திரம் வரை
இங்கே தான் இருப்பேன். அதுக்குள்ள உன் பதிலை சொன்னால் போதும்” என்று சொன்னவர்
அங்கிருந்து கிளம்பியும் விட்டார்.
அதன்பிறகு
வீட்டில் எல்லாருடனும் அப்பா கலந்து பேசினார். எனக்கும் மண்புழு உரத் தொழிற்சாலை
ஐடியா பிடிச்சு இருந்தது. இதில் எங்க ஊருக்கும் பலவிதமான நன்மை வர வாய்ப்பு
இருக்கிறதால நானும் சந்தோசமா அதுக்கு சம்மதிச்சேன்.
“அதுக்கு
அப்புறம் ஊரில் இருக்கிற மற்ற பெரியவங்களோட நானே எங்க அப்பாவை பேச சொல்லி
ஊக்குவிச்சேன். ஊரில் புதுசா உரத் தொழிற்சாலை வரப் போறதும், அதில் எங்க
அப்பா ஒரு பார்ட்னர் அப்படிங்கிறது ஊர்ல எல்லாருக்கும் தெரிய வந்துச்சு.
ஊருக்கே ரொம்ப
சந்தோசம். இனிமே கண்ட கண்ட மருந்தை போட்டு நிலத்தை கெடுக்க வேணாம். இயற்கை உரம்னா
மண்ணு மாசுபடாம இருக்கும். சாப்பிடறதுக்கும் நல்ல சத்தான உணவா கிடைக்கும். அது
மட்டுமில்லாம ஊரில் நிறைய பேருக்கு வேலையும் கிடைக்க போகுதுன்னு எல்லாருக்கும் ஒரே
சந்தோசம்.”
அதுக்கு
அப்புறம் அப்பாவும் அந்த தொழிலில் பார்ட்னர் என்ற முறையில் கொஞ்சம் பெரிய அளவில்
முதலீடு செய்ய வேண்டி இருந்தது. அப்பாவிடம் கையில் அந்த நேரத்தில் அவ்வளவு தொகை
பணமாக இல்லை. அந்த பிரச்சினையையும் நானே தீர்த்து வைக்கிறேன்னு சொல்லி அந்தாள்
அப்பாவோட சொத்துப் பத்திரங்களை எல்லாம் வாங்கிட்டு போனான்.
பேங்கில் இதை
எல்லாம் அடகு வைத்தால் நமக்கு வேண்டிய பணத்தை விடவும் அதிகமாகவே கிடைக்கும்.
அப்படி மிஞ்சிய தொகையை ஊரின் நன்மைக்கு பயன்படுத்தலாம் என்று சொன்னான். எனக்கும்
அந்த யோசனை பிடித்து இருக்கவே என்னுடைய அப்பாவை நானே மேலும் அதை செய்யுமாறு தூண்டி
விட்டேன்.
அப்படி எங்க
ஊருக்கு நாங்க செய்ய வேண்டியதை எல்லாம் எங்கள் கையில் மிஞ்சி இருந்த தொகையில்
மட்டுமே செய்ய முடியாதுன்னு நாங்க யோசிச்சிக்கிட்டு இருந்தப்ப அந்தாள் அதுக்கும்
ஒரு வழி சொன்னான். அவருக்கு தெரிஞ்ச அமைச்சர் மூலமா எங்க கிராமத்திற்கு பண உதவி
வாங்கித் தருவதா சொன்னான். அது போக ஊர் மக்கள் கிட்ட இருந்தும் ஆளாளுக்கு
அவங்களால் முடிஞ்ச பணத்தை கொடுத்தாங்க. அது எல்லாத்தையும் அந்தாள் கிட்ட தான்
கொடுத்தார் எங்க அப்பா.
இப்படி எல்லாம்
செய்தால் மற்ற ஊர்களுக்கு நான் பிறந்த வளர்ந்த ஊர் மிக சிறந்த முன் உதாரணமாக
இருக்குமே. அதை பார்த்து மற்ற ஊர்களிலும் இதை போலவே செய்வார்களே என்ற எண்ணமும்
அதற்கு காரணம்.
ஊருக்காக
ஊருக்காக என்று பார்த்து கடைசியில் என்னுடைய குடும்பத்தை அழித்து விட்டேன் நான். எனக்கு மட்டும் இல்லை என் அப்பாவிற்கு கூட
அப்படி ஒரு எண்ணம் வரவே இல்லை. கூட படித்த சிநேகிதன் தன்னை இப்படி ஏய்ப்பான் என்று
அவர் மட்டும் என்ன எதிர்பார்த்து இருக்கவா போகிறார்...
எல்லாம்
நல்லபடியாகவே நடக்கும்னு நாங்க எல்லாரும் நம்பிக்கிட்டு இருந்தோம். அப்போ தான்
ஒருநாள் ஊரே அடங்கிய பிறகு எங்க வீட்டுக்கு கார் அனுப்பி வைச்சார் அந்த
பெரிரிரிய்ய்ய்ய்ய மனுஷன்... பெரிய பிரச்சினை. உடனடியா எல்லாரையும் கிளம்பி வர
சொல்லி... வீட்டில் உள்ள பெண்கள் குழந்தைகள் உட்பட...
கருத்துரையிடுக