அத்தியாயம் 35
அர்த்த
ராத்திரியில் இப்படி சொல்லவும் எங்களுக்கு முதலில் ஒண்ணுமே புரியலை. ஆனா இப்படி
கிளம்பி வர சொல்லி இருக்கார்னா நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும்னு எங்க அய்யன்
நம்பினார். அதனால் வீட்டில் இருந்த நாங்க எல்லாரும் கிளம்பிப் போனோம். தூங்கிக்
கொண்டு இருந்த கணேசனையும் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு காரிலேயே கொஞ்ச நேரம்
பயணித்தோம்.
காரில் இருந்த
யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இறுக்கமான சூழலே இருந்தது. கிட்டத்தட்ட இரவு
இரண்டு மணி அளவில் நாங்க இருந்த கார் ஒரு வீட்டுக்குள்ளே நுழைஞ்சது. அந்த பெரிய
மனுஷன் முகம் எல்லாம் பல்லாக எங்களை வாசலுக்கு வந்தே வரவேற்றார்.
“என்னடா தர்மலிங்கம் நீங்க காலையில் வருவீங்கன்னு
நினைச்சேன்... இப்பவே வந்துட்டீங்க”
“என்னது... நீ தானே...” என்று தர்மலிங்கம் இழுக்க
“சரி சரி... எப்போ வந்தா என்ன? வாங்க வாங்க... வாம்மா மருமகளே... உங்க எல்லாருக்கும் மேலே
மாடியில் அறை ஒதுக்கி இருக்கேன். நீங்க போய் தூங்குங்க”
“டேய் சதாசிவம் என்னடா விளையாடுறியா? அர்த்த ராத்திரியில் கிளம்பி வர சொல்லிட்டு... இப்போ
என்னடானா தூங்க சொல்ற?”
“அதைத்தான் காலையில் பேசிக்கலாம்னு சொல்றேன்ல தர்மா... இப்போ
போய் எல்லாரையும் தூங்க சொல்லு. பாவம் மருமகப் பொண்ணு வேற சோர்ந்து போய் இருக்கு
பார்”
“சதாசிவம்... நீ பேசுறது ஒண்ணும் எனக்கு பிடிபடலை. என் மக
வேற வீட்டு மருமக... அவளை எதுக்கு நீ இப்படி கூப்பிடற?” அதட்டலாக வெளிவந்தது தர்மலிங்கத்தின் குரல்.
“அம்மாடி வெண்ணிலா... இது பெரியவங்க சமாச்சாரம் நீயும் உன்
தம்பியும் போய் தூங்குங்க... நான் உங்கப்பன் கிட்ட பேசிட்டு வரேன்.”என்று பேசி
அவளை அங்கிருந்து அகற்ற முனைந்தார் சதாசிவம்.
வெண்ணிலா
அப்பொழுதும் நகராமல் தயங்கியபடியே நிற்க தர்மலிங்கம் மகளை கண்ணசைவில் அந்த
இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினார். அவருடைய ஊகத்தின்படி நிச்சயம் விஷயம்
பெரிது. அது எதுவும் தன்னுடைய மகளின் காதுக்கு போக வேண்டாம் என்று நினைத்தவர்
மகளையும் தம்பி மகன் கணேசனையும் அங்கிருந்து கிளம்பி மாடிக்கு செல்ல
உத்தரவிட்டார். தூக்க கலக்கத்தில் இருந்த கணேசனோ தன்னுடைய தாயைப் பிரிய மறுக்க
வெண்ணிலா மட்டுமாக அங்கிருந்து தனியாக பிரிந்து மாடிக்கு சென்றாள்.
“டேய்... மருமகளை மாடில இருக்கிற அறையில தங்க வை” என்று சொல்ல
கொஞ்சம் ஆஜானுபாகுவான ஆள் வெண்ணிலாவின் அருகே வந்து நின்று மாடியேறும் படி சைகை
செய்து விட்டு முன்னே செல்ல வேறு வழியில்லாமல் வெண்ணிலாவும் தன்னுடைய குடும்பத்தை
திரும்பி திரும்பி பார்த்தவாறே மாடி அறைக்குள் சென்றாள்.
கீழே அவளுடைய
வீட்டினருக்கும் சதாசிவத்திற்கும் ஏதோவொரு வாக்குவாதம் வலுவாக நடைபெறுவதை
வெண்ணிலாவால் உணர முடிந்தது. சற்று நேரத்தில் வாக்குவாதம் வலுவடைந்ததும் மாடியில்
இருந்த அவளுக்கு காதில் தெளிவாக விழுந்தது.சற்று நேரத்தில் அவளுடைய வீட்டினரின்
அலறல் குரல் கேட்க, அதற்கு மேலும் அங்கேயே நிற்கப் பிடிக்காமல் அறைக்கதவை திறந்து
கொண்டு வெளியேற முயற்சி செய்ய அவளின் அறைக் கதவோ வெளிப்பக்கமாக தாளிடப்பட்டு
இருந்தது.
வெண்ணிலா
அப்பொழுது இருந்த சூழ்நிலையில் கொஞ்சம் மிரண்டு தான் போனாள். இந்த மாதிரியான
சூழ்நிலை அவளுக்கு புதிது. யாரேனும் அவள் உள்ளே இருப்பது தெரியாமல் கதவை வெளியே
பூட்டி விட்டார்களா அல்லது தான் வெளியே வந்து விடக் கூடாது என்பதற்காக தன்னை
இப்படி பூட்டி வைத்து விட்டார்களா என்று புரியாமல் கொஞ்சம் குழம்பித் தான் போனாள்.
எது எப்படியோ
இப்பொழுது இந்த அறையை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் வலுக்க தன்னால் ஆன
மட்டும் கதவை திறக்க முயன்றாள் வெண்ணிலா. மெல்லிய தேகம் கொண்ட பெண் அவளால் கதவை
உடைத்து திறக்க வழியில்லாமல் போகவே உள்ளே இருந்து சத்தமாக குரல் கொடுத்துக் கொண்டே
இருந்தாள்.
ஆனால் யாரும்
வந்து கதவை திறந்து விடவில்லை. வெகுநேரம் கதவை தட்டி தட்டி ஓய்ந்து போனவள் அறையை
சுற்றிலும் நோட்டம் விட்டாள். கதவை உடைக்க ஏதேனும் ஆயுதம் கிட்டுமா என்று
பார்த்துக் கொண்டே இருந்தவளுக்கு அங்கிருந்த ஜன்னல் தென்பட வேகமாக அதை நோக்கி
விரைந்தாள்.
ஜன்னலை திறந்து
கீழே குதிக்க முடியுமா என்று அவள் ஆராய்கையில் கீழே இருந்து வந்த மொத்த சத்தமும்
நின்று போய் இருந்தது. மயான அமைதி என்று சொல்வார்களே அது போன்ற ஒரு அசாத்திய அமைதி
நிலவியது. உள்ளுக்குள் குளிரெடுக்க எப்படி கீழே செல்வது என்று முன்னை காட்டிலும்
வேகமாக தேடத் தொடங்கினாள் வெண்ணிலா.
ஜன்னலை ஒட்டி
இருந்த மரத்தை கண்டவள் அதன் கிளையை பற்றி தன்னுடைய கை கால்கள் சிராய்ப்பதை எல்லாம்
கண்டு கொள்ளாமல் சரசரவென கீழே இறங்கினாள். ஊரில் மாம்பழம் பறிப்பதற்காக அடிக்கடி
மரம் ஏறி பழகி இருந்ததால் அவள் ரொம்பவும் மெனக்கெட அவசியம் இருக்கவில்லை.
முதலில்
சாதாரணமாக இறங்கிக் கொண்டு இருந்தவள் தீயின் ஜூவாலையையும், கரும்புகையையும் கண்டதும் உள்ளம் பதற தன்னுடைய வேகத்தை
அதிகரித்தாள்.
கை, கால்கள்
புண்ணானதை கூட பொருட்படுத்தாமல் வேகமாக கீழே வந்தவள் கண்ட காட்சியில் அதிர்ந்து
போனாள். கீழே மொத்த வீடும் தீ வைத்து கொளுத்தப்பட்டு பற்றி எரிந்து கொண்டு
இருந்தது. மாடியில் இருந்ததால் இவளை தீ நெருங்க வில்லை என்றாலும் இவள் கீழே இறங்கி
வருவதற்குள் தரை தளம் முழுதாக தீ பரவி இருந்தது.
தன்னுடைய மொத்தக்
குடும்பமும் உள்ளே இருப்பது நினைவிற்கு வர நொடியும் தாமதிக்காது தீக்குள் குதிக்க
தயாரானாள். அப்படி அவள் உள்ளே நுழையப் போன கடைசி நொடி அவளது கரத்தை இறுகப் பற்றி
அந்த முயற்சியை தடுத்து நிறுத்தியது ஒரு உருவம்.
இருட்டில் அந்த
உருவத்தை கண்டு அலறப் போனவளின் வாயை இறுக மூடி அருகில் இருந்த புதருக்குள் அழைத்து
சென்றது அந்த உருவம்... கையை விடுவிக்க அவள் வெகுவாக முயற்சித்துக் கொண்டு இருக்க
மெல்லிய முனகலாக வெளிவந்தது அவளுடைய சித்தப்பா சுந்தரத்தின் குரல்.
“வெண்ணிலா... சத்தம் போடாதே... நான் தான்”
“சித்தப்பா” என்று கூவலோடு அவளின் தோளில் தஞ்சமடைந்தாள் பெண்ணவள்.
“சத்தம் போட்டு பேசாதே வெண்ணிலா... அவங்க இன்னும் இங்கே
இருந்து போகலை... உன்னோட குரல் கேட்டா நம்ம ரெண்டு பேரையும் கொன்னு இந்த தீயில்
தள்ள யோசிக்க மாட்டாங்க”
“அப்பா... அம்மா, சித்தி, கணேசன்... எல்லாரையும் காப்பாத்தணும் சித்தப்பா வாங்க” அவரின் கைகளை
பற்றி இழுக்க முயல... அவரோ நின்ற இடத்தை விட்டு ஒரு அடி கூட எடுத்து வைக்க வில்லை.
“சித்தப்பா... வாங்க எல்லாரையும் காப்பாத்தலாம்”
“அங்கே யாரும் உயிரோடு இல்லை வெண்ணிலா... ஏற்கனவே அவங்களை
எல்லாம் கொன்னுட்டு தான் அந்தப்பாவி தீ வச்சிட்டு போயிட்டான்” குரல் இறுக
பதில் தந்தார் சுந்தரம்.
“அய்யோ!... அப்பா” என்ற அலறலுடன் மயங்கி சரிந்தாள் வெண்ணிலா...
கருத்துரையிடுக