இத்தனை தூரம் அவன் கலங்கக் காரணம் அவனது தந்தை பசுபதி தான்.சாகும் வரை
பௌர்ணமியின் பிறப்பு ரகசியத்தை அவர் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவே
இல்லை...பௌர்ணமியுடைய தாயான சுமதியின் வேண்டுகோள் அது.அதுவரை பாஸ்கருக்குமே அந்த
விவரங்கள் எதுவும் தெரியாது.மரணப்படுக்கையில் இருந்த பொழுது தான் அந்த விவரங்களை
அவனிடம் பகிர்ந்து கொண்டார் பசுபதி.
“பாஸ்கர் நீ நினைக்கிற மாதிரி பௌர்ணமி உன்னோட கூடப் பிறந்த தங்கச்சி
இல்லை...இன்னும் சொல்லப் போனால் அவள் எனக்கு பிறந்தவளே இல்லை”என்று சொல்ல
பாஸ்கருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது அந்த விஷயம்.
“எ...என்னப்பா சொல்றீங்க?”
“ஆமா பாஸ்கர்..அதுக்காக சுமதியை தப்பா நினைக்காதே...அவளுக்கும் அந்த
தப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை...அவளின் அனுமதியின்றி யாரோ ஒரு கயவனின்
வெறியை தீர்த்துக் கொள்ள அவள் பலியாக்கப் பட்ட நிகழ்வு அது...”
“அந்த ஆளையே சித்திக்கு கல்யாணம் செஞ்சு வச்சு இருக்கலாமே அப்பா...”
“குடி போதையில் அந்த கேடு கெட்ட செயலை செய்த அந்த
நாய்...குடிபோதையிலேயே ஆற்றில் தவறி விழுந்து உயிரை விட்டு விட்டான்.”என்றார்
கோபமாக...
“அதுக்காக நீங்க ஏனப்பா சித்தியை கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க?”
“வேற என்ன செய்யுறது?அவ என்னோட சொந்த அக்காவோட பொண்ணு. அப்போ அவளுக்கு
வயசு பதினைஞ்சு தான்...தான் கெடுக்கப்பட்டோம் அப்படிங்கிற விவரமே அவளுக்கு
தெரியலை.நாலு மாசம் கழிச்சு தான் அவ சரியா சாப்பிடாம வாந்தி எடுத்துக்கிட்டே
இருக்கவும் டாக்டர் கிட்டே காட்டும் பொழுது தான் விவரமே தெரிஞ்சது...ஏற்கனவே
புருஷனை இழந்த அக்காவுக்கு என்ன செய்றதுனே தெரியலை...
சுமதிகிட்டே விசாரிச்சு அவனைப் பார்க்க அவன் வீட்டிற்கு போனா...அவன்
செத்து ஒரு மாசம் ஆகி இருந்தது.செத்துப் போன ஒருத்தன் தன்னை கெடுத்துட்டதா சொன்னா
யாரு நம்புவா...அது தான் அவளை நானே கல்யாணம் செஞ்சுகிட்டேன்.என்னை கல்யாணம்
செய்யும் பொழுது சுமதிக்கு பதினைஞ்சு வயசு...எனக்கு முப்பத்திரண்டு...வெளியே
எத்தனையோ பேர் என்னை அசிங்கமா பேசினாங்க...
உங்க அம்மா இறந்து அப்போ ஒரு நாலு வருஷம் இருக்கும்...கல்யாண ஆசையில்
இப்படி சின்னப்பிள்ளை வாழ்க்கையையே கெடுத்துட்டேன்னு என்னை நிறைய பேர்
திட்டினாங்க...ஆனா அது எதையும் நான் காதில் வாங்கலை...என் கூடப் பிறந்த அக்கா
என்னோட கால்ல விழுந்து கெஞ்சினப்போ எனக்கு வேற எந்த வழியும் தெரியலை.அவளை நானே
கல்யாணம் செஞ்சுகிட்டேன்.குழந்தை மாதிரி அவளை பார்த்துக்கிட்டேன்.எனக்கு எப்பவுமே
சுமதி ஒரு குழந்தை தான்.நான் தூக்கி வளர்த்த குழந்தை.சந்தர்ப்ப சூழ்நிலையால்
எனக்கே மனைவி ஆகிட்டா...அவளுக்கு உரிய பக்குவம் வந்ததும் இந்த வாழ்க்கை குறித்து
எந்த முடிவு எடுத்தாலும் அதை செஞ்சு கொடுக்கணும்னு தான் நான் ஆசைப்பட்டேன்.
இவ்வளவு தூரம் செஞ்சும் என்ன பிரயோஜனம்? பிரசவத்தில் பௌர்ணமி
பிறந்ததும் ஜன்னி வந்து அவ இறந்தும் போய்ட்டா...
பிரசவ வலியில் துடிச்சப்போ கூட என்கிட்டே சத்தியம் வாங்கிட்டா
சுமதி...தன்னோட பிறப்பு இவ்வளவு மோசமான ஒரு விஷயம்னு தனக்கு பிறக்கப் போற
குழந்தைக்கு தெரியவே கூடாதுன்னு சொல்லிட்டா...நானும் அவளுக்கு கொடுத்த வாக்கை இந்த
நிமிஷம் வரைக்கும் காப்பாத்தி இருக்கேன்.
இப்ப கூட இந்த உண்மையை உன்கிட்டே சொல்லுறதுக்கு ஒரு காரணம்
இருக்கு...நாளைக்கே இந்த விஷயம் வேறு யார் மூலமாவது உனக்கு தெரிய வந்துச்சுன்னா
உனக்கு பௌர்ணமியின் மீது வெறுப்பு ஏற்படலாம்...அப்படி நடக்கக்கூடாது பாஸ்கர்.
அவ என்னைக்கும் உன்னோட தங்கச்சி தான்.அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை
அமைத்துக் கொடுப்பது உன் பொறுப்பு என்று சொல்லி கண் மூடிய தந்தையின் நினைவில்
இன்றும் கண்ணீர் பெருகியது அவனுக்கு...
தந்தையின் ஆசைப்படி அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையாமல் போய் விட்டதோ
என்ற வருத்தத்தில் இருந்தவனின் துயரம் இன்று பார்த்திபனின் நேசத்தை கண்ணெதிரில்
பார்த்ததால் துணி வைத்து துடைத்ததைப் போல மாறி விட்டது.
அவன் உறுதியாக நம்பினான்.பௌர்ணமிக்கு அமைந்து இருப்பது சிறப்பான
வாழ்க்கை தான் என்று...நேற்று மணமாகி வந்த பெண்ணுக்காக மொத்த குடும்பமும் தன்னுடைய
நெருங்கிய உறவையே எதிர்க்க துணிந்து விட்டதே...அதற்குப் பிறகு அவன் மனம் அமைதி
அடைந்து விட சுகன்யாவுடன் கலகலப்பாக பேசத் தொடங்கினான்.சுகன்யாவிற்கும் கணவன்
இயல்புக்கு திரும்பி விட்டது மகிழ்ச்சியே.கோவிலில் இருந்தவர்கள் அனைவரும்
மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க இங்கே பார்த்திபனும்,பௌர்ணமியும் வேறு மனநிலையில்
இருந்தார்கள்.
பௌர்ணமி இறுகிப் போய் அமர்ந்து இருக்க...பார்த்திபனோ தவிப்புடன்
ஜீப்பை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
ஜீப்பை அவன் ஓட்டி வருவதை தொலைவில் இருந்தே பார்த்து விட்ட மெய்யாத்தா
பேரனிடம் வம்பிழுக்க எண்ணி அவன் இறங்கும் முன்னரே அவனை கேலி பேசினார்.
“என்னடா பேராண்டி...கோவில் பூஜை முடியற வரை கூட உன்னால ஒழுங்கா இருக்க
முடியலையா? பௌர்ணமியும் நீயும் மட்டும் வீட்டுக்கு வந்து இருக்கீங்க?”
“அட நீங்க வேற அப்பத்தா...இன்னைக்கு நடந்த கூத்து எதுவும் தெரியாம
பேசாதீங்க” என்று சொல்லிவிட்டு பார்வையால் பௌர்ணமியை சுட்டிக்காட்ட அப்பொழுது தான்
கவனித்தார் பௌர்ணமி தலையில் கட்டுடன் சோர்ந்து போய் இருந்ததை...
“டேய்! பிள்ளைக்கு என்னடா ஆச்சு...ஆத்தி”என்று அந்த வயதான காலத்திலும்
வேகமாக ஒடி வந்தவரைக் கண்டு பௌர்ணமிக்கு உள்ளுக்குள் ஏதோவொன்று பொங்கியது.
பார்த்திபன் நடந்த அனைத்தையும் கதை...கதையாய் சொல்லிக் கொண்டே
பௌர்ணமியின் மறுப்புகளை அலட்சியம் செய்து விட்டு அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.
மாடியில் தங்களது அறையில் அவளை படுக்க வைத்து விட்டு மருத்துவருக்கு
அழைக்க சில நிமிடங்களில் வந்து சேர்ந்த மருத்துவர் அவளின் காயங்களை சுத்தப்படுத்தி
வலி குறையவும்... கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க தூக்க மருந்தும் போட்டு விட்டு கிளம்பி
விட்டார்.
பார்த்திபன் அறையை விட்டு எங்கேயும் நகரவில்லை.அவள் கண் விழிக்கும்
வரை அங்கேயே இருக்க முடிவு செய்தவன் உறங்கும் மனைவியின் மதிமுகத்தையே நேசத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தான்.
சில மணி நேரத்திற்கு பிறகு கோவிலில் இருந்து எல்லாரும் வீட்டுக்கு
வந்து விட உறங்கிக் கொண்டு இருந்த பௌர்ணமியை யாரும் தொந்தரவு செய்யாதபடி
பார்த்துக் கொண்டான் பார்த்திபன்.
வீடே ஒரு வித அமைதியில் இருக்க அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு
ஒலித்தது மெய்யாத்தாவின் குரல்.
“எலேய்! பார்த்திபா...”என்ற அவரின் குரல் வீடு முழுக்க எதிரொலிக்க
தூக்கி வாரிப் போட நிமிர்ந்தவன் அப்பத்தாவுடன் ராமன் இருப்பதைப் பார்த்ததும்
அவனுக்கு புரிந்து போனது...என்ன நடந்து இருக்கும் என்று.
தான் அப்பத்தாவிடம் சொல்லாமல் விட்ட விஷயங்களை இட்டுக்கட்டி
கூடுதலாகவே சொல்லி இருப்பார் என்று நினைத்தவன் ராமனை நோக்கி ஒரு இகழ்ச்சிப் பார்வை
செலுத்தி விட்டு அறை வாயிலில் காத்துக் கிடந்த அப்பத்தாவை நோக்கி விரைந்தான்.
“அப்பத்தா..கீழே போய் பேசலாம்..அவ முழிச்சிடப் போறா?”
“நான் கேட்கிற கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு பார்த்திபா...ராமனை
நம்ம சொந்தக்காரங்க முன்னாடி அடிச்சியா?”பேரனின் செயலை நம்ப முடியாமல் நிச்சயம்
அவன் அவ்வாறு செய்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கையுடன் கேட்டார் மெய்யாத்தா.
‘நான் யாரு அப்பத்தா?”
“எலேய்! நான் என்ன கேள்வி கேட்கிறேன்...நீ என்ன கேட்கிற?”
“ம்ச்....கேட்டதுக்கு பதில் சொல்லுங்க அப்பத்தா..நான் யார்?”
“இதென்ன கேள்வி..நீ பார்த்திபன்...”
“இல்லை...நான் மெய்யாத்தாவின் பேரன்”என்று அழுத்தமாக கூறியவனின்
அப்பத்தாவின் முகத்திலிருந்து கடுமை குறைவதை உறுதி செய்து கொண்டான்.
“ஆமா ராசா..நீ என்னோட பேரன் தான்...”
“நீங்க யாரு...எப்பேர்பட்ட ஆளு..உங்க பேரனோட பொண்டாட்டியைப் பத்தி
ஒருத்தர் அசிங்கமா நாக்குல நரம்பில்லாம பேசுனா நீங்க என்ன செய்வீங்க?”
“பேசுறதா...வெட்டி போட்டுடுவேன் வெட்டி...”
“அதே தான் அப்பத்தா...பௌர்ணமியைப் பத்தி இவர் தப்பா
பேசினார்...அப்பா,அம்மா...யார் சொல்லியும் கேட்காம என் பொண்டாட்டியைப் பத்தி தவறா
பேசினா...நான் எப்படி அப்பத்தா சும்மா விட முடியும்?”
“அது தானா சங்கதி...இவ்வளவு நடந்து இருக்கா...எலேய்! ராமா”என்று கோபத்தோடு
அப்பத்தா திரும்பிப் பார்க்க..அந்த இடத்தில் ராமன் இருந்தால் தானே...எப்பொழுது
அம்பு அவர் பக்கம் திரும்பியதோ அப்பொழுதே அவர் ஒடி விட்டார்.
பார்த்திபனின் முகத்தையே கூர்ந்து பார்த்த மெய்யாத்தா அன்று கேட்ட அதே
கேள்வியை இன்றும் கேட்டார்.
கருத்துரையிடுக