முழுமதியாகுமோ என் வெண்ணிலா Tamil Novels 16

 

“என் கிட்டே எதுவும் மறைக்கறியா பார்த்திபா?”

அப்பத்தாவிடம் இனி எதையும் மறைக்க வேண்டாம் என்று முடிவு செய்தவன் அவரை அழைத்துக் கொண்டு தன்னுடைய அறைக்குள் சென்று கதவை தாழிட்டு விட்டு வந்தவன் பௌர்ணமி உறக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினான்.

“அப்பத்தா...சுகன்யா கல்யாண சமயம் வீடு எவ்வளவு போராட்டமா இருந்துச்சுனு உங்களுக்கே தெரியும்...சுகன்யாவின் பிடிவாதத்தால் மட்டுமே அவளது திருமணத்திற்கு நாம் எல்லாரும் சம்மதித்தோம்.அந்த சமயத்தில் எனக்கு உண்மையில் பாஸ்கரைப் பிடிக்கவில்லை.நல்ல பிள்ளை போல நடித்து சொத்துக்காக சுகன்யாவை மணக்கத் திட்டமிடுகிறார் என்ற எண்ணத்துடன் இருந்து வந்தேன்.ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா இந்த திருமணத்தை நிறுத்துவதற்கு என்று ஆவலுடன் இருந்தேன்.ஆனால் யாருடைய கெட்ட நேரமோ என்னால் பாஸ்கரிடம் எந்தக் குறையும் காண முடியவில்லை.

ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் துடித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் கல்யாணத்திற்காக பௌர்ணமி வந்து சேர்ந்தாள் ஹாஸ்டலில் இருந்து.

அப்போ அவ பன்னிரண்டாம் வகுப்பு தான் படிச்சுட்டு இருந்தா...கல்யாணப் பத்திரிக்கை டிசைன் காட்டுறதுக்கு அவங்க வீட்டுக்கு போய் இருந்தப்பத் தான் அவளை முதன்முதலா பார்த்தேன்.பார்த்தவுடனே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு...

குழந்தை மாதிரி முகம்...குண்டு கன்னம்...கோழி முட்டை கண்ணு...பார்த்த முதல் பார்வையிலேயே என் மனசில சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்டா...அதுக்கு அப்புறம் ஏதாவது சாக்கு வச்சுக்கிட்டு அவளைப் போய் பார்ப்பேன்.

என்னைப் பார்த்ததுமே அவ உடம்பெல்லாம் நடுங்கி,பயத்தில் வேர்க்க ஆரம்பிச்சுடும்...எனக்கு அவளை சீண்டுவது ரொம்பவே பிடிக்கும்...போகும் போதெல்லாம் அவளை சீண்டி ரொம்பவே விளையாடுவேன்...எனக்கு அவளை ரொம்பவே பிடிச்சு இருந்தாலும் பாஸ்கரோட தங்கச்சி அப்படிங்கிறதால அவளை என்னால முழு மனசோட நம்ப முடியலை.

என்ன தான் அவளுக்கு என் மேல பயம் இருந்தாலும் நான் வீட்டுக்கு வந்துட்டா எனக்கு வேணும்கிறது எல்லாம் பார்த்து பார்த்து செய்வா...ஆனா என்கிட்டே நின்னு கூட பேச மாட்டா..அதை எல்லாம் கூட அவ வேணும்னு என்னை ஈர்க்கிறதுக்காக செய்றாளோன்னு எனக்கு தோண ஆரம்பிச்சுது.ஆனா அதையும் தாண்டி அவ தினம் தினம் என்னை ஒவ்வொரு மாதிரி ஈர்க்க ஆரம்பிச்சா...அதை என்னால தாங்க முடியலை...

இன்னும் சொல்லப் போனா எங்கே தோத்துப் போய்டுவேனோன்னு ஒரு பயம் உள்ளுக்குள்ளே இருந்துகிட்டே இருந்துச்சு.

சுகன்யாவோட கல்யாணத்துக்கு முதல் நாள் மண்டபத்தில் யாருக்கும் தெரியாம அவளை தனியா சந்திச்சு பேசினேன்.அதுக்குக் காரணம் மண்டபத்தில் இருந்து வயசு பசங்க சில பேர் அவளை ஆர்வமா பார்க்க ஆரம்பிச்சாங்க.அதை...அதை என்னால தாங்கிக்க முடியலை.எப்படியாவது கல்யாணம் முடியறதுக்குள்ள அவகிட்டே பேசி சம்மதம் வாங்கிடணும்ன்னு நினைச்சேன்.” என்றவனின் பார்வை பின்னோக்கி சென்றது.

“பௌர்ணமி” கரகரத்த குரலுடனும் துளைக்கும் பார்வையுடனும் தனக்கு எதிரே நின்றவனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தலையை தாழ்த்திக் கொண்டாள் பௌர்ணமி.

“இப்போதைக்கு இந்த விஷயத்தைப் பத்தி பேசவே கூடாதுன்னு நினைச்சேன்...ஆனா என்னால முடியல...நான் பார்க்கும் பொழுது என் முகத்தைப் பார்க்கக் கூடப் விரும்பாமல் தலையை குனிஞ்சு நிற்கறியே...அதுக்கு என்ன காரணம்? வெட்கமா ...இல்லை என்னைப் பார்க்க உனக்கு பிடிக்கலையா?”

“...”

“பேச மாட்டியா?”

“...”

“பேசேன் பொம்மிம்மா”

அதுவரை பதட்டமாக சுடிதார் துப்பட்டாவை விரல்களில் சுற்றிக் கொண்டு இருந்தவள் அதிர்ந்து போய் அவன் முகம் பார்த்தாள்.

“எ...என்ன சொன்னீங்க?”

“பொம்மிம்மான்னு கூப்பிட்டேன்...ஏன் கூப்பிடக் கூடாதா? உங்க அப்பா உன்னை சின்னப் பிள்ளையில் குட்டிமான்னு கூப்பிடுவாராமே...என்ன முழிக்கிற உன்னைப் பத்தின எல்லா விஷயமும் எனக்குத் தெரியும்”

“எல்லா விஷயமும் தெரிஞ்சவருக்கு உங்க கேள்விக்கு பதில் மட்டும் தெரியலையா...அதையும் நீங்களே கண்டுபிடிங்களேன்”என்று தலையை ஒரு பக்கமாக சாய்த்து அவள் கேட்க,

“அது சுலபம் தான் பொம்மிம்மா...ஆனா இவ்வளவு தள்ளி நின்னா கண்டுபிடிக்க முடியாது...கொஞ்சம் பக்கத்தில் வந்தா ஈஸியா கண்டு பிடிச்சுடுவேன்.வரட்டுமா?” என்று சொல்லிக் கொண்டே அவளை நெருங்க முயல வெட்கத்துடன் அந்த இடத்தை விட்டு ஒடி விட்டாள் பௌர்ணமி.

நாணத்தில் சிவந்த அவளது முகத்தை எண்ணி கனவு கண்டு கொண்டே படிகளில் இறங்கயவனின் காதில் இடியென வந்து விழுந்தன வார்த்தைகள்.பாஸ்கரின் சொந்தக்காரர் யாரோ ஒருவர் தன்னுடைய மகனை சமாதானம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தார்.

“டேய்!ரமேஷ்...சொல்றதை கேளுடா...அந்த பொண்ணு பௌர்ணமியை எல்லாம் என்னால மருமகளா ஏத்துக்க முடியாதுடா...அவங்க அம்மாவுக்கு முறை தவறி பிறந்தவ இவ...ஏதோ கல்யாண வீட்டில் அமைதியா இருக்கிறதையும்...உனக்கு சாப்பாடு பரிமாறினதையும் வச்சு நீயா கற்பனை செஞ்சுக்கிட்டு உளறாதே...”

“அப்பா...என்னோட மனசைக் கலைக்க இந்த மாதிரி தப்பு தப்பா பேசாதீங்க...”

“டேய் உன்கிட்டே நான் பொய் சொல்லணும்ன்னு எனக்கு என்னடா அவசியம்...உன் கல்யாண விஷயம் உன்னோட ஆசைப்படி தான் நடக்கும்..ஆனா நீ கூட்டிக்கிட்டு வர்ற பொண்ணு நம்ம குடும்ப கௌரவத்தை காப்பாத்துற மாதிரி இருக்கணும்...மோசமான குடும்பத்தில் இருந்து வந்தவளா இருக்கக்கூடாது”என்றெல்லாம் பேசி மகனை சமாதானம் செய்ய முயல அதைக் கேட்டுக் கொண்டிருந்த பார்த்திபனுக்கு உள்ளம் கொதித்தது.

‘எவ்வளவு பெரிய மோசக்காரி அவ..ஒரே நேரத்தில் நடிச்சு என்னையும் ஏமாத்தி இருக்கா...ரமேஷையும் ஏமாத்தி இருக்கா...என்கிட்டே எதிரில் நின்னு பேசவே யோசிப்பா...யாரோ ஒருத்தனுக்கு சாப்பாடு எல்லாம் பரிமாறி இருக்கா...இது அத்தனைக்கும் மேலா அவளோட அசிங்கமான பிறப்பைப் பத்தி என்கிட்டே சொல்லவே இல்லை...இது மாதிரி இன்னும் எத்தனை விஷயங்களை என்கிட்டே இருந்து மறைச்சு இருக்காளோ”என்று ஆத்திரம் பெருக அவளைத் தேடிப் போனான்.

பெண் அழைப்பு முடிந்ததும் பெண் வீட்டாரை சேர்ந்தவர்கள் மண்டபத்திலேயே தங்கி விட,ஒரு சில உறவினர்களும், மாப்பிள்ளை வீட்டை சேர்ந்தவர்களுக்கும் பார்த்திபனின் வீட்டிலேயே தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

வேகமாக வீட்டுக்கு வந்தவன் முதலில் தட்டியது பௌர்ணமியின்  அறைக்கதவைத் தான்.இரவு நேரத்தில் கதவை அவன் வேகமாக தட்டிய சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து பாஸ்கர் வரவும்...தூக்கக் கலக்கத்தோடு பௌர்ணமி கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது.

முதலில் அவனை அந்த நேரத்தில் பார்க்கவும் கன்னங்கள் இரண்டும் வெட்கத்தில் சிவக்க நின்று கொண்டு இருந்தவள் அவனது கோபமான பார்வையின் அர்த்தம் புரியாமல் தடுமாறினாள்.

‘ஏன் இவ்வளவு கோபம்...கொஞ்ச நேரம் முன்னாடி கூட நல்லா தானே பேசிட்டு இருந்தார்....இப்ப ஏன் இப்படி முறைக்கிறார்?’என்று அவள் யோசித்துக் கொண்டே இருக்க..அதே கேள்வியை பாஸ்கர் கேட்டான்.

“என்ன விஷயம் பார்த்திபா..என்னைப் பார்க்க வந்தீங்களா? ரூம் மாறி வந்துட்டீங்களா?”

“ஆஹா..ஆஹா..அண்ணனும் தங்கச்சியும் என்னமா நடிக்கறீங்க?நடிச்சு நடிச்சு மத்தவங்களை ஏமாத்தலாம்...இந்த பார்த்திபனை அவ்வளவு சுலபமா ஏமாத்த முடியாது...”

“என்ன சொல்றீங்க பார்த்திபன்...கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன்?”

“ஹ..அந்த அசிங்கத்தை என் வாயால வேற சொல்லணுமா?என்னோட தங்கச்சியை உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க ஒத்துக்கிட்டதுக்கு ஒரே காரணம் பணம் காசு இல்லாட்டியும்...நல்ல குடும்பம்னு நினைச்சு தான்.ஆனா இந்த மாதிரி தரங்கெட்ட ஒருத்தி இருக்கிற வீட்டுக்கு என்னோட தங்கச்சியை நான் அனுப்ப மாட்டேன்”

“பார்த்திபா...வார்த்தையை அளந்து பேசுங்க...நீங்க பேசுறது யாரைப் பத்தின்னு நினைவு இருக்கா... இல்லையா?”

“என்ன பாஸ்கர்...மிரட்டுற மாதிரி பேசுற...பேசினா என்ன செய்வ... கல்யாணத்தை நிறுத்திடுவியா? அது எப்படி? அப்புறம் என் தங்கச்சி பங்கு சொத்து எதுவும் உனக்கு வராதே...”

“என்ன சொல்ல வர்றீங்க பார்த்திபன்...சொத்துக்காகத் தான் நான் சுகன்யாவை காதலிக்கறேன்ன்னு சொல்றீங்களா?”

“ஆமா...நீங்க மட்டும் இல்ல..இந்த ஆள் மயக்கியும் அதுக்காக தான் நல்லவ வேஷம் போடுறா...நல்ல குடும்பத்தில் பிறந்து இருந்தா...நல்ல குணம் இருக்கும்..கேடுகெட்ட குடும்பத்தில் பிறந்தவளுக்கு புத்தி சாக்கடையாகத் தானே இருக்கும்” என்று ஆத்திரத்துடன் பேசியவன் கண்களில் கனல் கக்க பௌர்ணமியின் முகமோ ரத்தப் பசையின்றி வெளுக்கத் தொடங்கியது.

“பார்த்திபா..நீ எல்லை மீறி பேசிக்கிட்டு போற..சுகன்யாவோட அண்ணன்கிறதால தான் நான் பொறுமையா இருக்கேன்”சுற்றிலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த உறவினர்களை எண்ணி கோபத்தை குறைத்துக் கொள்ள முயற்சித்தான் பாஸ்கர்.

“உண்மையை சொன்னா..உனக்கு ஏன் ரோஷம் வருது பாஸ்கர்...கல்யாணத்துக்கு முன்னாடியே வயித்தில் பிள்ளையை சுமந்தவ தானே இவ அம்மா...சம்பந்தமேயில்லாமல் இல்லாமல் எவனோ ஒருத்தனின் பிள்ளைக்கு உங்க அப்பனை ஏமாற்றி அப்பன் ஆக்கியவளின் வாரிசு தானே இவள்...இவ மட்டும் எப்படி ஒழுக்கத்தின் சிகரமாவா இருப்பா...இவளும் அதே மாதிரி தானே இருப்பா...” என்பர் கொடும் விஷம் போன்ற வார்த்தைகளின் வீரியம் தாங்க முடியாமல் உணர்விழந்து பற்றற்ற கொடி போல தரையில் விழுந்தாள் பௌர்ணமி.


Post a Comment

புதியது பழையவை