முழுமதியாகுமோ என் வெண்ணிலா tamil novels 17

 


நொடியும் தாமதிக்காமல் அவளை கைகளில் ஏந்திக் கொண்ட பாஸ்கரன் உடனடியாக ஹாஸ்பிடலில் சேர்த்து விட,எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று விட முடியாமல் பார்த்திபனின் மனம் பதற அவனும் அவர்களுடன் மருத்துவமனைக்கு சென்றான். டாக்டர் பரிசோதித்து முடிக்கும் வரை அறைக்கு வெளியில் காத்திருந்த பார்த்திபனிடம் வேதனையுடன் பேசினான் பாஸ்கர்.

“தப்பு பண்ணிட்டீங்க பார்த்திபன்... உங்களுக்கு ஒரு விஷயம் தெரிய வந்துச்சுன்னா அதைப் பத்தி என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாமே...இதுவரை அவளுக்கு தெரியாம நாங்க பூட்டி வச்சு இருந்த ரகசியத்தை இப்படியா போட்டு உடைப்பீங்க...அவ பூஞ்சை மனசுக்காரி பார்த்திபன்..இவ்வளவு பெரிய அதிர்ச்சியை எப்படி தாங்கிப்பா...”

“என்ன சொல்றீங்க பாஸ்கர்..அவ..அவளுக்கு இதெல்லாம் தெரியாதா?”பார்த்திபனின் அதிர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

“ஆமா ...இப்போ வரை இறந்து போன என்னோட அம்மா தான் அவளுக்கும் அம்மான்னு நினைச்சுக்கிட்டு இருக்கா...அவளை பெத்தவங்க பேர் கூட அவளுக்குத் தெரியாது”என்று சொன்னவன் தன்னுடைய தந்தை தன்னிடம் கூறியது அனைத்தையும் கூற இடிந்து போய் அமர்ந்து விட்டான் பார்த்திபன்.

தன்னுடைய அவசர புத்தியினாலும்,கோபத்தினாலும் அவன் எப்படிப்பட்ட கொடுமையான வார்த்தைகளை அவளை நோக்கி பேசி விட்டான் என்ற உண்மை கொஞ்சம் தாமதமாகவே அவனுக்கு புரிந்தது.

சில நிமிடங்களுக்கு முன் அறைக்கதவை திறந்ததும் எதிரில் அவனைப் பார்த்த பிறகு வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க அவள் நின்றிருந்த கோலம் இப்பொழுது அவன் நெஞ்சில் குத்தீட்டியாக மாறி குத்தியது.

முதலில் பாஸ்கரிடம் மன்னிப்பு கேட்டவன் அடுத்து பௌர்ணமி கண் விழிப்பதற்காக காத்திருக்கத் தொடங்கினான்.

சில மணி நேரத்தில் கண் விழித்த பௌர்ணமியை நிமிர்ந்து பார்க்கக் கூட அவனால் முடியவில்லை.அவளும் இவன் புறம் திரும்பவே இல்லை.உணர்வுகள் மரத்துப் போன மாதிரி ஒரு பார்வை பார்த்துக் கொண்டு இருந்தவளின் பார்வை பாஸ்கரிடம் மட்டும் நிலைத்து இருந்தது.

அவளது பார்வை பாஸ்கரிடம் கேட்டது ஒரே ஒரு கேள்வியைத் தான்...

‘இதெல்லாம் உண்மை தானா?’

உண்மை தான் என்று அவளின் முகம் பார்த்து கூட முடியாத பாஸ்கரின் தவிப்பு அவளுக்கு உண்மையை சொல்லாமல் சொல்ல கண்களை மூடி அப்படியே படுக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

“இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க பார்த்திபன்...”என்று கண்களை மூடி பாஸ்கர் சொல்ல பார்த்திபனை விட அதிகம் அதிர்ந்தது பௌர்ணமி தான்.

“பாஸ்கர்...நாம பேசலாம்”

“இல்லை பார்த்திபன்..எது எப்படியோ பௌர்ணமி என்னோட தங்கச்சி..அவளை கேவலமா பேசுற ஒருத்தர் வீட்டுக்கு மாப்பிள்ளை ஆவதோ...என்னுடைய காதலை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய பின்னரும் உங்கள் தங்கையை நான் ஏற்றுக் கொள்வது என்பதோ என்னால் முடியாத காரியம்...தயவு செய்து செய்து என்னை மன்னிச்சுடுங்க...” என்று பாஸ்கர் சொல்ல பார்த்திபன் விக்கித்துப் போனான்.

இந்த விஷயம் மட்டும் அவனது வீட்டினருக்கு தெரிந்தால் அவன் தொலைந்தான்.அவன் முகத்தில் கூட யாரும் முழிக்க மாட்டார்கள்.என்று எண்ணியவனுக்கு கெஞ்சுவதற்கு கூட வார்த்தைகள் வரவில்லை.அப்படியே இடிந்து போய் அமர்ந்து விட்டான்.

“அண்ணா...இவர் பேசுறதுக்காக சுகன்யா அண்ணியைப் பழி வாங்கப் போறியா?சரி...அப்படியே நீ சொல்ற மாதிரி இந்த கல்யாணத்தை நிறுத்திட்டா எல்லாம் சரியாகிடுமா...அண்ணி என்ன தப்பு செஞ்சாங்க...எனக்கு அவங்க தான் அண்ணியா வரணும்”என்று வறண்டு போன குரலில் அழுத்தமாக சொல்லி விட்டு கண்களை இறுக மூடிக் கொண்டாள் பௌர்ணமி

அவளின் வார்த்தைக்கு கட்டுப்பட்டுத்தான் மறுநாள் காலையில் பாஸ்கர் சுகன்யாவின் கழுத்தில் தாலி கட்டினான் என்பது அவர்கள் மூவர் மட்டுமே அறிந்த ரகசியம்...கல்யாணம் முடியும் வரை கஷ்டப்பட்டு முகத்தை சிரித்தது போல வைத்து இருந்த பௌர்ணமியை பார்த்திபனால் அணுகவே முடியவில்லை.

திருமணம் முடிந்ததும் அவளது பக்க உறவினர்களுடன் அவள் ஊருக்கு கிளம்புவதாக அறிவிக்க பாஸ்கரனும் அவளது மனநிலையைக் கருத்தில் கொண்டு அவளை தன்னுடைய பாட்டி உறவுமுறை பெண்ணுடன் அனுப்பி வைத்து விட்டான்.

திருமணம் முடிந்ததும் அவளிடம் பேசி மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என்று பார்த்திபன் நினைத்துக் கொண்டு இருக்க அவனுக்கு தகவல் வந்து சேரும் முன்னரே அவள் கிளம்பி விட்டாள்.

எப்படியாவது அவளிடம் மன்னிப்பு கேட்டு தன்னுடைய மனநிலையை அவளுக்கு விளக்கி விட வேண்டும் என்று முடிவு செய்தவன் நேராக அவளைப் பார்க்க அவளின் பாட்டி வீட்டிற்கே சென்று விட்டான்.

அவளின் பாட்டி அப்பொழுது கோவிலுக்கு சென்று இருக்க பௌர்ணமி மட்டுமே வீட்டில் தனித்து இருந்த அந்த சந்தர்ப்பம் அவனுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது.

கதவை தட்டி விட்டு வெளியில் அவன் காத்திருக்க சில நிமிடங்கள் கழித்து வந்து சோர்வுடன் கதவை திறந்த பௌர்ணமியின் முகம் பார்த்திபனைக் கண்டதும் இருள் அடைந்தது.

Post a Comment

புதியது பழையவை