ஹரிஹரன் கேட்ட
கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் திருதிருவென விழிக்கத் தொடங்கினாள்
வெண்ணிலா. அதுவும் இல்லாமல் ஹரிஹரன் கேட்ட கேள்வி அவளுக்கு கொஞ்சமும் பிடித்தம்
இல்லாததால் லேசான முகச் சுழிப்போடு அவனை விட்டு விலகி நின்றாள். ஹரிஹரனும் அவளை
தடுக்கவில்லை.
“இந்த கேள்விக்கு என்ன அர்த்தம்?” ஹரிஹரனை இப்பொழுது அவள் பார்த்த பார்வையில் நிச்சயம்
கண்டிப்பு இருந்தது.
“எனக்கு சந்தேகமா இருக்குனு அர்த்தம்”
“என் சித்தப்பா சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்...”
“இருக்கலாம் நிலா... அவரிடம் நிறைய மர்மங்கள் இருக்கிற
மாதிரி எனக்கு தோணுது”
“வேண்டாம்... உங்கள் புத்தி போகும் திசை சரியானதாக இல்லை...” எச்சரிப்பது போல
ஒற்றை விரலை உயர்த்திப் பேசினாள் வெண்ணிலா.
“சரி அப்படியே இருக்கட்டும் வெண்ணிலா. என்னுடைய இந்த
கேள்விகளுக்கு எல்லாம் நீயே பதில் சொல்... உன்னுடைய சித்தப்பாவிற்கு நாம்
இருக்கும் இந்த ஊரில் இப்பொழுது தங்க வேண்டியதன் அவசியம் என்ன? நம்மை பின்
தொடர்ந்து வந்து நாம் தங்கி இருந்த அதே ஹோட்டலில் அவரும் ஏன் தங்கினார்?”
“உங்க இஷ்டத்துக்கு மாங்காய் புளிச்சதோ வாய் இனிச்சதோன்னு
பேசாதீங்க... அவர் எதுக்கு இங்கே வரப் போறார்”
“நான் உளறவில்லை வெண்ணிலா. இப்பொழுது இந்த நேரம் உன்னுடைய
சித்தப்பா இந்த ஊரில் தான்... அதுவும் நமக்கு அருகில் இருந்து நம்மை கண்காணித்துக்
கொண்டு இருக்கிறார்”
“சுத்த மடத் தனம்” அலட்சியமாக கையை அசைத்தாள் வெண்ணிலா.
“நீ நினைப்பது போல எந்த முகாந்திரமும் இல்லாமல் நான் அப்படி
சொல்லவில்லை வெண்ணிலா... எனக்கு அவர் மீது சந்தேகம் கொள்ள சில காரணங்கள்
இருக்கிறது”
“என்ன காரணம்? அதையும் சொல்லி தொலையுங்கள்...” எரிச்சலாகவே
கேட்டாள் வெண்ணிலா
“சதாசிவம் உன்னுடைய மொத்த குடும்பத்தையும் கொன்றவர் இல்லையா? இவர் மட்டும்
எப்படி தப்பினார்?” இடையில் பேச முயற்சித்த வெண்ணிலாவை ஒற்றை கை அசைவில் தடுத்து விட்டு தொடர்ந்து
பேசலானான்.
“இத்தனைக்கும் அவர் ஒண்ணும் அத்தனை பலசாலியாகவும்
தெரியவில்லை. அப்படி உங்கள் எல்லாரையும் கொல்வது மட்டும் தான் அவரது நோக்கம்
என்றால் வீட்டை கொளுத்திய பின் உங்கள் இருவரின் உடலும் அங்கே இல்லாததை வைத்து
நீங்கள் தப்பி விட்ட செய்தியை அறிந்து கொண்டு இத்தனை ஆண்டுகளில் உங்களை தேடாமல்
விட்டு வைத்து இருப்பாரா?
நீ கேட்கலாம்
எல்லாரையும் எரித்த பின் என்ன மிஞ்சும் என்று? நிச்சயம் எலும்பு மிஞ்சி இருக்கும். அதை வைத்து எத்தனை பேர்
இறந்தார்கள் என்று சொல்லி விட முடியும்? திட்டம் போட்டு உங்கள் குடும்பத்தில் எல்லாரையும் ஏமாற்றிய
ஒருவன் இதைக் கூட யோசிக்கத் தெரியாத முட்டாளாக நிச்சயம் இருந்து இருக்க
முடியாது...
உனக்காகத் தான்
இந்த மரணங்கள் நிகழ்ந்தது என்பது உண்மை எனில் குறைந்தபட்சம் உன் வீட்டில்
எல்லாரையும் கொன்ற பின் உன்னை தன்னுடைய மகனுக்கு கட்டாயப்படுத்தி கூட திருமணம்
செய்து வைத்து இருக்கலாம். அப்படி நடக்காதது ஏன்?
இது
அத்தனைக்கும் மேலாக உன் அப்பாவின் பெயரில் இருக்கும் சொத்துக்களை விட அதிக சொத்து
உன் பெயரில் தான் இருக்கிறது... அப்படி இருக்கும் போது உன்னுடைய சொத்து மதிப்பில்
பாதி கூட தேறாத சொத்திற்காக உன்னுடைய குடும்பத்தையே ஏன் கொல்ல வேண்டும்?
அதற்கு பதிலாக
அவர்களை கொன்று விடுவதாக மிரட்டி உன்னிடம் சொத்து பத்திரத்தில் அவர்கள் ஏன்
கையெழுத்து வாங்கவில்லை?”
ஹரிஹரன் கேள்வி
மேல் கேள்வி கேட்டு அடுக்கிக் கொண்டே போக, அந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் வெண்ணிலா தடுமாற
தொடங்கினாள்.
“நீங்க ஏதோ தப்பான கண்ணோட்டத்தில் இதை பார்க்கறீங்கன்னு
நினைக்கிறேன். இழப்பு அவருக்கும் தான் ஏற்பட்டு இருக்கு... அவருடைய மனைவியும், மகனும் கூட அவர்
பறி கொடுத்து விட்டார். அதை மறந்துட்டு பேசாதீங்க” சித்தப்பனை விட்டுக் கொடுக்க அவளுக்கு மனம் வரவில்லை.
“இல்லை வெண்ணிலா நான் சொல்றதை கேளு... இதில் என்னவோ தப்பா
தோணுது எனக்கு” அவன் பேசி
முடிக்கும் முன் அந்த இடத்திற்கு மூச்சு இறைக்க ஓடி வந்தார் சுந்தரம். அதாவது
வெண்ணிலாவின் சித்தப்பா.
‘நான் சொன்னது
உண்மை ஆகிடுச்சு பார்த்தியா’ ஹரிஹரனின் விழிகளால் அவளிடம் வினவ வெண்ணிலாவோ அதை
அலட்சியப்படுத்தி விட்டு சுந்தரத்தை நோக்கி திரும்பினாள்.
“வெண்ணிலா... நல்லவேளை நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு...
சீக்கிரம் இங்கிருந்து கிளம்பு...”
“என்ன சித்தப்பா நீங்க எப்படி இங்கே வந்தீங்க? என்ன விஷயம்”
அவளுடைய முதல்
கேள்வி காதில் விழாதது போல பாவித்து பேச தொடங்கினார் சுந்தரம். “இவன் சரியான
ஏமாற்றுப் பேர்வழி மா... இவனோட இருந்தா உன் உயிருக்கு ஆபத்து”
ஹரிஹரனோ நின்ற
இடத்தில் இருந்து அசையாமல் கைகளை கட்டிக் கொண்டு அவர்கள் இருவரையும் வேடிக்கை
பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஹரிஹரனால்
அவளுக்கு ஆபத்தா? நம்ப மறுத்தது அவள் நெஞ்சம்... கண்களில் அழுத்தத்துடன் சுந்தரத்தை ஏறிட்டவள், “ என்ன விஷயம்
சித்தப்பா சொல்லுங்க”
“இவன் அந்த சதாசிவத்தோட மூத்த பையன் ஹரிஷ்மா... இதோ பாரு
ஆதாரம்...” என்று சிவாவின்
கம்பெனி அக்ரீமெண்டை எடுத்து அவள் முன் நீட்டினார்...
வெண்ணிலா
குழம்பிப் போனாள். இவருடைய அப்பா பெயர் என்னவென்று சற்று நேரம் யோசித்துப்
பார்த்தாள். அவளுக்கு நினைவுக்கு வரவே இல்லை... அவளுடைய நினைவில் நீங்காமல்
பதிந்து இருந்தது ஹரிஹரனின் பெயர் மட்டுமே. அவர்களுடைய திருமணத்தின் போது அவளுக்கு
இருந்த காதல் மயக்கத்தில் அவனை தவிர வேறு எந்த பெயரும் அப்பொழுது அவள் மனதில்
பதிந்து இருக்கவில்லை. ‘இது என்ன புதுக்குழப்பம்’ என்ற ரீதியில் தலையை பிடித்துக்
கொண்டாள் வெண்ணிலா.
அவரின்
நரித்தனத்தை உள்ளுக்குள் வியந்தபடியே கொஞ்சமும் நிதானம் தவறாமல் பேசினான் ஹரிஹரன்” இந்த ஊருக்கு
எப்போ வந்தீங்க? ஏன் வந்தீங்க?”
“அதை எல்லாம் உனக்கு சொல்லனும்னு அவசியம் இல்லைடா...
வெண்ணிலா கிளம்புன்னு சொல்றேன்ல” அவரின் குரலில் லேசான வற்புறுத்தல் இருந்தது.
“எனக்கு நீங்க காரணம் சொல்ல வேண்டாம்... உங்க பொண்ணுக்கிட்ட
சொல்லுங்க” அலட்டிக்
கொள்ளாமல் பதில் சொன்ன ஹரிஹரனை பார்த்து பல்லைக் கடித்தார் சுந்தரம்.
‘இவன் தான்
இப்படி பேசறான்... இந்த வெண்ணிலாவுக்கு என்ன வந்தது? அவனின் பேச்சை மறுத்து பேசாமல் அமைதியாக நின்று கொண்டு
இருக்கிறாள். ஏதேதோ சிந்தனைகளில் இருந்தவள் அவளுக்கு இருபுறமும் நின்று கொண்டு
இருந்த இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு விலகி பின்னோக்கி சில அடிகள்
சென்றாள். இப்பொழுது வெண்ணிலா நடுநாயகமாக நிற்க அவளுக்கு இருபுறமும் இருவரும்
நின்று கொண்டு இருந்தனர்.
“இந்த நிமிஷம் எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு... ஏன்னா நீங்க
ரெண்டு பேருமே என்னோட மனசுக்கு நெருக்கமானவங்க... இதில் யாரை நான் நம்ப...”
“ஆத்தா... நான் உன் தகப்பன்டா” அவளது பேச்சை இடைமறித்து உணர்ச்சிப் பொங்க பேசினார்
சுந்தரம்.
“அப்போ நீங்க முதலில் சொல்லுங்க... நீங்க எப்போ இந்த ஊருக்கு
வந்தீங்க? ஏன் வந்தீங்க? உங்களை ஊரில்
தானே இருக்க சொன்னேன்?” கைகளை குறுக்காக கட்டிக் கொண்டு விசாரணையை ஆரம்பித்தாள் வெண்ணிலா. அந்த
நேரத்தில் ஹரிஹரனுடைய தேவதை அவன் கண்களுக்கு ஒரு நீதி தேவதையை போலவே காட்சி
அளித்தாள்.
“இந்த ஊருக்கு உன்னை அனுப்பி வைத்து விட்டு என்னால் எப்படி
தாயி நிம்மதியாக இருக்க முடியும்? உனக்கு பாதுகாப்பு வேணுமே. அதான் உனக்கே தெரியாமல் உனக்கு
பின்னாடி பாதுகாப்பா வந்தேன்” வார்த்தைகளை அழகாகக் கோர்த்து சொன்னார் சுந்தரம்.
அவர் சொல்வது
மறுக்க முடியாத உண்மை... ‘இந்த ஊரில் இருந்தால் சதாசிவத்தால் உயிருக்கு ஆபத்து
வரக் கூடும் என்று தானே இருவரும் இந்த ஊரை விட்டு விலகி போய் வேறு ஊரில்
வாழ்ந்தார்கள். இதை எப்படி பொய் என்று சொல்வது’. அமைதி காத்தாள் வெண்ணிலா.
“சதாசிவம் உங்க அப்பாவா? அடுத்த கேள்வி ஹரிஹரனை நோக்கி பாய்ந்தது.
ஹரிஹரனோ
முகத்தில் இருந்த புன்னகை துளியும் மாறாமல் அவளுக்கு பதில் அளித்தான்.
“இல்லை நிலா... என்னுடைய அப்பா பெயர் விஸ்வநாதன்”
“பாப்பா அவன் பொய் சொல்றான். இந்த அக்ரீமென்ட்ல சதாசிவத்தோட
மூத்த மகன் தான் பார்ட்னரா சேருகிற மாதிரி தான் எழுதி இருக்கு... நீயே பாரு...
இதுக்கு மேலுமா இவன் நல்லவன்னு நீ நம்புற?”
“இதுக்கு என்ன சொல்றீங்க?” கண்களால் கூர்மையாக அவனை அளவிட்டபடியே கேட்டாள்.
“நிலா... எனக்கு வேற வழி தெரியலை. உன்கிட்டே நெருங்கி என்
மனதில் இன்னமும் நீ தான் இருக்கிறாய் என்பதை உனக்கு உணர்த்தவும், உன் மனதில் ஒரு
ஓரத்திலேனும் எனக்கு இடம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளவும் இந்த நாடகத்தை நான்
நடிக்க வேண்டியாதாயிற்று”
“இப்போ நீ இப்படி பேசி நடிக்கறியே அதுவும் கூட நாடகம் தான்.
இவன் கூட என்ன பேச்சு பாப்பா... நீ கிளம்பு” அவளை கிளப்புவதிலேயே சுந்தரம் குறியாக இருக்க இடைவெட்டி
பேசினான் ஹரிஹரன்.
“என்னிடம் இருந்து என்னுடைய நிலாவைப் பிரிக்க அந்த கடவுளால்
கூட முடியாது” ஆணித்தரமாக
வெளிவந்தது வார்த்தைகள்.
“நான் சொன்னா என் பொண்ணு கேட்பா... அப்படித்தானே தாயி” ‘ஆமாம் என்று
சொல்’ என்ற மறைமுக எச்சரிக்கை அதில் தொக்கி நிற்க மீண்டும் குழப்பத்திற்கு ஆளானாள்
வெண்ணிலா. இறுதியில் ஒரு முடிவுடன் சுந்தரத்தை நோக்கியவள், “சித்தப்பா நான் உங்க கூட வரேன். ஆனா அதுக்கு முன்னாடி
இவருக்கு உங்க மேல கொஞ்சம் சந்தேகம் இருக்கு. அதை தீர்த்துக் கொள்வோம்”
“இவன் எல்லாம் ஒரு ஆளா? இவனுடைய எண்ணத்தை பற்றி நமக்கென்ன கவலை? நாம் போகலாம்
வெண்ணிலா” அவளின் அருகே
வந்து கையை பற்ற முயன்றவரிடம் இருந்து லாவகமாக நகர்ந்து கொண்டாள் வெண்ணிலா.
“இல்லை சித்தப்பா... உங்களை இவர் சந்தேகப்படுவதை என்னால்
தாங்கிக் கொள்ள முடியவில்லை... தயவு செஞ்சு நீங்க பதில் சொல்லுங்க” என்று சொன்னவள்
ஹரிஹரன் தன்னிடம் கேட்ட கேள்விகள் அனைத்தையும் ஒரு வார்த்தை பிசகாமல் அப்படியே
கேட்டாள்.
அவள் கேட்க
கேட்க சுந்தரத்தின் முகம் பயங்கரமாக மாறுவதை கண்டாலும் எந்த இடத்திலும் பேச்சை
நிறுத்தாமல் அவரின் பாவனைகளை கூர்மையாக அளவிட்டவாறே சொல்லி முடித்தாள் வெண்ணிலா.
கருத்துரையிடுக