18
ஒன்றும் பேசாமல் அவள் உள்ளே சென்று விட அவளைத் தொடர்ந்து வீட்டுக்குள்
வந்த பார்த்திபனை அங்கிருந்த ஒரு சேரை சைகையிலேயே காட்டி அமர சொன்னவள் அவனுக்கு டீ
போடுவதற்காக அடுப்படிக்குள் நுழைந்து கொள்ள பார்த்திபனின் பதட்டம் ஓரளவிற்கு
குறைந்து இருந்தது.
‘தன்னைப் பார்த்ததும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வாள் அல்லது
வீட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியே துரத்துவாள் என்றோ அவன் எதிர்பார்த்து இருக்க
அவளின் இந்த அமைதி அவனுக்கு ஆச்சரியத்தை கொடுத்த அதே சமயம் பயத்தையும் கொடுத்தது.
ஏனெனில் அவள் கண்களில் ஒரு அந்நியத்தன்மை..யாரோ மூன்றாம் மனிதரிடம்
நடந்து கொள்வதைப் போன்ற விதத்தில் அவள் நடந்து கொள்ள பார்த்திபன் தன்னைத்தானே
சமாதானம் செய்து கொண்டான்.
‘நீ செய்தது ரொம்ப பெரிய தப்பு பார்த்திபா...அவளுக்கு கோபம் இருக்காதா
என்ன?பேசி புரிய வை...’என்று சொன்னவன் அவள் வரும் வரை பொறுக்க முடியாமல் நேராக
அடுப்படிக்குள் சென்று விட்டான்.
டீயை ஆத்திக் கொண்டிருந்தவள் திடீரென்று அவன் உள்ளே வரவும் ஒரு நொடி
அதிர்ந்தவள் தண்ணி சமாளித்துக்கொண்டு டம்ளரை அவன் புறம் நீட்டினாள்.
மறுக்காமல் வாங்கி ஒரு வாய் குடித்தவன் கெஞ்சலான பார்வையுடன் பேச்சை
ஆரம்பித்தான்.
“பொம்மிம்மா...அன்னைக்கு ஏதோ கோபத்தில் அப்படி
பேசிட்டேன்...மன்னிச்சுடுடா...யாரோ ஒருத்தன் உன்னை கல்யாணம் செஞ்சுக்கப் போறதா என்
காதுபடவே பேசுறான்...அந்த கோபம்...அதைத்தான் உன் மேல காட்டிட்டேன்...என்னை
மன்னிச்சுடு பொம்மிம்மா”
அவளின் மரத்துப்போன பார்வையில் இப்பொழுதும் துளி கூட மாற்றமில்லை.
வேகமாக அவளை நெருங்கி அவளின் கைகளை பற்ற முனைந்தவன் அவளது அந்நியப்
பார்வையில் அந்த முயற்சியைக் கை விட்டு அவளிடம் கெஞ்சலாக பேசத் தொடங்கினான்.
“உன் அண்ணன் மேல தான் எனக்கு சந்தேகம் பொம்மிம்மா...அதுதான் உன்
பக்கம் அப்படியே திரும்பிடுச்சு...தப்பு தான் இல்லைன்னு சொல்லலை...அதுக்காக என்னை
வெறுத்து ஒதுக்கிடுவியா பொம்மிம்மா...நீ இல்லாம என்னால வாழ முடியாதுடி...ப்ளீஸ்
புரிஞ்சுக்கோ”
“...”
“நான் என்ன செய்யணும் பொம்மிம்மா...என்ன செஞ்சா உனக்கு என் மேல
இருக்கிற கோபம் குறையும்...”
அதுநேரம் வரை மரத்த பார்வையுடன் இருந்தவள் அவன் முகத்தை பார்க்க
விரும்பாத வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டு பேசத் தொடங்கினாள்.
“இனியொரு முறை நீங்க என்னைத் தேடி வரக்கூடாது.அப்படி வந்தா அன்னிக்கு
நீங்க சொன்ன அதே வார்த்தையை மத்தவங்களும் சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க...இனி என்னைப்
பார்க்க வராதீங்க...மீறி வந்தா...”அவள் கண்களில் இருந்த உறுதி அவனை அசைத்துப்
பார்த்தது.அதே நேரம் அவளிடம் மீண்டும் மீண்டும் கெஞ்சவும் அவன் யோசிக்கவில்லை.
“ப்ளீஸ் பொம்மிம்மா...அப்படி எல்லாம் பேசாதடி...என்னால தாங்கிக்க
முடியாது.இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சுடு”
“இப்போ நீங்க இங்கே இருந்து கிளம்பறீங்களா இல்லையா?”என்று கேட்டவள்
கண் இமைக்கும் நொடிக்குள் கத்தியை எடுத்து தன்னுடைய மணிக்கட்டில் அழுத்தமாக
பதித்துக் கொண்டாள்.
பார்த்திபன் பதற, அவளோ கொஞ்சமும் உணர்வின்றி தொடர்ந்து பேசினாள்.
“இனியொரு முறை என்னைத் தேடி வந்தா...அந்த நிமிஷமே என்னோட வாழ்க்கையை
நான் முடிச்சுப்பேன்”என்று அவள் ஆணித்தரமாக பேச முகத்தில் அறை வாங்கியதைப் போல
உணர்ந்தவன் சோர்ந்த நடையுடன் வீடு திரும்பி விட்டான்.
நடந்த அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த மெய்யாத்தா அவன் தலையை
ஆறுதலாக வருடினார்.
அதுக்கு அப்புறம் நீ அவளைப் போய் பார்க்கவே இல்லையா பார்த்திபா?”
‘எப்படி போவேன் அப்பத்தா...அவ என்னைத் திட்டினாக் கூட
பரவாயில்லை..அவளை ஏதாவது செஞ்சுகிட்டா...அந்த பயம் தான் எனக்கு...நானும் அவளுடைய
கோபம் குறைஞ்சுடும்னு இவ்வளவு நாளா காத்துக்கிட்டு இருந்தேன்.வீட்டில் ஏதாவது
விஷேசம் நடக்கும் சமயங்களில்,ஊரில் திருவிழா சமயங்களில் எல்லாம் பாஸ்கரை அனுப்பி
அவளை வரவழைக்க முயற்சி செய்தேன்.அதன் பலன் என்னவோ பூஜ்யம் தான்.பாஸ்கர் தன்னுடைய
சொந்த அண்ணன் இல்லை என்பது தெரிந்த பிறகு அவனுக்கு பாரமாக இருக்கக்கூடாது என்று
முடிவு செய்து அவனை விட்டும் அவள் விலக
ஆரம்பிச்சப்போ எனக்கு என்ன செய்றதுனே தெரியலை அப்பத்தா...கொஞ்ச நாள்ல அவளாவே மனசு
மாறுவான்னு நினைச்சு ஏமாந்து போயிட்டேன்.
“கல்யாணத்துக்கு முதல் நாள் நீ இங்கே சண்டை போட்ட விஷயம் எனக்கு
ஏற்கனவே தெரியும் பார்த்திபா”என்று சொல்லி அவனை அதிர வைத்தவர் தொடர்ந்து பேசினார்.
“வீட்டுல நம்ம சொந்தக்காரங்க நாலைஞ்சு பேர் தங்கி இருந்தாங்க...அவங்க
மூலமா எனக்கு அப்பவே தகவல் வந்துடுச்சு.அப்போ அதை நான் பெருசா
எடுத்துக்கலை.ஏன்னா..அந்த பொண்ணைப் பத்தின விஷயத்தை முன்னாடியே பாஸ்கர் எனக்கு
சொல்லிட்டார்.நான் தான் வெளியில் தெரிஞ்சா பிரச்சினை ஆகிடும்னு சொல்லி அதை
யாரிடமும் சொல்ல வேண்டாம்னு சொல்லி இருந்தேன்.”என்று அவர் சொல்ல பார்த்திபனுக்கு
பெரும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
“எது எப்படியோ பார்த்தி...நீ செஞ்சது தப்பு...அந்த பிள்ளை மனசு
ரணமாகிடுச்சு உன்னால...இனி அதை நீ தான் சரி செய்யணும்”என்று சொன்னவர் அறையை விட்டு
வெளியேறும் முன் மீண்டும் பேரனை வம்பிழுத்து சகஜ நிலைக்கு கொண்டு வர முயற்சி
செய்தார்.
“இப்படியே பழைய கதை பேசியே காலத்தை கடத்தாம சீக்கிரமா கொள்ளுப்
பேரனைப் பெத்து என் கையில் கொடு பார்த்திபா” என்று சொன்னவர் சிரித்தபடி கீழிறங்கி
சென்று விட இரவுப் பொழுது நெருங்கும் பொழுது கண் விழித்தாள் பௌர்ணமி.
அவள் எழுந்ததுமே அவளுக்கு முகம் கழுவ உதவி செய்தவன் அவளது அறைக்கே
சாப்பாடு கொண்டு வந்து சாப்பிட வைத்தான்.
அவனது செய்கைகள் அனைத்தையும் அமைதியாக ஏற்றுக் கொண்டவள் என்ன
மனநிலையில் இருக்கிறாள் என்பதையே அவனால் கணிக்க முடியவில்லை.
கருத்துரையிடுக