அத்தியாயம் 39
ஹரிஹரனின்
கரங்கள் காதலுடன் வெண்ணிலாவின் கன்னங்களை பற்றி இருக்க அவள் கண்ணோடு கண் கலந்தவாறே
கிசுகிசுப்பான குரலில் அவளிடம் பேசினான்.
“என் மேல் கோபமா நிலா”
“கோபம் தான்” என்றவள் அவனது வாடிய முகத்தை கண்டதும் வேகமாக அடுத்த
வார்த்தையை சொன்னாள்.
“ஏன் முன்னாடியே என்னைத் தேடி வரலை” சலுகையாக குறைப்பட்டுக் கொண்டாள் அவனுடைய தேவதை.
அவளின்
கேள்வியில் முகம் வாடியவன், “நீ தானே என்னை பிடிக்கலைன்னு சொன்ன?அப்புறம் எந்த முகத்தை வச்சுக்கிட்டு நான் உன்னை தேடி
வருவேன்...”
“ஹரி ...அது நான் என் மனசறிஞ்சு சொன்ன பொய்... என்னை தேடி
வந்தால் நீங்களும் ஆபத்தில் மாட்டிப்பீங்களோன்னு பயந்து தான் அப்படி செஞ்சேன்”
அப்பொழுதும்
ஹரிஹரன் முறுக்கிக் கொண்டே நிற்கவும் அவனை சமாதானப் படுத்த தொடர்ந்து பேசலானாள்.
“ஹரி உங்களுக்கு எப்படி நான் போன் பண்ணினேன்...”
“அது தான் என்னோட கார்ட் உன்கிட்ட இருந்துச்சே”
“அது சரிதான்... வெளியூருக்கு அர்த்த ராத்திரியில் கையில்
ஒரு பொருளையும் எடுத்துக் கொள்ளாமல் இரவோடு இரவாக கிளம்பியவளிடம் உங்க கார்ட்
எப்படி வந்துச்சு”
“அதானே எப்படி வந்துச்சு?” ஆர்வமாக அவள் முகம் பார்த்தான்.
“உங்க கார்டை நான் எப்பவும் என்கிட்டேயே தான் வச்சு
இருந்தேன் ஹரி. யாருக்கும் தெரியாம அப்பப்போ அதை எடுத்து பார்த்துப்பேன். உங்க
கார்டை என் கூடவே வச்சுக்கிட்டு இருந்தா எனக்கு என்னவோ நீங்களே பக்கத்தில்
இருக்கிற மாதிரி இருக்கும்” கண்களில் காதல் வழிய பேசியவளை கண்டு திக்கு முக்காடிப்
போனான் ஹரிஹரன்.
அவள் தன் மேல்
வைத்து இருந்த நேசத்தை பரிபூரணமாக உணர்ந்தவன் அவளை அள்ளி கைகளில் எடுக்க
துடித்தான்.
“ நம்புற மாதிரி
இல்லையே?” என்று போலியாக
இழுத்தவன் கண்களில் விஷமத்தோடு அவளை நெருங்கி நின்றான்.
“கார்டை எங்கே வச்சு இருந்த சொல்லு... அப்பத்தான் நம்புவேன்”
“அ... அது... அது வந்து...” எப்படி சொல்வது என்று புரியாமல் வெண்ணிலா திணறுவதை கண்களில்
குறுஞ்சிரிப்போடு கண்டவன் மெல்ல காதருகில் குனிந்து ரகசியம் பேசினான்.
“நான் சொல்லவா” அவள் அருகில் அவன் நெருங்க வெண்ணிலா பயத்தோடு பின்னே செல்ல, “என்னிடம் என்ன
பயம் நிலா உனக்கு? இப்பவும் கார்டை வச்சு இருக்கியா?” காதோரம் ஹரிஹரனின் ரகசியக் குரல் மாயம் செய்ய கண் மூடி அந்த
நொடியை ரசித்துக் கொண்டு இருந்தாள் வெண்ணிலா.
“நிஜம் இருக்க... அந்த நிழல் எனக்கு தேவைப்படலை... அதனால அது
இப்போ பத்திரமா என்னோட பெட்டியில் இருக்கு” என்றவள் எதிரில் ஏமாற்றத்தோடு நின்ற ஹரிஹரனை பார்க்கவும்
அடக்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தாள் வெண்ணிலா.
எத்தனை
வருடங்கள் ஆயிற்று இவள் இப்படி சிரிப்பதை பார்த்து என்று ரசனையோடு அவளைப்
பார்த்துக் கொண்டு இருந்தவன் உணர்வு உந்த சட்டென அவள் தோள் பற்றி அவளின் இதழில்
அழுந்த முத்தமிட்டான். அவளின் உடலில் தோன்றிய நடுக்கத்தை உணர்ந்தவன், மனமே இல்லாமல்
மெல்ல அவளை விடுவித்தான்.
“கம்பெனி ஒண்ணு நடத்தி, எத்தனையோ பேரை உனக்கு கீழே வச்சு வேலை வாங்கி, கொஞ்சம் விட்டு
இருந்தால் இன்னும் என்னென்ன செய்து இருப்பாயோ? உனக்கு என் மீது பயமா? நம்ப முடியலையே” விளையாட்டாகத் தான் சொன்னான். ஆனால் வெண்ணிலாவின் முகமோ
சட்டென ஒளி இழந்து விட்டது.
“கம்பெனியில்
நான் சும்மா பேருக்குத்தான் இருந்தேன் ஹரி.என்ன தான் அப்பா,அம்மாவுக்காக பழி
வாங்குறேன்னு சொல்லிகிட்டாலும் என்னால முழு மனசா அதை செய்ய முடியலை.அதனால
அதெல்லாம் சித்தப்பா கிட்ட நான் ஒப்படைச்சு இருந்தேன்.தினமும் காலேஜ்க்கு வந்து
போனா தெரிஞ்சவங்க யார் கண்ணிலயாவது பட வாய்ப்பு இருக்குனு இத்தனை நாளா கரஸ்ல
என்னோட MBA வை முடிச்சுட்டு ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் கம்பெனில பொறுப்பு
எடுத்துக்கிட்டேன்.”
“உன்னால
மத்தவங்களுக்கு எப்படிடா கெடுதல் செய்ய முடியும்?”அவன் குரலில் இந்த வாஞ்சை
அவளுக்கு தன்னுடைய தந்தையை நினைவூட்ட அவன் தோளில் சாய்ந்து கொண்டு மென்குரலில்
பேசினாள்.
“நான் கெட்டவளா மாறிட்டேனா ஹரி” பரிதவிப்பு அவள் குரலில்.
“ச்சு... வெண்ணிலா இதென்ன அசட்டுத்தனமான பேச்சு” என்று செல்லமாய்
அவளை கடிந்து கொள்ள...
“உன் சித்தப்பாவை நினைச்சு உனக்கு எதுவும் கவலை இருக்கா
நிலா... அப்படி எதுவும் இருந்தா தயங்காம என்கிட்டே சொல்லு.நான் அவரை காப்பாத்த...”
“அவசியம் இல்லை ஹரி... அவருக்கு தேவை எப்பொழுதும் அந்த
சொத்துக்கள் மட்டும் தான். இப்பொழுதும்
அந்த சொத்துக்களே போய் அவரை காப்பாற்றட்டும்” மரத்து போன குரலில் சொன்னவள் சட்டென அவன் புறம்
திரும்பினாள்.
“இதுக்காக என்னை வெறுத்துட மாட்டீங்களே” அவள் கண்கள் அலை
பாய்ந்தது.
“நிலா என்னால அது முடியும்னு நீ நினைக்கறியா?” அவன் குரலில்
இருந்த கரகரப்பும், பார்வையில் இருந்த செய்தியும் பெண்ணவளை மகிழ்ச்சி கொள்ள செய்ய, அவளையே
பார்த்துக் கொண்டு இருந்த ஹரிஹரனின் முகத்திலும் புன்னகை பூத்தது.
ஆவலோடு அவளை
நோக்கி கரங்களை நீட்ட, அதிலிருந்து தப்பி ஓடி கொஞ்ச தூரம் போனதும் திரும்பி பார்த்து அவனுக்கு அழகு
காட்டினாள்.
“ஏமாத்திட்டா
ஓடற...விட்டேனா பார். உன்னை...” என்று துரத்திய படியே ஹரிஹரனும் அவளை துரத்திக்
கொண்டு ஓடி வர, ஓரிடத்தில்
ஹரிஹரன் கால் இடறி கீழே விழப் போக பயந்து போன வெண்ணிலா சட்டென்று திரும்பி அவனது
கையை பிடித்து நேராக நிற்க வைத்தாள்.
மூச்சு வாங்க
இருவரும் ஒருவரை ஒருவர் நேசத்தோடு பார்த்துக் கொண்டு இருந்த அந்த நொடி பழைய
வெண்ணிலா அவளுக்குள் திரும்ப குறும்பாக, “பெரிசு... நினைப்பு எல்லாம் எங்கே இருக்கு... பார்த்து போக
மாட்டீங்களா?” என்று மிடுக்காக
கேட்டாள்.
ஹரிஹரனும்
கண்கள் மின்ன அவளது கரம் பற்றி தன்னோடு சேர்த்து இழுத்தவன், “என் நினைவு
எல்லாம் எங்கே இருக்குனு சொல்லட்டுமா? இல்லை காட்டட்டுமா?” என்றவன் கரங்களால் அவள் முகத்தில் கோலம் போட்டவாறே கேட்க
பெண்ணவள் நாணத்தில் கண்களை மூடிக் கொண்டாள்.
இறுக மூடிய
கண்களும் எதிர்பார்ப்பில் விரிந்து இருந்த அதரங்களும் அவனுக்கு அழைப்பு விடுக்க, மெல்ல அவள்
முகம் நோக்கி குனிந்தான். மூச்சு வாங்க, நீண்ட முத்தத்திற்கு பிறகு அவளை விடுவித்தவன், மீண்டும்
தாபத்துடன் அவள் முகம் நோக்கிக் குனிய இம்முறை வெண்ணிலா அவனை தள்ள முயற்சிக்க, “நான் என்ன செய்ய
நிலா... கடலுக்குள்ள மூழ்கி முத்தெடுக்கிறவனை போலத் தான் என்னோட நிலைமையும்.
உனக்குள்ள மூழ்கி முத்தெடுக்க என் மனசு கிடந்து தவிக்குது... ஹ்ம்ம்... இது
தாங்காது... அப்பாகிட்டே சொல்லி அடுத்த முஹூர்த்ததில் நம்ம கல்யாணத்தை வைக்க
சொல்லிட வேண்டியது தான்” என்றவனின் குரலில் இருந்த தாகமும் மோகமும் பெண்ணவளை ஒரே
அடியாய் அடித்து வீழ்த்தியது என்பது தான் நிஜம்.
“ஹரி... உங்க அப்பா, அம்மா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்களா?” கண்களில்
கலக்கத்தோடு கேட்டாள் பெண்ணவள்.
“அதெல்லாம் நிச்சயம் ஒத்துக்குவாங்க... நானும் என்னோட தொழிலை
விட்டுட்டு அப்பாவோட பிசினஸ்சை பார்த்துக்க போறேன். கண்டிப்பா அவங்க சந்தோசப்
படுவாங்க... ஆனா உனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு... அதுக்கு நீ ஒத்துக்கிட்டே ஆகணும்”
“என்ன ஹரி...”
“கல்யாணம் முடிஞ்சதும் நமக்கு தேன் நிலவு... இங்கே நம்ம
தோப்பில் சரி தானா?” காதலுடன் அவன் கேட்க, மறுத்து பேசுவாளா பெண்ணவள்!...
ஹரிஹரனின்
வேகத்தால் எல்லா வேலைகளும் புயல் வேகத்தில் முடுக்கி விடப்பட்டு, சுந்தரத்தின்
பேரில் இருந்த ஒரு சில சொத்துக்களை கோர்ட் அனுமதியின் பேரில் விற்கப்பட்டன. அதில்
வந்த பணத்தை அப்படியே சிவாவிடம் கொடுத்தான் ஹரிஹரன். தொழிலில் அவனுக்கு ஏற்பட்ட
நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக.
வசந்திற்கும் ஹரிஹரனை பழையபடி பார்த்ததில்
மகிழ்ச்சியே. ஒரு வகையாக எல்லாப் பிரச்சினையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்த பின்
ஒரு நல்ல நாளில் ஹரிஹரனுக்கும், வெண்ணிலாவிற்கும் பெற்றவர்கள் ஆசிர்வாதத்துடன் திருமணம்
நடந்தது.
திருமணம்
முடிந்ததும் தாய், தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டவன் ஏற்கனவே செய்திருந்த முடிவின் படி வெண்ணிலாவுடன் காரை எடுத்துக் கொண்டு நேராக
அவனது தோப்பிற்கு புறப்பட்டான் ஹரிஹரன். ஹரிஹரனின் கரங்களில் எப்பொழுதும் மிதமான
வேகத்தில் ஓடும் கார் இன்று சீறிப் பாய்ந்து போய்க் கொண்டு இருந்தது.
காரணத்தை கேட்ட
மனைவியவளின் காதோரம் அவன் பேசிய ரகசிய பேச்சில் வெண்ணிலாவின் முகம் குங்குமத்தை
பூசிக் கொண்டது.அவன் கைகளில் கிள்ளி விட்டு தள்ளி அமர்ந்து கொண்டவளை மேலும்
சீண்டினான்.
“என்னோட இத்தனை
வருஷ பிரம்மசரியத்தை கலைக்கப் போறேனே...”என்று கூறி மேலும் அவளை சிவக்க செய்தவன்
மகிழ்ச்சியான மனநிலையுடன் காரை ஒட்டிக் கொண்டு வந்தான்.
புயல் வேகத்தில்
வந்து சேர்ந்தவன் காவல்காரனை வீட்டுக்கு செல்லும்படி பணித்து விட்டு வெண்ணிலாவின்
கரத்தை விடுவிக்காமல் பற்றியபடியே தோப்பிற்குள் அழைத்து வந்தான்.
அங்கே நட்ட
நடுத் தோப்பில் முன்பு அந்த இடத்தில் இருந்த குடிசை அகற்றப்பட்டு அதற்கு பதிலாக
ஒரு அழகிய கண்ணாடி குடில்... காதலுடன் அவளது கைகளை பற்றியவன் அவளை தன் கைகளில்
ஏந்திக் கொண்டு குடிலுக்குள் சென்றான். சின்னஞ்சிறிய அறை தான்... ஒரு கட்டில்
மட்டும் போடப்பட்டு இருக்க, மென்மையாய் அவளை கட்டிலில் கிடத்தினான்.
அதுநேரம் வரை
வெட்கத்தில் இருந்த வெண்ணிலாவை இப்பொழுது பதட்டமும்,பரபரப்பும் சூழ்ந்து
கொண்டது.அவனுடைய முகம் காண அஞ்சி வீட்டை சுற்றிலும் பார்வையை பதித்தாள்.அவளுடைய
மனநிலையை உணர்ந்து கொண்டவனோ மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.
நிமிர்ந்து
விட்டத்தை பார்த்த நிலாவின் கண்களுக்கு வானில் இருந்த வெண்ணிலவு தெளிவாக தெரிய
அவளையே பார்த்துக் கொண்டு இருந்த ஹரிஹரன், அவளின் காதோரம் சரிந்து பேசினான்.
வெறும் பாவாடை
தாவணியிலேயே எனக்கு நீ சிறகில்லா தேவதை மாதிரி தெரிஞ்ச இப்ப முழு அலங்காரத்தோட
உன்னைப் பார்க்கிறப்போ எப்படி இருக்க தெரியுமா? செதுக்கி வைச்ச சிலை மாதிரி...
இப்படி ஒரு நாள்
என் வாழ்க்கையில் வருமான்னு ரொம்பவே ஏங்கிட்டு இருந்தேன் வெண்ணிலா...இப்போ என்
பக்கத்தில என்னோட மனைவியா நீ இருக்க...ஐஞ்சு வருஷம் எப்படி எல்லாம் தவிச்சு போனேன்
தெரியுமா? நீ எனக்கு கிடைக்கவே மாட்டன்னு என்னை நானே தேத்திக்க முயற்சி
செய்வேன்.ஆனா பலன் என்னவோ பூஜ்யம் தான்.மனசு குழந்தை மாதிரி நீ தான் வேணும்னு அடம்
பிடிக்கும்.”அவன் பேசிக் கொண்டே இருக்க அவள் இப்பொழுதும் நிமிர்ந்து அவன் முகம்
பார்க்காமல் அந்த கண்ணாடி குடிலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இங்கே இருந்து வெளியில் இருப்பதை பார்க்கலாம்... வெளியில்
இருந்து பார்த்தா எதுவும் தெரியாது” என்று சொன்னவன் மனைவியிடம் ஒரு கணவனாக அவனது தேடலை தொடங்கி
இருந்தான்.
கரங்களுக்குள்
அவளை சிறை பிடித்தவன் காதலாக தொடங்கிய தாம்பத்தியம் ,கரை உடைத்த வெள்ளமாக மாறி
அவளை சேரத் துடித்தது.
மோகத்தோடு தன்னை
நெருங்கிய ஹரிஹரனை கண்டு முதலில் அஞ்சிய பெண்ணவளை ஹரிஹரனின் காதல் கொண்ட மனம்
உணர்ந்து கொண்டு, அவளுக்கு தைரியமூட்டி அவளில் அவனை தொலைக்க அங்கே இருந்த இரு
வெண்ணிலவில் யார் அதிகம் வெட்கியது என்றே கண்டுபிடிக்க முடியவில்லை.
வெட்கத்தால்
அவள் மறுக்க,காதலால் அவன் பிடிவாதம் பிடிக்க இறுதியில் வென்றது என்னவோ அவர்களின்
காதல் தான்.
ஹரிஹரனின் காதல்
தீயாக மாறி அவளை எரிக்கத் தொடங்கியது.மங்கையவளும் கணவனின் காதலை அறிந்து வைத்து
இருந்ததால் விரும்பியே அந்தத் தீயை ஏற்றுக் கொண்டாள்.
வானத்தில்
இருந்த வெண்ணிலவு மேகத்தில் தஞ்சம் புக, பூமியில் இருந்த வெண்ணிலாவோ தன்னுடைய கணவனிடமே தஞ்சம்
புகுந்தாள். ஹரிஹரனும் ஐந்து வருடமாக தன்னுள் எரிந்து கொண்டு இருந்த காதல் தீயை
அணைக்க தன்னவளிடம் தஞ்சம் புகுந்தான்.
கருத்துரையிடுக