சிறகில்லா தேவதை Epilogue

 

அத்தியாயம் 40

“வெண்ணிலா...இன்னும் எவ்வளவு நேரம் தான் கிளம்புவ...நாம போறது என் பிரண்டோட கல்யாணத்துக்கு...நீ கிளம்பி வர்ற வேகத்துக்கு நாளைக்குத் தான் போக முடியும் போல...சீக்கிரம் கிளம்பி...”உச்சஸ்தாயில் பேசிக் கொண்டே போனவன் பேச்சை நிறுத்தி விட்டு உல்லாசமாக விசிலடித்தான்.

வெண்மை நிற பட்டுப்புடவையில் ஆங்காங்கே சிவப்பில் வீணை வரைந்து இருந்த அந்த புடவை அவளுடைய அழகுக்கு அழகு சேர்த்தது.அதற்கு தோதாக கழுத்தில் அவள் அணிந்து இருந்த மரகத நெக்லசும்,கைகளில் அவள் அணிந்திருந்த சிவப்புக் கல் பதித்த வளையலும்,காதில் குடை போல கவிழ்ந்து இருந்த ஜிமிக்கியையும் பார்த்தவனின் உள்ளம் இப்பொழுது அதி தீவிரமாக யோசிக்கத் தொடங்கியது.

‘கல்யாணத்துக்கு உடனே போய் ஆகணுமா என்ன?’

அவனின் முக பாவனையில் இருந்தே அவனது எண்ணத்தை ஊகித்தவள் பட்டென்று அவனது காதை பிடித்து திருகினாள்.

“படவா...ராஸ்கல்..உன் மைன்ட் வாய்ஸ் எனக்கு புரியுது...ஒழுங்கா கிளம்பு”என்று செல்லக் கோபம் காட்டியவளின் இடையைப் பற்றி தனக்கு அருகே இழுத்தவன் போதையேற்றும் விழிகளுடன் தன்னுடைய பார்வையை கலந்தவாறே  பேசினான்.

“நான் என்ன செய்யட்டும் நிலா...நீ படவான்னு சொல்றது கூட எனக்கு உன் மேல் பட வா ன்னு சொல்ற மாதிரியே இருக்கே...”என்று பேசியபடியே மோகத்துடன் அவளுடைய கூந்தலில் முகம் புதைக்க வெட்கத்தோடு அவனை தள்ளி விட்டவள் ஜாக்கிரதையாக இரண்டடி தள்ளி நின்று கொண்டாள்.

“வசந்த் அண்ணா கல்யாணத்துக்கு நேரம் ஆகுது வாங்க போகலாம்...”

“என்ன அவசரம்..நாம கொஞ்ச நேரம் பேசிட்டு அப்புறம் போலாமே”முகத்தை ஒன்றுமறியா பாலகன் போல வைத்துக் கொண்டே தாபத்துடன் ,இன்ச் இன்சாக நகர்ந்து தன்னை நெருங்க முயன்ற ஹரிஹரனைப் பார்த்து அவளின் மனது வெட்கத்தோடு தன்னவனின் செய்கையை ரசிக்கத் தொடங்கியது.

“உங்க வேலை எனக்குத் தெரியும்..ஒழுங்கா கிளம்புங்க”என்று அதட்டலாக அவனைப் பார்த்து சொன்னவள் அப்பொழுது தான் அவனது உடையைக் கவனித்தாள்.

டி ஷர்ட்டும்,ஷார்ட்சும் அணிந்து இருந்தவனை கேள்வியாக பார்த்தாள் வெண்ணிலா.

“என்னங்க...இவ்வளவு நேரம் என்னைத் திட்டிட்டு நீங்க இன்னும் கிளம்பாமலே இருக்கீங்க...இப்படியேவா கல்யாணத்துக்கு வரப் போறீங்க?” என்றாள்.

“யார் சொன்னா...நீ என்ன கலர்ல புடவை கட்டிக்கப் போறியோ அதே கலர்ல டிரஸ் போடணும்னு அய்யா வெயிட்டிங்..இப்போ பாரு நிமிசத்துல கிளம்பிடுவேன்”என்று சொன்னவன் போகும் போது அவளின் கன்னத்தில் அவசர முத்தம் ஒன்றை பதித்து விட்டு நிற்காமல் வேகமாக இடத்தை காலி செய்து விட்டான்.

கணவனின் இது போன்ற சின்ன சின்ன அடாவடித்தனங்களில் தன்னையே தொலைக்கத் தொடங்கி இருந்தாள் வெண்ணிலா.

சில மாதங்களுக்கு முன்பு எவ்வளவு வெறுமையுடன் இருந்தது அவளது வாழ்க்கை.இப்பொழுது இப்படி வண்ணமயமாக மாறி இருப்பதற்கு காரணம் அவன் தானே என்று எண்ணியவள் அவனுடைய வருகைக்காக காத்திருக்க,அவளை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் கதவை திறந்து கொண்டு கம்பீரமாக நடந்து வந்தவனை எப்பொழுதும் போல அவளின் மனது தன்னுடைய மனப்பெட்டகத்தில் படம் பிடித்து வைத்துக் கொண்டது.

இளம் சிவப்பு நிற ஷர்ட்டும் அதற்கு மேட்சாக ஜீன்ஸ்சும்  அணிந்து இருந்தவன் ஸ்டைலாக கூலிங்கிளாஸ் அணிந்தவாறே அவளை நோக்கி வர இமைக்க மறந்து அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.

“என்ன மேடம் இப்ப உங்களுக்கு கிளம்புற ஐடியா இல்லை போல”வேண்டுமென்றே அவளை சீண்ட,தன்னியல்புக்கு வந்தவள் நறுக்கென்று அவன் கைகளில் கிள்ளினாள்.

“ஆ...ராட்சசி..பதில் சொல்ல முடியலேன்னா உடனே கிள்ளி வச்சுடுவியா நீ...”

“கல்யாணத்துக்கு முன்னே தேவதையா இருந்தேன்..இப்போ ராட்சசி ஆகிட்டேனா “என்று இடுப்பில் கை வைத்து கோபமாக கேட்டவளைப் பார்த்து எப்பொழுதும் போல ஹரிஹரனுக்கு காதலே ஊற்றாகி பொங்கி வழிந்தது.

“என்னைப் பொறுத்தவரை நீ எப்பவுமே தேவதை தான்...”என்றவன் அவளின் அருகில் நெருங்கி அவளின் மூக்கை பிடித்து ஆட்டி அவளை செல்லம் கொஞ்ச,

“அப்புறம் எதுக்கு ராட்சசின்னு சொன்னீங்களாம்...”என்று கோபமாக முகம் திருப்பியவளைக் கண்டு சிரித்துக் கொண்டே அவளை நெருங்கியவன் அவளின் தாடையை கைகளில் ஏந்தி கண்ணோடு கண் கலக்க விட்டவாறு பேசினான்.

“நீ ராட்சசி தான்...என் மீது உனக்கு இருக்கும் காதலை நீ எனக்கு உணர்த்தும் தருணங்களில்”என்று அவளின் காதோரம் ரகசியம் சொன்னவன் அவளைப் பார்த்து கண் சிமிட்ட , அவளோ வெட்கத்துடன் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

மனைவியின் தலையில் சூடி இருந்த  பூ வாசத்தில் கிறங்கிய ஹரிஹரன் மென்மையாக அவளின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு அவளின் முகம் முழுக்க முத்த ஊர்வலத்தை நடத்தினான்.கணவனின் கைப் பொம்மையாக மாறிப் போன வெண்ணிலா அவனுக்கு வளைந்து கொடுக்க,அவளின் அதரங்களில் தன்னுடைய முத்திரையை பதித்தவன் விலக வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அவளுள் மூழ்கத் தொடங்கினான். கணவனும் மனைவியும் தங்களின் காதலை கொண்டாடிக் கொண்டு இருந்த அந்த அழகிய நிமிடத்தில் வெளியே ஹரிஹரனின் அம்மாவின் குரல் கேட்டது.

“ஹரி...வெண்ணிலா....இரண்டு பெரும் ரெடியா...கல்யாணத்துக்கு நேரம் ஆகிடுச்சு...சீக்கிரம் வாங்க”

இருவரும் குரல் கேட்டதும் சட்டென்று பிரிந்து அறை வாசலை நோக்கி ஓடத் தொடங்கினர்.அந்த அவசரத்திலும் அவளை இழுத்து ஒரு அவசர முத்தம் கொடுத்த கணவனை பொய்யாக முறைத்துக் கொண்டே வெளியேறினாள் வெண்ணிலா.

அறையை விட்டு முகம் சிவக்க வெளியே வந்த மருமகளையும், அவளுக்குப் பின்னே திருட்டுப் பூனை பாலை பார்ப்பதைப் போலவே மனைவியை மட்டுமே பார்த்தபடி வந்த ஹரிஹரனையும் பார்த்தவர் உண்மையில் நெகிழ்ந்து தான் போனார்  ஈஸ்வரி.

‘எங்கே மகன் திருமணமே செய்து கொள்ளாமல் தனியாக இருந்து விடுவானோ என்று ஒவ்வொரு நாளும் பயந்தவர் தானே...அப்படி இருக்கையில் ஹரிஹரனின் இன்றைய மகிழ்வான குடும்ப வாழ்க்கை அவனை பெற்ற தாய் , தந்தை இருவருக்கும் மகிழ்ச்சியையே கொடுத்தது என்பது நிஜம்.

ஹாலில் இவர்களுக்காக காத்திருந்த விஸ்வநாதனும் சேர்ந்து கொள்ள, காரில் முன்பக்கம் வெண்ணிலாவும்,ஹரிஹரனும் அமர்ந்து கொண்டு,பின்பக்கம் பெற்றவர்கள் இருவரும் அமர்ந்ததும் காரை எடுத்தான் ஹரிஹரன்.

அரை மணி நேரத்தில் மண்டபம் வந்து விட ஹரிஹரனைப் பெற்றவர்கள் முதலில் இறங்கி முன்னே சென்று விட்டார்கள்.காரை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி விட்டு ஹரிஹரனும் வெண்ணிலாவும் ஜோடியாக உள்ளே நுழைய மாப்பிள்ளை வசந்த் மேடையில் இருந்த படியே அவர்களை நோக்கி கையாட்டி வரவேற்றான்.

ஹரிஹரனும்,வெண்ணிலாவும் தங்கள் குடும்பத்தோடு சேர்ந்து அமர்ந்த படி பதிலுக்கு கையாட்ட ,தாலி கட்டி முடிக்கும் வரை கீழே அமர்ந்து இருந்த இருவரும் அடுத்தடுத்து மனமக்களுக்கான சடங்குகள் ஆரம்பிக்கப் பட்டதும் வேகமாக மேடையேறி மணமக்களின் அருகில் போய் நின்று கொண்டனர்.

திருமணத்திற்கு முன்பாகவே மணப்பெண் சுபாவிடம் வெண்ணிலா பேசி இருந்ததால் இருவருக்கும் நல்ல அறிமுகம் இருந்தது.வெண்ணிலா சுபா பக்கமும்,ஹரிஹரன் வசந்த் பக்கமும் நின்று கொண்டு இருவரையும் வம்பிழுக்க கல்யாணம் களை கட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.

திருமணம் முடிந்ததும் அவசர கதியில் ஓடி வந்த சிவாவை வசந்த் கொலைவெறியுடன் பார்க்க அவனோ மன்னிப்பை முதலில் சுபாவிடம் கேட்டு வைத்தான்.

“சிஸ்டர்...சாரி...உங்க கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பாரின் காண்ட்ராக்ட் அதுக்காக போன மாசமே கிளம்பி போனேன்...உண்மையா நான் போன வாரமே வந்து இருக்க வேண்டியது...கிளம்புற நேரத்தில் ஒரு புது காண்ட்ராக்ட் வந்துடுச்சு...உடனே விட்டுட்டு வர முடியலை...எப்படியும் கரெக்டா தாலி கட்டுற நேரத்துக்கு வரலாம்னு பாத்தேன்...ஆனா...இந்த பிளைட் காலை வாறி விட்டுடுச்சு...இரண்டு மணி நேரம் லேட்...அதுக்கு நான் என்ன செய்ய முடியும்...ப்ளீஸ் சிஸ்டர்...”என்று அவன் கெஞ்ச...

சுபாவோ அதை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக தலை அசைத்து விட வசந்திற்கு கோபம் தீர்ந்தபாடில்லை.

“ஏன்டா...நீ எனக்கு பிரண்டா இல்லை சுபாவுக்கு பிரண்டா..சாரி என்கிட்டே கேட்கணும்டா எருமை...”என்று வாய்க்கு வந்ததை எல்லாம் திட்டித் தீர்த்தான்.

“இனிமே சிஸ்டரை கவனிச்சா போதும்...உன்னோட சுவிட்ச் அவங்க தான்...”என்று சொல்ல சுபாவுக்கு வெட்கத்தில் என்ன சொல்வதென்று தெரியாமல் தலையை குனிந்து கொள்ள வசந்திற்கோ அந்த நொடி மிகவும் பிடித்துப் போனது.

“உன்னை சொல்லி என்னடா செய்றது...உள்ளூரில் இருக்கிறவனே தாலி கட்டுறதுக்கு அரைமணி நேரம் முன்னாடி தான் வந்தான்.”என்று ஹரிஹரனை நோக்கி ஒரு முறைப்பை செலுத்த, ஹரிஹரன் அந்த நேரத்திற்கு தான் தப்பித்துக் கொள்ள வெண்ணிலாவை மாட்டி விட முடிவு செய்தான்.

“நான் என்னடா செய்றது...இந்த பெண்கள் வெளியே கிளம்புறதுனா சும்மாவா? அதுவும் கல்யாணம்  மாதிரி விஷேசத்துக்குன்னா சொல்லவே வேண்டாம்...கூடுதலா ஒரு இரண்டு மணி நேரம் எடுத்துக்கிறாங்க...”என்று போலியாய் அவளை சீண்ட...

“அண்ணா..நம்பாதீங்க..பொய் சொல்லுறார்...இவர் நான் கிளம்பினதுக்கு அப்புறம் தான் டிரெஸ் மாத்தவே போனார்.லேட்டானதுக்கு இவர் தான் காரணம்”என்று ஹரிஹரனை நோக்கி கையை நீட்ட நண்பர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இப்பொழுது ஹரிஹரனை முறைக்கத் தொடங்கினார்கள்.

“டேய்! என்னடா...டக்குனு பார்வையை என் பக்கம் திருப்பறீங்க?” (‘மன்னா... அம்பு இப்பொழுது உங்கள் குரல்வளையை குறி பார்க்கிறது’ என்று ஹரிஹரனுக்குள் மைன்ட் வாய்ஸ் ஓட ஆரம்பித்தது)

“பின்னே...நீ டிரெஸ் மாத்துற லட்சணம் தான் எங்களுக்கு தெரியுமே...”என்று நண்பர்கள் இருவரும் ஹரிஹரனின் காலை வாற வெண்ணிலாவிற்கு அது என்ன என்று புரியாததால் கேள்வியாக ஹரிஹரனின் முகம் பார்த்தாள்.

ஹரிஹரனின் முகத்திலோ டின் டின்னாக அசடு வழிய வெண்ணிலாவிற்கு என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் கூடியது.

“என்ன விஷயம் அண்ணா?” என்று கேள்வியை வசந்த் புறம் திருப்ப,ஹரிஹரனோ ‘சொல்லாதேடா பாவி’ என்னும் விதமாக கண்ணால் சமிக்ஞை செய்ய வசந்த் திண்டாடினான்.

“அதை நாங்க சொல்றோம் வெண்ணிலா”என்று கோரசாக கூறியபடி மேடையேறிய ஹரிஹரனின் பெற்றோர்கள் அவன் ஊரில் இருந்த பொழுது திருவிழாவிற்கு கிளம்பும் நாளன்று அடித்த கூத்தை சொல்ல வெண்ணிலா விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினாள்.

“இவ்வளவு செஞ்சு வச்சு இருக்கீங்களா? வீட்டுக்கு வாங்க...உங்களைப் பேசிக்கறேன்”என்று கிண்டலடித்தவள் மேடையை விட்டு கீழிறங்கி கல்யாண வேலைகளில் உதவி செய்ய போய் விட்டாள்.

வெண்ணிலா இறங்கியதும் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு பெற்றவர்கள் புறம் திரும்பினான்.

“எவ்வளவு நாள் ஆசை உங்களுக்கு...இப்படி அவ முன்னாடி என்னோட இமேஜை டேமேஜ் பண்ணிட்டீங்க”

“பார்றா...கல்யாணத்துக்கு முன்னாடியே சிஸ்டர் கிட்ட சரண்டர் ஆகிட்டியே... அப்புறமும் எதுக்கு இப்படி வெட்டி சீன் போடுற”என்று நண்பனை கலாய்த்தான் சிவா.

“பேசுடா..பேசு...உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை இல்ல..அந்த கொழுப்பு தானே உன்னை இப்படி எல்லாம் பேச சொல்லுது?”

“அட நீ வேற ஏன்டா..நானே இவன் கல்யாணத்திலாவது எனக்கு ஏதாவது பொண்ணு கிடைக்குமான்னு பார்த்தா ஹும்...ஒண்ணும் தேறவே மாட்டேங்குது”என்று சிவா விட்ட பெருமூச்சில் மேடையே அனலடிக்கத் தொடங்கியது.

“டேய்! சிவா அங்கே பாருடா..ஒரு பொண்ணு உன்னையே பார்க்குது”என்று பரபரத்தான் ஹரிஹரன்.

“எங்கே டா...யாரு...யாரு” அவனை விட வேகமாக இருந்தான் சிவா...

“இப்ப தான் பந்தி நடக்கிற இடத்துக்குள்ளே வேகமாக போனாங்க....பச்சை கலர் புடவை...சீக்கிரம் போ...யாருக்குத் தெரியும்? உன்னைத் தேடி வந்த தேவதையா கூட இருக்கலாம்”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே சிவா அங்கே கிளம்ப முற்பட வசந்த்தோ அவனை மேலும் திட்டித் தீர்த்தான்.

“இவனை என்னோட கல்யாணத்துக்கு கூப்பிட்டா..அவனோட கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுறான் பாரு” என்று முணுமுணுத்தவன் ஹரிஹரனின் புறம் திரும்பி மெதுவாக கேட்டான்.

“யாருடா..அந்த பொண்ணு...நான் பார்க்கவே இல்லையே”

“யாருக்குத் தெரியும்...ரொம்ப பொங்கினானேன்னு அவனை வாய்க்கு வந்த பொய்யை சொல்லி அனுப்பி வச்சு இருக்கேன்”அசால்ட்டாக சொன்னான் ஹரிஹரன்.

“அடப்பாவி...ஏன்டா இப்படி செஞ்ச...பாரு உன்னால அவன் ஏதாவது பிரச்சினைல மாட்டிக்க போறான்”

“விடுடா..எப்படியும் கல்யாணத்துக்கு ஏதாவது ஒரு பொண்ணு பச்சை கலரில் புடவை கட்டிட்டு வந்து இருக்கும்ல...அந்த பொண்ணு பின்னாடியே போய் இவன் பன்னு வாங்கப் போறான்..வாங்கட்டும் விடு...இவனுக்கு எல்லாம் இப்படி பொண்ணு கிடைச்சா தான் உண்டு”என்று சொன்னவன் அதற்குப் பிறகு வெண்ணிலாவை கண்களால் தேட அவள் அங்குமிங்கும் சிட்டுக்குருவி போல ஓடியாடி வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

சத்தமில்லாமல் மேடையில் இருந்து நழுவியவன் வெண்ணிலாவிற்கே தெரியாமல் அவளை ரகசியமாக பின் தொடர்ந்தான். மாடிப்படி வளைவில் யாருக்கும் தெரியாமல் அவளை இழுத்து தன்னுடைய கை வளைவுக்குள் கொண்டு வந்தான்.

முதலில் பயத்தில் கத்தப் போனவள் அது ஹரிஹரன் என்பதை உணர்ந்ததுமே முன்னைக் காட்டிலும் அதிக கோபத்தோடு அவனைப் பிடித்து கிள்ளி வைத்தாள்.

“ஆஆஆஆ... ஏன்டி ஆசையா கிட்டே வந்து எதையாவது வாங்கலாம்... இல்ல கொடுக்கலாம்னு வந்தா இப்படியா கிள்ளி வைப்ப... கல்யாணத்துக்கு அப்புறம் எதுகெடுத்தாலும் கிள்ளி வைக்கிற நீ...”

அவனுடைய பேச்சில் வெட்கம் வர, அவனது சட்டை பட்டன்களை திருகிக் கொண்டே பேசத் தொடங்கினாள் வெண்ணிலா.

“அது எனக்கு வெட்கமா இருக்கும் பொழுது என்ன செய்றதுன்னு தெரியலையா.. அதுதான் உங்களை கிள்ளி வச்சிடறேன்” என்று குனிந்த தலை நிமிராமல் பேசிக் கொண்டே போனவளை கைகளில் அள்ளி எடுத்து மூச்சு முட்ட அணைத்தவனின் கரங்கள் தன்னுடைய தேடலைத் தொடங்க, உடனடியாக அவனது கரங்களைப் தடுத்து நிறுத்தி அவனது செயலுக்கு தடை போட்டாள் வெண்ணிலா.

“ஏன்டி...”ஒற்றை வார்த்தையில் மொத்த தாபத்தையும் தேக்கி வைத்து கேள்வி கேட்டவனை செல்லமாக முறைத்தவள், “பொது இடத்தில் வச்சு என்ன விளையாட்டு இது...”

“என்னடி இது அநியாயமா இருக்கு..கட்டுன புருஷன் நான்..எனக்கு சொந்தமான பொருளை தொடக்கூடாதுன்னு சொன்னா எப்படி?”அவன் நியாயம் கேட்க அவளுக்கோ வெட்கம் பிடுங்கி வைத்தது.

“உங்களுக்கு யார் இப்படி எல்லாம் பேச சொல்லி தர்றாங்க”

“நீ தான்...”

“என்னது நானா”

“ஆமா... பின்னே யாராம்...வீணையை பக்கத்துல வச்சுக்கிட்டு மீட்டக் கூடாதுன்னு சொல்றியே”என்றவனின் பார்வை உரிமையுடன் அவள் மேனியில் மேய அப்பொழுது தான் அவள் கவனித்தாள்.அவன் சொல்வது புடவையில் இருக்கும் வீணையின் டிசைனை என்று.

‘எப்படி எல்லாம் பேசுகிறான்’என்று கன்னம் சிவந்தவள் அங்கிருந்து ஓட முற்பட நொடியில் அவளது முயற்சிகளை தடுத்தவன் அவளது காதோரம் மென்குரலில் பாடத் தொடங்கினான்.

சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை

என் வாழ்க்கை திறந்த ஏடு அது ஆசையின் கிளியின் கூடு

பல காதல் கவிதை பாடி பரிமாறும் உண்மைகள் கோடி
இதுபோன்ற ஜோடியில்லை இதுபோன்ற ஜோடியில்லை
மனம் குணம் ஒன்றான முல்லை

அவனுடைய அழகான பாடலில் நிறைவான மனதுடன் அவனுடைய தோளை தஞ்சமடைந்தாள் அவனுடைய முல்லை இல்லையில்லை ... அவனது தேவதை... இனி அவர்கள் வாழ்க்கையில் என்றென்றும் வசந்தம் மட்டுமே என்ற நம்பிக்கையுடன் நாமும் விடை பெறுவோம் இந்த பயணத்தில் இருந்து...

                                                 சுபம்

 

 


Post a Comment

புதியது பழையவை