Minminiyin Minsara Kadhalan Tamil novels 6

 

அத்தியாயம் 6

சிவநேசனிடம் சொன்னதைப் போலவே முதல் நாள் இரவே வீட்டிற்கு வந்தான் அக்னிபுத்திரன். நீமோவையும் உடன் அழைத்துக் கொண்டு. வந்தவனை வீட்டுக்கு உரியவர் என்ற முறையிலும், வருங்கால மாப்பிள்ளை என்ற வகையிலும் சிவநேசன் உரிய மரியாதையுடன் வரவேற்று வீட்டிற்குள் அழைத்து வந்தார்.

பெரிதாக யாரிடமும் எந்தப் பேச்சும் கொடுக்காமல் அமைதியாகவே தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டான் அக்னிபுத்திரன். இரவு உணவுக்கு சாப்பிடும் பொழுது கூட எதிரில் நின்று அவனுக்கு பரிமாறிய அருந்ததியின் பக்கம் அனாவசியமாகக் கூட அவன் பார்வை திரும்பவில்லை.

சிவநேசனுக்கோ மனதுக்குள் அத்தனை மகிழ்ச்சி...

கண்டிஷன் எல்லாம் போட்டு அன்று அத்தனை விறைப்பாக பேசினாலும் இன்று இத்தனை அமைதியாக இருக்கிறாரே... அன்று அவர் சொன்னது போல உண்மையிலேயே ஒரு போலீசை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வெகுநாட்களாக மனதுக்குள் ஆசையை வளர்த்து இருப்பார். எங்கே அது நடக்காமல் போய் விடுமோ என்ற மிதமிஞ்சிய பயம் ஏற்பட்டு விட்டது போலும். அதன் வெளிப்பாடு தான் அன்றைய பேச்சும், கோபமும்.. செய்கையும்... என்று எண்ணி தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டார்.

தந்தையின் மகிழ்ச்சியில் துளியளவு கூட அருந்ததியிடம் இல்லை. அவள் அன்றைக்கு பேசிய பேச்சிற்கு அவனிடம் அவள் எதிர்பார்த்தது மித மிஞ்சிய ஆத்திரத்தைத் தான். அப்படி இருக்கும் பொழுது இந்த அமைதி! எதன் அறிகுறி?

ம்ஹும்... எலி எதுக்கு அம்மணமா ஓடுது? அருந்ததி... என்னவோ சரியில்லை.. உஷார்..என்று அவளது மூளை அவளுக்கு அபாயமணி அடிக்கவும் தவறவில்லை.

வந்ததில் இருந்தே அவள் இருக்கும் திசைப்பக்கம் கூட திரும்பாமல் அவன் நடந்து கொண்ட விதம் அவளது சந்தேகத்தை அதிகமாக்கியது. மகளைப் பற்றி சிவநேசன் பெருமையாக  பேசும் பொழுது மட்டும் அவன் கைகள் இறுகுவதையும், கட்டுப்படுத்தப்பட்ட ஆத்திரத்தில் அவன் மூக்கு நுனி துடிப்பதையும் அவளால் நன்றாகவே பார்க்க முடிந்தது. அது எதையும் சிவநேசன் கண்டு கொள்ளக் கூடாது என்று அவருக்கு நேராக அமராமல்  பக்கவாட்டில் அவன் அமர்ந்து இருக்க... அந்த பக்கவாட்டுத் தோற்றம் அருந்ததிக்கு தெளிவாக எல்லாவற்றையும் புரிய வைத்தது எனலாம்.

எதுவா இருந்தாலும் சமாளிச்சுத் தான் ஆகணும்.. அன்னைக்கு போனில் கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ... அதனால என்ன? நான் ஒண்ணும் சும்மா இருந்தவரை சீண்டி விடலயே... என்னை அப்படி மோசமா நடத்தினவரை அந்த அளவுக்குக் கூட நான் பேசலைனா அப்புறம் நான் என்ன கொஞ்சமும் மான ரோஷம் இல்லாதவளா? எனக்கு அவர் செஞ்ச அநியாயத்திற்கு  எப்படி சும்மா விட முடியும்?’ தனக்குள்ளாகவே விவாதங்கள் நடத்திக் கொண்டாள் அருந்ததி.

சாப்பிட்டு முடித்ததும் அறைக்குள் சென்று முடங்காமல் ஹாலில் இருந்த சோபாவில் அப்பாவுடன் பேசிக் கொண்டே அமர்ந்தவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே கோகிலாவுடன் சாப்பிட அமர்ந்தாள் அருந்ததி.

அதுநேரம் வரை பேசிக் கொண்டே இருந்தவன் அவள் சாப்பிட அமர்ந்ததும் அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.

அந்தப் பார்வையில் என்ன இருந்தது?

அய்யயோ என்னமோ ஆப்பு ரெடி பண்ணிட்டான் போலவே... முழியே சரியில்லை

ஒரே ஒரு நொடி தான்.. அவன் அவளைப் பார்த்தது பொய்யோ என எண்ணும் படியாக அடுத்த நொடியே அவனது பார்வை மாறிப் போனது...

அவனது பார்வையால் விளைந்த குழப்பத்தால் சரியாக சாப்பிட முடியாமல் அரைகுறையாக சாப்பிட்டு முடித்தவள் எழுந்து சென்று அறைக்குள் புகுந்து கொண்டாள்.

என்ன நடந்தது? ஒன்றுமே நடக்கவில்லை... அவன் திட்டினானா? கோபமா பேசினானா? பார்வையால் கூட அவளது மனம் வருந்தும்படி அவன் எதுவுமே செய்யவில்லையே... இருந்தும் அவள் மனம் நிம்மதியின்றி தவித்தது.

வந்து முழுதாக அரைநாள் கூட முடியவில்லை.. சிலமணி நேரங்களுக்கே இப்படி ஒரு திண்டாட்டமா?’ என்று எண்ணி அவள் மனதில் சலிப்பு தோன்றியது என்னவோ நிஜம்.

அவளை திருமணம் செய்து கொள்ளப் போகும் ஒருவன்... அவளைப் பார்க்கும் பார்வையில் காதலும், ஆசையும் பொங்கி வழிய வேண்டாமா? ஒரு பார்வை... சின்னதாய் ஒரு சிரிப்பு... எதுவுமே இல்லாமல் என்ன வாழ்க்கை? அதுவும் அவளை அவனுக்கு துளியும் பிடிக்கவில்லை என்பது அருந்ததிக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக தெரிகின்றதே... நினைவே கசந்து வழிந்தது அவளுக்கு.

ஆனால் அதற்காக அவனை விட்டு விடவும் அவளால் முடியாது. என்ன நடந்தாலும் சரி... இந்தத் திருமணம் நடந்தே தீர வேண்டும். அதற்கு அவள் என்ன விலை கொடுக்க நேர்ந்தாலும் சரி... பின்வாங்கப் போவதில்லை...என்று உறுதி பூண்டவள் படுக்கையில் படுத்து உறங்க  முயன்றாள்.

அக்னிபுத்திரன் அவளுக்கு நேர் எதிரான மன நிலையில் அறைக்குள் புலியென நடமாடிக் கொண்டிருந்தான். அவனுக்கு இருக்கும் கோபத்திற்கு அருந்ததியை பார்த்தவுடன் நாலு அறை கொடுத்திருப்பான். அப்படி செய்து இருந்தால் வேறு காரணங்கள் தேடி அலைய வேண்டியதே இல்லை.. கண்டிப்பாக இந்தக் கல்யாணம் நின்று போய் இருக்கும். மகள் மீது அதீத பாசம் கொண்ட சிவநேசன் மகளை அடிப்பதைப் பார்த்துக் கொண்டு நிச்சயம் சும்மா இருக்க மாட்டார்.

அடுத்த நிமிடமே அந்த திருமணத்தை நிறுத்தி விடுவார். ஆனால் விஷயம் அத்தோடு நிற்காதே.. அவனது தந்தையின் காதுக்கு போனால் நிச்சயம் அவரால் அவனது செயலை சகித்துக் கொள்ள முடியாது என்பதையும் விட, தந்தையின் மனம் வருந்தாமல் இந்த திருமண ஏற்பாட்டை நிறுத்த வேண்டும் என்பதற்காகத் தானே இத்தனை ஏற்பாடும்.

ஒருவேளை வேறு பெண்ணாக இருந்து இருந்தால் அந்தப் பெண்ணிடமே இந்தத் திருமணத்தை மறுத்து சொல்லி இருப்பானோ என்னவோ... அருந்ததியிடம் அவனால் அப்படி பேச முடியவில்லை.

சொன்னா மட்டும் அவ கேட்டுடுவாளா... சரியான ராங்கிக்காரி... திமிர் பிடித்த கழுதை...#$%^&”  என்று அவன் வாய்க்கு வந்த நல்ல வார்த்தைகளை எல்லாம் சொல்லி அவளை திட்டித் தீர்த்தான்.

தூக்கம் வராமல் வெகுநேரம் போராடியவன்.. ஜன்னல் பக்கமாக வந்து நின்று எதிரே வானில் ஊர்வலம் போன நிலவையும், சாலையையும் மாறி மாறி வெறித்துப் பார்த்தான்.

ஏதேதோ மனக் குழப்பத்தில் அலைப் பாய்ந்தவனின் விழிகள் சட்டென்று கூர்மை அடைந்து தெருவின் மறுமூலையில் இருந்த அந்த ஆலமரத்தின் மீது படிந்தது.

அவன் பார்வை அந்த இடத்தை விட்டு இம்மியும் அசையவில்லை. அடுத்த நொடியே பரபரப்பாக திரும்பியவன் தன்னுடைய பொருட்களில் இருந்து அந்த பைனாகுலரை தேடி எடுத்தான். இராணுவ வீரனுக்கு ஒரு நொடியின் அருமை நன்றாகவே தெரியும். எனவே தேவை இல்லாமல் எதையும் செய்து நேரத்தை வீணாக்க விரும்பாமல் ஜன்னலில் இருந்து கொஞ்சம் பின்வாங்கி.... பைனாகுலர் மூலம் அந்த மரத்தை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினான்.

அவன் நினைத்தது சரி தான்... அந்த மரத்தின் கீழே இருவர் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு அவர்களுக்குள் தான்... ஆனால் அவர்களின் பார்வை அந்த வீட்டை நோக்கியே இருந்தது என்பதை அவனால் உணர முடிந்தது.

யார் இவர்கள்? இந்த நேரத்தில் இவர்களுக்கு என்ன வேலை? என்று ஆராய்ச்சியுடன் அவன் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே... அவன் கண்கள் அவனையும் அறியாமல் கடிகாரத்தை பார்த்தது... மணி நள்ளிரவு இரண்டு மணி.

அந்த இருவரும் அந்த வீட்டிற்குள் சிசிடிவி கேமராவின் கோணம் பதியாத இடத்தில் ஏறிக் குதிக்க... அக்னிபுத்திரனின் முகத்தில் குழப்ப ரேகைகள்... வாட்ச்மேன் அரை குறை தூக்கத்தில் இருக்க... பூனை போல தோட்டத்திற்குள்  குதித்தார்கள் இருவரும். வாட்ச்மேன் இருந்த இடத்திற்கும், இவர்கள் குதித்த இடத்திற்கும் வெகுவாக இடைவெளி இருக்க... அவர்கள் இருவரும் உள்ளே குதித்த சத்தம் நிச்சயம் வாட்ச்மேனுக்கு கேட்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்தவன் பாதுகாப்பு கருதி எப்பொழுதும் இடுப்பில் வைத்திருக்கும் அந்த சின்ன கத்தியை எடுத்துக் கொண்டான்.

வீடு முழுவதும் இருள் பரவி இருக்க... சுற்றிலும் எச்சரிக்கையுடன் பார்வையை செலுத்தியவன் வெகு கவனத்துடன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான். அந்தகாரம் சூழ்ந்திருந்த அந்த நேரத்தில் பூச்சிகள் கூட உறக்கத்திற்கு சென்று இருக்க... எங்கும் நிலவியது நிசப்தம் மட்டுமே...

மாடியில் இருந்து கீழே வந்தவன் சுற்றிலும் தன்னுடைய லேசர் பார்வையால் அலசியவாறே வீட்டில் உள்ள ஒவ்வொரு இடமாக தேடினான். சமையல் அறை, பின்பக்கம்.. என்று எல்லா இடமும் தேடி விட்டு அதன் பின்னர் மனதில் உறுத்தவே... எதற்கும் இருக்கட்டும் என்று உள்பக்கமாக தாழிடப்படாமல் இருந்த சிவநேசனின் அறையையும், அருந்ததியின் அறையையும் ஒரு பார்வை பார்த்தான்.

அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க... சத்தம் போடாமல் மீண்டும் கீழே வந்தவன் வீட்டின் வாசல் பகுதிக்கு வந்தான்.

தோட்டம்.... பரந்து விரிந்து கிடந்தது. ஆங்காங்கே இருந்த விளக்குகளில் இருந்து வந்த வெளிச்சம் தன்னை காட்டிக் கொடுத்து விடக் கூடும் என்ற எண்ணத்துடன் இருளை போர்வையாக்கி மறைந்து மறைந்து சென்று அந்த நபர்களை தேடத் தொடங்கினான்.

முழுதாக ஒரு மணிநேரம் கடந்த பிறகும்கூட யாரும் சிக்காமல் போகவே வந்தது யாராக இருக்கக்கூடும் என்ற யோசனையுடனே வீட்டுக்குள் நுழைந்தான்.

வீட்டிற்குள் இருவர் சுவர் ஏறிக் குதித்ததை அவன் பார்த்தது முற்றிலும் உண்மை... அப்படி வந்தவர்கள் வீட்டின் உள்ளே நுழைந்து எந்த பொருளையும் திருட நினைக்கவில்லை, யார் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையிலும் எதையும் செய்யவில்லை. அப்படியெனில் வந்தவர்களின் நோக்கம் என்ன என்பது புரியாமல் வெகுநேரம் சிந்தித்துக் கொண்டே இருந்தவன் விடியலின் பொழுது உறக்கத்தை தழுவினான்.

எப்பொழுதும் விடியற்காலை எழுவதை பழக்கமாக கொண்டிருந்தவன் அலாரம் இல்லாமலே சரியான நேரத்திற்கு எழுந்து விட்டான். எழுந்ததும் கண் முன்னே முதல் நாள் இரவு நடந்த நிகழ்வுகள் அத்தனையும் ஒரு படம் போல கண் முன்னே விரிந்தது. முதலில் இருந்த விஷயத்தைப் பற்றி சிவநேசனிடம் தெரிவிக்க எண்ணியவன் அவரைத் தேடி செல்ல அவர் இன்னமும் உறங்கிக் கொண்டிருப்பதை அறிந்தவன் எதுவுமே பேசாமல் காலை நேர உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கினான்.

காலையில் தூங்கி எழுந்ததும் வழக்கம் போல காபி கப்பை கையில் எடுத்துக் கொண்டு பால்கனி அருகில் வந்து நின்ற அருந்ததி முதன்முதலாக பார்த்தது அக்னிபுத்திரனைத் தான்.

கையில்லாத பனியனில்... உடல் முழுவதும் வேர்வை ஆறாக பெருக... ஒற்றைக் கையை தரையில் ஊன்றி அனாயாசயமாக தண்டால் எடுத்துக் கொண்டிருந்தவனின் தோற்றத்தைக் கண்டு பிரமித்துப் போனாள்.

இராணுவ வீரனுக்கே உரிய உடற்கட்டு... செதுக்கி வைத்தார் போல தோற்றம்... அதிகப்படியான தசை என்று துளியளவு கூட இல்லாமல்... முறுக்கேறிய அவனது உடலைப் பார்த்ததும் அவள் என்ன மாதிரியாக உணர்ந்தாள் என்று வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.

அவனைப் பார்க்காதே... ரசிக்காதே..என்று மூளை அவளுக்கு பிறப்பித்த கட்டளைகள் எதுவுமே அவளை சரி வர சென்று சேரவில்லை போலும்... விழி அகற்றாமல் ஒற்றை கையால் அவன் உடற்பயிற்சி செய்வதையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எதேச்சையாக விழி உயர்த்தி பார்த்தவனின் பார்வையில் தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அருந்ததி படவும்... கேள்வியாக ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான்.

அய்யயோ பார்த்துட்டானேஎன்று எண்ணி பதறியவள் சமாளிக்க முற்பட்டாள்.

ஹி ஹி.. சும்மா தோட்டத்தை வேடிக்கைப் பார்த்தேன்

நீ தானே.. நம்பிட்டேன்என்று சொல்லாமல் சொல்லும் விதமாக அவனது இதழோரம் ஏளனமாக வளைய... அருந்ததிக்கு கொஞ்சம் எரிச்சல் வந்தது.

அவனைப் பத்தி தெரிஞ்சுகிட்டே எதுக்குடி அவனைப் பார்த்த.. இப்போ பாரு..எப்படி லுக்கு விடறான்னு..என்று தன்னைத் தானே திட்டித் தீர்த்தாள்.

கீழே வாஎன்று அவளைப் பார்த்து கை அசைத்தவன் துண்டை எடுத்து தன்னுடைய வியர்வையை துடைக்கத் தொடங்கினான்.

கையில் காபியோடு அவள் கீழே இறங்கி செல்ல... ஒரு கணம் கூட யோசியாமல் அவள் கையில் வைத்திருந்த காபியை வாங்கிப் பருகியவன் அங்கே இருந்த சேரில் கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்து கொண்டான்.

அவன் தன்னிடம் இருந்து கோப்பையை பறித்ததையும்,அதையே ரசித்து குடிப்பதையும் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எனக்கு excercise முடிஞ்சதும் உடனே காபி குடிக்கணும்.. காபி வாங்கிட்டு வந்ததுக்கு தேங்க்ஸ்என்று சொல்ல... அருந்ததிகோ சிரிப்பு வந்து தொலைத்தது.

இது நான் ஏற்கனவே குடிச்சிட்டு இருந்த காபின்னு சொன்னா... இவன் முகம் எப்படி அஷ்டகோணலாக மாறும்?’ என்று ரகசிய நினைவில் அவள் லேசாக இதழ் பிரித்து சிரித்தாள்.

சிரிச்சது போதும்... வந்து நீயும் ஒரு அம்பது புஷ் அப் எடுஎன்று உத்தரவிட்டு அவளை கடந்து செல்ல... அவளது சிரிப்பு மாயமாய் மறைந்து போனது.

அடுத்ததாக அவன் சந்தித்தது சிவநேசனைத் தான்... ஹாலில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தவரிடம் தனியே பேச வேண்டும் என்று சொல்லி... வேலையாட்களை அப்புறப்படுத்தி விட்டு அவன் சொன்ன சொன்ன விஷயத்தை அவர் ஒரு துளி கூட நம்பவில்லை என்பது அவரது பார்வையிலேயே தெரிந்தது.

தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லாத பொழுது எப்படி அவரை நம்ப வைப்பது?’ என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினான் அக்னிபுத்திரன்.

 


Post a Comment

புதியது பழையவை