அத்தியாயம் 31
துரைசாமிக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை. மேகலா அவரிடம் முகம் கொடுத்துக் கூட பேசுவதில்லை. சத்யன் தெருவில்
போகும்போது எதிரில் பார்த்தால் கூட ஆளில்லா இடத்தை பார்ப்பது போல அவன் முகத்தில்
சுத்தமாக உணர்ச்சிகளே இருக்காது. சஹானா கேட்கவே வேண்டாம். போன் செய்து அம்மாவிடம்
பேசுகிறாள் என்பதை ஒரே வீட்டில் மேகலாவுடன் இருப்பதால் அறிந்து கொள்ள முடிகிறது.
மற்றபடி அவரிடம் பேசுவதே இல்லை.
‘போகட்டுமே இந்த கழுதைகள் பேசாமல்
போனால் ஒன்னும் குறைந்து விடப் போவதில்லை’. யாரிடமும் இறங்கிப் போய் பேசினால் துரைசாமியின் கௌரவம்
என்னாவது?
சொந்த வீடு தான் இப்படி இருக்கிறது
என்றால் ஊரில் இருக்கும் ஒருவரும் அவரைப் பார்த்தால் இப்பொழுதெல்லாம் வேட்டியை
கீழே இறக்கி விடுவதோ, வேகமாக எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்வதோ
கிடையாது. அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் தங்களுக்குள் குசுகுசுவென பேசிக்
கொள்வதோடு சரி.
அவர்களை அழைத்து என்ன ஏதென்று
கேட்கப் போய் இருக்கிற கொஞ்ச நஞ்ச கௌரவத்தையும் கெடுத்துக் கொள்ளக் கூடாது
என்பதால் ஒதுங்கியே வந்தார். அவருடன் எப்பொழுதும் இருக்கும் ஒரு சில அடி
வருடிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் குறைந்து போயிற்று.
அவ்வபொழுது வரும் ஒன்றிரண்டு பேரும்
அவரைப் பார்த்து சில மணி நேரம் பேசி விட்டு கிளம்பும் பொழுது மறக்காமல் அவரிடம்
ஏதாவது ஒரு தொகையை கறக்காமல் போவதில்லை. எப்பொழுதும் ராஜா போல பல பேர் சூழ இருந்து
பழகிய துரைசாமிக்கு கூட ஜால்ரா
தட்டுவதற்கு ஆள் இல்லாமல் பைத்தியம் பிடித்து விடும் நிலை. காசு கொடுக்காமல்
போனால் அந்த அடி பொடிகளும் வராமல் போய் விடுவார்களோ என்று நினைத்தோ என்னவோ அவர்கள்
கேட்கும் பொழுதெல்லாம் பணத்தை கொடுக்கத் தொடங்கினார்.
இதெல்லாம் போதாதென்று அந்த கூலிப்படை
ஆட்களின் தலைவனும் மாதத்திற்கு ஒரு முறை லட்சக்கணக்கில் பணத்தை மிரட்டி
வாங்கினான்.
வங்கி இருப்பும் கொஞ்சம் கொஞ்சமாக
குறையத் தொடங்கியது. அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு சொத்துக்கள் இருக்கிறது தான்.
முன்பெல்லாம் குத்தகைப் பணத்தைப் பற்றி யாரிடமும் அவர் நினைவுறுத்தியதே இல்லை.
அவர் இருக்கும் வீடு தேடி பணம் வந்து கொண்டே இருக்கும். அது தொடர்பான வேலை
எல்லாவற்றையும் சத்யன் பார்த்துக் கொண்டான். அவர் பணத்தைப் பற்றிய கவலை எதுவும்
இல்லாமல் ஊர் பஞ்சாயத்து, திருவிழா கமிட்டி, பிரசிடெண்ட் பதவி இப்படி சுகமாய் எல்லாரையும் மிரட்டி
காலத்தை தள்ளிக் கொண்டிருந்தார்.
இப்பொழுது கையிருப்பு கரையத்
தொடங்கியதும், தன்னுடைய ஆட்களுடன் காரில் போய் இறங்கி யாரிடம் போய் குத்தகைப் பணத்தை
கேட்டாலும் நேர்மையான குணம் கொண்ட ஓரிருவர் தவிர மற்றவர் யாரும் அவரை மதிக்கவே
காணோம்.
எல்லாரும் அவரை இளப்பமாய் பார்ப்பதை
உணர்ந்தவர் அதன் பின்னர் அவர்களிடம்
நேரில் போய் பணத்தைக் கேட்பதை குறைத்துக் கொண்டார்.
அவரது ஆட்களை அனுப்பி மிரட்டியாவது
பணத்தை வசூலித்து வரும்படி சொல்ல, ஆரம்பத்தில் அவர்கள் வசூலித்த பணத்தில் பெரும்பகுதியை
அவர்கள் அமுக்கிக்கொண்டு பேருக்கு ஒரு தொகையை அவரிடம் கொடுத்தார்கள்.
நாட்கள் செல்ல செல்ல அதுவும்
குறைந்து பணம் வருவது முற்றிலுமாக நின்று போனது.
ஆறே மாதத்தில் மொத்த நிலையும்
தலைகீழாகிப் போனது. அந்த மாதம் வீட்டு வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட பணம்
இல்லை அவரிடம்.
அதைக் கூட சமாளித்து விடலாம். ஆனா
ஏற்கனவே அடகு வைத்த சில நிலங்களுக்கு மாத வட்டி கட்ட வேண்டி இருக்கிறது. அதை
கட்டுவதற்கு வழியில்லாமல் ஒரு வாரமாக செட்டியார் போனில் தொடர்பு கொள்ளும்
பொழுதெல்லாம் அதை எடுத்து பேசாமல் தவிர்த்து வருகிறார். கூலிப்படை ஆட்களுக்கு தனியாக கொடுப்பதற்கு
முப்பது லட்சம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறான் அந்த ஆள் வேறு.
மனைவியிடம் விவரத்தை சொல்லி பணம்
கேட்க முடியாது. ‘என்ன இருந்தாலும் அவ ஒரு பொம்பளை... அவ கிட்டே பணத்துக்கு போய்
நிற்கிறதா?’ மகளிடம் கேட்பதற்கு அவரது தன்மானம் ஒரு துளி கூட அனுமதிக்கவில்லை.
அபிமன்யுவையும் அவனது குடும்பத்தையும் முடிந்த மட்டிலும் மட்டும் தட்டி
பேசியாயிற்று. இப்பொழுது அவர்களிடம் போய் பணம் கேட்கவும் முடியாது.
மிச்சம் இருப்பது சத்யன் மட்டும்
தான். அஞ்சலியின் நகைகளை அடகு வைத்து புதிதாக ஏதோ தொழில் தொடங்கி இருப்பதாக
கேள்விப்பட்டார். கண்டிப்பாக அவனிடம் மேகலாவின் பணம் இருக்கும் தான். மனைவிக்குத்
தெரியாமல் அதை கேட்டு வாங்கிக் கொண்டு வர வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தவர்
மேகலா வீட்டில் இருக்கும் நேரத்தைக் கணித்து அந்த நேரத்தில் கிளம்பி சத்யனைப்
பார்க்கப் போனார்.
மதிய நேரத்தில் சத்யனின்
அலுவலகத்திற்கு சென்று பார்க்க, அவன் வீட்டிற்கு சென்று இருப்பதாக தகவல் வர, வேகமாக வீட்டிற்கு போனார்.
வாசலிலேயே அவரை எதிர்கொண்டது அஞ்சலி தான். அவரைப் பார்த்ததும் கண்ணுக்குத் தெரியாத
ஒரு புன்னகை அவள் முகத்தில்.
“வாங்க மாமனாரே! என்ன இவ்வளவு தூரம்?” அளவுக்கு அதிகமான நக்கல் அவள்
குரலில்.
“சை! உன் மூஞ்சியை பார்க்கவா நான்
இவ்வளவு தூரம் வந்தேன். என் பையனை கூப்பிடு.. அவன் கிட்டே பேச வந்தேன்”
“பேச வந்தீங்களா? பொய் சொல்லாதீங்க மாமனாரே. பிச்சை
எடுக்க வந்தேன்னு சொல்லுங்க”
“ஏய்! என்ன திமிரா உனக்கு?”
“இப்போ உங்க பையனனை பார்க்க வந்தது
பணத்துக்காக இல்லைன்னு சொல்லப் போறீங்களா?” கூர் தீட்டிய கத்திகளாய் அவள் கேள்வி
“எனக்கும் என் பையனுக்கும் நடுவில்
ஆயிரம் இருக்கும் அதை கேட்க நீ யார்? முதல்ல தள்ளிப் போ நான் அவன் கிட்டே பேசத் தான்
வந்தேன். உன்னைப் பார்க்கக் கூட எனக்கு பிடிக்கலை”
“எனக்குக்கூட தான் உங்களை பார்க்க
பிடிக்கலை. அதுக்கு தான் உங்களை விட்டு தள்ளி இவ்வளவு தூரம் வந்து இருக்கேன். ஆனா
நீங்க தான் காலுல ஒட்டுன அசிங்கம் மாதிரி எங்கே போனாலும் பின்னாடியே வர்றீங்க”
“ஏய்! சிறுக்கி யாரைப் பார்த்து”
கையை ஓங்கிக்கொண்டு அஞ்சலியை நோக்கி வேகமாக வந்தவர் வீட்டின் பின் வாசலில் இருந்து
சத்யன் வருவதைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டார். ஆனால் அவரது ஓங்கிய கரத்தை
பார்த்தபடியே வந்த சத்யனுக்கு புரிந்து விட்டது. அவர் அஞ்சலியை அடிப்பதற்குத் தான்
கையை ஓங்கி இருக்கிறார் என்று.
இரண்டே எட்டில் வீட்டு வாசலுக்கு
வந்து விட்டான்.
“எங்கே வந்து யார் மேல கையை
ஓங்கிட்டு இருக்கீங்க? கையை இறக்குங்க. இல்லை அப்பானு எல்லாம் பார்க்க
மாட்டேன். இப்போ எதுக்கு இங்கே வந்தீங்க?” கொஞ்சம் கூட முக தாட்சண்யம் இல்லாமல் யாரிடமோ பேசுவது போல பேசி வைத்தான் சத்யன்.
“நான் உன் அப்பன்டா! உன்னைப் பார்க்க
வரக் கூடாதா?”
“வரலாமே! ஆனா புள்ளைங்க மேல உண்மையான
அன்பும், அக்கறையும் இருக்கிற அப்பாக்கள்
தான் அப்படி நடந்துப்பாங்க... நீங்க அப்படி இல்லையே!”
“டேய்! என்னடா ரொம்ப அதிகமா பேசுற...
கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லாம நடந்துக்கிற... என்ன செய்றது? உங்க அம்மா வளர்ப்பு அந்த இலட்சணம்”
“உங்க அம்மாவை விட நல்ல விதமா தான்
எங்க அம்மா எங்களை வளர்த்து இருக்காங்க” சூடாக திருப்பிக் கொடுத்தான்.
“சத்யா”
“சும்மா சத்தம் போடாதீங்க... இப்போ
எதுக்கு இங்கே வந்தீங்க? அதை சொல்லிட்டு கிளம்புங்க”
“அம்மாவோட கணக்கு வழக்கு
எல்லாத்தையும் நீ தானே பார்க்கிற... எனக்கு அவசரமா கொஞ்சம் பணம் தேவைப்படுது...
அம்மா கணக்குல இருந்து ஒரு இரண்டு கோடி எனக்கு அனுப்பி விடு”
“அது அம்மாவோட பணம். அவங்க சொல்லாம
நான் தர மாட்டேன்”
“அம்மா.. பெரிய அம்மா.. அப்படியே
வானத்துல இருந்து குதிச்சுட்டாளா? நான் இல்லாம எங்கே இருந்து வந்தா உங்க அம்மா? என்னோட பெண்டாட்டி பணத்தைத் தான்
நான் கேட்கிறேன்.”
“அதை எதுக்கு என்கிட்டே வந்து
கேட்கறீங்க? உங்க பெண்டாட்டி கிட்டே கேளுங்க.”
“அவ கிட்டே கேட்டு அனுமதி வாங்கித்
தான் அந்த பணத்தை நான் எடுக்கணுமா?”
“அது அவங்க பிறந்த வீட்டுல
அவங்களுக்காக கொடுத்தது. அதுல இருந்து பணம் எடுக்கணும்னா அவங்க கிட்டே
கேட்டுத்தான் தர முடியும். என்னவோ நீங்க வாங்கிக் கொடுத்த சொத்து மாதிரி அதிகாரமா
கேட்கறீங்க?”
“அவ புருசன் எனக்கு இல்லாத உரிமை
இந்த உலகத்துல யாருக்கு இருக்கு? நான் ஒன்னும் அவ கிட்டே கேட்கணும்னு அவசியம் இல்லை.
பணத்தை அனுப்பி விடு”
“முடியாது...”
“என்னடா போனாப் போகுதுன்னு உன்கிட்டே
வந்து ஒரு மரியாதைக்கு கேட்டா என்னமோ ஆட்டமா ஆடுற”
“இப்போ நீங்க போறீங்களா? இல்லை போலீசுக்கு தகவல் சொல்லட்டுமா?”
“சீ! நீ எல்லாம் ஒரு பிள்ளையா?”
“நான் என் அம்மாவுக்கு மட்டும் தான்
பிள்ளை... அவங்களுக்கு மட்டும் தான் நான் கடமைப்பட்டு இருக்கேன்.”
“அப்போ எனக்கு செய்ய வேண்டிய கடமை
உனக்கு இல்லையா?” நெஞ்சம் வேகமாக துடித்தது அவருக்கு. இத்தனை நாள் கைக்குள் இருந்த மகன்
இப்பொழுதெல்லாம் தன்னை மீறி தனியே வந்து விட்டதையும், தன்னை எதிர்த்து பேசுவதையும் அவரால்
தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அதற்கு மேல் சத்யனிடம் நின்று வாதிட
விரும்பவில்லை அவர். ஒருவேளை சத்யன் மட்டும் தனியாக இருந்து இருந்தால் கூட இன்னும்
கொஞ்சம் பொறுமையாக பேசி இருக்கக்கூடும். அது அத்தனையையும் விட சத்யன் தன்னிடம்
மரியாதை இல்லாமல் நடந்து கொள்வதை எல்லாம் அவனுக்கு பின்னால் நின்று கண்கள் ஒளிர
அஞ்சலி பார்த்துக் கொண்டிருந்ததை தான் அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
கோபமாக அங்கிருந்து கிளம்பி விட்டார்
துரைசாமி. நேராக வீட்டுக்கு செல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த கருப்பசாமி
கோவில் வாசலிலேயே காரை நிறுத்தி விட்டார்.
வீட்டிற்கோ, ஊருக்கோ எங்கும் செல்லவே மனம்
வரவில்லை அவருக்கு.
எப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்? இப்பொழுது அவர் இருக்கும் நிலை என்ன? சுய பட்சாதாபத்தில் கலங்கித்
தவித்தது அவர் மனம்.
காதலித்து ஆசை ஆசையாய் திருமணம்
செய்து கொண்ட அவரது மனைவி அவர் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்ப்பதில்லை.
ஆசையாய் வளர்த்த மகள் தன்னை மீறி அவளது அன்னைக்காக
நடந்தது மட்டுமில்லாமல் அவருக்கு யார் எதிரியோ அவனையே திருமணம் செய்து கொண்டாள்.
அது மட்டுமா இனி எனக்குப் பிறகு எல்லாமே என் மகன் தான்
என்று அவர் நினைத்திருக்க, சத்யனோ அவரை ‘யாரடா நீ?’ என்பதைப் போல பார்த்து
வைத்தான்.
ஊரில் யாரும்
தன்னை முன் போல மதிப்பதில்லை. செத்து விடலாம் போல இருந்தது அவருக்கு. மரியாதை
இல்லாத வாழ்க்கை. இது எல்லாம் யாரால்?
‘என்று அந்த தரித்திரம் பிடித்த அபிமன்யுவின் பார்வை
தன்னுடைய குடும்பத்தின் மீது பட்டதோ அன்றே தன்னுடைய நிம்மதி போனது. அந்த கேடு கேட்ட அஞ்சலி இந்த ஊரில் எப்பொழுது
கால் எடுத்து வைத்தாளோ அப்பொழுதே அவரின் மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக சரியத்
தொடங்கியது. இவர்கள் இருக்கும் வரை தனக்கு நிம்மதி இல்லை என்று ஆணித்தரமாக
நம்பினார். இப்பொழுது கூட அவர் செய்த தவறுகள் எதுவும் அவர் கண்ணை உறுத்தவில்லை.
அவர்களை மொத்தமாக ஒழித்து கட்டும் நோக்கத்துடன் அந்த
கூலிப்படை தலைவனுக்கு போனில் அழைப்பு விடுத்தார்.
“டேய்! உனக்கு ஆரம்பத்துல பேசின தொகையை விட இப்போ பத்து
மடங்கு அதிகம் கொடுத்துட்டேன். அது இல்லாம நீ சொன்னனு தினமும் அந்த சரசு வீட்டு
வாசல்ல நின்னு என்னோட பேரும் நாறிப் போச்சு. ஒரே செட்டில்மெண்ட்... ஒரு கோடி
தர்றேன். என் மக, அவ புருசன், என் குடியை கெடுக்க வந்த அஞ்சலி எல்லாரையும் போட்டுத்
தள்ளு... என்னோட சொத்தை எல்லாம் வித்து மொத்தமாக இரண்டு கோடி கூட வாங்கிக்கோ. ஆனா வேலை
கச்சிதமா முடிச்சு இருக்கணும். ஏற்கனவே செஞ்ச மாதிரி சொதப்பின... அப்புறம் நானே உன்னை கொன்னுடுவேன்”
“...”
“உனக்கு இரண்டு நாள் தான் டைம்... அதுக்குள்ளே
எல்லாத்தையும் முடிச்சு இருக்கணும்” என்று ஆத்திரத்துடன் பேசிக் கொண்டே
நிமிர்ந்தவர் அவர் காருக்கு அருகில் ஏதோ உருவம் தெரிய நிமிர்ந்து பார்த்தவர்
அதிர்ந்து போனார்.
அஞ்சலி அவரையே இகழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘இவளா? எவ்வளவு நேரமா இங்கே நிற்கிறானு தெரியலையே?’
“என்ன மாமனாரே? அடுத்து என்னையும் போட்டுத் தள்ள திட்டம் போட்டாச்சு
போல”
“ஆமா தப்பு தான். உன்னை கொல்றதுக்கு எல்லாம் ஆள் எதுக்கு? நானே உன்னை கொன்னுடறேன். சனியனே நீ ஒழிஞ்சா தான் எனக்கு
நிம்மதி”என்று ஆவேசம் வந்ததைப் போல கத்தியவர்
அஞ்சலியின் கழுத்தை பிடித்து நெறித்தார்.
“செத்து ஒழி” அவரின் கைகள் இன்னும் இறுக்கியது.
“இதுக்கே உ... உங்களுக்கு இவ்... ளவு கோ..பம் வ... வருதா?” திக்கிக் கொண்டே பேசினாள். அஞ்சலி அவரை எதிர்க்கவோ, தடுக்கவோ இல்லை. அமைதியாக அவரிடம் கழுத்தை கொடுத்து
விட்டு நின்றாள். அவரின் ஆத்திரம்
அதிகரிக்க அவளின் குரல் வளையில் அழுத்தம் கூடியது. மூச்சுக்கு ஏங்கித் தவித்தாள்.
கண்கள் நிலை கொள்ளாமல் அங்கும் இங்கும் அலை பாய்ந்தது.
தூரத்தில் ஏதோ கார் வரும் சத்தம் கேட்டு பார்வையை அங்கே
பதிக்க, காரில் இருந்து சத்யனும், மேகலாவும் பதைபதைப்புடன்
இறங்கி வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் அவர் வேகமாக கையை எடுக்க முயல, அவரை பலகீனமாக தடுப்பது போல, அவர் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள் அஞ்சலி.
“ஏய்! என்ன பண்ற? என் கையை விடு” பற்களை கடித்துக்கொண்டு துரைசாமி பேச, அஞ்சலியின் முகத்தில் குரூரப் புன்னகை ஒன்று வந்து
போனது.
சத்யன் அருகே வந்து அவர் கைகளை தட்டி விடும் வரை அவர்
எவ்வளவோ முயன்றும் கூட அஞ்சலியின் கழுத்தில் இருந்து கரங்களை விடுவித்துக் கொள்ள
முடியவில்லை துரைசாமியால்.
“நீங்க திருந்தவே மாட்டீங்களா? அம்மா நான் சொன்னப்போ கூட நீங்க நம்பலையே. இப்போ உங்க
கண்ணாலேயே பார்த்துட்டீங்க தானே?”
“டேய்! சத்யா”
“பேசாதீங்கப்பா.. அம்மா ... அஞ்சலி இவர் என்கிட்டே வந்து
இரண்டு கோடி பணம் கேட்டது.. நான் உங்க கிட்ட கேட்காம கொடுக்க மாட்டேன்னு சொன்னதை
எல்லாம் பார்த்துட்டு தான் இருந்தா... நான் சாப்பிட்டு வீட்டை விட்டு கிளம்பினதும்
மனசு கேட்காம இவளோட நகையை எல்லாம் வித்து அவருக்கு வேண்டிய பணத்தை எடுத்துக்க
சொல்லப் போறதா என்கிட்டே போனில் தகவல் சொல்லிட்டுத் தான் வந்தா... நான் அப்பவே
சொன்னேன். இவளை போக வேண்டாம்..இவ கேட்கவே இல்லை. நல்லவேளை லொகேஷன் ஷேர் பண்ணி
இருந்ததால உடனே வர முடிஞ்சது” அவன் பேசிக்
கொண்டே அஞ்சலியின் கழுத்தை இதமாக நீவி விட்டு , குடிப்பதற்கு கொஞ்சமாக தண்ணீர் கொடுத்துக்
கொண்டிருந்தான்.
அப்பொழுது தான் அஞ்சலியின் கைகளில் இருந்த நகைகள்
அடங்கிய பையை கவனித்தார் துரைசாமி.
‘பாதகத்தி. நகையைப் பத்தி ஒரு வார்த்தை சொல்லலையே...
திட்டம் போட்டு எல்லாத்தையும் செஞ்சு இருக்கா’
“அந்த பொண்ணு உங்களுக்கு உதவி செய்யத் தானே வந்தா? அவ கிட்டே போய் இப்படி மிருகத்தனமா நடந்துக்க
உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு”
“மேகலா... நான் ஏதோ கோபத்துல... ஆனா..”
“போதும்... நீங்க பேசி நான் கேட்டது எல்லாம்.. சத்யா
நானும் உன்னோட வர்றேன்டா... போகலாம். இனி இவர் இருக்கிற வீட்டுல நான் இருக்க
மாட்டேன். கொஞ்சமாவது இவர் திருந்தட்டும்” என்றவர் கணவனை திரும்பியும் பாராமல்
அஞ்சலியை ஒருபக்கம் தாங்கலாக பிடித்துக் கொண்டு காருக்குப் போனார்.
“போடி... போ.. உன்னை யாரும் இங்கே பிடிச்சு வைக்கலை..
இப்போ என்கிட்டே காசு , பணம் இல்லையே.. ஊரு பூரா கடன் தான் இருக்கு. என்னோட இருக்க
உனக்கு கஷ்டமா தான் இருக்கும். போ.. போய் உன் மகன் வீட்டுல சொகுசா இரு” என்று
கோபத்தில் கண் மண் தெரியாமல் கத்தினார். ஒரு நொடி தயங்கி, தடுமாறிய மேகலாவின் பாதங்கள் அடுத்த நொடி முன்னைக்
காட்டிலும் வேகமாக நடை போட்டது.
காரில் ஏறப் போவதற்கு ஒரு நொடி முன்பாக அஞ்சலி
நிமிர்ந்து அவரைப் பார்த்த அந்த ஒற்றை நொடியில் வெற்றிக்கான களிப்பு இருந்தது.
மற்றவர்கள் உணரும் முன் அது அப்படியே
மறைந்து போனது.
அவள் பார்வை சொல்லாமல் சொன்னது இதைத் தான்.
‘இனி நீ ஒரு அனாதை... ஆனால் காத்திரு இன்னும் உனக்கான
என்னுடைய தண்டனைகள் முடியவில்லை’

கருத்துரையிடுக