அத்தியாயம் 12
அடுத்த நாள் அதிகாலையில் அக்னி புத்திரனின் உத்தரவுப்படி
அருந்ததியை கோகிலா வந்து எழுப்பி விட... மனதார அவனை சபித்தபடி கிளம்பி வெளியே
வந்தாள் அருந்ததி.
‘இப்படி தினமும் நடுராத்திரியில் எழுப்பி விடறானே... இவனுக்கு
ஒரு பாயாசத்தை போட்டாகணும்’
“தம்பி வெளியே போய் இருக்கார் அருந்ததி.. அவர் வர்ற வரைக்கும்
உன்னை வீட்டிலேயே இருந்து எக்ஸ்சர்சைஸ்
செய்ய சொன்னார். அவர் இல்லாம வெளியே எங்கேயும் போக வேண்டாம்னு சொன்னார்”
என்று தகவல் சொன்ன தாயை முறைத்து பார்த்தாள் அருந்ததி.
“ஏன்மா... அவர் தான் இங்கே இல்லையே... இன்னும் கொஞ்ச நேரம்
கழிச்சு எழுப்பி விட்டு இருக்கலாம்ல... நல்லா தூங்கி எழுந்து இருப்பேன்ல...”
“தம்பி சொன்னதை செஞ்சேன்... தம்பி வந்து பார்க்கும் பொழுது நீ
தூங்கிட்டு இருந்தா அப்புறம் நானும் சேர்த்து இல்ல திட்டு வாங்கணும். அதுவும்
இல்லாம அந்த தம்பி என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்யணும்னு நேத்து ராத்திரியில்
இருந்து உங்க அப்பா ஆர்டர் போட்டு இருக்கார்” என்று சொன்ன தாயை பாவமாக பார்த்து
வைத்தாள்.
“ஹ்ம்ம்.. ஒரே நாள் ராத்திரியில் எல்லாமே தலைகீழா மாறி
போய்டுச்சு இல்ல... இதை சும்மா விட மாட்டா இந்த அருந்ததி...” என்று வசனம் பேச... கோகிலா மகளை ஏற இறங்க
பார்த்தாள்.
“ உனக்கு கொஞ்சம் கூட இந்த டயலாக் செட் ஆகலை அருந்ததி.. வேற
எதாவது ட்ரை செய்யேன்” என்று பல்பை கொடுக்க... நொந்து போனாள் அருந்ததி.
“அடக் கடவுளே கடைசியில் நீ எல்லாம் பல்பு கொடுக்கிற அளவுக்கு
இருக்கே என்னோட நிலைமை... எங்கே போய் சொல்லுவேன்...” என்றவளை அடிக்க கையை
ஓங்கிக்கொண்டு வந்தவர் மகளுக்கு பின்னால் கணவர் வரவும் அப்படியே அமைதியாகிப்
போனார். பார்வை மட்டும் மகளை பாசத்துடன் ! கொஞ்சிக் கொண்டிருந்தது.
‘அவர் கிளம்பினதும் உனக்கு இருக்கு கச்சேரி’ என்று சொன்ன
தாயின் முகத்தைப் பார்த்தும் பாராதது போல இருந்தவள் பரபரப்பாக அங்கே வந்த தந்தையை
கேள்வியாக பார்த்தாள்.
“அருந்ததி ... மாப்பிள்ளை எங்கே போய் இருக்கார்னு உனக்குத்
தெரியுமா?”
“தெரியாதுப்பா...” என்று உதட்டை பிதுக்கினாள்.
“என்ன பொண்ணும்மா... தம்பி வெளியில் கிளம்பும் பொழுது எங்கே ,
என்னனு தகவல் விசாரிச்சு வச்சுக்க மாட்டியா?”
‘இவரு
ஒருத்தர்... இங்கே என்ன சீன் நடக்குதுன்னே தெரியாம பேசுவார்.’
“அவர் கிளம்பிப் போனதே எனக்குத் தெரியாதுப்பா...”
“இது அதை விட மோசம்...தெரிஞ்சு வச்சு இருக்கணும்மா... இனி
இப்படி பொறுப்பில்லாம இருக்காதே...”
“ஏன் கோகிலா மாப்பிள்ளை எங்கே போறேன்னு உன்கிட்டயும்
சொல்லிட்டு போகலையா?”
“வ... வந்து மாப்பிள்ளை வெளிவேலையா போறேன்னு மட்டும் தான்
சொல்லிட்டு போனார்... வேற எதுவும் சொல்லலை...”
“அவர் சொல்லலைன்னா நீ கேட்க மாட்டியா? அருந்ததி தான் சின்ன
பிள்ளை... உனக்குமா விவரம் தெரியாது” என்று மனைவியை போட்டு வறுத்தெடுக்க... அவர்
சொன்ன சின்ன பிள்ளை தந்தை, தாயை திட்டுவதை வேடிக்கை பார்க்க தோதான இடத்தில்
அமர்ந்து கொண்டு கையில் இருந்த முளைகட்டிய தானிய வகைகளை தின்று கொண்டிருந்தாள்.
‘என்னை இவர் இங்கே தாளிச்சுட்டு இருக்கார்.. அதை ரசிச்சா
பார்க்கிற.. இந்த நேரத்தில் கூட கொறிச்சுட்டு தான் இருக்க... இருடி...உன்னை’
“ஆக மொத்தம் இரண்டு பேருக்கும் மாப்பிள்ளை எங்கே போய்
இருக்கார்னு தெரியாது இல்லையா?”
“என்னங்க... இப்போ எதுக்கு இந்த அளவுக்கு கோபப் படறீங்க?
மாப்பிள்ளை என்ன சின்ன பிள்ளையா? வேலையை முடிச்சுட்டு வந்துடுவார். அதுக்கு
அப்புறம் நிதானமா விசாரிச்சுக்கலாம்” என்று ஐடியா கொடுத்த மனைவியை அவர் பார்த்த
பார்வையில் கோகிலாவின் வாய் சட்டென்று மூடிக் கொண்டது.
“அது எனக்குத் தெரியாதா? வீட்டில் இருந்து வெளியே போன மனுஷன்
எங்கே போனார்னு உங்க இரண்டு பேருக்கும் தெரியலை... இந்த லட்சணத்தில் எனக்கு ஐடியா
சொல்ல கிளம்பிட்டீங்களா?” என்று வசை பாட.. கோகிலாவின் முகம் இருண்டது.
எப்பொழுதுமே திட்டாத தந்தை இன்று மாறி மாறி இருவரையும்
காய்ச்சி எடுப்பதை பொறுத்துக் கொண்ட அருந்ததியால் தாயின் முகம் வாடியதை பொறுத்துக்
கொள்ள முடியவில்லை.
“அப்பா... எதுக்கு எங்களையே திட்டிட்டு இருக்கீங்க... அய்யா
சாமி நாங்க இரண்டு பேரும் தான் விவரம் இல்லாதவங்க... ஆனா உங்க மாப்பிள்ளை
ரொம்பவும் விவரம் தெரிஞ்சவர் தானே. வெளியே போறவர் எங்கே போறார்னு வீட்டில்
இருக்கிறவங்க கிட்டே தகவல் கொடுத்து இருக்கணும் இல்லையா... அப்படி அவர் சொல்லாம
போனதுக்கு எங்களைத் திட்டுவீங்களா? இல்லை தெரியாமத் தான் கேட்கிறேன்... வெளியில்
கிளம்பும் பொழுது நாங்க போய் அவர்கிட்டே எங்கே போறீங்கனு கேட்கிறது அவ்வளவு
நாகரீகமா இருக்குமா?” என்று வரிசையாக கேள்விகளாக கேட்டு தந்தையை திணற வைக்க...
அவரை காப்பாற்றும் விதமாக நீமோவுடன் வந்தான் அக்னிப்புத்திரன்.
“இதோ உங்க அருமை மாப்பிள்ளை வந்துட்டார்... நீங்களே
கேட்டுக்கோங்க”என்றவள் அங்கே நில்லாமல் வீட்டுக்குள் சென்றாள். சரியாக அக்னியை
கடக்கும்போது அவன் காதில் விழும்படி முணுமுணுத்தாள்.
“சரியான இம்சை... இவரால நாங்க திட்டு வாங்க வேண்டி இருக்கு..”
என்று முனகியபடி அவனை கடந்து சென்றவளை முறைத்துக் கொண்டே சிவநேசனுக்கு அருகில்
வந்தான் அக்னி.
“எங்கே போனீங்க மாப்பிள்ளை?”
“என்ன விஷயம் ... எதுவும் பிரச்சினையா?”
“அ... அப்படி எல்லாம் இல்ல...”
‘ஹுக்கும் பேச்செல்லாம் எங்க கிட்டே மட்டும் தான். மாப்பிள்ளை
கிட்டே அப்படியே பம்மிட வேண்டியது’ என்று மனதுக்குள் நொடித்துக் கொண்ட மனைவியைப்
பார்த்து சங்கடமாக சிரித்து வைத்தார் சிவநேசன்.
“வ.. வந்து மாப்பிள்ளை... நான் ஏதோ விஷயம்
கேள்விப்பட்டேனே...”என்றார் தயங்கியபடி
“என்ன?” என்று கேட்டவனின் பார்வையில் இருந்த விறைப்பு
சிவநேசனுக்கு வருத்தத்தை தந்தது. அதற்காக அவர் கேட்காமல் இருக்க முடியாதே..
“பைனான்சியர் தணிகாசலத்தை பார்த்துட்டு வர்றீங்களாமே
மாப்பிள்ளை...”
“ஆமா...” அவன் கைகள் நீமோவை தடவிக் கொடுத்தபடி பதில்
அளித்தது.
“அவர் கிட்டே பணம் கடனா கேட்டு இருக்கீங்களாமே”
“ஆமா.. சொந்தமா செக்யூரிட்டி சர்வீஸ் கம்பெனி ஒண்ணு
ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன். அதுக்காகத் தான்”
“ஏன் மாப்பிள்ளை?”
“என்ன கேள்வி இது... எனக்கு பணம் தேவையா இருந்தது வாங்க
போறேன்.”அந்த கேள்வி அவனுக்கு பிடிக்கவில்லை என்பது அவனது முக சுழிப்பில் இருந்தே
தெரிந்தது.
“நம்ம வீட்டில் இல்லாத பணமா மாப்பிள்ளை... நீங்க எதுக்கு
வெளியில் கடன் வாங்கணும்?”
“மன்னிக்கணும் சார்.. இது உங்க வீடு.. அது உங்க பணம்...”
“என் பெண்ணை கல்யாணம் செஞ்ச பிறகு எல்லாமே உங்க இரண்டு
பேருக்கும் தானே மாப்பிள்ளை”
“இருக்கலாம்... ஆனா இன்னும் எனக்கும் உங்க பொண்ணுக்கும்
கல்யாணம் ஆகல... அதே நேரம் எனக்கு மாமனாரோட பணத்தில் வாழ்றவன்னு பேர் எடுக்க
இஷ்டம் இல்லை... நானே சுயமா சம்பாதிக்கணும்” முகத்தில் அடித்தாற் போல பதில்
வந்தது.
“அது சரி தான் மாப்பிள்ளை... அந்த தணிகாசலம் கிட்டே எதுக்கு
போனீங்க? என்கிட்டே சொல்லி இருந்தா தேவையான பணத்தை நானே ஏற்பாடு செஞ்சு கொடுத்து
இருப்பேன்ல. நீங்க தொழிலில் லாபம் வரும்போது அடைச்சு இருக்கலாமே”
“சார்... ப்ளீஸ்! இதெல்லாம் வேலைக்கு ஆகாது. என்னைக்கா
இருந்தாலும் யாராவது ஒரு சொல் சொல்லிட்டா என்னால தாங்கிக்க முடியாது. அதே நேரம்
அந்த பைனான்சியர் என் பிரண்டோட அப்பா தான். அவர் என்கிட்டே எந்த செக்யூரிட்டியும்
கேட்காம என்னை நம்பி மட்டுமே பணம் கொடுத்து இருக்கார்”
“உங்களுக்கு தான் ஊரில் நிறைய சொத்து இருக்கே மாப்பிள்ளை...
அதில் ஏதாவது ஒண்ணை பேங்கில் அடகு வச்சு...”
“செத்தாலும் அந்த பணத்தை தொட மாட்டேன்... என்னோட ஜெனிபர் சாக
காரணமா இருந்தது அந்த சொத்து தான்” என்று முகம் இறுக சொன்னவன் அதற்கு மேல் அங்கே
நிற்கப் பிடிக்காமல் வேகமாக வீட்டுக்குள் சென்று விட்டான். அவனின் கோபத்தின் அளவை
அவனது வேகநடை சொல்லியது.
‘ஜெனிபர்’ என்ற பெயரில் கோகிலாவின் புருவங்கள் கேள்வியாக
கணவனை நோக்கி உயர்ந்தது.
‘இப்போ இவளை வேறு சமாளிக்கணுமா!’ என்று நொந்தவரை
காப்பாற்றுவது போல சிலர் வீட்டுக்குள் வந்தனர்.
“சார் வீட்டில் இன்னும் சில இடங்களில் சிசிடிவி கேமரா வைக்க
சொல்லி அக்னிப்புத்திரன் சார் சொன்னார்...”
“ஓ... அப்படியா... சந்தோசம்... மாப்பிள்ளை சொன்ன மாதிரியே
செஞ்சிடுங்க” என்று சொன்னவர் அவர்களிடம் பேசியபடியே மெல்ல நழுவினார். அங்கேயே
இருந்தால் மனைவியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்குமே...
அதே நேரம் அக்னியின் அறையில் அவன் குறுக்கும் நெடுக்குமாக
நடந்து கொண்டிருந்தான்.
“இந்த வீட்டில் இருந்தா... நான் செய்யுற எல்லாத்துக்கும்
இவருக்கு விளக்கம் சொல்லணுமா? வார்த்தைக்கு வார்த்தை மாப்பிள்ளைன்னு வேற
கூப்பிடறார்... ஏதோ கொஞ்ச நாள் சமாளிப்போம்னு நினைச்சா இவர் என்ன இப்படி
நடந்துக்கிறார்... இவர் என்ன நான் சென்னை வந்தது அவர் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க
மட்டும் தான்னு முடிவே செஞ்சுட்டாரா? நான் இங்கே வந்தது கம்பெனி ஆரம்பிக்கத்
தான்... இங்கே தங்கி இருப்பதெல்லாம்
வெறும் கண் துடைப்பு தானே...
அக்னி... நீ இன்னும் அந்த அருந்ததியை பாசமா கொஞ்சிக்கிட்டு
இருந்தா வேலைக்கு ஆகாது... நீ கொடுக்கிற இம்சை தாங்காம அவளே தெறிச்சு ஓடணும் இந்த
கல்யாணம் வேண்டாம்னு... ஆனா நீ அவளை பாவம் பார்த்து விட்டுட்டு இருக்க... அதனால
தான் அவங்கப்பா இந்த அளவுக்கு உன்னை கேள்வி கேட்கிறார். இருக்கட்டும்... இனி
இருக்கு அவளுக்கு” என்று எண்ணியவன் ஜன்னலோரமாக எட்டி தோட்டத்தைப் பார்க்க... அங்கே
பெஞ்சில் அமர்ந்து ஜூஸ் குடித்துக் கொண்டிருந்த அருந்ததியைப் பார்த்ததும் அவனுக்கு
சுள்ளென்று கோபம் வந்தது.
மணி காலையில் இன்னும் பத்து கூட ஆகவில்லை. அவள்
அமர்ந்திருக்கும் தோற்றமே சொன்னது... அவள் காலையில் எழுந்ததில் இருந்து தன்னுடைய
சுண்டுவிரலைக் கூட அசைக்கவில்லை என்று...
‘இவளை’ என்று பல்லைக் கடித்தவன் வேகமாக கீழே இறங்கிப் போக...
அவன் பின்னாலேயே சமத்துப் பிள்ளையாக நீமோவும் சென்றது.
தோட்டத்தில் இருந்த இரும்பு ஊஞ்சலில் கால்களை ஆட்டிக் கொண்டே
ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தவள் தூரத்தில்
வரும் பொழுதே அவனை கவனித்து விட்டாள்.
‘ரொம்ப கோபமா இருக்கார் போலவே’ என்று எண்ணியவள் எப்பொழுதும்
போல விளையாட்டாக அவனை வம்பிழுக்க ஆரம்பித்தாள்.
“வாங்க நெருப்பு சார்... என்ன இன்னிக்கு ஓவர் சூடா இருக்கே...
நான் வெயிலை சொன்னேன்... அக்கினி வெயில் ஆரம்பம் ஆகிடுச்...” என்று அவள் பேசிக்
கொண்டிருக்கும் பொழுதே அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான். அடித்த அடியில்
நிலை தடுமாறி , தலை சுற்றிப் போய் மீண்டும் ஊஞ்சலிலேயே விழுந்து விட்டாள்
அருந்ததி.
அவன் தன்னை அடித்ததை அவளால் நம்பவே முடியவில்லை. பிரமை
பிடித்தவள் போல அவளது பார்வை அவனையே வெறித்திருக்க... ஜெனிபரின் நினைவும்... இந்த
திருமணத்தில் இருந்து தப்பியாக வேண்டிய நிர்பந்தமும், அவளது தந்தை தன்னை கேள்வி
கேட்டது இப்படி அனைத்தும் ஒன்று சேர்ந்து அவனது கண்களை மறைத்து விட்டது.
“பிச்சுடுவேன் ... என்னையே நக்கல் செய்ற அளவுக்கு உனக்கு
திமிரா? வாயை அடக்கிப் பழகு... இல்லேன்னா அதனோட பலனை நீ அனுபவிச்சுத் தான் ஆகணும்”
என்று சொன்னவன் அங்கிருந்து நகர... அருந்ததி அப்படியே சிலை போல அமர்ந்து விட்டாள்.
இங்கே நடந்த இந்த காட்சியை எல்லாம் காம்பவுண்டு சுவருக்கு
அந்தப் பக்கம் இருந்து பார்த்துக்
கொண்டிருந்த உருவம் ஒன்று சற்று தூரம் தள்ளிப் போய் யாருக்கோ போன் செய்தது.
“நான் பார்த்தேன்”
“....”
“ஆமா... அதே வீடு தான்...”
“...”
“இன்னிக்கு நைட் உள்ளே புகுந்துடட்டுமா?”
“....”
“சரி... நான் வெயிட் செய்றேன்... உங்க கிட்டே இருந்து தகவல்
வர வரை இந்த வீட்டுக்கு பக்கத்திலேயே சுத்திட்டு இருக்கேன்”
“…”
“கண்டிப்பா... என்னோட உயிரே போனாலும் உங்க பேரை சொல்ல
மாட்டேன்... நீங்க எனக்கு எவ்வளவு உதவி செஞ்சு இருக்கீங்க... நீங்க எனக்கு கடவுள்
மாதிரி மேடம்”
ஷாக்கடிக்கும்....

கருத்துரையிடுக