எனை மீட்பாயோ காதலே அத்தியாயம் 2



 அத்தியாயம் 2

அவன் போக்கில் அவன் வரிசையாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆர்டர் கொடுத்துக் கொண்டிருந்தான். எல்லாமே அவளுக்காகத் தான். ஆனால் அவளுக்காக இல்லை என்பதை அறிந்து அவள் மனதில் கசப்பு வந்து ஒட்டிக் கொண்டது.

சில மணி நேரங்கள் கடந்தே அவள் அருகில் இருப்பதை உணர்ந்தவன் மெல்ல அவள் புறம் திரும்பி புன்னகைக்க முயன்றான்.

“சீதா... ரைட்... எனக்கு ஒரு காபி கிடைக்குமா?” என்று கேட்டு முடிக்கவும் வேகமாக அங்கிருந்து எழுந்தாள். அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியேற்றினாள். நிம்மதியாக...

‘ நான் நினைச்சது என்ன? இங்கே நடப்பது என்ன?’ தலைவலிக்கத் தொடங்கியது அவளுக்கு.

அடுப்படிக்குள் அவள் நுழையும் முன் அவள் கைகளில் காபி கோப்பை திணிக்கப்பட்டது.

“எடுத்துட்டுப் போய் உன் புருசனுக்கு கொடு” வாய் முழுக்க பல் முளைத்து இருக்கிறதோ என்று எண்ணும்படி இருந்தது மங்களத்தின் முகம் .

ஒன்றுமே பேசாமல் அதை வாங்கிக் கொண்டவள் அங்கிருந்து மெல்ல நகர முற்பட அவளை வேகமாக முன்னோக்கி தள்ளினார்.

“என் பேரனுக்கு எல்லாம் சூடா சாப்பிடத் தான் பிடிக்கும். அதே மாதிரி வேகமும் அவன் கூடவே பிறந்த குணம். அவனுக்கு ஏத்த மாதிரி உன்னை நீ மாத்திக்கோ...” என்று சொன்னவரின் குரல் அவளின் மனதில் சோர்வை வருவித்தது.

மீண்டும் அவரிடம் கொட்டு வாங்க விரும்பாமல் அங்கிருந்து சித்தார்த்தை நோக்கி நகர்ந்தவளின் மனம் முதல் நாள் மாலை அந்த வீட்டில் இருந்து தான் துரத்தி அடிக்கப்பட்டு அவுட் ஹவுஸில் சிறை வைக்கப்பட்ட காட்சி வந்து போனது.

முகத்திலோ, குரலிலோ கோபம் இல்லையென்றாலும் முதல் நாள் மங்களத்தின் குரலில் அவள் மீது கொஞ்சமும் இரக்கம் இல்லை.

அவர் மனம் முழுக்க அவர் பேரனைப் பற்றிய நினைப்பு மட்டும் தான்.  அவளுக்கு வேண்டிய மட்டும் பணம் தருவதாக சொன்னவர் முதல் நாள் யாரும் அறியாமல் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதும் நினைவில் வந்து போக அவள் மனம் இறுகத் தொடங்கியது.

அவன் முகம் பார்க்காமல் காபியை வைத்து விட்டு வந்தவளை பிடித்துக் கொண்டார் கௌரி.

“இங்கே வா சீதா” என்று அழைத்தவர் அவளுக்கு சில நகைகளும், புடவையையும் கொடுத்து அணிந்து வருமாறு பணித்தார்.

“சித்தார்த் முன்னாடி எப்பவும் பளிச்சுன்னு இரு...  அப்போ  தான் அவனுக்கு உன் மேலே ஒரு பிடிப்பு வரும்” என்று சொல்ல முதன்முதலாக அவரை பரிதவிப்புடன் பார்த்தாள்.

அவளது பார்வையில் கோபம், இயலாமை, அருவருப்பு எல்லாமே கலந்து இருக்க கௌரியோ அதை உணரவே இல்லை. அவரது முகத்தில் நேற்றில் இருந்து காணப்பட்ட பயமும், தவிப்பும் காணாமல் போய் அதற்கு பதிலாக இனி மகனின் வாழ்வைக் குறித்த பயமோ, கவலையோ தேவை இல்லை என்ற நிம்மதியில் அவர் இருப்பதை  அவளால் உணர முடிந்தது.

தனக்கென ஒதுக்கப்பட்டு இருந்த அறைக்குள் நுழைந்தவள் அங்கிருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்து சிரித்துக் கொண்டாள். கழிவிரக்கமும், பச்சோதாபமும் ஒன்றை ஒன்று போட்டி போட்டு வெல்ல முயல அவளது சிரிப்பு மெல்ல அழுகையாய் மாறியது. புறங்கையால் மெல்ல துடைக்க துடைக்க அழுகை நிற்காமல் பெருகி ஓடியது.

சில நிமிடங்களில் கதவு தட்டப்பட, தனிமையைக் கூட தர மறுக்கும் அந்த வீட்டினரை எண்ணி அவள் மனதில் வெறுப்பு வந்தது.

நேற்றுவரை அவளை யாரும் ஒரு புல் அளவிற்குக் கூட மதிக்கவில்லை. அந்த வீட்டில் இருந்த கல்லையும், மண்ணையும் போல அவளையும் ஒரு பொருளாய் பாவித்தவர்கள் இன்று நிமிடத்திற்கு ஒருமுறை அவளை இழுத்து வைத்து பேசி ஏதேதோ செய்தார்கள். செய்ய சொன்னார்கள். செய்ய வைத்தார்கள்.

அது எப்படி இவர்களால் சட்டென மனதை மாற்றிக் கொள்ள முடிகிறது. இன்று காலை இவன் வீட்டுக்குள் வரும் வரை தன்னை இந்த வீட்டை விட்டு துரத்துவதற்கு தயாராக இருந்தவர்கள் அவன் மனதின் போக்கை அறிந்த உடனே மாறியதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நாளை மீண்டும் அவன் மனம் மாறினால் அதன்பின்னர் தன் நிலை... நினைக்கக் கூட பிடிக்கவில்லை அவளுக்கு.

 மீண்டும் கதவு தட்டும் ஒலியை அடுத்து கௌரியின் குரலும் கேட்க  மேலும் தாமதிக்காமல் உடையை மாற்றிக்கொண்டு கிளம்பியவள் வெகுவான தயக்கத்திற்கு பிறகு கதவை திறந்தாள்.

தன்னையும், தன்னுடன் வாழும் வாழ்வையும் பிடிக்காமலோ வெறுத்தோ ஓடிய ஒருவனுக்காக அலங்கரித்துக் கொண்டு நிற்பதை எண்ணுகையில் கசந்து வழிந்தது அவளுக்கு.

அவனுக்காக மணக்க மணக்க மதிய சமையல் தயார் ஆகி இருந்தது. எல்லாமே அசைவம் தான். மற்றவர்களுக்கு வாசனையாய் தெரிந்தது அவளுக்கு நாற்றமாய் தெரிந்தது. குடலைப் பிரட்டியது. வாந்தி வரும் போல இருந்தது. முயன்று சமாளித்துக் கொண்டாள்.

ஹாலில் அமர்ந்து வெளிநாட்டில் இருந்து எல்லாருக்கும் வாங்கி வந்த பொருட்களை எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தான் சித்தார்த். எல்லாருக்கும் கொடுத்து முடித்து திரும்பியவனின் பார்வையில் அவள் பட... அப்பொழுது தான் அவளுக்கென்று எதுவுமே வாங்கி வராதது நினைவில் வந்தது அவனுக்கு.

முதலில் அவளுக்கு எது பிடிக்காது என்பதே அவனுக்குத் தெரியாதே... ஊருக்கு வந்த பிறகு ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைத்தவன் இப்பொழுது வீட்டு  வேலையாள் முதற்கொண்டு அவளுக்கு அவன் என்ன வாங்கி வந்திருப்பான் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலை முகத்தில் தாங்கியபடி இருக்க என்ன செய்வதென்று ஒரு நொடி யோசித்தவன் சட்டென்று முகம் மலர தன்னுடைய கழுத்தில் இருந்த செயினை எடுத்து அவளுக்கு மாட்டி விட்டான்.

“இது என்னோட முதல் வருமானத்தில் நான் வாங்கினது.. எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்... இதுவரை என்னோட கழுத்தில் இருந்து கழட்டினதே இல்லை. அப்புறமா நாம கடைக்குப்போகும்போது உனக்கு பிடிச்ச மாதிரி வேற பொருள் வாங்கிக்கலாம்” என்று சொன்னவன் யாரையும் பொருட்படுத்தாமல் எழுந்து அவள் அருகில் வந்து அந்த செயினை அவள் கழுத்தில் அணிவித்தான்.

கௌரியும், மங்களமும் மகிழ்ச்சியை அடக்கும் வழி தெரியாமல் சில நொடிகள் ஸ்தம்பித்து போனதென்னவோ நிஜம்.

பேரனிடம் ஒரு முறை விளையாட்டாய் அந்த செயினை கழட்டி தரும்படி கேட்டதற்கு கோபம் கொண்டு ஒரு வாரம் பேசாமல் இருந்தவன் ஆயிற்றே.

சித்தார்த் அப்படி தான்... தனக்கென்று சில பொருட்களை சென்டிமென்ட்டாக வைத்து இருப்பான். அதை யாரிடமும் கொடுக்க மாட்டான். தப்பித்தவறி யாரேனும் அவன் பொருட்களை எடுத்து வைத்து சொந்தம் கொண்டாடினால் அதன் பிறகு அதை தொட்டுக்கூட பார்க்க மாட்டான். அப்படிப்பட்டவன் இன்று அவளுக்கு தன்னுடைய பொருளை கொடுக்கிறான் என்றால் அது அவனது மனமாற்றத்தின் அறிகுறி தானே.

சாப்பிட செல்லும்போது மறக்காமல் சீதாவையும் கையை பிடித்து இழுத்துக் கொண்டே சென்றான். அவனுக்கு அருகில் அமர வைத்து சாப்பிட சொன்னான்.

அவனுக்கு அசைவம் பரிமாறப்பட அவளுக்கு அவனின் அறிவுறுத்தல் படி தயாராகி இருந்த சைவ உணவு கொடுக்கப்பட்டது.

கண் முன்னே இருந்த உணவை சுவைத்து சாப்பிட முடியாமல்  அவளுக்கு வயிற்றை பிரட்டியது. பிற உயிர்களை சித்திரவதை செய்வது பாவம் என்று சிறுவயதில் இருந்து சொல்லி சொல்லி வளர்க்கப் பட்டவள். அசைவ உணவு வாசனையே அவளுக்கு ஆகாது.

சித்தார்த் முதல் கவளத்தை சுவைத்து வாயில் வைத்த அதே நேரம் வாயை மூடிக் கொண்டு வேகமாக எழுந்து ஓடியவள்  வயிற்றில் இருக்கும் குடலே வெளியே வரும் அளவிற்கு வாந்தி எடுத்த பின் தான் ஓய்ந்தாள்.

அவள் எழுந்து ஓடுவதை பார்த்து புருவம் உயர்த்திப் பார்த்தவன் அவள் வாந்தி எடுப்பதை பார்த்ததும் சட்டென்று சாப்பாட்டில் இருந்து எழுந்து விட்டான்.

கௌரி மானசீகமாகவும், மங்களம் வெளிப்படையாகவும் தலையில் அடித்துக் கொண்டனர்.

லேசாக தள்ளாடியபடி வெளியே வந்தவள் சித்தார்த்தை அங்கே எதிர்பாராமல் தயங்கி நின்றாள். ஒன்றுமே பேசாமல் அவளை கைபிடித்து ஹாலுக்கு அழைத்து சென்றவன் சுப்பையாவிடம் சொல்லி அவளுக்கு குடிப்பதற்கு கொண்டு வர சொன்னான்.

அவன் பார்வை அவள் மீதே பதிந்து இருந்தது.

வாமிட் எடுத்த உடனே சாப்பிட வேண்டாம்... கொஞ்ச நேரம் ஓய்வெடு” என்றவன் எழுந்து சென்று சாப்பிடத் தொடங்க... அவன் சாப்பிட்டு முடித்து அங்கிருக்கும் வரை அமைதியாக இருந்த மங்களம் அவன் நகர்ந்ததுமே பட்டாசாய் பொரியத் தொடங்கினார்.

“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? கல்யாணம் ஆன பிறகு முதன்முதலா உன் புருசன் கூட உட்கார்ந்து சாப்பிடுற... இப்படியா வாந்தி எடுத்து வைப்ப... உனக்கு பிடிக்கலைனாலும் அவனுக்காக பொறுத்துக்கிட்டு  சமாளிச்சு இருக்கணும் நீ... அவனே இப்போ தான் ஒரு வழியா இறங்கி வர்றான் . அதை நீயே கெடுத்துடுவ போலவே. பொண்டாட்டினா சும்மா இல்லை... பிடிக்காததை பல்லைக் கடிச்சு சமாளிக்கவும் தெரியணும்... புருசன் கிட்டே பல்லை காட்டி காரியம் சாதிக்கவும் தெரியணும்.

உனக்காக என் பேரனை சைவமா எல்லாம் மாற சொல்ல முடியாது.. அந்த வாசனையை பழகிக்கோ... இனி தினமும் அவனுக்கு வேணும்கிறதுல ஏதாவது ஒரு சமையலை நீ தான் செய்யணும். புரிஞ்சுதா?” என்று அதிகாரமாய் சொல்ல அவள் கண்களில் வரப் பார்த்தது.

“இனி சும்மா பொசுக்கு பொசுக்குனு அழுவுற வேலை எல்லாம் வச்சுக்காதே... சிரிச்ச முகமா இருந்து பழகு” என்று குரலை இன்னுமாய் உயர்த்தி அதட்டியவர் திட்டிக்கொண்டே பரிமாற அந்த சாப்பாடு அவள் தொண்டையில் சிக்கி... குத்தி கிழித்துக் கொண்டே உள்ளிறங்கியது. சீதாவிற்கு இதற்கு முன் இங்கே கழித்த நாட்களை விட இனி வரும் நாட்களை கடப்பது தான் பெரிது என்பது தெளிவாய் புரிந்தது.

இதுநாள் வரை எல்லாரும் தன் மீது பரிதாபம் நிரம்பி வழியும் பார்வையை செலுத்தி வந்தார்கள். அதை அவளால் பொறுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இப்பொழுது அவளது இயல்புக்கு மாறாக ஒவ்வொன்றாக அவளை கட்டாயபடுத்தி செய்ய வைக்கும் பொழுது அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக இறுகத் தொடங்கியது.

எல்லா இறுக்கமும் ஒருநாள் அதற்கு காரணமானவனைப் போய் சேரும். அப்பொழுது அவன் என்ன செய்வானோ? இறைவன் மட்டுமே அறிவார் அதை.

சாப்பிட்டு முடித்ததும் தன்னுடைய அறைக்குள் முடங்கிக் கொண்டவள் இரவு உணவின் பொழுது தான் வெளியே வந்தாள். அதுவரை அவளை யாரும் அழைக்கவோ தேடவோ இல்லை என்பது ஒரு புறத்தில் நிம்மதியை கொடுத்தாலும் , இப்பொழுதும் அவன் வருவானே என்று தானே தன்னையும் உணவு உண்ண அழைக்கிறார்கள் என்ற எண்ணமே சோர்வை கொடுத்தது அவளுக்கு.

யாரையும் நிமிர்ந்து பார்த்து பொய்யாய் சிரிக்க மனமில்லாமல் பதுமை போல நடந்து வந்தாள். யாரோ அவளின் கையை பிடித்து சேரில் அமர வைக்க இடித்த புளியாய் அமர்ந்து கொண்டாள்.

‘இப்போ என்ன கூத்து நடக்கப் போகுதோ’ என்று அவள் பயந்ததற்கு மாறாக ஒன்றுமே நடக்காமல் போனது அதிசயமாய் இருந்தது அவளுக்கு.

டைனிங் டேபிளில் அவனும், அவளும் மட்டும் தான் இருந்தார்கள். அவன் இரவு உணவாக கொஞ்சம் சப்பாத்தியும், தயிர் சாதமும் சாப்பிட... அவளுக்கு பழ வகைகள் கொடுக்கப்பட்டு இருந்தது.

சாப்பிட்டு முடிக்கும் வரை அவளுக்காக பொறுமையாக காத்திருந்தான் சித்தார்த்.

“மதியம் சாப்பிட்டதுக்கு அப்புறம் எங்கே போன சீதா?”

 “வீட்டில் தான் இருந்தேன்...”

“அப்புறம் ஏன் நம்ம ரூமுக்கு வரலை” என்று அவன் இயல்பாய் அறைக்கு அழைக்க அவளுக்குத் தான் தூக்கிவாரிப்போட்டது.

“எ.. எனக்கு கீழே சமையல் கட்டுக்கு பக்கத்துல இருக்கிற அறையை கொடுத்து இருக்காங்க... அ...அதுவே ரொம்... ரொம்ப வசதியா தான் இருக்கு” தடுமாற்றத்தை மறைத்து அவசரமாய் பதில் சொன்னாள் சீதா.

“அப்போ நான் ஊரில் இல்லையே... இப்போ தான் வந்துட்டேனே... இனி என்னோட ரூமில் தங்கிக்கோ... உன்னோட பொருள் எல்லாம் அங்கே மாத்தி வச்சிடு”என்று அவன் அசால்ட்டாக குண்டைத் தூக்கிப் போட சீதாவிற்கு வியர்த்து வழிந்தது.

“அ... அப்படி எல்லாம் வரக்கூடாது.. நான் பாட்டி கிட்டே கேட்டுட்டு... அ.. அப்புறமா” என்று இழுக்க... விளக்கை தேய்த்ததும் வந்து குதிக்கும் பூதம் போல அங்கே வந்தார் மங்களம்.

“நான் ஏற்கனவே உன்னோட பொருளை எல்லாம் அங்கே மாத்திட்டேன். நீ அங்கேயே போய் தூங்கு. அப்புறம் ஜோசியர் கிட்டே பேசிட்டேன். இன்னிக்கே உங்க சாந்தி முஹுர்த்தம் வச்சுக்கலாம் ன்னு சொல்லிட்டார். நாள் எல்லாம் அமோகமா இருக்காம். அதனால தேவை இல்லாத கிறுக்குத்தனம் எதுவும் செய்யாம அவனை அனுசரிச்சு நடந்துக்கோ” என்றவர் பேரன் அகன்றதும் அவள் கைகளில் பால் டம்ளரை கொடுத்து மாடிக்கு செல்லும்படி உத்தரவிட சீதாவிற்கு காலை எடுத்து ஒரு அடி கூட வைக்க முடியாமல் போனது.

‘அந்த ரூமுக்காக... சீ! கருமம்... எந்த பொண்ணாவது உள்ளே போக முடியுமா?’ என்றவளுக்கு பழைய நாளின் நினைவாக முகம் அஷ்டகோணலாக மாற மாடியில் இருந்து அவளது முக உணர்வுகளை அவதானித்துக் கொண்டிருந்த சித்தார்த்திற்கு முகத்தில் டன் கணக்காய் புன்னகை வழிந்தோடியது.

‘ஓ.. மேடம் தான் ஏற்கனவே என்னோட ரூமுக்குள்ளே வந்து இருக்கீங்க இல்ல.. அதை பார்த்துட்டுத் தான் இவ்வளவு தயக்கமா?’ என்று எண்ணியவன் தனக்குள் விஷமமாய் சிரித்துக் கொண்டான்.

 

 

 

Post a Comment

புதியது பழையவை