சதிராடும் திமிரே 3 Tamil novels

அத்தியாயம் 3
சஹானா , அபிமன்யு இருவருக்கும் அடுத்த நாள் மதியம் ப்ளைட்டில் டிக்கெட் புக் செய்து இருந்ததால் இளங்காலை நேரத்திலேயே அவசர அவசரமாக உணவை உண்டு விட்டு, பெற்றவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு சிரித்த முகத்துடன் விடை பெற்று சென்றனர். மகளின் மலர்ந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மேகலா மனமார இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.

‘திருமணம் முடிவதற்கு முன்னரே அவளது ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் நல்ல கணவன் அவளுக்கு கிடைத்து இருக்கிறார். அவளின் முகத்தில் இப்பொழுது இருக்கும் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க வரம் கொடு இறைவா’

“அதுதான் பொண்ணு கிளம்பியாச்சு இல்ல… இன்னும் என்ன வாசலையே பார்த்துக்கிட்டு… வீட்டுக்குள் போய் வேலையை பார்க்கிறது”என்றார் கடுத்த முகத்துடன்.

“வேலைனா.. என்ன வேலை ஆன்ட்டி… பாத்திரம் விளக்கி.. துணி துவைச்சு… வீடு பெருக்கிறதா? அச்சச்சோ! பாவம் ஆன்ட்டி நீங்க… எங்க வீட்டில் இந்த வேலைக்கு எல்லாம் ஆட்கள் இருக்காங்க… எங்க அம்மா வெறுமனே சூப்பர்வைஸ் தான் செய்வாங்க… ஆனாலும் எங்க டாடிக்கு மம்மி மேல அன்பு அதிகம்” என்று ஒரு அம்பை எய்தவள் துரைசாமியை ஒரு நமுட்டு சிரிப்புடன் பார்க்க… துரைசாமிக்கோ பக்கென்று ஆனது.

மேகலா எதுவுமே சொல்லாமல் அமைதியான முகத்துடன் துரைசாமியை ஒரு பார்வை பார்த்தார். மேகலாவின் முகத்தில் ஒரு துளி சலனம் இல்லை… கோபம் இல்லை..பரிதவிப்பு இல்லை… ஆழ்ந்த அமைதி இருந்தது. அந்த அமைதியின் பின்னால் இருக்கும் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தார் துரைசாமி.

அவர்கள் வீட்டில் வெளி வேலைகளுக்கு எத்தனையோ ஆட்கள் இருந்தாலும் வீட்டு நிர்வாகம் முழுக்க மேகலாவின் பொறுப்பு தான். பகல் பொழுதுகளில் அவர் ஐந்து நிமிடம் ஓய்வாக அமர்ந்து துரைசாமி பார்த்ததே இல்லை. பம்பரமாக சுழன்று கொண்டிருப்பார். இதுநாள் வரை தன்னுடைய சோகத்தில் மூழ்கி இருந்த மேகலாவும் அதை ஒரு விஷயமாக எண்ணி கவலை அடைந்தது இல்லை.

துரைசாமி எல்லா வேலைகளையும் மேகலாவையே செய்ய வைத்ததற்கு காரணம் அவரது சிந்தனை பரதத்தின் அருகில் கூட செல்லக்கூடாது என்பதற்காகத் தான். மேகலா எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதை பார்த்தாலும் ஒருநாள் கூட மனமிரங்கி வந்து மேகலாவிடம் பேசியது இல்லை.

‘இந்தளவுக்கு அவள் வீம்பா இருக்கிறாள்னா என்ன அர்த்தம்? இப்பவும் அவளுக்கு என்னை விட பரதம் தான் பெரிய விஷயமா தோணுது இல்லையா? கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரும் கூட அவளுக்கு என் மேல் இருக்கும் கோபம் தீரவில்லையே… எனக்கு பரதம் வேண்டாம்.. நீங்க தான் வேணும்னு சொல்ல இவளுக்கு மனசு வரலையே… அந்த நினைப்பு இவளுக்கு வரணும்..வந்தே ஆகணும்.
பொம்பளை இவளுக்கே இத்தனை வீம்பு இருந்தா.. ஆம்பிளை எனக்கு எவ்வளவு வீம்பு இருக்கும்? இவளா என்னைத் தேடி வந்து என் காலில் விழணும்… என்கிட்டே அவ தோற்றுப் போனதை ஒத்துக்கணும்.

அதுவரைக்கும் அவளுக்காக நான் ஒரு துரும்பைக் கூட நகர்த்த மாட்டேன்.’ என்று நினைத்துக் கொண்டு இருந்தவருக்கு இப்பொழுது அஞ்சலியின் கேள்வியும், அதற்கு மேகலாவின் முக பாவனையும் வயிற்றில் புளியை கரைக்கத் தொடங்கியது.

தந்தையின் பரிதாபமான நிலையைக் கண்டு அவருக்கு உதவுதற்காக முன் வந்தான் சத்யன்.
“எல்லார் வீடும் ஒரே மாதிரி இருக்குமாங்க… உங்க வீட்டில் எல்லா வேலைக்கும் ஆட்கள் இருந்தாலும் உங்க அம்மாவால ஒரு நிமிஷமாவது ஓய்வா உட்கார முடிஞ்சு இருக்கா? எங்க அப்பாவுக்கு அம்மான்னா ரொம்ப இஷ்டம். அவர் என்ன பணத்தை மிச்சம் பிடிக்கவா வேலைக்கு ஆட்களை வைக்கலை… அம்மாவுக்கு இதெல்லாம் தானே செஞ்சா தான் நிம்மதி. அதனால அவரும் அவங்க விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து அமைதியா இருந்துட்டார். இப்பக்கூட அம்மா ஒரு வார்த்தை சொன்னா போதும்… எல்லா வேலைக்கும் அப்பா உடனே ஆள் போட்டுடுவார். அந்த அளவுக்கு அவருக்கு அம்மான்னா உயிர்”

“ம்ம்ம்… செம சூப்பர்… உங்க அப்பாவுக்கு அந்த அளவுக்கு மனைவி மேல பிரியமா? அவங்க விருப்பத்துக்கு குறுக்கே நிற்காமல் அவங்க ஆசைப்பட்டதை எல்லாம் நிறைவேற்றும் கணவன் கிடைப்பது வரம் தான் இல்லையா? ஆன்ட்டி ரொம்ப கொடுத்து வச்சவங்க”என்றவளின் கண்கள் பேசிய பாஷையில் துரைசாமியின் தலை தானாகவே கீழே தாழ்ந்தது.

“அஞ்சலி நீ இன்னும் சாப்பிடவே இல்லையே…வாம்மா சாப்பிட போகலாம்… என்னங்க உங்களுக்கு வயலில் ஏதோ வேலை இருக்குனு சொன்னீங்களே… நீங்க கிளம்புங்க… உங்களுக்கு டிபனை வயலுக்கே கொடுத்து அனுப்பறேன்” என்று சொன்ன மேகலா , அஞ்சலியின் கைகளைப் பற்றி வீட்டிற்குள் அழைத்து சென்றார்.

துரைசாமி அந்த இடத்தை விட்டுக் கூட அசையாமல் அப்படியே நின்று விட்டார்.

சத்யனுக்கு உண்மையில் அவரைப் பார்க்கும் பொழுது பாவமாக இருந்தது.

‘அஞ்சலி தன்னுடைய கணவரைத் தாழ்த்திப் பேசுவது பிடிக்காமல் தானே மேகலா இப்பொழுது அவளை உள்ளே அழைத்து சென்றார். இப்படி அவரை மேகலா எத்தனை இடங்களில் தாங்கி இருக்கிறார். இருந்தும் அவர் மாறாதது ஏன்?’

“எப்பேர்ப்பட்ட மனுஷன்ப்பா நீங்க… இந்த அளவுக்கு சின்னப் பெண்ணெல்லாம் உங்களை குறை சொல்ற அளவுக்கு நடந்து இருக்கீங்களே… இதெல்லாம் உங்க தகுதிக்கு அழகு தானா?”

“எனக்கு யாரோட அறிவுரையும் தேவை இல்லை” என்று கத்தியவர் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு விறுவிறுவென நடந்து வெளியே போனார்.

‘ம்ச்… இன்னும் இவர் மாறலையே’ என்று சலிப்பாக உணர்ந்த சத்யன் வீட்டினுள் சென்றான்.

“இன்னும் கொஞ்சம் பொங்கல் வச்சுக்கோ அஞ்சலி…”

“ அச்சோ.. எனக்கு பொங்கலே பிடிக்காது ஆன்ட்டி… நீங்க செமயா சமைச்சு இருக்கீங்க.. அதனால கொஞ்சமா சாப்பிட்டேன்…போதும் ஆன்ட்டி.. ப்ளீஸ்”என்று கெஞ்சிக் கொண்டிருக்க… அவளின் மறுப்புகளை காதில் வாங்கிக் கொள்ளாமல் மேகலா அவளை விழுந்து விழுந்து உபசரித்துக் கொண்டிருந்தார்.

‘இந்த கவனிப்பு எதற்காக? மகளின் நாத்தனார் என்றா? அல்லது கொஞ்ச நேரத்திற்கு முன் கணவனிடம் தன்னைக் குறித்து அவள் பேசிய விதத்திற்க்காகவா?’ புரிந்து கொள்ள முடியாமல் மௌனமாக அங்கே வந்து நின்றான் சத்யன்.

“நீயும் உட்கார் சத்யா… டிபனை சாப்பிடு”என்றவர் மகனுக்கும் இலையைப் போட்டு பரிமாற மௌனமாக உண்ணத் தொடங்கினான் சத்யன்.

அஞ்சலி தன்னுடைய அன்னையுடன் இருக்கும் நேரத்தை குறைக்க விரும்பினான் சத்யன். அவள் நல்ல எண்ணத்துடன் இங்கே வந்து இருந்தால் பரவாயில்லை. அவளின் செய்கைகளைப் பார்த்தாலே தெரிகிறதே.. அவளுக்கு அப்பாவின் மீது இருக்கும் கோபம்? வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அன்னையை தூண்டி விட அவள் முயற்சி செய்வதைத் தான் அவன் பார்க்கிறானே… எனவே மெதுவாக அஞ்சலியிடம் பேச்சுக் கொடுத்தான்.

“சாப்பிட்டு முடிச்சதும் சொல்லுங்க… உங்களுக்கு ஊரை சுத்திக் காட்ட ஆள் ஏற்பாடு செய்றேன்…போய் பார்த்துட்டு வாங்க”

“சரி…” என்று உடனே ஒத்துக் கொண்டாள்.

‘உடனே எப்படி ஒத்துக் கொண்டாள் இவள்!… அத்தனை நல்லவள் கிடையாதே… இதற்குப்பின் என்ன திட்டம் தீட்டி இருக்கிறாளோ’ என்று எண்ணி ஆச்சர்யமும் கவலையும் கொண்டான் சத்யன்.

“ஊர் சுத்திப் பார்க்க ஆன்ட்டியும் என்னோட வரட்டும்… உங்க வீட்டு வேலைக்காரங்களை அனுப்பினா நான் சிரிச்சு பேசி. ஜாலியா இருக்க முடியாது…”

“அது… அம்மா எப்படி வர முடியும்? அவங்களுக்கு வீட்டில் வேலை இருக்குமே?” மேகலா அவளுடன் செல்வதை தடுக்க முயன்றான் சத்யன்.

“எது கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி நான் சொன்ன மாதிரி பத்து பாத்திரம் தேய்ச்சி… துணி துவைக்கிற வேலையா?”என்றவளின் குரலில் இருந்த நக்கல் அவனை கோபப்படுத்தியது என்னவோ நிஜம்.

‘இவளை’

“இருக்கட்டும் சத்யா.. நம்ம வீட்டுப் பொண்ணை வேலைக்காரங்களை நம்பி அனுப்ப முடியுமா? அது நல்லா இருக்காது. நானே போயிட்டு வர்றேன்” என்று மேகலா சொல்லிவிட தாயின் பேச்சை மறுத்து பேச முடியாமல் அவஸ்தையுடன் அங்கிருந்து நகர்ந்தான்.

‘நான் கூட இருக்கும் பொழுதே இவ அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையில் பள்ளம் தோண்டுவா… யாரும் இல்லைன்னா பெரிய அகழியா இல்ல தோண்டி வைப்பா. அப்பா செஞ்ச தப்புக்கு அது தேவை தான். இருந்தாலும். அதை சொல்றதுக்கும்… அவருக்கு தண்டை கொடுக்கிறதுக்கும் இவ யாரு? ஏதோ சஹானா விஷயத்தில் கொஞ்சம் உதவி செஞ்சு இருக்கான்னு பொறுத்து போனா இவ ரொம்ப ஆடுறாளே…’ என்று எண்ணியவன் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தவனாக விலகி சென்றான்.
அவன் மனம் முழுக்க இருந்தது ஒன்றே ஒன்று தான்.

இந்தப் பெண் அஞ்சலி இங்கிருந்து கிளம்பும் வரை எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் நல்ல முறையில் இருக்க வேண்டும். ஏதாவது மனக்கசப்பு வந்து விட்டால் அது சஹானாவின் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடும். எனவே கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான்.

அவனது கணிப்புகளில் அடங்குபவர்களையே பார்த்து பழகியவனுக்கு அஞ்சலி பெரும் சவாலாய் தான் இருக்கப் போகிறாள் என்பதை அவன் உணராத தருணம் அது.

மேகலாவும், அஞ்சலியும் காலை உணவை முடித்ததும் கோவிலுக்கு வந்து இருந்தார்கள். கோவில் வரை காரில் வந்தவர்கள் உள்ளே மெதுவாக நடக்கத் தொடங்க… அங்கிருந்த ஒவ்வொருவரும் முந்தி அடித்துக் கொண்டு வந்து மேகலாவிற்கு வணக்கம் சொன்னார்கள். அவர்களின் முகத்தில் இருந்த அன்பையும், மரியாதையையும் வியப்புடன் பார்த்தாள் அஞ்சலி.

திரைத்துறையில் அபிமன்யு இருப்பதால் அவளுக்கு இதெல்லாம் புதிது இல்லை .ஆனால் அவளின் வியப்பிற்கு காரணமே வேறு. அபிமன்யு இந்தியா முழுக்க பிரபலமான நடனக் கலைஞன்.அவனுக்கு கிடைக்கும் மரியாதை வீட்டிலேயே அடங்கி இருக்கும் மேகலாவிற்கும் கிடைக்கிறதா? ஒருவேளை ஊர் பெரிய மனிதரின் மனைவி என்பதால் கிடைக்கும் மரியாதையா இது? கேள்வியுடன் மேகலாவை ஓரக்கண்ணில் பார்வையிட்டாள்.

பார்த்தவுடன் கையெடுத்து கும்பிடும் படியான மரியாதையான தோற்றம்… நிச்சயம் கன்னி வயதில் பெரிய அழகியாக இருந்திருப்பார். அங்கங்கே ஓரிரு நரைமுடி மட்டும் இல்லையென்றால் இவரின் வயதையே மற்றவர் நம்புவது கடினம்.

இவரை பார்த்த நாளில் இருந்து இன்று வரை அவர் அதிர்ந்து பேசிக் கூட அவள் பார்த்தது இல்லை.

‘ உண்மையிலேயே இவர் அமைதியானவரா? இல்லை திருமணத்திற்குப் பிறகு தனக்கு நடந்த கொடுமைகளால் இப்படி மாறி விட்டாரா? ‘ பதில் தெரிய வேண்டி இருந்தது அவளுக்கு.

“ஆன்ட்டி.. நீங்க எப்பவுமே இப்படித்தான் அமைதியா இருப்பீங்களா?” அவளின் கேள்வியில் திரும்பி அஞ்சலியைப் பார்த்த மேகலாவின் முகத்தில் மெல்லிய புன்சிரிப்பு .

“தேவைக்கு மட்டும் பேசுவேன்” அளந்து பேசினார் மேகலா.

‘யாரோட தேவைக்கு?’ தொண்டை நுனி வரை வந்து விட்ட கேள்வியை வெகுவாக கஷ்டப்பட்டு விழுங்கினாள்.

‘இவரை இப்படியே விட்டா என்னோட திட்டம் பலிக்காதே’ என்று எண்ணியவள் மெல்ல அவரிடம் பேச்சுக் கொடுத்தாள்.

“இந்த கோவில் பத்தி சொல்லுங்களேன் ஆன்ட்டி” என்று பேச்சைத் தொடங்கியவள் அதன்பிறகு வாய் ஓயவே இல்லை. மேகலாவையும் வாய் மூட அனுமதித்தாளில்லை. எதைப் பற்றி பேசினால் பெண்களின் வாய்ப்பூட்டு கழண்டு கொள்ளுமோ அதையெல்லாம் தெளிவாக அறிந்து வைத்திருந்தாள் அஞ்சலி.

மேகலையின் சிறுவயது, பள்ளிக்காலம், பிறந்த வீடு என்று பேச்சை வளர்க்க தன்னையும் அறியாமல் மேகலா மனம் திறந்து அவளிடம் பேசத் தொடங்கினார்.

கோவிலுக்கு போய்விட்டு வீடு திரும்பும்போது அஞ்சலியின் கைகளை வாஞ்சையுடன் பற்றியபடி சிரித்த முகத்துடன் வீட்டினுள் நுழைந்த மேகலாவைப் பார்த்ததும் துரைசாமிக்கு பக்கென்று ஆனது.

‘ஒரே நாளில் கவுந்துட்டாளோ’ அவர் பார்வை வேகமாக அஞ்சலியின் முகத்தில் படிந்தது.

அவள் முகத்தில் வாய் கொள்ளா சிரிப்பு. ஆனால் வெளியே தெரியாமல் அவருக்கு மட்டுமாய் நக்கலும் மறைந்திருந்தது அவளது சிரிப்பில்.

“அங்கிள் உங்களுக்குத் தெரியுமா? நானும் ஆண்ட்டியும் நல்லா என்ஜாய் செஞ்சோம். வாய் ஓயாம பேசிட்டே வந்தோம். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரே ஜாலி.. இனி வீட்டுக்கு வந்த பிறகு அப்படி இருக்க முடியாதுல” என்று சொன்னவள் பார்வையால் ஒரு வெற்றி அம்பை துரைசாமியின் பக்கம் செலுத்தி விட்டே போனாள்.

‘என்ஜாய் பண்ணது… இனி அப்படி இருக்க முடியாதேன்னு ஏக்கத்தோடு சொன்னது அவளுக்காகவா இல்லை மேகலையை அப்படி சொல்லுதா அந்த புள்ளை’ என்ற குழப்பத்தோடு மனைவியின் முகம் பார்க்க அதில் தெரிந்த பூரிப்பு அவருக்கு நெஞ்சு வலியை ஏற்படுத்தியது.

  1. ‘பத்த வச்சுட்டு போய்டுச்சே அந்த புள்ளை’Free pdf download novels

Post a Comment

புதியது பழையவை