சதிராடும் திமிரே 4 tamil novels

வெளிநாட்டிற்கு போய் இறங்கியதும் சஹானாவும், அபிமன்யுவும் தாங்கள் நல்லபடியாக வந்து சேர்ந்த தகவலை தெரிவித்தவர்கள் அதன்பிறகு காதல் பறவைகளாக சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கி விட்டார்கள். சஹானாவின் காதல் கிட்டுமோ கிட்டாதோ என்ற பரிதவிப்பில் இருந்த அபிமன்யு, அவளே மனைவியாக வந்ததும் தன்னை மறந்து அவளையே சுற்றி வந்தான்.

சஹானாவும் அவனுக்கு கொஞ்சமும் குறையாத காதலை காட்டினாள். இரவு,பகல் பாராமல் கூடினார்கள். ஊர் சுற்றினார்கள். அவனது பிடித்தம் என்ன என்று அவளும், அவளது ஆசை என்னவென்று அவனும் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

உடலால் மட்டுமின்றி மனதாலும் ஒருவரையொருவர் உணர்ந்து கொண்டார்கள். அது தானே நல்ல தாம்பத்தியத்தின் அடிப்படையும்… சுற்றிப் பார்க்கப் போன இடங்களில் சில நேரம் யாரேனும் அபிமன்யுவை அடையாளம் கண்டுகொண்டு அவனிடம்  பேச முயலும்போது இன்முகமாகவே பேசுவான். பெண் ரசிகைகள் அவனிடம் கொஞ்சம் நெருக்கம் காட்டி செல்பி எடுத்தாலும் அவனது அருமை மனைவியின் முகம் சட்டென்று வாடித் தான் போகும். வெளியில் தெரியாத வகையில்…

மனைவியின் முகத்தை வைத்தே அதை தெரிந்து கொண்ட அபிமன்யுவும் போட்டோ எடுக்கும்போது கூட மற்ற பெண்களுக்கும் தனக்கும் இடையில் இடைவெளி இருக்குமாறு கவனத்துடன் நடந்து கொள்வான். அது முடியாத பட்சத்தில் தனக்கு அருகில் மனைவியை நிற்க வைத்து விடுவான்.

சஹானாவிற்கு கணவனின் மனம் புரிந்தாலும் அவனது தொழிலில் இதெல்லாம் தடுக்க முடியாத ஒன்று என்பது நன்றாகவே புரிந்திருந்தது. எனினும் அவ்வபொழுது செல்ல சிணுக்கம் கொண்டது அவள் மனது.

அவள் அருகில் அவன் மட்டும் இருக்கும் பொழுது வண்ணமயமாய் இருக்கும் உலகம், இருவருக்கும் இடையில் யாரேனும் வந்தால் களையிழந்து, நிறம் மங்கிப் போய்விடும்.

அறைக்குள்ளும், அறைக்கு வெளியிலும் அபிமன்யுவின் கண்களுக்கு அவனுடைய சனா மட்டுமே தெரிந்தாள்.

‘சனா..சனா ‘ என்று அவள் மீது உயிராய் இருந்தான். இவர்கள் இருவரும் அங்கே சொர்க்கத்தில் இருக்க, கிராமத்தில் துரைசாமியோ தினம் தினம் நரகத்தில் உழலத் தொடங்கினார். அதற்குக் காரணம் அஞ்சலி என்றால் மிகையில்லை.

சின்ன வாய்ப்பு கிடைத்தாலும் உள்ளே புகுந்து விடுவாள்.துரைசாமியை மட்டம் தட்டக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் அவள் விடுவதில்லை. நேரடியாக செய்ய மாட்டாள். அதற்கு சத்யன் விட மாட்டான் என்பது ஒருபுறமிருக்க, அதை மேகலாவும் விரும்ப மாட்டார் என்பதையும் அவள் அறிந்தே இருந்தாள். அதனாலேயே கொஞ்சம் அடக்கி வாசித்தாள். அஞ்சலி வந்ததில் இருந்தே வீட்டில் துரைசாமியின் நடமாட்டம் குறைந்து விட்டது.

அன்றைய தினம் ஊர் பெரியவர்கள் அனைவரும் அவரைப் பார்க்க வந்திருப்பதாக தகவல் தெரிய… தோப்பில் இருந்து வந்திருந்தார்.

“வாங்க.. வாங்க.. எல்லாரும் வந்து இருக்கீங்க..  இப்போ ஒன்னும் விசேஷம் கூட இல்லையே… கோவில் திருவிழா கூட அடுத்த மாசம் தானே?”

“திருவிழா இல்லைங்க அய்யா… சுதந்திர தினம் வருதுல்ல…அதான் பள்ளிக்கூடத்துல கொடி ஏத்த உங்களை தலைமை தாங்க அழைக்கலாம்னு வந்தோம்” கூட்டத்தினர் பவ்யமாக பேசினார்கள்.

“வந்துட்டாப் போச்சு… ஆமா என்னிக்கு வரணும்?” என்று கேட்க அவருக்கு பின்னால் நமுட்டு சிரிப்பொன்று கேட்டது அவருக்கு. கேட்ட மாத்திரத்திலேயே புரிந்து போனது அவருக்கு. அது யாரின் நகைப்பென்று.

‘அய்யோ… இவ வந்துட்டாளா? என்னோட மானத்தை குலைக்காம இங்கிருந்து நகர மாட்டாளே…’ பயபந்து சுருண்டது அவருக்கு.

‘இந்த மேகலா எங்கே போனா’ மனதுக்குள் மனைவியை திட்டித் தீர்த்தார்.

கணவர் மனதுக்குள் திட்டியது காதில் விழுந்ததால் அங்கே வந்தாரோ அல்லது கணவரை காப்பாற்ற எண்ணி அங்கே வந்தாரோ… சரியான நேரத்தில் அங்கே வந்து ஆஜரானார் மேகலா.

அஞ்சலி ஒன்றுமறியாத பிள்ளை போல அவரிடம் கேள்விகளை கேட்டாள்.

“என்ன விஷயம் ஆன்டி… இவ்வளவு பேர் வந்து இருக்காங்க… “

“ஏதாவது ஊர் சம்பந்தப்பட்ட விழாவுக்கு உங்க மாமாவை தலைமை தாங்க கூப்பிட வந்து இருப்பாங்க” நிச்சயம் மேகலாவின் குரலில் பெருமை இருந்தது.

‘இந்த மனுசன் மேல இன்னும் ஆன்ட்டிக்கு அன்பு இருக்கும் போலவே… தப்பாச்சே…’ என்று நினைத்தாள்.

‘இவ்வளவு தூரம் அவர் கொடுமை செய்த பிறகும் கூட அவங்க அவர் மேல இவ்வளவு அன்பையும், மரியாதையையும் காட்டினா அப்புறம் அவர் கண்ணுக்கு இவங்க இளப்பமா தானே தெரிவாங்க.அவங்களோட அன்பையும், மரியாதையையும் பொக்கிஷம் மாதிரி பாதுகாக்ககிற ஆளு கிட்டே காட்டினா தானே அதுக்கு மதிப்பு.. இவர்கிட்டே அதுக்கு சுத்தமா மதிப்பே இல்லையே…

ஏதாவது செய்து அவங்களோட அருமையை அவர் உணர வைக்கணும். அப்படி இல்லைன்னா இவர் அவங்களோட மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர் இல்லைன்னு புரிய வைக்கணும். இது இரண்டுல ஒன்னையாவது செஞ்சுட்டுத் தான் இந்த ஊரை விட்டு போகணும். இல்லேன்னா வாழ்க்கையின் கடைசி நாள் வரைக்கும் ஆன்டிக்கு சுய கவுரவம், தன்மானம் அப்படிங்கிற விஷயங்கள் இருக்கிறதே தெரியாம போய்டும்… இவர் அதை எல்லாம் மறக்க வச்சுட்டு தன்னுடைய காலடியிலேயே இவங்க கிடக்கணும்னு நினைக்கக் கூடிய ஆள் தானே’

அஞ்சலி தனக்குள் மூழ்கி இருந்த அந்த கணத்தை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட துரைசாமி வந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வெற்றிகரமாக கிளம்ப வைத்து விட்டார்.  

அவர்கள் கிளம்பியதை அறிந்த அஞ்சலி அதற்காக ஒன்றும் பெரிதாக வருந்தவில்லை.

‘இன்று ஒருநாள் தப்பி விட்டால் போதுமா?’

 இந்த ஊரை விட்டு கிளம்பும் முன் அவரை ஒரு வழி ஆக்காமல் அவள் விடப் போவதில்லையே.

மெதுவாக மேகலாவிடம் பேச்சுக் கொடுத்தாள்.

“ஏன் ஆன்ட்டி.. இது மாதிரி எந்தெந்த விழாவுக்கு எல்லாம் அங்கிளை சீப் கெஸ்ட்டா அழைப்பாங்க?”

“அது நிறைய இருக்குடா.. இந்த ஊரில் உங்க மாமா ரொம்ப பெரிய ஆளு… அதனால பெரும்பாலும் எல்லா விழாவுக்கும் அவரை தான் தலைமை தாங்க அழைப்பாங்க”

“அவங்களா கூப்பிடுவாங்களா இல்லை நீங்க கூப்பிட வைப்பீங்களா? ஏன் கேட்கிறேன்னா எங்க அபி அண்ணா ஏற்கனவே இந்த ஊருக்கு சூட்டிங் நேரத்தில் வந்தப்போ சூட்டிங் நடத்த விடாம நீங்க அடிச்ச கூத்து எல்லாத்தையும் ஒன்னு விடாம சொன்னார். மரியாதையை கேட்டு வாங்குறீங்களே… உங்களுக்கு கொஞ்சம் கூட ஷேமா இல்லையா?” என்றாள் குரலை தணித்து… துரைசாமி மட்டும் தெளிவாக கேட்கும் விதத்தில்.

துரைசாமியின் கண்கள் சிவந்தது.. நாடி புடைத்தது…

‘சின்னப் பொண்ணு… என்ன பேச்சு பேசுறா… நான் கண் அசைச்சா போதும்… என்னோட ஆட்கள் இவளை கொன்னு புதைச்சுடுவாங்க… என் பொண்டாட்டிக்காக பொறுத்துப் போனா இந்த புள்ள ரொம்ப பேசுது… என்னோட அனுபவத்தில் எத்தனை பேரை பார்த்து இருப்பேன்… ஏதோ சின்னப் பொண்ணாச்சேன்னு பார்த்தா ரொம்ப ஆடுறியா? இரு உனக்கு ஒரு ஆட்டம் காட்டுறேன்’ என்று மனதுக்குள் சூளுரைத்தவர் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு வேகமாக வெளியேறினார்.

இந்த இரண்டு காட்சிகளையும் மாடியில் இருந்து சத்யன் பார்த்துக் கொண்டிருந்ததை யாருமே கவனிக்கவில்லை.

அது அஞ்சலிக்கு சாதகமாகவும், துரைசாமிக்கு ஆபத்தாகவும் முடிந்தது. ஏனெனில் அவர் தன்னுடைய கோபத்தை காட்ட முயன்றது அஞ்சலியிடம் இல்லை. தன்னுடைய சொந்த மகள் சஹானாவிடம்.

‘இந்த புள்ளை இன்னிக்கு இந்த அளவுக்கு பேசுதுனா அதுக்கு யார் காரணம்? அந்தக் கழுதை மட்டும் வீட்டோட அடங்கி இருந்திருந்தா… இந்த நிலை வந்து இருக்குமா?  வீட்டுக்கு அடங்காமல் வீட்டை விட்டு அந்த சிறுக்கி காலை வெளியே எடுத்து வச்சதால தானே இந்த அளவுக்கு பிரச்சினை… ஒருவேளை வீட்டோட இருந்து இருந்தா… இதெல்லாம் நடந்து இருக்குமா?  நாட்டியம் கத்துக்கிறேன்… வீட்டை விட்டு காலடி எடுத்து வச்சதோட சும்மா இருந்தாளா? கண்ட பயலையும் காதலிச்சு… என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டா… இந்த கல்யாணம் நடந்ததால தான் நேத்து மழையில் முளைச்ச காளான் எல்லாம் என்கிட்டே நின்னு என்னை வம்பிளுக்குது’

சஹானா சென்னைக்கு போய் அவருக்கே தெரியாமல் பரதம் பயின்றதில்  இருந்தே அவருக்கு சஹானாவின் மீது கொதித்துக் கொண்டிருந்த கோபம் கழுத்தில் கத்தி வைக்காத குறையாக அவள் அபிமன்யுவை மணந்த பொழுது இன்னும் அதிகமானது.

மேகலாவை வீட்டோடு முடக்கிப் போட்டு தன்னுடைய தேவைகளை மட்டுமே பார்க்க வைப்பது என்பது அவரது பல ஆண்டு திட்டம்…குழந்தைகள் பிறகும் வரையிலும் எவ்வளவோ போராடிய மேகலா ஒரு கட்டத்திற்கு மேல் பரதத்தையே சுத்தமாக மறந்தும் விட்டார் தானே…அவரை மீண்டும் தூண்டி விட்டு தனக்கெதிராக எல்லா வேலைகளும் செய்ய வைத்தது சஹானா தானே…

இந்த விஷயத்தில் சத்யனின் பங்கும் உண்டு என்று அவருக்கு தெரிந்தாலும் அவருக்கு அது பிரச்சினை இல்லை.

‘அவன் ஆண் பிள்ளை…அவன் ஆயிரம் செய்யலாம்.. பொட்டைக் கழுதை இவ எப்படி எனக்கெதிரா நடக்கலாம்’ இவ்வாறெல்லாம் புத்திசாலித்தனமாக! யோசித்து பெற்ற பெண் என்று கூட பாராமல் அவள் மேல் ஆத்திரத்தை வளர்த்துக் கொண்டார்.

கட்டிய மனைவி மேகலாவை அவர் கேள்வியே கேட்க முடியாது.ஏனெனில் அவருக்கே நன்றாகத் தெரியும்.மேகலாவிற்கு அவர் செய்தது எல்லாமே அநியாயம் என்று.மேலும் அவரை கேள்வி கேட்க ஆரம்பித்தால் மேகலா மகளோடு ஒரேடியாக சென்று விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அது கூடாது… இத்தனை வயதிற்கு மேல் பொண்டாட்டி கோபித்துக் கொண்டு மகள் வீட்டுக்கு கிளம்பி விட்டால் ஊரில் அவருக்கு இருக்கும் மரியாதை என்னாவது? எனவே மேகலாவை கேள்வி கேட்பதோ,அவரை தண்டிப்பதோ அவருக்கே ஆபத்தாக முடிந்து விடக் கூடும்.

அடுத்தது அவரது ஒற்றை ஆண் வாரிசு சத்யன்… இன்று ஏதோ தாயின் மீதும், தங்கையின் மீதும் இருக்கும் அதீத பாசத்தால் அவர்கள் கேட்கும் எல்லாவற்றுக்கும் அவன் தலையை ஆட்டி விடுகிறான்.இன்னும் கொஞ்ச நாளில் விவரம் தெரிந்த பிறகு அவன் அவரது பக்க நியாயத்தை புரிந்து கொண்டு அவர் என்ன சொன்னாலும் அப்படியே தலையை ஆட்டி விடுவான்.

மிச்சம் இருப்பது சஹானா ஒருத்தி மட்டுமே…அவள் தான் என் பேச்சை மீறியதோடு மட்டுமில்லாமல் இத்தனை வருடங்கள் கழித்து மனைவி, மகனை அவருக்கு எதிராக திருப்பிய பாவி…

அஞ்சலி வேறு அவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக சோதிக்க… அது எல்லாமே மொத்தமாக சேர்ந்து இப்பொழுது சஹானாவை பழி வாங்கியே தீர வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள் ஆழமாக திணித்தது.

அதன் விளைவாக சஹானா அபிமன்யு இருவரும் ஊருக்கு திரும்பும் நாளில் அவர்கள் இருவரின் உயிரையும் பறிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை அவரை செய்ய வைத்தது.

இனி அவள் அவரது மகளே அல்ல… அவரது பேச்சை மீறி நடந்த பின் செத்தால் தான் அவருக்கு என்ன கவலை… அவளே இல்லை என்றான பிறகு இந்த அஞ்சலி இப்படி சட்டமாக நடுவீட்டில் அமர்ந்து கொண்டு அவரை கேள்வி கேட்க முடியுமா? கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட மாட்டார்.

இனி வரும் நாட்களில் நடக்கப் போவதை நினைத்து நினைத்து அவர் மனம் ஆனந்த கூத்தாடியது. சஹானாவின் உயிருக்கு உலை வைக்கும் காரியத்திற்காக உள்ளூர் ஆட்களை நம்பாமல் வெளியூரில் ஆட்களை ஏற்பாடு செய்தவர் அவர்களுக்கு தர வேண்டிய தொகையை ரொக்கமாகவே சேர்ப்பித்து விட்டார்.

எல்லா வேலைகளையும் பக்காவாக செய்து விட்டோம் என்று ஆனந்தத்தில் அவர் திளைத்துக் கொண்டிருக்க, காலையில் வயலுக்கு சென்ற சத்யன் அவசரமாக வீட்டுக்கு திரும்பி இருந்தான்.

“அப்பா தென்னைக்கு உரம் வாங்கிட்டு வர சொல்லி நம்ம ராமையாவை அனுப்பி இருந்தோம் இல்லையா? வரும் வழியில் வண்டி ஆக்சிடென்ட் ஆகி அவனுக்கு கை, காலெல்லாம் பயங்கர அடியாம்.. இப்போ தான் ஹாஸ்பிடலில் இருந்து போன் வந்தது. நான் போய் அவரை பார்த்து… ஹாஸ்பிடல் செலவுக்கு பணம் கொடுத்துட்டு அப்படியே உரத்தையும் வாங்கிட்டு வந்துடறேன். நேத்து மாந்தோப்பு குத்தகை பணம் ஒரு அஞ்சு லட்சம் வந்துச்சே.. அதைக் கொடுங்க” என்று வந்து நிற்க அவருக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

பின்னே … அந்தப் பணத்தை தான் வெளியூர் ஆட்களுக்கு கொடுத்து விட்டாரே… இப்பொழுது இவன் வந்து மீண்டும் அந்த பணத்தை கேட்டால் அவர் எங்கே போவார்?

மகனிடம் உண்மையை சொல்ல முடியுமா?பூசி மெழுகினார்.

“அவ்வளவு பணம் ரொக்கமா எதுக்கு தம்பி… பேங்கில் இருந்து எடுத்துக்கோயேன்”

“அப்பா.. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை மறந்துட்டீங்களா? பேங்க் லீவுப்பா”

‘கடவுளே.. இப்போ இவன் அந்த பணம் எங்கேனு கேட்பானே’

“நேரமாகுதுப்பா.. சீக்கிரம் பணத்தை எடுத்துக் கொடுங்க” அவசரம் காட்டினான் சத்யன்.

“இந்தா தம்பி என்னோட கார்டு… இதை வச்சு ஹாஸ்பிடலுக்கும், உரம் வைக்கவும் தேவையான பணத்தை எடுத்துக்கோ” என்று தன்னுடைய கிரெடிட் கார்டை எடுத்து நீட்டிய தந்தையை நம்ப முடியாமல் பார்த்தான்.

இது போல ஏதேனும் அவசரத் தேவைகளுக்கு தேவைப்படும் என்று சொல்லியே.. வெகுவாக வற்புறுத்தி அவருக்கு கிரெடிட் கார்டை வாங்கிக் கொடுத்ததே அவன் தான்.ஆனால் வாங்கிய நாள் முதல் இந்த நாள் வரை அவர் அதை எடுத்து உபயோகித்தே கிடையாது.

‘நம்ம காசை நம்ம செலவழிச்சுட்டு அதுக்கு இந்த பேங்க்கு  தனியா வட்டி… வட்டிக்கு வட்டி எல்லாம் கட்டணும்.. தேவையா இது’ என்று முன்பே ஒருமுறை சொல்லி அவர் அந்த கார்டை ஒதுக்கி வைத்தது நினைவில் வர… சத்யனின் பார்வை கூர்மையாக தந்தையை அளவிட்டது.

“அந்தப் பணம் எங்கேப்பா?”

“டேய்! நான் உங்க அப்பன்… அது என் பணம்… உனக்கு நான் கணக்கு சொல்லணுமா?” வேகமாக கத்தியவர் சத்யன் அடுத்து பேசும் முன் அங்கிருந்து கிளம்பி விட்டார். அங்கேயே நின்றால் மகன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதே… எனவே கோபம் போல காட்டிக் கொண்டு அங்கிருந்து வெளியேறி விட்டார்.

அதே நேரம் சென்னையில் ஒரு கூட்டம் கையில் சஹானா, அபிமன்யு இருவரின் புகைப்படத்தையும் கையில் வைத்துக் கொண்டிருந்தது.

“டேய்!இதுல இருக்கிற இரண்டு பேரையும் போட்டுத் தள்ளணும்… ஒருவேளை இரண்டு பேரையும் முடிக்க முடியலேன்னா அவங்க இரண்டு பேர்ல மிச்சம் இருக்கிற ஆளோட இரண்டு காலையும் வெட்டிடணும்… இது தான் நமக்கு வந்து இருக்கிற வேலை… புரிஞ்சுதா?”

பெற்ற மகளை கொல்ல தந்தையே அழகாக… கொடூரத் திட்டம் ஒன்றை தீட்டி இருந்தார்.

அங்கே வெல்லப் போவது யார்?

காதலா அல்லது அவரின் அகந்தையா?   

 

Free pdf download novels

Post a Comment

புதியது பழையவை