சதிராடும் திமிரே tamil novels 15

அத்தியாயம் 15
மேகலா தினமும் மகளிடம் போனில் பேசி அவளது நலனை விசாரித்துக் கொண்டு தான் இருந்தார். இருந்தாலும் மகளை நேரில் பார்க்க வேண்டும் என்று அவருக்கு தோன்றிக் கொண்டே இருந்தது. ஆனால் இதற்கு மேல் அங்கே தங்கினால் இங்கே துரைசாமி ஆட்டமாய் ஆடித் தீர்த்து விடுவாரே என்ற பயத்தில் தான் அவர் அமைதியாக இருந்தார். அவரின் வேண்டுதல் கடவுளுக்கு கேட்டதோ என்னவோ அன்று காலையிலேயே அபிமன்யு அழைத்து விட்டான் வீடியோ காலில்.
“அத்தை… உங்க பொண்ணை கொஞ்சம் கண்டிச்சு வைங்க…” என்று எடுத்ததுமே சொல்ல பயந்து போனார் மேகலா. இதுநாள் வரை அவனுக்கும், மகளுக்கும் இடையில் பெரிதாக சண்டை எதுவும் வந்தது இல்லை.
நூலை இருவருமே இழுத்து பிடித்தால் தான் அறுந்து போகும். இருவருமே விட்டுக் கொடுத்து போகையில் அங்கே அறுபட வழி ஏது?
‘முதல் சண்டை போல… என்ன காரணமாக இருக்கும்’ அவர் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே சஹானா போனை வாங்கி பேசத் தொடங்கி விட்டாள்.
“அம்மா… அவர் பேச்சை எல்லாம் கேட்காதீங்க… உங்க மாப்பிள்ளை என்னை ரொம்ப கொடுமைப் படுத்துறார். அடக்கி வைக்கப் பார்க்கிறார்.”
“என்ன விஷ்வா என்னென்னவோ சொல்றியே? எனக்கு பதறுது … தெளிவா சொல்லு” ஒரு நிமிடம் அவர் மனம் மகளுக்கும் தன் வாழ்க்கையை போலவே அமைந்து விட்டதோ என்ற பயம் தொற்றிக் கொண்டது.
அவரின் முகம் வெளுக்கத் தொடங்கியதைப் பார்த்த அபிமன்யு போனை வாங்கி பேசத் தொடங்கினான்.
“அத்தை… நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னுமில்லை. ஏற்கனவே இவளுக்கு உடம்பு சரியில்லை. இப்போ ஊருக்கு வருவேன்னு அடம் பிடிக்கிறா. நான் சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா… நீங்க கொஞ்சம் என்னன்னு கேளுங்க” என்று சொல்ல அவசரமாய் அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியேற்றினார்.
“மாப்பிள்ளை சொல்றதை கேளு விஷ்வா.. அவர் உன் நல்லதுக்குத்தான் சொல்வார்”
“அம்மா.. நீயும் புரியாம பேசினா எப்படிம்மா? எங்க இரண்டு பேருக்கும் நல்லபடியா கல்யாணம் முடிஞ்சா நம்ம ஊர் மாரியம்மனுக்கு திருவிழா நடக்கிறப்போ பொங்கல் வச்சு, மாவிளக்கு போடுறேன்னு வேண்டி இருக்கேன் மா. அடுத்த வாரம் ஊர்ல திருவிழா ஆரம்பிக்குதுன்னு நீ தானே நேத்து சொன்ன”
“ஆமா…”
“அதுக்குத் தான் ஊருக்கு வர்றேன்னு சொன்னேன். இவர் விட மாட்டேங்கிறார்.”
“வேண்டுதலா… இருந்தாலும் இப்போ உன் உடம்பு இருக்கிற நிலைமையில மாப்பிள்ளை சொல்றதை கொஞ்சம் கேளு பாப்பா”
“அப்படி சொல்லுங்க அத்தை”
“அம்மா.. நம்ம ஊர் அம்மனைப் பத்தி உனக்கு தெரியும் தானே? வேண்டுதலை நிறைவேத்தாம போனா அதுக்கு அப்புறம் என்ன ஆகும்னு உனக்குத் தெரியாதா?” என்று சொல்ல அவர் மனதில் தான் விரதம் இருந்த பொழுது துரைசாமியால் விரதத்திற்கு பங்கம் வந்ததும், அதன் பிறகு நடந்த அசம்பாவிதங்களும் கண் முன்னே வந்து போனது.
“அவள் சொல்றதும் சரி தான் மாப்பிள்ளை. எங்க ஊர் அம்மனுக்கு வேண்டுதல் வச்சா அதை நிறைவேத்திடணும். இல்லேன்னா ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்”
“நீங்களும் என்ன அத்தை சின்ன பிள்ளை மாதிரி பேசிக்கிட்டு… அவ பிடிவாதம் பிடிக்கிறானு தான் உங்ககிட்டே பேசினேன். நீங்களும் அவளுக்குத் தான் சப்போர்ட் செய்றீங்க” சலித்துக் கொண்டான் அபிமன்யு.
“கடவுள் காரியம் இல்லையா?. நீங்க கவலைப்படாதீங்க மாப்பிள்ளை. அவளை பத்திரமா பார்த்துக்கிறது என்னோட பொறுப்பு. அடுத்த வாரம் ஊர்ல அம்மனுக்கு காப்பு கட்டிடுவாங்க… நீங்க புதன்கிழமை வந்தா சரியா இருக்கும். ஒரு வாரம் இருந்து திருவிழாவை முடிச்சிட்டு கிளம்பிடலாம்”
“எனக்கு இங்கே வேலை இருக்கே அத்தை” என்றான் கொஞ்சம் தயக்கமாய்
“அதுக்கென்ன மாப்பிள்ளை.. ஆம்பிளைக்கு ஆயிரம் வேலை இருக்கத் தான் செய்யும். நான் பக்கத்துலயே இருந்து அவளை பார்த்துக்கிறேன். சரிதானா?”
“ம்ஹும்… இல்லை அத்தை… நான் இல்லாம அவ எங்கேயும் போக வேண்டாம். வேலை முடிஞ்சுட்டா அவளை நானே அழைச்சிட்டு வர்றேன்” என்றவன் கொஞ்சம் கோபமாய் போனை வைத்து விட மேகலா இங்கே சிரித்துக் கொண்டார்.
‘நல்ல புருசன்’
“சத்யா.. அடுத்த வாரம் திருவிழாவுக்கு பாப்பாவும், மாப்பிள்ளையும் இங்கே வரப் போறாங்க… அவங்க இங்கே வந்தா தங்குறதுக்கு வேண்டிய வசதி எல்லாம் செஞ்சு கொடு. அப்புறம் பாப்பாவுக்கு அவ ரூம் வேண்டாம். கீழே இருக்கிற ரூம் ஏதாவது ஏற்பாடு செய்…மாடினா அவ ஏறி இறங்க கஷ்டமா இருக்கும்.”
“சரிம்மா… வேற யாரும் கூட வர்றாங்களா மா” ஆர்வம் காட்டாமல் இருக்க பெரும் முயற்சி அவன் குரலில்.
“அது தெரியலை தம்பி… எதுக்கும் கூட ஒரு மூணு ரூமை ரெடி பண்ணி வச்சுக்கலாம்”
“சரிம்மா” சுரத்தில்லாத குரலில் சொல்லி விட்டு நகரப் போனான்.
“சத்யா…”
“சொல்லுங்கம்மா”
“அஞ்சலி எதுவும் உனக்கு போன் செஞ்சாளா பா?” மகனின் முகத்தையே உற்று நோக்கினார் அவர்.
“இ… இல்லையே மா…”தடுமாற்றத்தை மறைக்கப் போராடினான்.
‘அவள் மெசேஜ் தானே அனுப்புகிறாள்… பேசவில்லையே’ அவன் மனம் தான் சொன்ன பொய்க்கு காரணம் சொன்னது.
அவளுக்கு எப்படித் தான் தெரியுமோ தெரியாது. சரியாக இவன் இரவு உறங்குவதற்காக அறைக்குள் நுழைந்த மறுநொடி அவளிடம் இருந்து அவனுக்கு மெசேஜ் வந்து இருக்கும்.
சலித்து,எதிர்த்து, கோபித்து, சிரித்து… இப்பொழுதெல்லாம் எதிர்பார்க்க தொடங்கி விட்டான் அவளின் மெசேஜ்களை.
காதலாய் எந்த பேச்சும் இல்லை… ஆனால் அவனுக்கு மெல்ல மெல்ல அவளைப் பிடிக்கத் தொடங்கி இருந்தது. வரம்பு மீறி எந்த பேச்சும் அவன் பேசியதும் இல்லை.
அவர்கள் இருவருக்கு இடையில் துரைசாமியைப் பற்றிய பேச்சு வரும் பொழுதெல்லாம் இருவருமே அதை தவிர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
இப்பொழுது சஹானா உடன் அவளும் வருவாளா என்ற எதிர்பார்ப்பு ஒருபுறமும், வர வேண்டுமே என்ற தவிப்பு ஒரு புறமும் அவனைப் போட்டு அலைகழித்தது.
துரைசாமி இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் வீட்டில் யார் கண்ணிலும் படுவதே இல்லை. பெரும்பாலும் பண்ணை வீட்டுக்கு சென்று விடுகிறார். யாரும் அங்கே வரக்கூடாது என்ற உத்தரவோடு.
வீட்டில் இருந்து கொண்டு எந்நேரமும் மேகலாவை திட்டிக் கொண்டு இருப்பதற்கு இது பரவாயில்லை என்று நினைத்த சத்யன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மேகலா மட்டும் அவ்வபொழுது கணவனை எண்ணி வருந்துவார்.
“வர வர உங்க அப்பா போக்கே சரியில்லை சத்யா..எப்பவுமே தனியா இருக்கார். நான் ஏதாவது கேட்டா வள்ளுவள்ளுன்னு எரிஞ்சு விழறார்.”
“என்னம்மா நீங்க… இதுக்கு முன்னாடி மட்டும் அப்பா உங்க கூட டூயட் பாடிட்டா இருந்தார். பொழுதுக்கும் சண்டை தானே… இப்போ என்ன புதுசா கேட்கறீங்க?”
“உங்களுக்கு எல்லாம் தெரிஞ்ச ஆள் வேற… நான் காதலிச்சு கல்யாணம் செஞ்ச ஆள் வேற… நீ சொல்றதும் ஒரு விதத்துல உண்மை தான். ஆனா கொஞ்ச நாளா அவரோட போக்கே சரியில்லை… எப்பவும் ஏதோ டென்ஷன்லையே சுத்துறார். நம்ம தொழில் எதுவும் நட்டத்துல போகுதா தம்பி… அம்மா கிட்டே சொன்னா வருத்தப்படுவேன்னு நீயும், அப்பாவும் என்கிட்டே இருந்து மறைக்கறீங்களா?”
“அம்மா… நான் பண்ணை வேலை எல்லாம் கையில் எடுத்த நாளில் இருந்து இதுவரை ஏதாவது நட்டம் ஆகி இருக்கா? இப்போ ஏன் புதுசா இந்த கவலை?”
“என்னமோ சத்யா… மனசு கிடந்து அடிச்சுக்குது… இந்த மனுசன் கொஞ்சம் பழைய படி மாறுனா கூட போதும். வீடு இன்னும் நல்லா இருக்கும். நாம எல்லாரும் இன்னும் சந்தோசமா இருக்கலாம்”
“ஆனாலும் உனக்கு இவ்வளவு ஆசை இருக்கக் கூடாதுமா”என்று சிரிக்க மகனை செல்லமாய் முறைத்தார் மேகலா.
“உனக்கு கொழுப்பு கூடி போச்சுடா சத்யா.. நீயே உங்க அப்பாவை கவனிச்சு பாரு. அவர் கிட்டே நிறைய மாற்றம் தெரியுது. நீ வேணும்னா பாரு… அடுத்த வருசம் திருவிழா நடக்கும் போது உங்க அப்பா அப்படியே மொத்தமா மாறி இருக்கப் போறார். நம்ம அப்பாவா இதுன்னு நீயே ஆச்சரியப்படப் போற”
“ஹுக்கும்… கிழக்குல உதிக்கிற சூரியன்…”
“ரொம்ப பழைய டயலாக் மகனே” காதை குடைவது போல செய்து காட்டினார் மேகலா.
“வர வர நீங்களும் ஆளே மாறிட்டு இருக்கீங்க மா.. சேட்டை தாங்கல”
“எல்லாம் அஞ்சலியோட பழகின பழக்க தோஷம் டா மகனே”
“குட்டி சாத்தான்னு சொல்லுங்க… சரியா இருக்கும்” மேலும் பேச்சை தொடராமல் அங்கிருந்து அகன்று விட்டான். அவனுக்குத் தெரியும். அங்கேயே இருந்தால் மேகலா மீண்டும் அஞ்சலியைப் பற்றி பேசத் தொடங்கி விடுவார் என்று.
அன்றைய தினம் மாந்தோப்பில் காய்களை எடுத்து செல்ல ஆட்களை வர சொல்லி இருந்ததால் நேரே தோப்பிற்கு சென்றவன் அங்கே வேலையாட்களை ஏவி வேலை வாங்கிக் கொண்டே கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
“அப்பா எடுத்த பணம் மட்டும் இன்னும் கணக்கில் வரலை… இத்தோட இரண்டு முறை ஆகிடுச்சு. ஆடிட்டர் கிட்டே கணக்கு காட்டணுமே. அதைப் பற்றி கேட்டாலே எரிஞ்சு விழறார்” தனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தான்.
அன்றைய தினம் வாரக் கடைசி என்பதால் வேலை ஆட்களின் சம்பளக் கணக்கை எடுத்து வைத்தவன் பணம் எடுப்பதற்காக பேங்கிற்கு செல்ல அங்கே அவனுக்கு முன்பாக துரைசாமி இருந்தார்.
வெளியே சொல்லாவிட்டாலும் ஒரு விதமான பதட்டத்தில் இருந்தவர் கேஷியரிடம் இருந்து பணத்தை வாங்கி ஒரு பையில் வைத்துக் கொண்டு வேகமாக வெளியேற புருவத்தில் முடிச்சுடன் அவரை பின் தொடர்ந்தான் சத்யன்.
ஊர் எல்லையைத் தாண்டியும் அவர் செல்ல, குழப்பத்துடன் அவரை பின் தொடர்ந்தான். டவுனுக்குள் நுழைந்ததும் ஏதோ ஒரு சந்தில் அவரை தவற விட்டு விட்டான். வெகுநேரம் வரை அவரைத் தேடியவன் கிடைக்காமல் போகவே யோசனையுடன் வங்கிக்கு சென்றான்.
மேனேஜருக்கு சத்யனை நன்றாக பழக்கம் இருப்பதால் அவன் கேட்ட உடனே தகவல்களை கொட்டி விட்டார்.
“என்ன தம்பி புதுசா எதுவும் இடம் எதுவோ வாங்கப் போறீங்களாமே? உங்க அப்பா காலையில் வந்து ஒரு பதினைஞ்சு லட்சம் எடுத்துட்டுப் போனார்” என்று சொல்ல சத்யனுக்கு எதுவோ தவறாகப் பட்டது.
ஏனெனில் எப்பொழுது நிலம் வாங்கினாலும் சரி, அது தொடர்பான வேலைகள் அனைத்தையும் சத்யன் தான் பார்ப்பான். பத்திரம் சரிபார்ப்பது, இடத்தை அளப்பது, அரசு அலுவலகங்களில் எல்லா விவரமும் சரி தானா என்று உறுதி செய்வது வரை அவன் முடித்து வைத்தால் கையெழுத்து போட மட்டும் தான் துரைசாமி வருவார்.
அப்படி இருக்கையில் அவனுக்குத் தெரியாமல் அவர் எங்கே நிலம் வாங்கப் போகிறார்? இருக்கிற சொத்துக்களையே பராமரிக்கக் முடியாமல் அவன் திணற, புதிதாக எந்த சொத்தை வாங்கப் போகிறார் அவர்.
கேள்வியோடு அவன் வீட்டிற்குள் நுழைய, அவனை கோபத்தோடு எதிர்கொண்டார் துரைசாமி.
“என்னடா என்னையே வேவு பார்க்கிற அளவுக்கு வந்துட்டியா?” கோபத்தோடு மீசையை முறுக்கியபடி நின்ற தந்தையைக் கண்டதும் அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
“நான் பேங்க்குக்கு நம்ம கிட்டே வேலை பார்க்கிற ஆட்களுக்கு வாரக் கூலி கொடுக்கிறதுக்காக பணம் எடுக்க வந்தேன். நீங்க எதுக்குப்பா வந்தீங்க?”
‘நான் இந்த காரணத்திற்காகத் தான் அங்கே வந்தேன். அது போல நீ என்ன காரணத்திற்காக அங்கே வந்தாய்?’ என்று நேருக்கு நேராய் நின்று கேட்ட மகனை பதில் சொல்ல முடியாத ஆத்திரத்துடன் பார்த்தார்.
“நான் ஆயிரம் வேலையா போவேன். அதை எல்லாம் உன்கிட்டே சொல்லணுமோ”
“புதுசா ஏதோ இடம் வாங்கப் போறீங்களாமே? எந்த ஊர்ல பா? எத்தனை ஏக்கர்? நிலம் வீட்டுமனையா? இல்ல விவசாய நிலமா? யாரோட இடம்? எதுக்காக வாங்கறீங்க? இதுநாள் வரை இடம் வாங்குறது எல்லாத்தையும் நான் தானே பார்க்கிறேன். இதை ஏன் என்கிட்டே சொல்லலை?” என்று சரமாரியாக கேள்விகளை சத்யன் தொடுக்க பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கிப் போனார்.
மகன் வந்ததும் இருவரின் குரல் உயர்ந்து பேசுவதை கண்டதும் என்னவோ, ஏதோவென்று பதட்டமாக வந்தார் மேகலா.
“என்னாச்சுங்க என்ன சத்தம்?” என்று கணவரிடம் கேட்க, அவரின் செவிப்பறை கிழியும் படி ஆத்திரமாக ஒரு அறை விட்டார் துரைசாமி. மகன் கேள்வி கேட்ட ஆத்திரம் ஒரு புறம், அவனுக்கு பதில் சொல்ல முடியா சூழல் ஒருபுறம் என்று இருக்க, ஆத்திரம் கண்ணை மறைக்க அதை மேகலாவிடம் அப்படியே காட்டினார்.
“அப்பா” அதிர்ந்து நின்ற மகனை பார்க்கக் கூட விரும்பவில்லை அவர்.
“எல்லாம் உன்னால வந்தது… அடங்காத கழுதை. புருசனை மதிச்சு நீ கொஞ்சமாவது அடங்கி இருந்தா தானே பிள்ளையும் அப்படி இருக்கும். இரண்டு புள்ளைங்கல ஒன்னையாவது உருப்படியா வளர்த்து இருக்கியா? இரண்டுமே அப்பனை மதிக்காம திரியுதுங்க. இனி என் முன்னாடி எவனாவது குரலை உசத்தி பேசட்டும். உன்னை வெட்டி பொலி போட்டுடறேன்”கண்களில் கண்ணீர் வழிய நின்ற மனைவியை பிடித்து ஒரே தள்ளாய் தள்ளியவர் வீட்டுக் கதவையும் காலால் ஓங்கி ஒரு உதைத்து விட்டு , வழியில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி அடித்து விட்டு வெளியேறினார்Free pdf download novels

Post a Comment

புதியது பழையவை