அத்தியாயம் 16
திருமணம் முடிந்த இத்தனை வருடங்களில் துரைசாமி மனைவியை கை நீட்டி அடித்தது இதுவே முதல் முறை.
கணவர் தன்னை அடித்ததை நம்ப முடியாமல் கண்களில் வழியும் நீருடன் அவர் செல்லும் பாதையையே பார்த்துக் கொண்டிருந்த மேகலாவைக் கண்டதும், சத்யனுக்கு தன் மீதே கோபம் எழுந்தது.
அவரைப் பற்றி நன்றாக தெரிந்திருந்தும் அவரிடம் கேள்வி கேட்டிருக்கக் கூடாது என்று எண்ணியவன் மெல்ல தாயின் தோளை தொட்டான்.
“அம்மா…”
மகனின் கலங்கிய முகத்தை பார்த்ததும் வேகமாக முகத்தை புடவையால் அழுந்த துடைத்துக் கொண்டார் மேகலா.
“ஒண்ணுமில்லை சத்யா… நீ ஏன் இப்படி இருக்க?”
“என்னால தான் அப்பா உங்களை…” சொல்ல முடியாமல் உதடு துடித்தது சத்யனுக்கு. என்ன தான் வீட்டுக்கு அடங்கிய பிள்ளையாக இருந்த பொழுதிலும் தாயை தன் கண் முன்னே அடித்ததை தாங்க முடியாமல் அவன் மனம் வேதனை கொண்டது. இதைப் போய் அவரிடம் கேட்டால் அவரது கோபம் இன்னும் அதிக மூர்க்கத்துடன் மேகலாவிடம் தான் போய் சேரும் என்பதை அறிந்து வைத்து இருப்பதால் கலக்கத்துடன் தாயை பார்த்தான்.
“அவர் ஏதாவது கோபத்தில் இருந்து இருப்பார் சத்யா… நீ வேணும்னா பாரு.. நைட் என்கிட்டே வந்து சமாதானம் பேசுவார்.”
அவன் தந்தையைப் பற்றி அவனுக்கு தெரியாதா? வலியுடன் ஊமையாய் தாயைப் பார்த்து சிரித்தான்.
“தனியா இருக்கும் பொழுது என்கிட்டே மன்னிப்பு கூட கேட்பார் சத்யா… அதெல்லாம் உனக்குத் தெரியாது” இப்பொழுது கூட தந்தையை விட்டுக் கொடுக்காமல் பேசும் தாயை இரக்கத்துடன் பார்த்தான் சத்யன்.
“இன்னுமா அம்மா அவரை நம்பறீங்க?”
“எனக்கு நம்பிக்கை இருக்கு சத்யா… பேரன், பேத்தி வந்துட்டா அவர் கண்டிப்பா மாறிடுவார்… சரி சரி நீ உட்கார். உனக்கு பிடிச்ச காரப் பணியாரம் செஞ்சு இருக்கேன். சாப்பிடு” என்று ஒன்றுமே நடவாதது போல பேச, சத்யனுக்கு தொண்டைக்குழி வலியுடன் ஏறி இறங்கியது.
“எனக்கு பசிக்கலை மா… நான் அப்புறம் சாப்பிடறேன்”
“உனக்காகத் தான் அம்மா ஆசையா செஞ்சேன் சத்யா.. நீ வேண்டாம்னு சொன்னா எனக்கு எப்படி இறங்கும்? இரண்டு மட்டுமாவது சாப்பிடு… அம்மா ஊட்டி விடறேன்” என்று சொல்ல, மேகலாவிற்காக உண்ண அமர்ந்தான். மகனிடம் ஏதேதோ கதை பேசி அவனது வயிற்றை நிரப்பிய பிறகே அவனை அறைக்கு அனுப்பினார் மேகலா.
மகன் சென்ற பிறகு சத்தமின்றி பூஜை அறைக்குள் நுழைந்தவர் யாரும் அருகில் இல்லாததை உறுதி செய்து கொண்டு கண்ணீர் உகுத்தார்.
‘கடவுளே… சமீப காலமா அவர் முன்னை விட ரொம்ப கோபப்படுறார். சீக்கிரம் அவரோட கோபம் குறைஞ்சு, ஒரு நல்ல தகப்பனா அவர் மாறணும். அவர் ஒரு நல்ல புருசனா இல்லாட்டி கூட பரவாயில்லை. நல்ல தகப்பனா நடந்துக்கணும். பிள்ளைங்க முன்னாடி அவரோட மரியாதை குறையறத என்னால தாங்க முடியலை. அடுத்த திருவிழாவுக்குள்ளே அவர் மாறிடணும். அப்படி மாறிட்டா, நான் பூக்குழி இறங்குறேன்’ என்று வேண்டிக் கொண்டார்.
துரைசாமி இதுவரை செய்த பாவங்களுக்கும், இனி செய்யப் போகும் பாவங்களுக்கும் அவருக்கு அத்தனை சுலபத்தில் இறைவனிடம் மன்னிப்பு கிடைத்து விடுமா என்ன?
சத்யன் அறைக்கு வந்ததும் வழக்கம் போல அஞ்சலியிடம் இருந்து மெசேஜ் வந்தது.
“என்ன சார் இன்னிக்கு நாள் எப்படி போச்சு?”
“போச்சு”
“பேச்சில் சுருதியே இல்லையே… என்னாச்சு?”
“உனக்கு இப்போ என்ன வேணும்? சும்மா நொய் நொய்ன்னு கேள்வி கேட்கிற? நாள் முழுக்க அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு உழைச்சிட்டு வர்றேன். வீட்டுக்கு வந்ததும் அக்கடான்னு நிம்மதியா படுக்க முடியுதா? எங்கேயோ இருந்துக்கிட்டு கேள்வி கேட்டு என்னை குடையுற?” சத்யனின் குரலில் அப்பட்டமான எரிச்சல் இருப்பதை அவளால் உணர முடிந்தது.
“எதுவும் பிரச்சினையா?” குரலில் எந்த வித உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் கேட்டாள் அஞ்சலி.
“முதல்ல உனக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தில் எல்லாம் தலையிடறதை நிறுத்திக்க”
“எது எனக்கு சம்பந்தம் இல்லாத விஷயம்?” அவள் குரலில் இருந்த அழுத்தத்தை அவன் உணராமல் போனான்.
“எங்க வீட்டு விஷயம் எதுவும் உனக்கு சம்பந்தம் இல்லாதது தான்”
“ஓ…”ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னவள் சில நொடிகள் எதுவுமே பேசவில்லை.
“என் கூட பேசுறதும், என்கிட்டே உங்க மனசுல இருக்கிற விஷயங்களையும் பகிர்ந்துக்கிட்டா உங்களுக்கு சந்தோசத்தையும், நிம்மதியையும் தரும்னு நினைச்சேன். ஆனா உங்களுக்கு அப்படி இல்லை போல… ஊர் திருவிழாவுக்கு அங்கே வரப் போறதா அண்ணி சொல்லிட்டு இருந்தாங்க. நானும் அங்கே வரலாம்னு நினைச்சேன். அதைப் பத்தி பேசலாம்னு தான் உங்களுக்கு கூப்பிட்டேன். ஆனா அதுக்கு அவசியம் இல்லைன்னு இப்போ புரியுது. நான் ஆன்ட்டி கிட்டே பேசணும். போனை வச்சிடறேன்” என்றவள் அவனது பதிலை எதிர்பாராது போனை வைத்து விட, சத்யனுக்கு சில நொடிகள் என்ன செய்வது என்றே புரியாத நிலை.
சத்யன் பொதுவாக யாரிடமும் அவ்வளவு எளிதில் கோபம் கொள்ள மாட்டான். யாராக இருந்தாலும் தன்மையாக பேசி விட்டுக் கொடுத்து செல்லும் குணம் கொண்டவன். அஞ்சலியிடம் மட்டும் அவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே கோபத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. எதையாவது பேசி அவளை காயப்படுத்தி விடுகிறான்.
‘ஏன் இப்படி இருக்கிறேன் நான்?’தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டான் சத்யன்.
ஏற்கனவே அவனுக்குள் ஆயிரம் குழப்பங்கள். சில நாட்களாக துரைசாமியின் நடவடிக்கைகள் எதுவும் சரியாக இல்லை. கணக்கில் காட்டாமல் நிறைய பணத்தை எடுத்து செலவு செய்தார். கணக்கு கேட்டால் இப்படித்தான் காச்மூச்சென்று கத்துகிறார். மறந்தும் என்ன செலவு? யாரிடம் கொடுத்தார்? என்ற விபரத்தை மட்டும் சொல்ல மறுக்கிறார். ஏதோ பிரச்சினை என்று மட்டும் அவனுக்கு புரிந்தது.
இரண்டு நாட்களில் சஹானாவும், அபிமன்யுவும் வருவதற்காக அவசர, அவசரமாக கீழே இருக்கும் அறை தயார் செய்து வைக்கப்பட்டது.
சஹானாவும், அபிமன்யுவும் வரும் பொழுது வாசலில் நின்று வரவேற்பதற்காக வேண்டாவெறுப்பாக கீழே வந்து நின்றார் துரைசாமி.
மனைவியிடமோ,மகனிடமோ ஒரு வார்த்தை பேசவில்லை அன்றைய தினத்திற்குப் பிறகு. மேகலா அன்றைய தினம் நடந்ததை பெரிது படுத்தவே இல்லை. அவர் பாட்டிற்கு ஒன்றுமே நடவாதது போல அன்றாட வேலைகளை பார்த்துக் கொண்டும், கணவனுக்கு வேண்டியதை செய்து கொண்டும் தான் இருந்தார். அவரது அந்த பெருந்தன்மையே துரைசாமியை குத்திக் கிழித்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் இறங்கிப் போய் மனைவியிடம் மண்டியிட்டு விடுவாரா அவர்?
“இந்த மகாராணியையும், அவ புருசனையும் வரவேற்க நான் என்னோட வேலையை எல்லாம் விட்டுட்டு இப்படி வீட்டு வாசலில் வந்து நிற்கணுமோ” தெளிவாக முணுமுணுத்தார்.
மேகலாவும், சத்யனும் ஒன்றும் பேசாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
ஊர் மக்கள் சிலர் அவர்கள் வீட்டைக் கடந்து செல்லும் பொழுது அவர்களைப் பார்த்து மரியாதையாக வணக்கம் வைத்து சென்றனர். அவர்களில் சிலர் சத்தமாக கூட இருந்தவர்களிடம் பேசவும் செய்தனர்.
“நல்லா பார்த்து தெரிஞ்சுக்கோ. என்ன தான் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு அனுப்பிட்டாலும், அந்த பொண்ணு வீட்டுக்கு திரும்பி வந்தா குடும்பமே எப்படி வாசலில் நின்னு அவங்களுக்காக காத்திருக்குது பார்த்தியா! அய்யா குடும்பம்னா சும்மாவா? அய்யாவை சும்மா ஒன்னும் எல்லாரும் ஊர் பெரிய மனுஷன்னு சொல்லலை… சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் கூட இப்படி பார்த்து பார்த்து செய்றதால தான். என்ன இருந்தாலும் அய்யாவுக்கு நிகர் இந்த ஊரிலேயே யாரும் கிடையாது” என்று அவர்களின் காதுபடவே பேசி செல்ல, பெருமையாக மீசையை நன்றாக முறுக்கி விட்டுக் கொண்டு சிரித்தார் துரைசாமி.
‘இப்படி இந்த ஊர் மக்கள் இவரை தலையில் தூக்கி வைத்து ஆடுவதால் தானே இவரும் இப்படி நடந்து கொள்கிறார்’ என்று எண்ணி வேதனை அடைந்தான் சத்யன்.
“இதோ பாரு… ஊருக்குள்ளே எனக்குனு ஒரு மரியாதை இருக்கு. உன் பொண்ணும், அவ புருசனும் வந்தா ஒழுக்கமா நடந்துக்க சொல்லு. என்னோட பேர் கெட்டுப் போற மாதிரி ஏதாவது நடந்துச்சு…அப்புறம் நான் என்ன செய்வேன்னே தெரியாது.”
“நம்ம விஷ்வா எப்பவும் நமக்கு பெருமை மட்டும் தான் தேடித் தருவா… அதெல்லாம் உங்களுக்கு கவலையே வேண்டாம்”
“ஹுக்கும்… பெத்த அப்பனை ஏமாத்தி என்னென்ன வேலை பார்த்தா… அவளை எல்லாம் நம்பவே முடியாது”உடன் இருக்கும் இருவருக்கும் மட்டும் கேட்கும் குரலில் தெளிவாக முணுமுணுத்தார்.
“அப்பா..” ஆட்சேபத்துடன் சத்யன் பேச முன் வர, மேகலா மின்னல் வேகத்தில் மகனுக்கு கண்களால் செய்தி அனுப்பினார்.
‘வேண்டாம். எதுவும் பேசாதே… இப்போ நீ என்ன பேசினாலும் அந்த ஆத்திரம் முழுக்க சஹானா மேலயும், மாப்பிள்ளை மேலயும் தான் திரும்பும்.’
சத்யன் இயலாமையால் வந்த ஆத்திரத்தை அடக்க முடியாமல் திணறினான். எத்தனை நாள் தான் அடக்கி வைக்க முடியும்? அடக்கி வைத்தால் மட்டும் எரிமலை அடங்கி விடுமா? ஒருநாள் பொங்கி வெடித்து தன்னுடைய பாதையில் எதிர்படும் எல்லாவற்றையும் தன்னுடைய நெருப்புக்கு இரையாக்கிக் கொள்ளும் என்பதை எல்லாரும் உணர்ந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.
அம்மாவிற்காக சிறுவயதில் இருந்தே தன்னை அடக்கியே பழக்கப்பட்டவன் சத்யன். உடன்பிறந்தவளின் ஆசையை நிறைவேற்ற அவளுக்காக துணை நின்ற பொழுதும் தந்தையை எதிர்த்து பேசாமல் அடங்கியே இருந்தான். அப்படிப்பட்டவன் நாளை அவனது தாயின் நிலை மனைவிக்கும் வரும் பொழுது அமைதி காப்பானா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
ஏதேதோ நினைவுகளில் மூழ்கி இருந்த சத்யன் வண்டியின் ஹார்ன் ஒலியில் சுய நினைவுக்கு வந்தான். காரில் வருவார்கள் என்று நினைத்ததற்கு மாறாக கேரவனில் வந்து இறங்கினார்கள் அபியும், சஹானாவும். அவளை சர்க்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டே வந்தான் அபிமன்யு.
“வாங்க மாப்பிள்ளை… வாடா பாப்பா… என்ன வண்டி மாப்பிள்ளை இது? காருக்கு என்னாச்சு?”
“காரில் வந்தா சனாவுக்கு கஷ்டமா இருக்கும் மச்சான். அதான் கேரவன் எடுத்துட்டு வந்துட்டேன். இதுல உள்ளேயே ரூம் எல்லாம் இருக்கு. அவளுக்கு படுக்க வசதியா இருக்கும்.” என்று சொல்ல மேகலா, சத்யா இருவரின் மனதைப் போலவே முகமும் நிறைவாக இருந்தது.
‘மாப்பிள்ளை சனாவுக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து செய்றார்.’
“இது எதுக்கு தண்ட செலவு… சொந்தமா கார் இருக்கும் பொழுது இப்படி வண்டியை எல்லாம் எதுக்கு எடுத்துட்டு வரணும்? வீட்டு ஆம்பிளைக்கு கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாம். அவருக்குத் தான் விவரம் இல்லையே… நீயாவது எடுத்து சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு ஈன்னு பல்லை காட்டிட்டு உட்கார்ந்து இருக்க” என்று துரைசாமி கடிந்து பேச, அபிமன்யுவைத் தவிர எல்லார் முகமும் வாடிப் போனது.
“செலவு என்ன மாமா? இது நம்ம வண்டி தான். சூட்டிங் நடக்கும் பொழுது வாடகைக்கு விடுறதுக்காக இது மாதிரி பத்து வண்டி வாங்கி வச்சு இருக்கோம். நம்ம தேவைக்கு பயன்படலைனா அப்புறம் எதுக்கு வண்டி வைச்சுக்கிட்டு? அதுவும் இல்லாம டாக்டர் இந்த மாதிரி வண்டியில் போறது தான் நல்லதுன்னு சொன்னார்” காரணங்களை பொறுமையாகவே விளக்கினான் அபிமன்யு.
“வண்டி வேணும்னா உங்களோடதா இருக்கலாம்… ஆனா அங்கே இருந்து இருந்தா வாடகைக்கு போய் இருக்கும். நாலு காசு வருமானம் பார்த்து இருக்கலாம். அதை விட்டுட்டு…”
“இப்போ அங்கே சென்னையில் ஸ்ட்ரைக் நடக்குதுப்பா.. இன்னும் ஒரு வாரம் ஆகிடும் முடியறதுக்கு. அதுவரைக்கும் சூட்டிங் நடக்க வாய்ப்பே இல்லை. அங்கே சும்மா தான் வண்டி இருக்கும்.” கணவனை எதுவும் சொல்லி விடக்கூடாதே என்று அவனுக்கு பதிலாக சஹானா பேசினாள்.
“அதானே பார்த்தேன்… சும்மா கிடக்கிற வண்டியைத் தான் எடுத்துட்டு வந்தீங்களா? நான் கூட வருமானம் வர்ற வண்டியை எடுத்துட்டு வந்துட்டீங்களோன்னு நினைச்சேன்.” என்று கிண்டல் குரலில் பேச, சத்யன் ஏதோ பேச முன் வந்தான். அவனை கண்களால் அடக்கினான் அபிமன்யு.
“நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும் மாமா” என்று சொல்லி அத்தோடு பேச்சை முடித்து வைக்க, துரைசாமியும் போனால் போகிறது என்ற மனப்பான்மையோடு அங்கிருந்து நகர்ந்து வீட்டுக்குள் சென்றார்.
அபிமன்யுவுக்கு அவரைப் பற்றி தெரிந்து இருந்ததால் அவன் இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. அவன் இயல்பாகவே இருந்தான். மற்றவர்களுக்குத் தான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. எல்லோரும் அமைதியாக வீட்டுக்குள் சென்று விட சத்யன் மட்டும் கேரவனை திரும்பித் திரும்பி பார்த்தவாறு வீட்டுக்குள் சென்றான். அவன் கண்கள் யாரையோ தேடி அலைந்தது.
“வீட்டில் எல்லாரும் சவுக்கியமா மாப்பிள்ளை… சம்பந்தி அம்மாவையும், உங்க அப்பாவையும் கூட்டிட்டு வந்து இருக்கலாமே” என்று மேகலா கேட்க, சத்யன் காதுகளை கூர்மையாக தீட்டிக் கொண்டு காத்திருந்தான்.
“அப்படித் தான் முதல்ல யோசிச்சோம் அத்தை… ஆனா அஞ்சலிக்கு செமஸ்டர் எக்ஸாம் இருக்கு. அவளை மட்டும் விட்டுட்டு தனியா எப்படி வர முடியும்? அதுதான் அம்மாவும் அவளுக்குத் துணையா அங்கேயே தங்கிட்டாங்க… நான் இங்கே வந்துட்டதால அப்பாவுக்கு அகாடமி வேலை எல்லாம் இருக்கும். அதான் அவங்க வரலை” என்று சொல்ல மேகலா சமாதானம் அடைந்தாலும் சத்யன் முகம் சோர்ந்து போய் விட்டது.
“சரி சரி வெட்டி அரட்டை அடிச்சது போதும் வந்தவங்களுக்கு சாப்பிட ஏதாவது கொடு.. ஊரில் இருந்து கிளம்பும் பொழுது சாப்பிட்டாங்களோ என்னவோ” என்று அக்கறையாக சொல்வது போல எகத்தாளமாக பேசியவரை அடக்கும் விதம் தெரியாமல் எல்லோரும் விழித்துக் கொண்டு நின்றார்கள்.
“எனக்கு கொஞ்சம் வெளியில் வேலை இருக்கு.. நான் கிளம்புறேன். ஏய்! மேகலா அவங்களுக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து செஞ்சு கொடு. துரைசாமி வீட்டுக்குப் போனேன். என்னை சரியா கவனிக்கலைன்னு ஒரு வார்த்தை நாளைக்கு யார் வாயிலிருந்தும் வந்துடக் கூடாது புரியுதா?
அப்புறம் பாருங்க… உங்களுக்காக வகை வகையா சமைச்சு வச்சு இருக்கா… சும்மா கூச்சப்படாம கேட்டு வாங்கி சாப்பிடுங்க. சாப்பிட்டதும் செரிக்கிறதுக்கு கலரு சோடா வாங்கி கொடுங்க… அவங்க ஊர்ல இவ்வளவு நல்ல சாப்பாட்டை சாப்பிட முடியுமோ என்னவோ? திடீர்னு சாப்பிட்டு உடம்புக்கு ஒத்துக்காம போயிடப் போகுது. நான் வர்றேன்” என்று நக்கல் பேசியபடியே வாசலுக்கு சென்று விட சஹானா பயந்து போய் அபிமன்யுவின் முகம் பார்த்தாள்.
அவள் நினைத்தது போலவே அவன் முகம் தீயாய் ஜொலித்தது.
கருத்துரையிடுக