அத்தியாயம் 17
இந்த வீட்டில் இருந்து கிளம்பும் வரை எந்த சண்டையும் இல்லாமல் சந்தோசமான மனநிலையுடன் மகளையும், மருமகனையும் அனுப்பி வைத்து விட வேண்டும் என்று ஊரில் உள்ள எல்லா கடவுளையும் வேண்டிக் கொண்டார் மேகலா. அபிமன்யு உடனே சமாளித்துக் கொண்டாலும் அவன் முகத்தில் நொடியில் வந்து போன கோபத்தை எல்லாருமே கவனித்தனர்.
சஹானா அவன் முகத்தையே பதட்டத்துடன் பார்ப்பதை உணர்ந்து கொண்டு சட்டென சிரித்து நிலைமையை சமாளித்தான் அபிமன்யு.
“உள்ளே போகலாமா சனா?” என்று கேட்டவன் மெல்ல சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டே செல்ல சத்யனும், மேகலாவும் அவர்களை பின் தொடர்ந்து சென்றார்கள். எதுவும் பேச முடியவில்லை அவர்களால். சத்யன், மேகலா இருவரின் முகமும் மன்னிப்பை யாசிப்பது போலிருக்க அபிமன்யுவிற்குமே அந்த சூழ்நிலை கொஞ்சம் சங்கடத்தைக் கொடுத்தது.
‘அவர் பேசியதற்கு இவர்கள் என்ன செய்வார்கள்? அவர் பேசியதே இவன் ஆத்திரப்பட வேண்டும் என்பதற்காகத் தானே. அதை தெரிந்த பிறகும் ஆத்திரப்பட்டு அவருக்கு சந்தோசத்தை தர அவன் விரும்பவில்லை.
இவர்கள் வருந்துவதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. எனவே சமாளிப்பாய் ஒரு புன்னகையை அவர்களுக்கு கொடுத்தான்.
“அத்தை சனாவுக்கு டயர்டா இருக்கும். அவ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும். எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு. ரூமில் வச்சே அதை பார்க்கிறேன்.”
“சரி மாப்பிள்ளை.. நீங்க ஓய்வெடுங்க..” என்றவர் அவர்களின் பின்னோடு சென்று பெரிய பெரிய டம்ளர்களில் மோர் கொண்டு வந்து கொடுத்தார்.
“அவ்வளவு தொலைவு வந்தது களைப்பா இருக்கும். இதை குடிச்சுட்டு ஓய்வெடுங்க” என்று கொடுக்க மனமில்லாவிட்டாலும் வாங்கிப் பருகினான் அபிமன்யு.
சத்யன் அவர்கள் வந்ததும் அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து விட்டு வேறு ஏதேனும் தேவைப்படுமா என்று விசாரித்து அறிந்து கொண்டு வயலுக்கு கிளம்பி விட்டான்.
அவன் மனம் முழுக்க அஞ்சலியை பற்றிய எண்ணம் தான்.
‘ஏன் அவ வரலை? உண்மையிலேயே பரீட்சை தான் காரணமா? இல்லை நான் அப்படி பேசினதால மனசு வருத்தப்பட்டு வேணும்னு வராம இருக்காளா?
சே! அவ தான் சின்னப் பொண்ணு… எப்பவும் விளையாட்டா பேசுவா… நானும் அன்னிக்கு அப்படி ஏட்டிக்கு போட்டியா பேசி இருக்கக்கூடாது.
எல்லாம் இந்த அப்பாவால வந்தது… அவர் மேல இருக்கிற கோபத்தை அந்த பொண்ணு மேல காமிச்சுட்டேன். இப்போ போன் செஞ்சு பேசி சமாதானம் செய்யலாமா?
ம்ஹும்… வேண்டாம்… ஏற்கனவே அந்த பிள்ளைக்கு என் மேல நாட்டம் இருக்கு. இப்போ நானா போய் பேசினா அது வம்புல போய் முடிஞ்சுடும்.
தனக்குள்ளாகவே விதவிதமாக யோசித்து குழம்பிக் கொண்டான். அவளுக்கு போன் செய்து பேசிட சொல்லி மனது துடித்தாலும் பிடிவாதமாக அதை செய்யாமல் விட்டு விட்டான்.
ஊரில் அஞ்சலிக்கு உண்மையில் பரீட்சை தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அவள் மனம் முழுக்க சத்யனை சுற்றித் தான் அலைந்து கொண்டிருந்தது.
‘இந்நேரம் அண்ணனும், அண்ணியும் ஊருக்கு போய் சேர்ந்து இருப்பாங்க. என்னை காணோமேன்னு சத்யன் தேடி இருப்பாரா? ஹம்… தொல்லை இல்லைன்னு தான் நினைச்சு இருப்பார். இன்னும் அவருக்கு நம்ம மேல எந்த பீலிங்க்சும் வந்த மாதிரி தெரியலையே.
என்ன செய்யலாம்? போனில் பேசிக்கிட்டே இருக்கிறது சரி வரலையோ… நேர்ல போய் அங்கே டேரா போடுறதும் இனி நடக்காது. அப்பாவுக்கும், அண்ணனுக்கும் விஷயம் தெரிஞ்ச பின்னாடி என்னை அங்கே தங்க அனுமதிக்க மாட்டாங்க. முடிஞ்ச அளவுக்கு நான் அங்கே போக தேவை இல்லாத மாதிரி தான் பார்த்துப்பாங்க… என்ன செய்யலாம்?
இப்படியே போனா நான் எப்படி அந்த வீட்டு மருமகள் ஆகுறது? அந்த துரைசாமியை ஆட்டிப் வைக்குறது?’
எப்படியாவது ஊருக்கு போய் விட வேண்டும் என்ற எண்ணம் நேரம் கடக்க கடக்க அவளுக்கு வலுக்கத் தொடங்கியது.
பரிட்சையை எழுதி முடித்துக் கொண்டு வீட்டுக்கு செல்லும் வழி முழுக்க காரில் சிந்தித்துக்கொண்டே வந்தாள்.
பரீட்சை முடிந்தாயிற்று… என்ன காரணம் சொல்லி கிளம்புவது… அதை விட முக்கியமான விஷயம்… இந்த சத்யா நானாக இறங்கிப் போனால் என்னை மதிக்க மாட்டான். அவனும் என்னை தேட வேண்டும்… எப்பொழுது வருவேன் என்று எதிர்பார்க்க வேண்டும். அப்படி இல்லாமல் அவன் அவ்வளவு தூரம் பேசிய பிறகும் கொஞ்சம் கூட ரோஷமே இல்லாமல் அவன் முன்னால் போய் நின்றால் பின் நாளில் தனக்கு துளியும் மரியாதை இருக்காது என்று நினைத்தாள் அஞ்சலி.
‘அங்கே போக வேண்டும். ஆனால் தானாக போகக்கூடாது. என்ன செய்வது?’ என்று சிந்தித்தாள்.
வீட்டிற்கு வந்ததும் தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டவள் யாரும் அறியாமல் சஹானாவிற்கு போன் செய்தாள்.
“என்ன அண்ணி…அம்மா வீட்டுக்குப் போனதும் எங்களை எல்லாம் மறந்துட்டீங்க போல” என்றாள் கிண்டலாய்.
“என்ன அஞ்சலி… பரிட்சை எல்லாம் நல்லபடியா எழுதி முடிச்சுட்டியா?”
“ஓ… அதெல்லாம் முடிஞ்சது… நாளைக்கு காலையில் ஒரு மணி நேரம் லேப் மட்டும் இருக்கு.. அதையும் முடிச்சுட்டா அவ்வளவு தான்… மேடம் ப்ரீ”
“சூப்பர்… ஆமா இதென்ன அதிசயம்… எப்பவும் உங்க அண்ணனுக்குத் தானே போன் செய்வ… இப்போ என்ன எனக்கு போன் பண்ணி இருக்கே”
“அ… அது… அண்ணன் நம்பருக்குத் தான் ட்ரை செஞ்சேன் அண்ணி.. அங்கே ஏதோ டவர் பிராப்ளம் போல… லைன் கிடைக்கலை. அதான் உங்களுக்கு அடிச்சேன். ஏன் அண்ணி… அண்ணன் உங்க பக்கத்துல தானே இருக்காங்க?” இல்லை என்று சொல்லி விட வேண்டும் என்ற வேண்டுதலோடு கேட்டாள்.
“இவ்வளவு நேரம் இங்கே தான் இருந்தாங்க அஞ்சலி. இப்போ தான் அவங்களோட பிரண்டு ஒரு டைரக்டர் இருக்காரே.. பேர் கூட மதன்னு வருமே…”
“ம்ம்… ஆமா அண்ணி…”
“அவங்க நம்ம ஊர் பக்கத்துல தான் சூட்டிங் வந்து இருக்காங்களாம். உங்க அண்ணனை முடிஞ்சா அங்கே கொஞ்சம் அவசரமா வர சொன்னாங்க. அங்கே சூட்டிங்ல டான்ஸ் மாஸ்டர் கூட ஏதோ சண்டை போல.”
“ஓ… பிரண்டு கூப்பிடவும் உங்களை அம்போன்னு விட்டுட்டு தலைவர் ஓடிட்டாரா?”
“ஹே… நான் என்ன காட்டுலயா இருக்கேன். எங்க வீட்டுல தான் இருக்கேன். அம்மா கிட்டே சொல்லிட்டு தான் போய் இருக்காங்க. அதுவும் இல்லாம நான் என்ன அவ்வளவு பயங்கரமான நோயாளியா என்ன? கூப்பிட்ட குரலுக்கு ஆளுங்க ஓடி வந்துடுவாங்க. அண்ணன் வேற எனக்காக கீழே இருக்கிற ரூமை கொடுத்து இருக்காங்க. படியேறி இறங்குற வேலை கூட இல்லை. அப்புறம் என்ன?”
“யப்பாடி உங்க புருசனை ஒரு வார்த்தை குறை சொன்னா நாலு பக்கத்துக்கு மைக் வைக்காத குறையா பேசுவீங்க போல…” என்றாள் கிண்டலாக. அவர்கள் இருவரின் அன்னியோன்யம் கண்டு உண்மையில் அவளுக்கு மகிழ்ச்சியாகத் தான் இருந்தது.
“பின்னே.. அவரைப் பத்தி என்கிட்டேயே குறை சொல்வியா நீ? அதை கேட்டுட்டு நானும் சும்மா இருப்பேனா?”
“எனக்குத் தான் அண்ணி மனசே சரியில்லை” என்றாள் சட்டென வருவித்துக் கொண்ட சோக குரலில்.
“என்னடா அஞ்சலி.. என்னாச்சு?” பதட்டம் கொண்டாள் சஹானா. கணவனின் உயிர் தங்கை ஆயிற்றே.
“என்னமோ தெரியலை அண்ணி… ஏற்கனவே நீங்க ஹனிமூன் போய்ட்டு வந்த பிறகு அந்த இன்சிடென்ட் நடந்ததுல இருந்து உங்க இரண்டு பேரையும் தனியா வெளியே அனுப்பவே எனக்கு பயமா இருக்கு.”
“ஹே… அஞ்சலிக்கு பயமா? நம்புற மாதிரி இல்லையே… இருந்தாலும் சொல்றேன். கவலை வேண்டாம்டா. இப்போ நாங்க இரண்டு பேரும் எங்கே போனாலும் பாடிகார்ட்ஸ் இல்லாம போறது இல்லை. எங்களுக்கு மட்டும் இல்லை. நம்ம குடும்பத்துக்கே உங்க அண்ணன் பாதுகாப்புக்கு ஆள் போட்டு இருக்காங்க. இதெல்லாம் உனக்கும் தெரியும் தானே?”
“தெரியும் அண்ணி… எல்லாமே மூளைக்குத் தெரியுது. ஆனா மனசு… அது கிடந்தது தவியா தவிக்குதே…”
“ஒரு வாரம் தான் அஞ்சலி… சட்டுன்னு ஓடிடும்…”
“நீங்க ஈசியா சொல்றீங்க அண்ணி… ஆனா என்னால முடியலை… நேத்து நைட் முழுக்க சரியாவே தூங்கலை தெரியுமா? எக்ஸாம் எழுதும்போது கூட இதைப் பத்தியே தான் யோசிச்சுட்டு இருந்தேன்.”
“என்னது எக்ஸாம் ஹாலில் எங்களைப் பத்தி நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தியா? ஒழுங்கா பாஸ் பண்ண மாட்டே போல… உங்க அண்ணன் கேட்டா ரொம்ப வருத்தப்படுவார் அஞ்சலி” சஹானாவின் குரலில் உண்மையான கவலை தெரிந்தது.
“தப்பு தான் அண்ணி… நான் என்ன செய்றது? இப்போ கூட பாருங்க. நாளைக்கு எனக்கு லேப் முடிஞ்ச பிறகு நான் ப்ரீ தான். ஆனா அதுக்காக உடனே கிளம்பி அங்கே ஊருக்கு வந்துட முடியுமா? அங்கே வந்து உங்க பக்கத்துல இருந்தா எனக்கு கொஞ்சம் மனசு தெளிவா இருக்கும். ஆனா நான் அப்படி எல்லாம் கிளம்பி வர முடியாதே.”நவரசமும் சொட்டும் குரலில் ஏற்ற இறக்கங்களுடன் பேசினாள் அஞ்சலி.
“ஏன் கிளம்பி வர முடியாது… நீ வா அஞ்சலி”
‘இந்த வார்த்தைக்காகத் தானே இத்தனை பாடும்’ குதூகலித்துக் கொண்டாள் அஞ்சலி.
“இல்லை அண்ணி… நான் அங்கே வந்தா அண்ணன் திட்டும்… அப்பாவும் விட மாட்டார்…”
“உங்க அண்ணன் உன்னை எதுவும் சொல்ல மாட்டார். மாமா கிட்டே நான் பேசிக்கிறேன். நீ நாளைக்கு கிளம்பி வா… திருவிழா முடியிற வரை எங்களோடவே இரு..”
அதன் பிறகு அவள் மறுத்து மறுத்து பேசி, பயம் கொள்வது போல நடித்து, ஒரு வழியாய் சஹானா வாயாலேயே வந்து தான் தீர வேண்டும் சொல்ல வைத்தாள் அஞ்சலி.
ஊருக்கு கிளம்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டு நல்ல பிள்ளையாக படுத்துக் கொண்டாள் அஞ்சலி. அவளுக்குத் தெரியும் இனி சஹானா பார்த்துக் கொள்வாள் என்று.
அடுத்த நாள் காலை எழுந்ததுமே அவளது அன்னை அவளைத் தேடி வந்து விட்டார்.
“எழுந்திரு அஞ்சலி… உங்க அண்ணி போன் செஞ்சா… உன்னை கிளம்பி அவளோட ஊருக்கு வர சொன்னா”
“என்னையா? எதுக்கும்மா?”ஒன்றுமறியாத பாவனை காட்டினாள் அஞ்சலி.
“அவங்க ஊர் திருவிழாவில் அண்ணி வேண்டுதல் வச்சு இருக்காங்க இல்லையா? அதுல நாத்தானார் முறை இருக்கிற பொண்ணு வந்து ஏதோ சடங்கு செய்யணுமாம். நீ கிளம்பி போ…”
“நீங்களும் வர்றீங்க தானே அம்மா”
“இல்லை அஞ்சலி.. நான் கிளம்பி வந்துட்டா டாடியை யார் பார்த்துப்பா? அவருக்கு நேரத்துக்கு மருந்தெல்லாம் கொடுக்கணும்… நான் பக்கத்துல இருந்தா தான் நேரத்துக்கு சாப்பிடுவார். அதனால நீ போய்ட்டு வா..”
“அப்பா கிட்டே சொல்லிட்டியா மா?” அவருக்குத் தெரிந்தால் தன்னை அனுப்ப மாட்டாரே… என்ற யோசனை வந்தது அவளுக்கு.
“அப்பா நேத்து நைட் ஆடிட்டர் வீட்டில் இருந்து பேசினார். அந்த கிரி நம்ம கம்பெனியில் நிறைய குளறுபடி செஞ்சு இருப்பான் போல… நைட் இருந்து அதெல்லாம் பார்த்து முடிச்சுட்டு வர்றேன்னு சொன்னார். இன்னும் வரலை. வந்ததும் சொல்லிக்கிறேன். நீ கிளம்புடா”
“டாடி எதுவும் திட்டப் போறாரு மா”
“எதுக்கு திட்டுறார்? நீ அண்ணி வீட்டுக்கு நம்ம கார்ல போகப் போற? உங்க அண்ணனும் அங்கே தான் இருக்கான். அப்புறம் எதுக்கு திட்டப் போறார்.?”
“எதுக்கும் நீங்க அப்பா கிட்டே ஒரு வார்த்தை சொல்லிடுங்க”
“வேண்டாம் பேபி… டாடி நைட் முழுக்க கண் முழிச்சு இருப்பாங்க… இப்போ தூங்கிட்டு இருந்தாலும் இருப்பாங்க… டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். வீட்டுக்கு வந்ததும் நான் சொல்லிக்கிறேன்.உனக்கு இன்னிக்கு காலேஜ் உண்டு தானே?”
“ஆ.. ஆமா… ஒரு மணி நேரம் லேப் மட்டும் இருக்கு”
“அப்போ நீ காலேஜ் போய்ட்டு வீட்டுக்கு வா..அப்புறம் கிளம்பி ஊருக்கு போய்டு”
“ம்ம்… அது வேண்டாம் மா… நான் காலேஜ் முடிச்சுட்டு அப்படியே அண்ணி ஊருக்கு கிளம்பறேன். நம்ம ஊர்ல இருக்கிற ட்ராபிக்ல இரண்டு முறை வீட்டுக்கு வந்துட்டு போறதுக்குள்ளே நைட் ஆகிடும்”
“ம்ம்ம்.. சரி தான். நான் டிரைவர் கிட்டே சொல்லிடறேன். நீ கிளம்பு போ” என்று சொல்ல மனதின் குதூகலத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் கிளம்பினாள் அஞ்சலி.
அண்ணனும், தந்தையும் விஷயம் அறிந்து எதையாவது பேசி அவள் அங்கே செல்வதை தடுக்கும் முன் புறப்பட்டு விட வேண்டும் என்று எண்ணியவள் அன்னைக்கு சந்தேகம் வராதபடி துரிதமாக கிளம்பி காலேஜுக்கு சென்று விட்டாள்.
அவள் கிளம்பி காலேஜ் சென்ற சில நிமிடத்திற்குப் பிறகு சரியாக ராஜேந்திரன் வந்தவர் சோபாவில் அயர்ந்து போய் உட்கார்ந்தார்.
“சூடா ஒரு காபி கொண்டு வா பார்வதி”
“இதோ” என்றவர் நிமிடங்களில் காபியை கொடுத்தார்.
“அப்படியே குளிச்சுட்டு வந்துடுங்களேன்… டிபன் சாப்பிட்டுடலாம்”
“வேண்டாம் பார்வதி… ரொம்ப அசதியா இருக்கு.. நைட் எல்லாம் தூங்கவே இல்லை. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா தான் நல்லா இருக்கும்”
“ஓ… சரிங்க… நீங்க போய் தூங்குங்க..”
“அஞ்சலி காலேஜ் போயிட்டாளா?”
“ம்ம்ம்.. இப்போ தான் ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கும்…”
“இன்னிக்கோட அவளுக்கு பரிட்சை முடியுது இல்லையா? வழக்கமா லீவ் விட்டா பிரண்ட்ஸ் கூட எங்கேயாவது ஊர் சுத்த கிளம்பிடுவாங்களே மேடம்.. இந்த முறை எங்கே போக பிளான் செஞ்சு இருக்காங்க?” சாவகாசமாக கோட்டை கழட்டியபடி கேட்டார்.
“பிரண்ட்ஸ் கூட எங்கேயும் போகலை… எக்ஸாம் முடிஞ்சதும் நம்ம மருமக பொண்ணு ஊருக்குத் தான் அனுப்பி இருக்கேன்” என்று இயல்பாய் சொல்ல, சோபாவில் இருந்து துள்ளி எழுந்தார் ராஜேந்திரன்.
“வாட்ட்ட்?”
“ஆமாங்க… மருமக தான் அவளை ஊருக்கு அனுப்பி வைக்க சொன்னா. அதான் நானும் பரீட்சை முடிஞ்சதும் போய்ட்டு வர சொல்லி அனுப்பி இருக்கேன்”
“உனக்கு ஏதாவது விவரம் இருக்கா பார்வதி. அவளை எதுக்கு அங்கே தனியா அனுப்பினே?”
“தப்பு தான்… நானும் போய் இருக்கணும். ஆனா உங்களை பார்த்துக்க ஆள் இல்லையே. அதான் நான் இங்கேயே இருந்துட்டேன்” என்று அப்பாவியாய் சொல்ல ராஜேந்திரன் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டார். இன்னும் பார்வதிக்குத் தான் விஷயம் தெரியாதே… இப்பொழுது சொன்னால் நிச்சயம் பெரிய சண்டையில் முடிந்து விடும் என்று உணர்ந்தவர் வந்த வேகத்தில் கிளம்பி வெளியே சென்றார்.
“என்னங்க … காபியை அப்படியே வைச்சுட்டீங்க…”
“ஒரு முக்கியமான வேலை இப்போ தான் நியாபகத்துக்கு வந்தது. இதோ வந்துடறேன்” என்று வேகமாக சென்றவரை புரியாமல் பார்த்தார் பார்வதி.
‘என்னாச்சு இந்த மனுஷனுக்கு’
அஞ்சலியின் கல்லூரியை நோக்கி காரை செலுத்த , அவரின் கெட்ட நேரம் சாலை முழுக்க கொழுத்த டிராபிக்… அந்த இடத்தை விட்டு கல்லூரிக்கு செல்வதற்கு எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும் போல தெரிந்தது.
‘இப்படியே காத்திருப்பது சரியாய் வராது’ என்ற முடிவுக்கு வந்தவர் முதலில் அஞ்சலியின் எண்ணுக்கு அழைத்தார். ரிங் போய்க் கொண்டே இருந்தது. எடுக்கவே இல்லை.
‘ஒருவேளை லேபுக்குள்ளே போகும் பொழுது சைலண்டில் போட்டுட்டு போய்ட்டாளோ’ என்று நினைத்தவர் வீட்டு டிரைவரின் எண்ணுக்கு அழைத்தார்.
“நாட் ரீச்சபிள்” என்று ரெக்கார்டடு வாய்ஸ் வரவே அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் சில நொடி தாமதித்தார்.
மொபைலை எடுத்து வேகமாக உதயனுக்கு அழைத்தார்.
“உதயா… நீ இருக்கிற இடத்துல இடத்துல இருந்து அஞ்சலி காலேஜ் பக்கம் தானே? அஞ்சலிக்கு காலேஜ் இன்னும் அரைமணி நேரத்துல முடிஞ்சுடும். நீ போய் அவளை உன்னோட கார்ல கூட்டிட்டு வீட்டுக்கு வா” என்று சொல்ல உதயனும் கிளம்பிப் போனான்.
முக்கால் மணி நேரம் கழித்து போன் செய்தவன் அஞ்சலி இன்னும் வரவே இல்லை என்று சொல்ல, மீண்டும் மீண்டும் அஞ்சலியின் எண்ணுக்கு முயற்சி செய்தவர் அது எடுக்கப்படாமல் போகவே அவர் நெற்றியை சுருக்கி யோசிக்கத் தொடங்கினார்.
அஞ்சலியின் பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்த பாடிகார்ட்ஸ் எண்களுக்கு அழைக்க அவர் சந்தேகப்பட்டதை போலவே அவர்களது எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அவருக்கு புரிந்து விட்டது. அஞ்சலி வேலையைக் காட்டத் தொடங்கி விட்டாள் என்று.
“அஞ்சலி போனை எடு… இல்லேன்னா அண்ணனுக்கு போன் செஞ்சு தகவல் சொல்ல வேண்டி இருக்கும்” என்று அஞ்சலியின் எண்ணுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி விட்டு அவளின் பதிலுக்காக காத்திருந்தார்.
“நீங்க பயங்கர ஷார்ப் டாடி” என்ற பதில் மெசேஜ் சிரிப்பு ஸ்மைலியுடன் வந்தது.
“வீட்டுக்கு வா… உதயன் உன் காலேஜ் வாசல்ல தான் இருக்கான்”
‘அது தெரிஞ்சு தானே நான் பின் வாசல் வழியா டிரைவரை காரை எடுக்க சொல்லி கிளம்பிட்டேன்’ என்று எண்ணியவள் முகத்தில் விசமப் புன்னகை நிரம்பி வழிந்தது.
கருத்துரையிடுக