சதிராடும் திமிரே tamil novels 18

 

அத்தியாயம் 18

ராஜேந்திரன் காரை ஆளில்லா சாலையில் நிறுத்தி அஞ்சலியிடம் பேசத் தொடங்கி இருந்தார். அவருக்கு தலைவலிக்கத் தொடங்கியது. யார் பேச்சுக்கும் அடங்காமல் , என்ன சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மகளை நினைக்கையில் அவரின் தலைவலி அதிகமாகத் தொடங்கியது.

“சொன்னா கேளு பேபி… வீட்டுக்குத் திரும்பி வா”

“அச்சச்சோ!  டாடி நான் கிளம்பி ஊருக்கு போய்ட்டு இருக்கேனே…”

“அதெல்லாம் எங்கேயும் போக வேண்டாம். நீ வீட்டுக்கு திரும்பி வா”

“பாதி தூரம் வந்துட்டேனே டாடி”

“பரவாயில்லை திரும்பி வா”

“அண்ணி கிட்டே அங்கே வர்றேன்னு சொல்லிட்டேன். அதுவும் இல்லாம அவங்க தான் வேண்டுதல் செய்யும் பொழுது நானும் பக்கத்துல இருக்கணும்னு அம்மா கிட்டே சொல்லி என்னை வர சொல்லி இருக்காங்க. நான் எப்படி வர முடியாதுன்னு சொல்ல முடியும்? சாமி காரியம் வேற?”

“சொல்றதை புரிஞ்சுக்கோ அஞ்சலி… இனி நீ அங்கே போய் தங்குறது எல்லாம் அவ்வளவு நல்லா இருக்காது”

“இப்ப மட்டும் என்ன நான் ஆசைபட்டா அங்கே போறேன்… அண்ணி தான் வர சொன்னாங்க டாடி” அவள் குரலில் இருந்த கள்ளத்தனம் பெற்றவருக்கு தெரியாதா என்ன?

“நான் உங்க அண்ணி கிட்டே பேசிக்கிறேன்”

“பாவம் டாடி அண்ணி ரொம்ப வருத்தப்படுவாங்க…”

“அப்பா சொல்றதை கேளு அஞ்சலி” அவர் குரலில் அழுத்தம் கூடியது.

“பாதி தூரம் வந்துட்டேன் பா… இப்போ வந்து திரும்ப சொன்னா எப்படி?” அவள் எதைப் பற்றி சொல்கிறாள் என்று அவருக்கு இனம் காண முடியவில்லை.

“என்ன செஞ்சு வச்சு இருக்கே அஞ்சலி? ஏன் யாரோட நம்பருக்கும் போன் போக மாட்டேங்குது”

“அது வந்து டாடி…”

“சொல்லு…”

“நான் தான் எல்லார் போனையும் வாங்கி ஏரோபிளேன் மோடுல போட்டு வச்சேன்”

“முட்டாள்தனமான வேலை எல்லாம் செய்ய ஆரம்பிச்சுட்ட அஞ்சலி.. ஒருவேளை ஏதாவது எமர்ஜென்சிக்காக நாங்க போன் செஞ்சு இருந்தா? நீ இப்படி செஞ்சது அவங்களுக்கு தெரியாதா?”

“ப்ளீஸ் டாடி… என்னோட போனை காணோம்… மிஸ்ட் கால் கொடுத்து பார்க்கிறேன்னு சொல்லித் தான் வாங்கினேன். அவங்க யாருக்கும் நான் இப்படி செஞ்சது தெரியாது”

“இடியட்…”

“ம்ச்!… போதும் டாடி…”

“வீட்டுக்கு திரும்பிடு அஞ்சலி…” என்றார் எச்சரிக்கும் தொனியில்.

“நோ டாடி… எனக்கு அங்கே ஒரு வேலை இருக்கு.. அதை முடிச்சே ஆகணும். அதுவரை என்னைக் கட்டுப்படுத்த பார்க்காதீங்க”

“சும்மா எரிச்சலைக் கிளப்பாதே அஞ்சலி… நீ என்ன செய்றன்னு உனக்கு புரியுதா இல்லையா? உன்னை வேண்டாம்னு சொன்ன வீட்டுக்கு போய்ட்டு இருக்க… இதெல்லாம் உனக்கு தேவையா?”

“உண்மையை சொல்லணும்னா டாடி… சத்யன் என்னை வேண்டாம்னு சொல்லலை… தன் தங்கச்சியோட நாத்தனாரைத் தான் வேண்டாம்னு சொன்னார்…”

“புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா?”

“உங்க பொண்ணாச்சே டாடி” அவருக்கு ஐஸ் வைக்க முயன்றாள்.

“சொல்றதை கேளுடா… கொஞ்ச நாள் போகட்டும்… டாடி உனக்கு வேற நல்ல பையனா பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கிறேன். அந்த பையன் வேண்டாம்.”

“சத்யாவைத் தவிர வேற எந்த பையனும் எனக்கு வேண்டாம்”

“நீ வீண் பிடிவாதம் பிடிக்கிற அஞ்சலி… சொன்னா கேளு..”

“இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கே போய்டுவேன் டாடி.. இறங்கிட்டு பேசுறேன். பை” என்றவள் அவரின் பதிலை எதிர்பாராமல் போனை வைத்து விட்டாள்.

‘இந்தப் பெண் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறாளே? இவளை எப்படி சரி செய்வது?’ காரிலேயே தலையை பிடித்தபடி அமர்ந்து விட்டார் ராஜேந்திரன்.

சத்யன் தென்னந்தோப்பில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக் கிடந்தான். செய்வதற்கு அத்தனை வேலைகள் இருந்தாலும் ஏனோ மனது அதில் ஒன்றவில்லை. தென்றல் இதமாய் அவனை வருடி சென்றது. அவன் போனை கைகளில் எடுப்பதும், வைப்பதுமாய் இருந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அவளை அழைத்து விட்டான்.

முதல் முறை ரிங் முழுவதுமாய் போய் எடுக்கப்படாமலே போனது. மீண்டும் விடாமல் முயற்சித்தான். அடுத்த முறை அழைப்பை ஏற்றாலும் மறுமுனை மௌனம் சாதித்தது.

“அஞ்சலி…”

“ஹலோ… அஞ்சலி”

“….”

“லைனில் இருக்கீங்களா?”

“சொல்லுங்க”

“பரீட்சை எல்லாம் முடிஞ்சுதா?”

“ம்ம்ம்”

“நல்லா எழுதி இருக்கீங்களா?”

“இல்லை… பெயில் ஆகுற அளவுக்கு மோசமா எழுதி இருக்கேன்”

“என்னங்க இப்படி சொல்றீங்க?”

“நீங்க எப்போதுல இருந்து என்னோட படிப்பைப் பத்தி எல்லாம் கவலைப்பட ஆரம்பிச்சீங்க?”

“என் தங்கச்சியோட நாத்தனார் நீங்க… அந்த அக்கறையில் கேட்டேன். அதுல தப்பு ஒண்ணும் இல்லையே..”

“இந்த அக்கறை, சக்கரை எல்லாம் உங்களுக்கு மட்டும் தான் இருக்கணுமா? நான் ஏதாவது கேட்டா மட்டும் அப்படி மூஞ்சியில் அடிச்ச மாதிரி பேசுறீங்க?”

“அன்னிக்கு… ஏ… ஏதோ கோபம்… தெரியாம?”

“கோபம் வந்தா எப்படி வேணா பேசுவீங்களா?”

“சாரி…”

“நான் எவ்வளவு ஹர்ட் ஆனேன் தெரியுமா?” 

“சமாதானம் ஆகிடலாமே ப்ளீஸ்!”

“அது எப்படி முடியும்?”

“எனக்காக ப்ளீஸ்!…”

“உங்களுக்காக இறங்கி வர நான் என்ன உங்க பொண்டாட்டியா?”

“அய்யோ…”

“சொல்லுங்க… உங்களுக்காக நான் எதுக்கு இறங்கி வரணும்? நீங்க யார் எனக்கு?”

“எனக்காக வேண்டாம்… சஹானாவுக்காக என்னை மன்னிக்கலாமே”

“இது கொஞ்சம் கன்சிடர் செய்யலாம்… அண்ணிக்காக என்ன வேணா செய்யலாம்”

“அம்மாடி… அப்போ கோபம் போயிடுச்சா?” அவன் குரல் கொஞ்சம் இலகு நிலைக்கு வந்தது.

“அது எதுக்கு போகணும்?”

‘என்னடா இது மீண்டும் ஆரம்பத்தில் இருந்தா?’ என்று அவனுக்கு தோன்றியது.

“இப்போ தானே சஹானாவுக்காக என்ன வேணா செய்யலாம்னு சொன்னீங்க”

“ஆமா சொன்னேன்… அதுக்கும் உங்களை மன்னிக்கிறதுக்கும்  என்ன சம்பந்தம்?”

“பாவம்ங்க…”

“யாரு? நீங்களா?”

“உங்க வீட்டில் இருக்கிறவங்க”

“என்ன கிண்டலா”

“சே! சே!” அவன் குரலில் சிரிப்பிருந்ததை அவளால் உணர முடிந்தது.

“சரி எனக்கு வேலை இருக்கு… போனை வைங்க…” அடமாக பேசினாள் அஞ்சலி.

“திருவிழாவுக்கு நீங்களும் வரலாமே…” மெதுவான குரலில் கேட்டான் அவன்.

“அண்ணி கூட நானும் வருவேன்னு நினைச்சீங்களோ?”

“…”

“எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லுங்க… இல்லைனா போனை வைங்க”

“இல்ல… நீங்க வரலைனா எனக்கு மனசு உறுத்தலா இருக்கும். நான் அன்னிக்கு பேசுனதால தான் நீங்க வரலைன்னு”

“இப்போ என்ன என்னைக் கிளம்பி ஊருக்கு வர சொல்றீங்களா?”

“வந்தா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.”

“இப்போ மட்டும் எந்த உரிமையில் என்னை அங்கே வர சொல்லி சொல்றீங்க?”

“…”

“உறவுகளுக்குள்ள சில விஷயங்களை பேசவும், செய்யவும் உரிமை இருக்கணும்னு அவசியம் இல்லைன்னு உங்களுக்கு புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்”

“…”

“சரி… அண்ணா அங்கே தானே இருக்கார்”

“பக்கத்து ஊருக்கு போய் இருக்கார்…சாயந்திரம் வந்துடறதா சொன்னார்…”

“அப்போ சரி அவருக்கு போன் செஞ்சு உங்க தங்கச்சி அஞ்சலியை இங்கே வர சொல்லுங்கன்னு சொல்லுங்க” அவனை சிரசாசனம் செய்ய வைத்தாள் அஞ்சலி.

“என்னஅஅ?”

“இப்போ எதுக்கு இந்த ஷாக்? அவர் கிட்டே கேட்காம நான் எப்படி வர முடியும்? இல்லைனா அப்பா கிட்டே பேசறீங்களா?”

“அ.. அது எப்படி அவங்க கிட்டே பேச முடியும்? அப்படி பேசுறதுனா நிறைய கேள்வி வரும்… நடந்த எல்லாத்தையும் சொல்லணும்… அவங்க கேட்கிற எல்லாத்துக்கும் பதில் சொல்லணுமே?” அவன் குரல் முணுமுணுப்பாய் வந்தது.

“சொல்லுங்க… என்னைத் திட்டும் பொழுது நல்லா இருந்தது தானே… இப்போ மட்டும் என்ன வந்துச்சு?”

“நான் வேணும்னா அம்மாவை விட்டு பேச சொல்லட்டுமா?”

“சரியான அம்மா கோண்டு” மிக மெதுவாய் முணுமுணுத்தாள்.

“என்ன?”

“என்னால எல்லாம் இப்போ வர முடியாது… வேணும்னா ஸ்ரீராமஜெயம் எழுதுற மாதிரி ஒரு ஆயிரம் தடவை சாரி எழுதி அதை எனக்கு வாட்ஸ் ஆப் செய்ங்க… அதுக்கு அப்புறம் வேணும்னா அங்கே வர்றதை பத்தி யோசிக்கிறேன்” என்று போனை வைத்து விட சத்யனுக்கு முகம் அஷ்டகோணலாய் போனது.

போனை வைத்து விட்டு அந்தப்பக்கம் அஞ்சலி தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

‘சரியான அம்மாஞ்சி.’

போனை வைத்து விட்டு நிமிர்ந்து பார்க்க, கார் சத்யனின் ஊருக்குள் நுழைந்து விட்டிருந்தது. முகத்தை நல்ல பிள்ளையாக வைத்துக் கொண்டாள்.

ஏற்கனவே தகவல் சொல்லி இருக்க, அவளை வரவேற்பதற்காக மேகலா வீட்டு வாசலில் அவளுக்காக காத்திருந்தார். துரைசாமிக்கும், சத்யனுக்கும் இந்த விஷயம் தெரிவிக்கப்படவில்லை. அஞ்சலியின் வேண்டுகோளின் பெயரில்.

“வாடா அஞ்சலி… உனக்காகத் தான் காத்துக்கிட்டு இருக்கேன். உங்க அண்ணி நீ எப்போ வருவன்னு இவ்வளவு நேரம் பார்த்துட்டு இருந்து இப்போ தான் போன் அடிக்கிற சத்தம் கேட்டு உள்ளே போனா”

“அங்கிளும், சத்யாவும் வீட்டில் இல்லையா ஆன்ட்டி…” அவள் பார்வை வீட்டை சுற்றி அலசியது.

“இல்லை மா… வெளியே போய் இருக்காங்க.. எப்படியும் இப்போ  சாப்பிட வந்துடுவாங்க.”

“சரி அத்தை…” என்றவள் பேசியபடியே உள்ளே நுழைய, சஹானா சர்க்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு வெளியே வந்தாள்.

“வா.. அஞ்சலி”

“என்ன அண்ணி உங்களுக்கு ரொம்ப தொல்லை கொடுக்கிறேனா??”

“இல்லடா… உனக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். எக்ஸாம் நல்லபடியா முடிஞ்சுதா?”

“ஓ… சூப்பரா எழுதி இருக்கேன்”

“சரி வா அஞ்சலி சாப்பிடலாம்… உன்கூட சேர்ந்து சாப்பிடலாம்னு நானும் இன்னும் சாப்பிடலை… அம்மா வேற உனக்காக வெஜிடபிள் பிரியாணி, காலிபிளவர் சில்லி, நுங்கு பாயாசம்.. அப்படி, இப்படின்னு ஏகப்பட்டது செஞ்சு இருக்காங்க…”

“வாவ்… அப்புறம் எதுக்கு அமைச்சரே பேசி நேரத்தை வீணடிச்சுட்டு… வாங்க போகலாம்” என்றவள் அவளின் சர்க்கர நாற்காலியை உற்சாகத்துடன் தள்ளிக் கொண்டு முன்னே ஓடினாள்.

நேராக டைனிங் டேபிளில் அமர்ந்து அஞ்சலி உண்ணத் தொடங்க… அவளுடன் பேசிக் கொண்டே சஹானாவும் சாப்பிட்டாள்.

அஞ்சலி வந்ததும் வீடே கலகலப்பாக மாறியது போல தோன்றியது மேகலாவிற்கு.

அஞ்சலி கடைசியாக பாயாசத்தை ரசித்துக் குடித்துக் கொண்டிருக்க, சத்யன் சோர்வுடன் வீட்டுக்குள் நுழைந்தவன் அஞ்சலியைப் பார்த்ததும் ஷாக் அடித்ததைப் போல அப்படியே நின்று விட்டான்.

மேகலா தான் முதலில் மகனைப் பார்த்தார்.

“வா.. சத்யா… என்ன அங்கேயே நின்னுட்ட?”

“….”

“ரொம்ப அசதியா தெரியறியே… கை அலம்பிட்டு வா தம்பி சாப்பிடலாம்”

“இதோ வர்றேன்மா” என்றவனின் பார்வை அப்பொழுதும் அஞ்சலியின் மீதே இருக்க… அவளோ அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவனது இமைக்காத பார்வையை கவனித்த மற்ற இருவரும் தங்களுக்குள் கண் ஜாடை காட்டி சிரித்துக் கொண்டார்கள்.

அதை எதையும்  சத்யன் கவனிக்கவே இல்லை. முதலில் தன்னுடைய மனபிரம்மையோ என்று நினைத்தவன் மற்றவர்களின் குரலில் தான் சுயம் தெளிந்தான்.

“இன்னும் கொஞ்சம் பாயாசம் ஊத்தட்டுமா அஞ்சலி”

“அதென்ன கொஞ்சம்… நிறைய கொடுங்க அத்தை… செம டேஸ்ட் உங்க பாயாசம்”

“என்னடா வீட்டுக்கு வந்த பொண்ணை வாங்கனு ஒரு வார்த்தை சொல்லாம இப்படி வெறிச்சு பார்த்துக்கிட்டே இருக்க. அந்தப் பொண்ணு உன்னைப் பத்தி என்ன நினைக்கும்?” சத்யனின் காதோரம் மென்மையாய் முணுமுணுத்தார் மேகலா.

அவனும் எதுவுமே சொல்லாமல் சில நொடிகள் அவளையே  பார்த்தவன்… அம்மாவும் , தங்கையும் தன் முகத்தையே பார்ப்பதை உணர்ந்து பெருமூச்சை வெளியேற்றி விட்டு அவளுடன் பேசினான்.

“வாங்க… எப்படி இருக்கீங்க? எப்போ வந்தீங்க?”

“நல்லா இருக்கேன்… வந்து ஒரு அரைமணி நேரம் இருக்கும்”

“அப்படின்னா ஊருக்குள்ளே வந்துட்டு தான் என்கிட்டே அப்படி பேசி இருக்கா” தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவன் சாப்பிடாமல் தன்னுடைய அறைக்குள் செல்ல முயன்றான்.

“உட்கார்ந்து சாப்பிடு சத்யா…”

“இருங்க மா… கொஞ்சம் வேலை இருக்கு… முடிச்சுட்டு வர்றேன்” என்றவனின் கைகளில் கத்தையாக பேப்பர் இருக்க, மேகலா கேள்வியாக மகனைப் பார்த்தார்.

“என்ன தம்பி கையில் பேப்பர் எல்லாம் வச்சு இருக்க?”

“அதுவாஆஆ… ஸ்ரீராமஜெயம் எழுத” பற்களை அழுந்த கடித்துக் கொண்டு அவன் சொல்ல, பாயாசம் குடித்துக் கொண்டிருந்த அஞ்சலிக்கு புரை ஏறியது.

“இந்த பையனுக்கு என்ன ஆச்சு?” என்று அங்கலாய்த்தார் மேகலா.

அஞ்சலி தனக்குள் சிரித்துக் கொண்டாலும் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சஹானாவிற்கு ஏதோ புரிவதைப் போலிருந்தது.

“உன் அண்ணனுக்கு நீ இங்கே வர்றதைப் பத்தி இன்னும் தகவல் சொல்லலை அஞ்சலி”

“ஏன் அண்ணி?”

“அவர் அந்த பட சூட்டிங்ல கொஞ்சம் பிஸியா இருக்கார் அஞ்சலி… நேத்து நைட் வீட்டுக்கு வரும் பொழுதே மணி பன்னிரண்டுக்கு மேல ஆகிடுச்சு… வந்ததும்  தூங்கிட்டார்… காலையிலயும் அவசர அவசரமா கிளம்பி போய்ட்டார். விடு பார்த்துக்கலாம்… வந்ததும் நான் சொல்லிக்கிறேன்”

“என்ன சொல்லணும் விஷ்வா?”

“அது ஒண்ணுமில்லைமா… நம்ம சஹானா …”

“ஆன்ட்டி… இன்னொரு கப் பாயாசம்” என்று கேட்டு அவரை திசை திருப்பிய அஞ்சலி , அதை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருக்க, அப்பொழுது தான் வீட்டினுள் நுழைந்த துரைசாமி அவளைக் கண்டதும் அப்பட்டமாய்  முகத்தில் எரிச்சலைக் காட்டினார்.

“என்னம்மா திருவிழாவுக்கு முதல்ல உங்க அண்ணன் குடும்பம், இப்போ நீ, அடுத்து உன்னைப் பெத்தவங்க இப்படி தனித்தனியா வர முடிவு செஞ்சுட்டீங்க போல… ஏன் ஒன்னா வந்தா எல்லாரும் குடும்பத்தோட சாப்பாடுக்கு வந்துட்டீங்கன்னு யாரும் சொல்லிடுவோம்னு நினைச்சீங்களோ? அதெல்லாம் படையே வந்தாலும் உட்கார வச்சு ஆறு வேளை சோறு போடுற அளவுக்கு என்கிட்டே பணம் இருக்கு”

“பார்த்து அங்கிள் கொஞ்சம் மூச்சு விட்டு பேசுங்க… வயசான காலத்துல எதுக்கு இப்படி? உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா அங்கிள்? இந்த வருசம் அண்ணனும், அப்பாவும் சேர்த்து கட்டின டேக்ஸ் எவ்வளவு தெரியுமா? தமிழ்நாட்டிலேயே நாலாவது இடம் எங்க குடும்பத்துக்குத் தான்.

அங்கிள் எனக்கொரு சந்தேகம்? இன்கம்டாக்ஸ்க்கு ஏதோ கொஞ்சம் பேருக்கு கட்டுற நீங்களே இவ்வளவு செல்வாக்கா இருக்கும் பொழுது எங்க அண்ணனும், அப்பாவும் எப்படி இருப்பாங்க? உங்களால நினைச்சு பார்க்க முடியுதா?

அது மட்டுமில்லை அங்கிள் அண்ணன் போன மாசம் தான் அம்மா பேர்லயும், அண்ணி பேர்லயும் ட்ரஸ்ட் ஒண்ணு ஆரம்பிச்சு இருக்காங்க. அதுல ஆதரவில்லாதவங்களை  எல்லாம் ஒண்ணா சேர்த்து அவங்களுக்குனு தனியா தொழில் அமைச்சு கொடுக்கிறார். வயசானவங்களுக்கு அங்கே எந்த வேலையும் கிடையாது. வெறுமனே சாப்பிட்டு தூங்குறது மட்டும் தான்.

இப்போ வரைக்கும் நூறு பேர் சேர்ந்து இருக்காங்க. அவங்களோட சாப்பாடு எல்லாம் ப்ரீ தான். அவங்களுக்கு

போடுற சாப்பாடு எல்லாம் **** பவன் டேஸ்ட்ல தான் இருக்கும். தெரியுமா?

எங்கே அங்கிள் நீங்க தான் எங்க வீட்டில் வந்து தங்குறதே இல்லையே… ஒருமுறை அங்கே வந்து தங்கி பாருங்க… எங்க குடும்பத்தோட உயரம் தெரியும். சீக்கிரமாவே வீட்டுக்கு வாங்க அங்கிள்… வரணும்… வருவீங்க” என்று  பேசி முடிக்க.. துரைசாமியின் முகம் எரிமலையை ஒத்திருந்தது.

‘மூணு வேளையும் நூறு பேருக்கு சோறு போடக்கூடிய குடும்பம் என்னுடையது என்று சொல்லி விட்டாளே… இவளை’ ஆத்திரFree pdf download novelsம் அதிகமானது அவருக்கு.

Post a Comment

புதியது பழையவை