Theendatha Thee Neeye Tamil Novels 4

 



சக தோழிகளின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்தாள் வானதி.இதுநாள் வரை அவளிடம் பேசவே யோசித்து, அலட்சியமாக ஒதுங்கிப் போனவர்கள் கூட அன்று அவளைத் தேடி வந்து சந்தோசமாக ஆர்வத்துடன் பேசிவிட்டு போனார்கள்.விழா முடிந்த பிறகு மகிழ்ச்சியான மனநிலையோடு அந்த அழகிய மாலைப் பொழுதை ரசித்துக் கொண்டே நடந்து போனவளின் அருகே வந்து உரசிக்கொண்டு நின்றது அந்தக் கார்.

பதட்டத்துடன் நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் அப்பட்டமான பயத்தின் சாயல்.காரில் இருந்து இறங்கியன் சம்ஹார மூர்த்தியே தான்.அவன் தான் என்று தெரிந்த பின்னும் அவளுக்கு பயம் கூடியதே ஒழிய குறையவில்லை.காரணம் அவனது பார்வை.அதே இமைக்காத பார்வை அவளை நோக்கி வீசியபடி அவளின் அருகே வந்து நின்றான்.

“ஆசிரமத்திற்குத் தானே போற...வா..நானும் அந்தப்பக்கம் தான் போறேன்.உன்னை இறக்கி விட்டுட்டு போறேன்”
“இ...இல்லை நான் நடந்தே போய்டுவேன்.”அவனை நிமிர்ந்தும் பாராமல் பேசினாள் வானதி

“ஏன்”உறுமலாக வெளிவந்தது அவன் குரல்.
அவன் குரலில் அவள் உடல் அதிர்ந்து தூக்கிப் போட தன்னுடைய பையை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு மெல்லிய குரலில் நடுக்கத்தோடு பேசத் தொடங்கினாள்.

“இப்ப மழை பெய்யலையே..நான் மெதுவா நடந்தே போய்டுவேன்”அவன் கோபத்தை தூண்டி விடக்கூடாது என்று எண்ணி தணிவாகவே பேசினாள்.

“உன்னை கூப்பிடறது நான்..அது தெரிஞ்சுமா இப்படி பேசுற”

“எ..எனக்கு உங்களோட வர பயமா இருக்கு”



“ஏய்...என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு...பொறுக்கி மாதிரியா தெரியுது...காலையில என்னோட வண்டில தானே வந்த...இப்போ மட்டும் என்ன வந்துச்சு...”அவளை நெருங்கி நின்று உக்கிரமான பார்வையுடன் கேட்டவனை நிமிர்ந்தும் பாராமல் பதில் சொன்னாள்.

“இப்ப நீங்க பா...பார்க்கிற விதமே சரியில்லை...என்னவோ மாதிரி பார்க்கறீங்க...இப்ப மட்டும் இல்லை...ஸ்டேஜில் நான் பாடி முடிச்சதில் இருந்து நீங்க என்னைப் பார்க்கும் பார்வையே சரியில்லை.”தலையை குனிந்தபடியே சொல்லி முடித்தவளுக்கு,நிமிர்ந்து அவனைப் பார்க்கவும் பயமா இருந்தது.

‘அய்யயோ.. மைன்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா பேசி வச்சிட்டியேடி...இனி என்ன ஆகப் போகுதோ’என்று மிரண்டு போனாள் வானதி.

அவனிடமிருந்து எந்த சத்தமும் இல்லாமல் போகவே மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் உள்ளம் படபடக்க மீண்டும் தலை குனிந்து கொண்டாள்.

இப்பொழுது அவன் பார்வையில் தெரிந்த ரசனையில் அவளால் அவனைப் பார்க்கவே முடியவில்லை.இதுவரை யாரும் அவளை இப்படி ஒரு ஆழப் பார்வை பார்த்தது இல்லை.அவள் அழகி தான். ஆசிரமத்தில் இருக்கும் நேரத்தில் சக தோழிகள் அவளது அழகை ரசித்து கூறி இருக்கிறார்கள் தான்.ஆனால் ஒரு ஆண்மகனின் ரசனைப் பார்வை அவளுக்கு புதிது.நெஞ்சம் படபடக்க அங்கிருந்து நகர முயன்றவளை தடுத்து நிறுத்தியது அவனது அழுத்தமான குரல்.

“நில்...இனி அப்படி பார்க்க மாட்டேன்...வா...வந்து காரில் ஏறு...”மென்மையாக ஒலித்த குரல் அவனது தானா என்ற சந்தேகம் அவனுக்குமே தோன்றி இருக்க வேண்டும்.ஊரில் உள்ள எல்லாரையும் மிரட்டி வைப்பவன் இன்று இந்த சின்னப் பெண்ணிடம் வார்த்தைகளுக்கு வலிக்காத வண்ணம் பேசினான் என்பது யாருக்காவது தெரிந்தால் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருவது உறுதி.

அவளுக்கு மறுக்கவும் பயம்,அவனோடு செல்லவும் பயம்...அதை வெளியில் சொல்வதற்கு அதை விடவும் பயம்.எனவே வேறு வழியில்லாமல் காரில் முன் சீட்டில் ஏறி அமர்ந்தவள் அவனும் முன்னால் வந்து அமரவும் கேள்வியாக அவன் முகம் பார்த்தாள்.

“டிரைவரை வேற ஒரு முக்கியமான வேலையா வெளியே அனுப்பி இருக்கேன்”என்று சொன்னவனின் கண்களில் இருந்த கள்ளத்தனம் அவன் பொய் சொல்கிறான் என்பதை உணர்த்த நமக்கு எதுக்கு வம்பு என்று எண்ணியவளாக காலை அமர்ந்தது போல காரின் மூலையில் பல்லியைப் போல ஒட்டிக் கொண்டாள்.

“காலையில கேட்டதுக்கு நான் நனைஞ்சு இருக்கேன்.கார் வீணாகிடும்ன்னு சொன்ன...இப்ப என்ன காரணம்..இப்படி நீ பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு வர்றதுக்கு”

‘அது என்ன எப்பப் பார்த்தாலும் என்னை பல்லின்னு சொல்றார்...நாம என்ன பார்க்க அவ்வளவு மோசமாவா இருக்கோம்’என்று தனக்குள்ளாகவே பேசிக் கொண்டவள் மனம் தெளிந்து அவனுக்கு பதில் சொன்னாள்.

“கா..காரில் எல்லாம் போய் பழக்கம் இல்லையா...அதான்”என்று அவள் திக்கித்திணறி பேசுவதை ரசித்தவன் தொடர்ந்து பேசினான்.

“இனி பழகிக்கோ” என்று ஒற்றை வார்த்தையில் அவன் பதில் அளிக்க,அதன் அர்த்தம் புரியாமல் திரும்பி அருகில் அமர்ந்து காரை ஓட்டிக்கொண்டு இருந்தவனைப் பார்த்தாள்.கை விரல்கள் ஸ்டீயரிங் வீலில் தாளம் போட்டபடியே அழகாக லாவகத்துடன் காரை ஒட்டிக் கொண்டிருந்தான்.

“எதுக்கு பழகணும்?”ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டு லேசாக முணுமுணுத்தாள் வானதி.

“ஒருவேளை இனி அடிக்கடி நீ காரில் போக வேண்டி இருக்கலாம்...அதனால தான் பழகிக்க சொன்னேன்.புரிஞ்சுதா?” என்று அவளை மிரட்டியவன் மர்மமாக தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

அவனது கேள்விக்கு பயத்துடன் தலையை வேகமாக இடமும் வலமும் ஆட்டியவளை அவ்வளவு பிடித்தது அவனுக்கு.மந்தகாசப் புன்னகை ஒன்றை முகத்தில் தவழவிட்டபடி காரை ஒட்டிக் கொண்டிருந்தவன் ஓரக்கண்ணால் அவளைப் பார்க்க அவளும் அந்த நேரத்தில் அவனது பேச்சின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாமல் குழப்பத்தோடு அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவள் தன்னைப் பார்ப்பது அவனுக்கு தெரிந்தாலும் கண்ணுக்கு எட்டாத ஒரு சிறுபுன்னகையை தவழ விட்டவன் மின்னல் போல ஒரே ஒரு நொடி தன்னுடைய விழி வீச்சை அவளிடம் செலுத்தி விட்டு அடுத்த நொடியே ஒன்றுமறியா பாலகன் போல முகத்தை வைத்துக் கொண்டு காரை ஓட்ட ஆரம்பித்து விட்டான்.

‘இப்போ இவர் என்னை பார்த்தாரா இல்லையா?’ என்று எண்ணி அவள் தான் மண்டை காய்ந்து போனாள்.
சற்று நேரம் காரில் அமைதி நிலவ அந்த அமைதியை கலைத்து விட்டு அவனே பேசத் தொடங்கினான்.



“பாட்டு யார் கிட்டே கத்துகிட்ட...”

“ஆசிரமத்தில் எல்லார் கூடவும் தான்”

“தனியா யார்கிட்டயும் கிளாஸ் போகலையா?”

“அதுக்கெல்லாம் ஆசிரமத்தில் வசதி பத்தாது...என் ஒருத்திக்கு பாட்டு கிளாஸ் ஏற்பாடு செஞ்சா மத்த குழந்தைகளும் அதைப் போலவே கேட்பாங்க இல்லையா?எல்லாருக்கும் ஒரே மாதிரி விருப்பம் இருக்காது.எனக்கு பாட்டு,இன்னொருத்தருக்கு டான்ஸ் ...இப்படி ரசனைகள் வேறுபடும்.அப்படி எல்லாரோட ஆசைகளையும் தீர்த்து வைக்க சுந்தரேசன் அய்யாவால முடியாது.இதுவரை அவர் புண்ணியத்தில் நாங்க எல்லாரும் மூணு வேளை சாப்பிட்டு நாலு எழுத்து படிக்கறோம்.அதுவே போதும்.அதுக்கும் மேல ஆசைப்படக் கூடாது”என்று மெல்லிய குரலில் பேசினாலும் தெளிவாக எடுத்துரைத்தாள் வானதி.

“அடேங்கப்பா..இவ்வளவு யோசிச்சு இருக்கியே...சந்தோசம்”என்று கிண்டலாக பேசியபடியே ஆசிரம வாசலில் அவளை இறக்கி விட்டவன் காரை விட்டு கீழிறங்கி அவளோடு சேர்ந்து அவனும் உள்ளே வந்தான்.

ஒரு நிமிடம் அவன் முகத்தை கேள்வியாக பார்த்தவள் பின் மௌனமாக எதையுமே கேட்காமல் உள்ளே நடக்க ஆரம்பித்தாள்.

அவளுடனே இணைந்து நடந்து வந்தவன் மீண்டும் அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

“பத்திரமா இறக்கி விட்டதுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்ற பழக்கம் இல்லையா உனக்கு?”

“உதவி செஞ்சா தான் அதெல்லாம் சொல்ல முடியும்”வாயுக்குள் முணுமுணுத்தாள்.

‘பாம்பு காது ஆயிற்றே அவனுக்கு...’ விஷமத்துடன் அவளை சீண்டினான்.

“ஹே...பின்ன நான் என்ன உபத்திரவமா செஞ்சேன்.காலையிலும் உனக்கு உதவி தான் செஞ்சேன்.இப்பவும் உனக்கு உதவி தான் செஞ்சு இருக்கேன்.”அழுத்தம் திருத்தமாக சொன்னவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் குனிந்த தலை நிமிராமலே சொல்ல வேண்டியதை சொல்லத் தொடங்கினாள்.

“காலையில் நீங்க செஞ்சது உதவி இல்லை...பரிகாரம்...உங்க கார் என் மேலே சேறை வாறி அடிச்சதுக்கு...அப்புறம்”

“ம்... அப்புறம்...”கண்களில் லேசான எதிர்பார்ப்போடு அவளை மேலும் பேச சொல்லி ஊக்கினான்.

“அப்புறம்... இப்போ நீங்க செய்றது உதவின்னு எல்லாம் சொல்ல முடியாது.ஏன்னா நான் உங்ககிட்ட உதவி கேட்கவும் இல்லை...உதவி செய்ய வேண்டிய சூழ்நிலையிலும் நான் நடுரோட்டில் நிற்கலை.அதனால...”

“நான் உபத்திரவம் தான் செஞ்சேன்னு சொல்ல வர்றியா?”கண்களில் லேசான சிரிப்பு எட்டிப் பார்க்க அவளைப் பார்த்து கேட்டான் சம்ஹார மூர்த்தி.

முதன்முதலாக அவனைப் பார்த்த பொழுது கடுகடுவென்று இருந்த அவனது முகத்திற்கும்,இப்பொழுது இயல்பாக சிரிக்கும் அவனது முகத்திற்கும் தான் எத்தனை வேறுபாடு என்று மனதுக்குள் நினைத்துப் பார்த்தாள் வானதி.

அவளைப் பொறுத்தவரை இன்று அவள் சம்ஹார மூர்த்தியிடம் இவ்வளவு பேசியதே அதிகம்.வெளியாட்களிடம் அவள் இவ்வளவு தூரம் பேசியதே கிடையாது.ஆனால் அவள் ஒன்றை மறந்து விட்டாள்.அவள் தானாக அவனிடம் வந்து பேசவில்லை.அவளை பேச வைக்கும் வித்தையை கற்றுத் தேர்ந்த வித்தகன் சம்ஹார மூர்த்தி...

அவன் எப்படி மற்றவர்களை தன்னுடைய எல்லைகளுக்குள் அனுமதித்தது இல்லையோ அதைப் போலத் தான் வானதியும்.இன்று இருவரும் அந்த கோட்டை மீறி இருந்தார்கள்.அதற்கு காரணம் சம்ஹார மூர்த்தி மட்டும் தான்.மெல்ல மெல்ல அவளிடம் பேச்சுக் கொடுத்து அவளை அந்த வட்டத்தை விட்டு வெளியேற வைத்து இருந்தான்.அவள் மட்டும் அல்ல..அவனும் அவளுக்காக தன்னுடைய நிலையில் இருந்து இறங்கி வந்திருந்தான்.

அவனுக்கு அவளிடம் பேச வேண்டி இருந்தது.அவளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது.ஒரே நாளில் கண்ணிமைக்கும் பொழுதுக்குள் தன்னுடைய குரலால் தன்னை கட்டிப் போட்ட அந்தப் பதின்பருவ பட்டாம்பூச்சியை பற்றி தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற எண்ணம் அவனது மனதில் ஆழப் பதிந்து விட்டது.

பேசிக்கொண்டே அவளுடன் வந்தவன் ஓரிடத்தில் தன்னுடைய நடையை நிறுத்தி விட்டான்.சட்டென்று அவனது நடை நிற்கவும் வானதியும் திரும்பி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“சுந்தரேசன் சார் இப்போ எங்கே இருப்பார்...அவரைப் பார்க்கணுமே”

“நேரா போய் வலது பக்கம் திரும்பினதும் முதல் ரூம் அய்யாவோடது தான்.”

“சரி நான் போய் அவரைப் பார்த்துட்டு வர்றேன்”என்றவன் ஒற்றை தலை அசைவில் அவளிடமிருந்து விடை அளித்தவன் அவளுடைய பதிலுக்காக காத்திருக்க தயக்கத்தோடு மெலிதாக அவனைப் பார்த்து தலை அசைத்தவளைக் கண்டு அவன் கண்கள் ஒளிர்ந்தது.

துள்ளலான நடையுடன் அங்கிருந்து விலகி சென்றவனையே ஒரு சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டு இருந்தவள் தன்னுடைய இடத்திற்கு விரைந்து சென்று விட்டாள்.வேறு உடை மாற்றி முகம் கழுவிக் கொண்டு தோட்டத்திற்கு வந்து அமர்ந்தவள் அன்றைய பொழுது நடந்த நிகழ்ச்சிகளை மெல்ல அசை போடத் தொடங்கினாள்.

தன்னுடைய தோழி சுதா மட்டும் தன்னை இன்று இந்த விழாவில் பாட சொல்லி கட்டாயப்படுத்தாமல் இருந்திருந்தால் இத்தனை பேரும், புகழும் அவளுக்கு வந்திருக்குமா என்ன? சுதா மட்டுமா...மேடையில் அவள் அவள் பயந்து நடுங்கிக் கொண்டு இருக்கையில் ஒற்றை பார்வையில் அவளுக்கு தைரியமூட்டினாரே சம்ஹார மூர்த்தி.அவரும் தானே இதற்குக்காரணம் என்று எண்ணிக் கொண்டிருந்தவள் அருகில் சருகுகள் மிதிபடும் ஓசையில் பதறிக் கொண்டு எழுந்தாள்.



‘இந்த நேரத்தில் இப்படி அழுத்தமான காலடி ஓசையுடன் வருவது யார்?’

“ஹே...ரிலாக்ஸ் நான் தான்...”என்று இயல்பாக பேசியபடியே அவளின் அருகே வந்து நின்ற சம்ஹார மூர்த்தியைக் கண்டு கொஞ்சம் நிதானமானாள் வானதி.

“அது என்ன எல்லாத்துக்கும் பயம்...ம்ம்ம்”லேசான கண்டிப்பு இருந்தது அவன் குரலில்.

“...”

“இப்படி எல்லாத்துக்கும் பயந்தா நாளைக்கு நான் தான் கஷ்டப்படணும்”என்று பூடகமாக பேசியவன், யாரும் தங்களை கவனிக்கவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு இன்னும் கொஞ்சம் நெருங்கி நின்றான்.

அவனுடைய நெருக்கத்தில் மிரண்டவள் தானும் இரண்டடி பின்னால் நகர,விடாது அவனும் அவளை நெருங்கினான்.அவள் இரண்டடி பின்னால் வைத்தால்,இவன் நான்கடி அவளை நோக்கி வைத்து அவளை நெருங்கியவன் லேசாக இருள் கவிழ்ந்து இருந்த அந்த நேரத்தில் அங்கிருந்த மாமரத்தின் பின்னால் அவளை தன்னுடைய கைகளால் சிறை வைத்தான்.

அவனுடைய விரல் நுனி கூட அவள் மேல் படவில்லை.ஆனால் அவள் லேசாக அசைந்தாலும் அவன் மீது பட்டுவிடும் தூரத்தில் அவளை நிறுத்தி இருந்தான்.எங்கே மூச்சு விட்டாலும் அவன் மேல் பட்டு விடுமோ என்று பயத்தில் உறைந்து போனவள் மூச்சுக் கூட விடாமல் பேசுவதற்கு வார்த்தைகளே வராமல் தடுமாறிப் போனாள்.

பயத்தில் கத்தி யாரையும் உதவிக்கு அழைக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் மிரள மிரள மான் குட்டி போல மருண்டு போய் நின்றவளைப் பார்த்தவன் மின்னல் கீற்றென லேசாக புன்னகைத்தான்.

“அம்மாடியோவ்...எவ்வளவு பெரிய கண்ணு...”என்று பேசியபடியே ஒற்றை விரலால் அவளது இமைகளை தீண்ட வந்தவன் பயத்தில் வியர்த்து வழிந்த அவளது அரண்ட தோற்றத்தைக் கண்டு நொடியில் சுதாரித்து கைகளை பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.

“சுந்தரேசன் அய்யாகிட்டே எல்லா விஷயமும் தெளிவா பேசிட்டேன்...அவருக்கு சம்மதம்...நீயும் ஒத்துக்கணும்...ஒத்துக்கிற...சம்மதம் மட்டும் தான் சொல்லணும் புரிஞ்சுதா?”என்று ஒற்றை விரல் ஆட்டி விளையாட்டாய் அவன் எச்சரித்தாலும் அதற்குப் பின்னால் இருந்த தீவிரத்தை அவனது கண்கள் அவளுக்கு உணர்த்தியது.

வழக்கம் போல தலையை இடமும் வலமுமாக ஆட்டி வைத்தாள்.

லேசாக சிரித்தவன்,”வாயை திறந்து தான் சொல்லேன்”என சொல்லி விட்டு அவள் முகத்தையே பார்க்க ...

மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்ட நாக்கை கஷ்டப்பட்டு பிரித்து அவனுக்கு பதிலுரைத்தாள்.



“ச..சரி...நான் போறேன்”

“எங்கே?”

“அய்யாகிட்டே...”

“இப்பவே போகணுமா”அவன் கண்களில் வந்து போன உணர்வுக்கு என்ன பொருள் என்பது அவளுக்கு புரியவில்லை.

“ஹ்ம்ம்...உன்கிட்டே நிறைய பேசலாம்னு நினைச்சேன்...பரவாயில்லை...நீ கிளம்பு...நாளைக்கு நாம பார்க்கும் பொழுது பேசிக்கலாம்”என்று அடுத்த நாள் தாங்கள் உறுதியாக சந்திக்கப் போவதை அவளுக்கு தெளிவுபடுத்தி விட்டு கண்களால் அவளிடம் இருந்து விடை பெற்றான்.

வானதியும் மெல்ல தலை அசைக்க துள்ளலான நடையுடன் அவளை விட்டு விலகி சென்றவனைப் புரியாத பார்வை பார்த்தவள் அதுநேரம் வரை அடக்கி வைத்திருந்த மூச்சை ‘ஊப் ‘என்று வெளியேற்றினாள்.

‘அய்யாகிட்டே என்ன பேசி இருப்பார்? எதுக்கு நான் சம்மதம் சொல்லணும்?’ என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டவள் சிறுத்தையை போல விரைந்து நடக்கும் அவனது கம்பீரமான நடையை பார்த்தவாறே யோசனையுடன் நின்று விட்டாள் வானதி.

தீ தீண்டும்...

Post a Comment

புதியது பழையவை