Vanavil Sirpame - Episode 8 Tamil Novels

 

அத்தியாயம் 8

 

தொடர்ந்து மூன்றாவது நாளாக அன்றும் தூங்காமல் கழிந்தது சங்கமித்ராவுக்கு.அறையில் இருந்து வெளியே எட்டிப் பார்த்தவள் ஹாலில் சத்யா கம்ப்யூட்டர் முன் அமர்ந்து இருக்க, கீழே செல்லாமல் அறைக்குள்ளேயே உலாத்திக் கொண்டு இருந்தாள்.அதற்கு காரணமும் இருந்தது.
 
தொடர்ந்து இரு நாட்களாக அவள் உறங்காமல் இரவில் இப்படி அலைவதை சத்யா அறிவாள்.இன்றும் அவளை கடந்து தோட்டத்துக்கு செல்கையில் அவள் பார்த்து விட்டால் தேவை இல்லாத வம்பு.காலையில் அப்பாவிடமோ அல்லது அம்மாவிடமோ சொல்லி அவளை மாட்டி விடக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
 
இப்பொழுது இருக்கும் சூழலில் இது தனக்கு மேலும் துன்பத்தை தான் தரும் என்ற முடிவுக்கு வந்தவள் கீழே போவதை தவிர்த்து விட்டு அறைக்குள்ளேயே நடை பயின்றாள்.எவ்வளவு நேரம் தான் அறைக்குள் நடை பயில முடியும்.அதுவும் அலுத்துபோக கட்டிலில் படுத்து கொண்டே சிந்திக்க தொடங்கினாள்.
 
‘என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்கான் அவன்? எப்ப பாரு என்னை சீண்டிக்கிட்டே இருக்கான்.காபி சாப்பிட வா எல்லாத்தையும் சொல்றேன்னு சொல்லி கூட்டிட்டு போய் அங்கே போனதும் பிளேட்டை அப்படியே திருப்பி போட்டுட்டான்.
 
இவனால் இன்னைக்கு காலேஜ் வேற போகல.ஆட்டோவில் ஏறி காலேஜ் வாசல் வரை போயிட்டு அப்படியே வீட்டுக்கு திரும்பி வந்துட்டேன்.அம்மா கேட்டதுக்கு தலைவலின்னு சொல்லி சமாளிச்சாச்சு.ஆனா எனக்கு உண்மையான தலைவலி அவன் தான்.அவனால் தான் எனக்கு எல்லா தொல்லையும்.
 
அவனிடம் சொன்னா புரிந்து கொள்வான்ன்னு நான் நினைச்சு ரொம்ப பெரிய தப்பு’ என்று தன்னை தானே திட்டிக் கொண்டவள் அவனை எப்படி தன்னுடைய வழியில் இருந்து விலக்குவது என்று தீவிரமாக சிந்திக்க தொடங்கினாள்.
 
அது அத்தனை சுலபம் இல்லை என்பதை அவளது அறிவு அவளுக்கு சுட்டிக் காட்டியது.என்ன செய்தாலும் அவனை தவிர்க்க முடியாது.அவனாகவே ஒதுங்கினால் தான் உண்டு.அவனாகவே ஒதுங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ? எப்படி அவனை ஒதுக்குவது? என்று விடிய விடிய யோசித்தவளுக்கு வழி தான் ஒன்றும் புலப்படவில்லை.
 
முதல் இரண்டு நாட்களாவது கொஞ்சம் தூங்கினாள் இன்று அதுவும் போயிற்று.விடிய தூங்காமல் முகம் எல்லாம் வீங்கிப் போய் அறையை விட்டு வெளியே வந்த இளைய மகளை கண்ட சாவித்திரி பதறிப் போனார்.
 
“ஏய்! என்னடி இப்படி வந்து நிற்கிற? லேசா தானே தலை வலிக்குதுனு சொன்ன? இப்ப நீ வந்து நிற்கிற கோலத்தை பார்த்தா விடிய விடிய தூங்காத மாதிரி இல்லை இருக்கு.ரொம்ப தலை வலிச்சா நேத்தே சொல்றதுக்கு என்ன? டாக்டர் கிட்ட போய்ட்டு வந்து இருக்கலாம்ல”அன்னைக்கே உரிய கோபத்துடனும் பாசத்துடனும் கேட்டார் சாவித்திரி.
 
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை மா...நைட் சரியா தூங்கலை.அதான் அப்படி இருக்கு”
 
“ஏன் தூங்கலை...தலை ரொம்ப வலிச்சுதா” கேட்டபடியே மகளின் தலையை பாசமாக வருடினார்.
 
“அதெல்லாம் இல்லைமா.நேத்து உங்க கையால் போட்ட காபியை குடிச்சதும் தலைவலி எல்லாம் பறந்து போச்சு...நேத்து நைட் ஒரே கெட்ட கனவா வந்துக்கிட்டு இருந்துச்சு.அதான் சரியா தூங்கலை.”தாயின் மனம் நோகக் கூடாதே என்று பொய்யுரைத்தாள்.
 
“கனவு வந்தா சாமிகிட்ட போய் திருநீறு வச்சுக்கிட்டு தூங்க வேண்டியது தானே?”அதற்கும் ஒரு கேள்வி கேட்ட தாயை முறைத்துப் பார்க்க ஆரம்பித்தாள் சங்கமித்ரா.
 
“அம்மா...போலீஸ்காரர் பொண்டாட்டிங்கிறதால இப்படி வரிசையா கேள்வியா கேட்டு கொல்லாதே தாயே.போ ...போயி உன் கையால ஒரு கப் காபி போட்டு தாம்மா...ப்ளீஸ்!” தாயின் தாடையை பிடித்தவாறு செல்லம் கொஞ்சினாள்.
 
“சரி சரி ரொம்ப கொஞ்சாதே...பல்லு துலக்கிட்டியா?”
 
“ஹி...ஹி அதெல்லாம் எதுக்குமா அசிங்கமா செஞ்சுக்கிட்டு.அதுவும் இல்லாம நீ தானே சொல்லி இருக்க.வயசு பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்கணும்.எங்கேயும் எப்பவும் பல்லைக் காட்டக் கூடாதுன்னு”
 
“அதுக்கும் பல்லு துலக்கிரதுக்கும் என்னடி சம்பந்தம்?”
 
“இல்லமா...பல்லு விலக்க பாத்ரூம் கண்ணாடி முன்னாடி போய் நின்னு ஈன்னு சொன்னா தான் பல்லே துலக்க முடியுதுமா.அதான்.நாம எல்லாம் எப்பேர் பட்ட வம்சம்.நம்ம வீட்டு கண்ணாடியா இருந்தாலும் அது முன்னாடி போய் பல்லை காட்ட மாட்டேன்மா”பச்சை பிள்ளை போல முகத்தை வைத்துக் கொண்டு படபடவென இமை சிமிட்டினாள்.
 
“கிரகம்...எனக்குனு வந்து வாய்ச்சு இருக்கிற பாரு...போடி...போய் பல்லை துலக்கிட்டு வந்து சேர் போ”
 
“என்னம்மா ரொம்ப சலிச்சுக்கிற ஒருநாள் தானே...கொடுத்தால் குறைஞ்சா போய்டுவ?” எதிர்கேள்வி கேட்டாள் சங்கமித்ரா.
 
“கொடுக்கணுமா? கிட்ட வா நல்லா நாலு கொடுக்கறேன்” என்று கையை ஓங்கிக் கொண்டு சாவித்திரி வரவும் தப்பித்தேன்,பிழைத்தேன் என்று அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி குளியல் அறைக்குள் புகுந்து விட்டாள்.
 
குளித்து முடித்து வெளியே வந்தவள், ‘இன்னைக்கு காலேஜ்க்கு லீவ் போட்டுட வேண்டியது தான்.அப்புறம் எப்படி என்னை வந்து சீண்டுவான்னு நானும் பார்க்கிறேன்’ என்று தனக்குள் திட்டமிட்டவள் காலை டிபனை உண்டதும் உடல்நிலையை காரணம் காட்டி காலேஜ்க்கு லீவ் போட்டு விட்டாள்.
 
ஏற்கனவே அவள் முகம் வாடி இருந்ததால் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் சாவித்திரி மௌனமாகி விட்டார். ‘அவனை இன்று ஏமாற்றி விட்டோம்.பஸ் ஸ்டாப்பில் எனக்காக காத்திருந்து ஏமாந்து போய் இருப்பான்’என்று மனதுக்குள் கெக்கலி கொட்டி சிரித்துக் கொண்டு இருந்தவளின் நினைவில் மண்ணை அள்ளிப் போட்டான் போன் மூலமாக.
 
புதிய எண்ணில் இருந்து அழைப்பு வர தனக்கு இருந்த சந்தோஷத்தில் அதை எல்லாம் கவனியாது போனை எடுத்து காதில் வைத்து பேசலானாள்.
 
“ஹலோ”
 
“இன்னும் காலேஜ்க்கு போகாமல் என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?”அதிகாரமாக ஒலித்தது ஒரு குரல்
 
“நான் என்னவோ செய்றேன்? நீ யாரு அதை கேட்க?”ராங் நம்பர் என்ற எண்ணத்துடன் அவள் பேச ஆரம்பித்தாள்.
 
“ஹ்ம்ம் உன் புருஷன்...ஏன்டி உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? நமக்காக ஒருத்தன் அங்கே பஸ் ஸ்டாப்பில் வெயிட் பண்ணிட்டு இருப்பானே அப்படிங்கிற எண்ணம் கொஞ்சம் கூட இல்லையே உனக்கு.மரியாதையா சீக்கிரம் கிளம்பி வந்து சேர்”கட்டளையாக ஒலித்தது அவன் குரல்.
 
முதலில் ஏதோ ராங் நம்பர் என்ற எண்ணத்துடன் கோபமாக பேசியவள் அவன் பேச ஆரம்பித்ததும்  இது அவன் தான் என உறுதி செய்து கொண்டாள். ‘என்னது புருஷனா? அவனது வார்த்தைகளால் அதிர்ந்தவள் இவனுக்கு எப்படி என்னோட போன் நம்பர் கிடைத்தது?’ என்று தலையை குழப்பிக் கொண்டாள். ‘ஏற்கனவே இருக்கிற குழப்பம் பத்தாதுன்னு இது வேறயா?’ என்று உள்ளுக்குள் நொந்து கொண்டவள் குரலை விறைப்பாக வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.
 
“என்ன ரொம்ப அதிகாரம் பண்ற?இப்போ வரலைன்னா என்ன செய்வ?” திமிராகவே பேசினாள்.
 
“உனக்கு இன்னும் ஐந்து நிமிடம் தான் டைம் .அதுக்குள்ள நீ இங்கே வந்தாகணும்.இல்லைன்னா?”
 
“இல்லைன்னா”அசட்டையாகவே கேட்டாள்.
 
“நான் உங்க வீட்டுக்கு வந்திடுவேன்”எஃகின் உறுதியோடு ஒலித்தது அவன் குரல்.
 
‘இவன் செய்தாலும் செய்து விடுவான்.இன்றே இவனுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்‘ என்ற எண்ணம் தோன்ற தாயிடம் அருகில் உள்ள மெடிக்கலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக ஐந்தே நிமிடத்தில் பஸ் ஸ்டாண்டில் மூச்சு வாங்க வேக நடையுடன் கோபமாக அவன் முன்னே வந்து நின்றாள்.
 
அவளின் கோபத்தை கொஞ்சமும் அசட்டை செய்யாமல், “காபி ஷாப் போகலாமா பேபி?” என்றபடி அவளின் அருகில் வந்து நின்றான்.
 
“உங்களுக்கு என்ன தான் வேணும்? ஏன் இப்படி என் உயிரை வாங்கறீங்க?”எரிச்சல் வெளிப்பட்டது அவள் குரலில்.
 
“நீ தான்...நீ மட்டும் தான்.”அழுத்தம் திருத்தமாக வெளிவந்தது அவன் குரல்.

 

Post a Comment

புதியது பழையவை