“பார்த்தி...என்ன பண்ணுறே...வழியை விடு..அவ கிளம்பிக்கிட்டு இருக்கா
இல்ல”முதலில் அதட்டியது மெய்யாத்தா தான்.
“நான் கொஞ்சம் இவ கிட்டே பேசணும் அப்பத்தா”
“எலேய்! என்ன சொல்றோம்...யார் கிட்ட சொல்றோம்னு விவரம் எல்லாம்
தெரிஞ்சு தான் பேசறியா?”
“அப்பத்தா...இப்போ நான் பேசியே ஆகணும்..தயவு செஞ்சு என்னை
தடுக்காதீங்க” என்றவன் அப்படியே பாஸ்கரின் புறம் திரும்பினான்.
“மச்சான்...நீங்க அனுமதி கொடுத்தா...உங்க தங்கச்சி கிட்டே ஒரு இரண்டு
நிமிஷம் பேசிக்கிறேன்”
“அது வந்து...”என்ன சொல்வதென்று
பாஸ்கர் யோசிக்க அவன் மறுக்க முடியாதபடி தொடர்ந்து பேசலானான் பார்த்திபன்.
“உங்க கண்ணெதிர்ல தான் பேசப் போறேன்...” என்று சொன்னவன் பாஸ்கரின்
அமைதியையே சம்மதமாக எடுத்துக் கொண்டு சுற்றி இருந்தோரைப் பற்றி கவலைப்படாமல்
பௌர்ணமியின் கைகளை பற்றி இழுத்தவன் யார் காதுக்கும் கேட்காத அளவிற்கு கொஞ்ச தூரம்
தள்ளி நின்று கொண்டு பேசத் தொடங்கினான்.
அதுநேரம் வரை பௌர்ணமி அவன் கைகளில் இருந்து தன்னுடைய கைகளை விலக்கப்
போராடியதை வீட்டார் அனைவரும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர்.அவர்கள் அனைவரும்
பார்த்திபனைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் அப்படி இருக்கையில் எப்படி மறுத்து
பேசுவார்கள்?... மெய்யாத்தா மட்டும் அவர்கள் இருவரின் முக பாவனைகளையும் உன்னிப்பாக
கவனிக்கத் தொடங்கினார்.பௌர்ணமியின் முகம் வெறுப்பில் பளபளக்க,பார்த்திபனின் முகமோ
அவளை கெஞ்சலாகப் பார்த்துக் கொண்டிருந்தது.
வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த அந்தப் பெண்மணிக்கு விஷயம் புரிந்து
போனது.ரெண்டும் ரெண்டும் நாலு என்று.இருப்பினும் தானாக எதையும் சொல்லாமல் அவர்களை
கவனிக்கத் தொடங்கினார்.
“என்ன காரியம் செய்ற பொம்மிம்மா...”
“நான் எந்த தப்பும் செய்யலையே?”
“உங்க அண்ணன் கிட்டே வேற எவனையோ கட்டிக்க சம்மதம் சொல்லுறியே... உன்னால
எப்படி முடிஞ்சுது?”
“என் அண்ணன் எது செஞ்சாலும் என்னோட நல்லதுக்குத் தான் செய்வார்...உங்க
தங்கச்சிக்கு நீங்க எப்படி கல்யாணம் செஞ்சு வச்சீங்களோ...அதே மாதிரி எங்க அண்ணன்
எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்...இதில் குறைபட என்ன இருக்கு”விட்டேற்றியாக
பேசினாள் பௌர்ணமி.
“முட்டாள் மாதிரி பேசாதே பொம்மிம்மா....அவளும் நீயும் ஒண்ணா?”
“ஏன் நாங்க இரண்டு பேருமே பெண் தானே...ஓ...புரியுது...அவங்க பணக்கார
வீட்டு செல்வ சீமாட்டி..அவங்களுக்கு கல்யாணம் நடக்கலாம்... ‘என்னைப் போல ஒருத்திக்கு’
அதெல்லாம் நடக்கக்கூடாதுன்னு சொல்ல வர்றீங்க அதானே...”
“நீ வேணும்னே தப்பு தப்பா பேசுறடி...”
“இன்னொரு முறை என்னைப் பார்த்து டி போட்டு பேசினா...நடக்கிறதே
வேற...நான் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு.இனி என்கிட்டே அப்படி
பேசாதீங்க...மீறி பேசினா நான் என்னோட அண்ணன் கிட்ட சொல்ல வேண்டி வரும்.”
“ஓ...உங்க அண்ணன் கிட்டே சொல்லுவியா..அந்த அளவுக்கு வந்துட்டியா
நீ?”அவன் குரலில் தோன்றிய மாற்றத்தை அவள் கவனிக்கவில்லை.
“ஆமா...மாறித்தான் போயிட்டேன்...நான் எதுக்காக இப்படியே
இருக்கணும்...நான் என்னோட அண்ணன் சொன்ன ஆளையே கல்யாணம் செஞ்சுக்கத் தான் போறேன்”
“உன்னால அது முடியாதுடி...”
“மறுபடியும் டியா?...நீங்க என்னவோ உளறிக்கிட்டு போங்க...இனி என்னோட
முடிவில் எந்த மாற்றமும் இல்லை.இனி என்னுடைய வாழ்க்கை என்னுடைய விருப்பப் படியும்,
என் அண்ணனுடைய ஆசைப்படியும் தான் நடக்கும்” என்று சொன்னவள் வீட்டிற்குள் திரும்ப
முனைய,அவளது கைகளைப் பற்றித் தடுத்தவன் மின்னல் வேகத்தில் தன்னுடைய பாக்கெட்டில்
வைத்திருந்த தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டி விட்டான்.
நொடிப் பொழுதில் நடந்து விட்ட இந்த நிகழ்ச்சியை மொத்த ஊருமே வேடிக்கை
பார்த்தது.ஆனால் யாராலும் தடுக்கத் தான் முடியவில்லை... அனைவரும் அதிர்ச்சியில்
உறைந்து போய் இருந்தனர்.மற்றவர்களுக்கே அப்படி இருந்தால் பௌர்ணமியின் நிலைமை
சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன?
மித மிஞ்சிய அதிர்ச்சியில் இருந்தவள் கணப் பொழுது கூட தாமதிக்காமல்
பார்த்திபனின் கன்னத்தில் அறைந்து விட்டாள்.அவளின் செய்கையை மொத்த ஊருமே
வேடிக்கைப் பார்த்ததே தவிர யாரும் அவளை தடுக்க முயற்சி செய்யவில்லை.
“என்னோட அனுமதி இல்லாம தாலி கட்டிட்டா ...அப்படியே உங்க காலடியில்
விழுந்து கிடப்பேன்னு நினைச்சீங்களா...ஒருக்காலும் நடக்காது...”என்று உடல் பதற
பேசினாள்.அவள் உடல் நடந்து முடிந்திருந்த சம்பவத்தின் வீரியத்தை தாங்க முடியாமல்
நடுங்கிக் கொண்டு இருந்தது.
அவனை வெறுப்புடன் பார்த்தவள் அவளுடைய கழுத்தில் அவன் கட்டிய தாலியை
கழற்றி எறிய முற்ப்பட்ட நொடி பார்த்திபனின் உடலில் அதிர்வு தோன்றியது.
பார்த்திபனின் துளைக்கும் பார்வையை அசட்டை செய்து விட்டு தாலியை கழட்ட முயன்றவளின்
கன்னத்தில் இடியென இறங்கியது மெய்யாத்தாவின் கரம்.
“என்ன காரியம்டி செய்ற...அது என்ன விளையாட்டு சாமானா?நினைச்சா
போடவும்...நினைச்சா கழட்டவும்...தாலிடி...ஒவ்வொரு பொண்ணுக்கும் தன்னோட
வாழ்க்கையில் கிடைக்கிற மிகப் பெரிய பாக்கியம்.எத்தனையோ பெண்கள் தனக்கு
கிடைக்கலையேன்னு ஏங்குற ஒரு புனிதமான பொருள்...அதோட மதிப்பு தெரியாம கழட்டவா
பார்க்கிற...கையை வெட்டிப் போட்டுடுவேன்”மெய்யாத்தாவின் குரல் அந்த வீடு முழுக்க
எதிரொலித்தது.
காளியம்மனைப் போல உக்கிரத்துடன் நின்று கொண்டிருந்த மெய்யாத்தா
சுகன்யாவின் புறம் திரும்பி,அவளை அழைத்தார்.
“அடியே சுகன்யா...என்ன அப்படியே மலைச்சு போய் நிக்குற...உங்க அண்ணி
இந்தா நிக்குறா பாரு..இவளை உன்னோட அறைக்கு கூட்டிட்டு போய்..அவ கூடவே துணையா
இரு”என்று உத்தரவாக சொன்னவர் ஊராரின் புறம் திரும்பினார்.
“இன்னைக்கு எங்க வீட்டில் இரட்டை கல்யாணம் நடந்து இருக்கு...அதை
கொண்டாடுற மாதிரி நாளைக்கு மொத்த ஊருக்கும் விருந்து எங்க வீட்டில் தான்...”என்று
ஒரு மகாராணியின் கம்பீரத்துடன் சொன்னவர் அதற்கு மேலும் அங்கே நின்று காட்சிகளை
வளர்க்காமல் வேறு வேலைகளை பார்க்கப் போய் விட பார்த்திபன் மட்டும் இப்பொழுது
தனித்து நின்றான் அந்த கூடத்தில்.
ஏதோவொரு வேகத்தில் அவள் கழுத்தில் தாலி கட்டி விட்டானே தவிர...அவன்
நிச்சயம் இப்படி தன்னுடைய திருமணத்தை நடத்த நினைத்து இருக்கவில்லை.
நாளை மறுநாள் ஒரு முஹூர்த்த தினம் இருப்பதால் அதற்குள் பௌர்ணமியிடம்
பேசி புரிய வைத்து அவளுடைய சம்மதத்துடன் அவளை மணக்க எண்ணி இருந்தவன்,அவளது
அண்ணனின் திருமணப் பேச்சாலும் அதை அவள் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதைப் போல
காட்டிக் கொண்ட காரணத்தினாலும் எங்கே இந்த முறையும் அவளை இழந்து விடுவோமோ என்ற
பயத்தில் அவள் கழுத்தில் தாலியை கட்டி விட்டான்.
ஏனென்றால் பௌர்ணமியின் பிடிவாத குணத்தை அவன் நன்கு அறிந்தவன்...அதனால்
தானே இந்த நான்கு வருடங்களாக அவளைத் தேடிப் போகாமல் இருந்தான்.
பார்த்திபனின் பெற்றவர்கள் இருவரும் அவர்களின் வேண்டுதலை நிறைவேற்ற
கோவிலுக்கு போய் இருக்க,அவர்கள் கூட இல்லாமல் தான் அவசர கதியில் இப்படி திருமணம்
செய்து விட்டோமே என்று எண்ணி வருந்தினான் பார்த்திபன்.
நடந்தது நடந்து முடிந்து விட்டது இனி நடக்க வேண்டியதை பார்க்க
வேண்டியது தான் என்று எண்ணியவன் மாடியில் இருந்த தன்னுடைய அறைக்குள் புகுந்து
கொண்டான்.
பக்கத்து அறை தான் சுகன்யாவின் அறை...அங்கே கதவு தாழிடப் படாமல்
இருந்ததால் அங்கே நடந்த பேச்சு வார்த்தைகள் அத்தனையும் ஒன்று விடாமல் அவனது
காதுகளில் விழுந்தது.
“அண்ணி அழாதீங்க ப்ளீஸ்” பௌர்ணமியிடம் சுகன்யா கெஞ்சிக்
கொண்டிருந்தாள்.அவளின் பேச்சை இடைமறித்த பாஸ்கர் சுகன்யாவை குற்றவாளிக் கூண்டில்
ஏற்றினான்.
“உங்க அண்ணன் ஏன்டி இப்படி செஞ்சார்?இப்படி எல்லாம் நடக்கப்
போகுதுன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா?தெரிஞ்சு தான் அவ்வளவு தூரம்
கட்டாயப்படுத்தி என் தங்கச்சியை இங்கே வரவழைச்சியா?” பார்த்திபனின் மீது இருந்த
கோபத்தை அப்படியே சுகன்யாவிடம் காட்டிக் கொண்டு இருந்தான் பாஸ்கர்.
“அய்யோ...இல்லைங்க..எனக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாது..தெரிஞ்சு
இருந்தா உங்ககிட்டே சொல்லாம இருப்பேனா?”
“உண்மையை சொல்லு...உங்க அண்ணன் சொல்லித் தானே அவளை இங்கே
கூட்டிக்கிட்டு வந்தே...”பாஸ்கரனின் குரலில் இருந்தே அவனது கோபத்தின் அளவை உணர
முடிந்தது.
“ஆ..ஆமாங்க..அண்ணன் என்கிட்டே வந்து பேசினார்....உங்க தங்கச்சி நம்ம
கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம வீட்டு விஷேசம் எதுக்குமே வரலை...சுபத்ரா
கல்யாணத்துக்கு கண்டிப்பா கூட்டிட்டு வந்திடு...இல்லேன்னா சொந்தக்காரங்க உன்னைத்
தான் கேள்வி மேலே கேள்வி கேட்ப்பாங்கன்னு சொன்னார்”
“ஏய்! பொய் சொல்லாதடி..உண்மையை சொல்லு...உனக்கு எதுவுமே
தெரியாதா?பாருடி...என் தங்கச்சி முகத்தைப் பாரு...எப்படி கதறிக் கதறி அழறான்னு
பாரு...கல்யாணத்துக்காக இன்னைக்கு காலையில் தயாராகி வந்தப்ப எவ்வளவு அழகா புதுசா
பூத்த பூ மாதிரி அம்சமா இருந்தா..அவளை இப்படி கதற வச்சுட்டீங்களேடி நீயும் உன்னோட
அண்ணனும்..எங்க அப்பா இறந்த பிறகு அவள் கண்ணுல கண்ணீரையே நான் பார்த்தது இல்லையேடி...
அவ வாழ்க்கையையே கேள்வி குறியா மாத்திட்டானே உங்க அண்ணன்.
உங்க அண்ணன் மனசு மாறிட்டான்னு நினைச்சேனே...கடைசியில் இப்படி நம்ப
வச்சு கழுத்தை அறுத்துட்டானே...
இந்த விஷயத்தை இனி நான் எப்படிடி வெளியில போய் சொல்லுவேன்...என்
தங்கச்சிக்கு ஊர் பார்க்க எப்படி எல்லாம் கல்யாணம் செய்யணும்னு
நினைச்சேன்...ஆனா..கடைசில இப்படியா நடக்கணும்...ஏய்..என் கண்ணு முன்னாடி
நிக்காதே...போய்டுடி...போ...இங்கிருந்து” கணவன் மனைவியின் வாக்குவாதம் முற்றவும்
இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் தங்கையின் வாழ்வு வீணாகி விடும் என்ற
எண்ணத்துடன் எழுந்தவன் அப்படியே நின்று விட்டான் தன்னவளின் குரல் கேட்டு.
“அண்ணா...இப்போ எதுக்கு நீ அண்ணியை கோவிச்சுக்கிற...இவங்க அண்ணன்
செஞ்ச தப்புக்கு இவங்க என்ன செய்வாங்க? ஏன் இவ்வளவு தூரம் ஆத்திரப்படறியே...இவங்க
அண்ணன் என்னைத் தூக்கிட்டு போயா தாலி கட்டினார்...உன் கண்ணு முன்னாலேயே தானே தாலி
கட்டினார்...நீ வந்து தடுத்து இருக்கலாமே?”
அவள் குரலில் அழுகையின் சுவடு இருந்தாலும் அதையும் தாண்டிய தெளிவு
இருந்ததை அவனால் உணர முடிந்தது.கீழே அவ்வளவு ஆத்திரப்பட்டு தாலியை கழட்டி எறிய
முயன்றவளின் வார்த்தைகளா இவை எல்லாம்...சிந்தித்தவாறே அவன் அமர்ந்து விட்டான்.
கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்திருந்ததால் அங்கே சென்று இருந்த
ராஜனும் செல்வியும் தகவல் அறிந்து வீட்டிற்கு ஓடோடி வர பார்த்திபனுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டது.
கருத்துரையிடுக