என்ன தான் இருந்தாலும் பார்த்திபன் அவரின் ஒரே ஆண்
வாரிசு...எப்படியெல்லாம் அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர் கனவு
காண...அதை தவிடு பொடியாக்கிய மகனின் செய்கையில் அவருக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை
தான்.ஆனால் இப்பொழுது அதைப்பற்றி பேசி என்ன பயன்?
இயந்திரத்தை போல முதலிரவு அறைக்குள் நுழையும் மருமகளின் செய்கை
அவருக்கு கொஞ்சம் பயத்தையே கொடுத்தது.
‘அந்தப் பொண்ணு அவன் இப்படி
செஞ்சதால ஒழுங்கா குடும்பம் நடத்தாம அவன் கிட்டே சண்டை போடுவாளோ?ஆண்டவா...என்னோட
வம்சம் தழைக்காம போயிடக் கூடாது’ என்று கடவுளிடம் ஒரு அவசர வேண்டுதலையும்
வைத்தார்..
அறைக்குள் மெல்லிய ஊதுபத்தி மணமும்,பூக்களின் மணமும் நிரம்பி
இருக்க,உள்ளே வந்தவள் விழிகளால் பார்த்திபனைத் தேட அறையின் ஒரு மூலையில்
குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.அவன் அதீத பதற்றத்தில் இருப்பதை
அவனது நடை சொல்லாமல் சொல்ல அறையின் கதவை மூடி தாளிட்டு விட்டு கட்டிலின் அருகே
இந்த மேசையில் பால் சொம்பை வைத்தாள்.
அவள் அறைக்கதவை பூட்டும் பொழுதே அவளைப் பார்த்து விட்ட பார்த்திபன், அவளது
ஒவ்வொரு அசைவையும் இமைக்காமல் பார்த்தபடி இருந்தான்.அவளுடைய முகத்தில் இருந்து
ஏதேனும் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணி அவளது முகத்தைப் பார்த்தவன் மொத்தமாய்
வீழ்ந்து போனான்.
இயல்பாகவே நல்ல அழகி...கழுத்தில் அவன் கட்டிய பொன் மஞ்சள் தாலி...சரம்
சரமாய் தொடுக்கப்பட்டு இருந்த மல்லிகையை தலை முழுக்க அவள் சூடி இருந்த
விதமும்,இளம் பச்சை நிற பட்டுப்புடவை இரவு நேரத்து ஒளியில் அவளது அழகை
அதீதமாக்கிக் காட்ட...அவள் வந்தால் முதலில் அவளிடம் பேசி புரிய வைக்க வேண்டும்
என்று சில நிமிடங்களுக்கு முன் தான் எடுத்துக் கொண்ட சங்கல்பம் நினைவுக்கு வர
மறுத்தது அவனுக்கு.
அவளை காலையில் முதன் முதலாக தன்னுடைய காதலியாக பார்த்த பொழுதே அவனை
கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவனால் இப்பொழுது உரிமையுடன் மனைவியாக அருகில்
நிற்கும் பொழுதும் மற்ற அனைத்தும் மறந்து போனது.ஆண்மைக்கே உரித்தான இயல்பான இன்ப
உணர்ச்சிகள் அவன் மனதில் கிளர்ந்து எழுந்தது.
அழுத்தமான நடையுடன் அவளை நெருங்கியவனை அவள் நிமிர்ந்தும்
பார்க்கவில்லை.ஆவேசத்துடன் அவளை இறுகித் தழுவியவன் அவளின் இதழோடு இதழ் சேர்த்து
காதல் கவி பாட முனைந்தான்.
அவனுடைய கரங்கள் அவளுடைய பூவுடலின் மென்மையை சோதிக்க ஆரம்பித்ததில்
அவனுக்கு அவள் மேல் இருந்த தாபம் மோகமாக மாறி அவளை ஆண்டு விடத் துடித்தான்.
பௌர்ணமியிடம் அவனது செயல்களுக்கு எந்த எதிர்வினையும் இல்லாமல் போனது
அவனுக்கு வசதியாகப் போய் விட அவன் தன்னுடைய காதல் பாடங்களைத் தொடங்க
ஆரம்பித்தான்.இதழை இதழால் நிரப்பிய பொழுதும்,காதலோடு அவளை அணைத்த பொழுதும்
அவனுக்குள் இருந்த தாகம் தீர்ந்தபாடில்லை.
கைகளில் அவளை ஏந்தியவன் கட்டிலில் அவளை கிடத்தியதும்,விளக்கை அணைத்து
விட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர முனைந்தான் பார்த்திபன்.
அவளை கலைப்பதிலேயே குறியாக இருந்தவன் சில நிமிடங்கள் கழித்துத் தான் ஒரு விஷயத்தை உணர்ந்தான்.அவள்
தன்னையும்,தன்னுடைய செயல்களையும் எப்படி எதிர்க்கவில்லையோ...அதே போல ஏற்றுக்
கொள்ளவும் இல்லை என்பதை. மரக்கட்டை போல கிடந்தவளை உணர்ந்து கொண்டவன் அதிர்ச்சியுடன்
வேகமாக எழுந்து விளக்கை போட்டான்.
கலைந்த ஓவியம் போல இருந்தவள் சட்டென்று விளக்குகள் எரியத் தொடங்கவும்
புடவையை சரி செய்து தன்னை மறைத்துக் கொண்டாள்.மௌனமாக அவளின் அருகில் அமர்ந்தவன்
கனிவாகவே பேசத் தொடங்கினான்.
“என்ன ஆச்சு பொம்மிம்மா...?”
“...”
“உடம்பு எதுவும் சரி இல்லையா?”
“...”
“சொன்னாத் தானே தெரியும்...”
“உங்க பாட்டி சொன்னாங்க...”
இந்த நேரத்தில் அப்பத்தாவைப் பற்றிய பேச்சு எதற்கு என்று சிந்தித்தவன்
அவளிடமே கேட்டான்.
“என்ன சொன்னாங்க பொம்மிம்மா?”
“நான் உங்க கூட சேர்ந்து குடும்பம் நடத்தலைன்னா...எங்க அண்ணன்
நிம்மதியா தன் பொண்டாட்டியோட குடும்பம் நடத்த மாட்டார்னு சொன்னாங்க... அதுக்காகத்
தான் நான் இன்னும் இந்த வீட்டில் இருக்கேன்...”
“ஓ...அப்போ...நம்ம கல்யாணத்தை மதிச்சு நீ இங்கேயே இருக்க
சம்மதிக்கலையா பொம்மிம்மா” இதயத்தில் ரத்தம் கசியும் வேதனையுடன் அவளின் பதிலுக்காக
காத்திருந்தான் பார்த்திபன்.
அவள் இல்லையென்று சொல்லி விடுவாள் என்ற எண்ணமே அவனுக்கு இல்லை.அவள்
தன் மீது வைத்திருக்கும் காதலை அவன் தான் நன்கு அறிவானே...
“இல்லை...இந்த வாழ்க்கை நான் எதிர்பார்த்த வாழ்க்கை இல்லை... உங்களையும்,உங்க
பக்கத்துல இருக்கிறதையும் நான் வெறுக்கிறேன்.” கண்களை இறுக மூடிக் கொண்டு அவள் பேச
பார்த்திபனின் உள்ளம் சொல்ல முடியாத வேதனையை அடைந்தது.
“என்னால என் அண்ணனோட வாழ்க்கை பாதிக்கப் படக்கூடாது அப்படிங்கிற ஒரே
ஒரு காரணத்திற்காக மட்டும் தான் நான் இங்கே இருக்க சம்மதிச்சு இருக்கேன்...வேற
எந்த காரணமும் இல்லை”
“அந்த அளவுக்கு என்னை வெறுத்துத்துட்டியா பொம்மிம்மா”அவன் குரலில்
இருந்த வலியை அவளால் உணர முடிந்த பொழுதும் அவள் வாய் திறந்து எதுவும் பேசவில்லை.
“நான் செஞ்சது தப்பு தான்..ஆனா அதுக்காக அதையே மனசில வச்சுக்கிட்டு
வீம்பு பிடிக்காதடி...உன் மனசாட்சியை தொட்டு சொல்லு...உன்னால என்னைத் தவிர வேற
ஒருத்தனை கல்யாணம் செஞ்சுக்க முடியுமா? செஞ்சுட்டு நிம்மதியா வாழத் தான் முடியுமா?
எனக்குத் தெரியும் பொம்மிம்மா... உன்னால முடியாது. இன்னைக்கு உங்க அண்ணன்
கேட்டப்போ கூட என்னை வெறுப்பேத்தத் தான் சம்மதம் சொன்ன அப்படிங்கிறதும் எனக்கு
தெரியும்”
“அப்புறமும் எதுக்கு என்னோட கழுத்தில் தாலி கட்டுனீங்க?”இதழ்கள்
துடிக்க கேட்டவளை நெஞ்சில் அணைத்து ஆறுதல் கூற முடியாத தன்னுடைய நிலைமையை
முற்றிலுமாக வெறுத்தான் பார்த்திபன்.
“நீ இங்கே ஒரு இரண்டு நாள் தங்கி இருந்தால்,எல்லாத்தையும் பேசி நான்
புரிய வச்சு இருப்பேன் பொம்மிம்மா..ஆனா நீ தான் என்னை விட்டு போறதிலேயே குறியா
இருக்கியே...அதான் எனக்கு வேற வழி தெரியலை”
“இப்படி எல்லாம் பேசி நீங்க செஞ்ச தப்பை சரி செய்ய முயற்சி
செய்யாதீங்க?”
“ஏய்...என்னடி ஆரம்பத்தில் இருந்தே நான் ஏதோ கொலை குத்தம் செஞ்ச
மாதிரியே பேசிக்கிட்டு இருக்க...நான் விரும்புற...என்னை விரும்புற பொண்ணு
கழுத்தில் நான் தாலி கட்டி இருக்கேன்...இதுல என்ன பெருசா குத்தத்தை கண்டுட்ட?”
“உங்களுக்கு எதுவுமே தெரியாது...”
“ஆமாண்டி எனக்கு எதுவுமே தெரியாது தான்...நீ வேணா கொஞ்சம் சொல்லிக்
கொடேன்”என்று பேசியவனின் கண்கள் பேசிய விஷம பாஷையில் அவசரமாக அவள் வேறு புறம்
திரும்பி கொள்ள பார்த்திபனின் முகத்தில் ஒரு நிறைவான புன்னகை வந்து போனது.
‘அவள் மனது காயப்பட்டு இருக்கிறது பார்த்திபா...அந்த காயம் குணமாகும்
வரை நீ அமைதி காத்துத் தான் தீர வேண்டும்’என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன்
அமைதியாக எழுந்து போய் விளக்கை அணைத்து விட்டு கட்டிலின் மறுபுறம் திரும்பி
படுத்துக் கொண்டாள்.
கொஞ்ச நேரம் தனக்கு அருகில் படுத்து இருந்த பார்த்திபனையே பார்த்துக்
கொண்டிருந்த பௌர்ணமி அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டவளின் உடல் அழுகையால்
குலுங்கியதை பார்த்திபனால் உணர முடிந்தது.அவளின் அழுகையை தடுக்க அவன் முனையவில்லை.
‘அழட்டும்..நான்கு வருடமாக மனதில் இருந்த அழுத்தம் குறையட்டும்’என்று
எண்ணியவன் அழுது அழுது ஓய்ந்து போய் அவள் தூங்கியதும் அவள் புறமாக மெல்ல
திரும்பியவன் கன்னத்தில் கண்ணீர் கோடுகளின் கறையைப் பார்த்ததும் அவளுக்கு விழிப்பு
ஏற்படாத வண்ணம் மெல்ல அவளது கண்ணீரை துடைத்து விட்டான்.
அவளின் நெற்றியில் ஒற்றை முத்தத்தை பதித்து விட்டு மீண்டும் நல்ல
பிள்ளையாக அவளை விட்டு தள்ளி படுத்துக் கொண்டவன் இனி தங்கள் இருவருடைய
வாழ்க்கையும் எப்படி இருக்கப் போகிறது
என்ற யோசனையுடனேயே உறங்கியும் போனான்.
கருத்துரையிடுக