Kadhal Kathakali Tamil novels 15




 

 

 

 

 

அத்தியாயம்  15

ட்ரைன் மெதுவாக அசைந்து அசைந்து போய்க் கொண்டு இருந்தது.முதல் வகுப்பு ஏசி கோச்சில் சஹானாவும் சத்யனும் பயணித்துக் கொண்டு இருந்தனர். அவர்களின் ஊரில் இருந்து ஒருநாள் பகல் முழுக்க பயணித்தால் தான் சென்னைக்கு போக முடியும்.உணவு இடைவேளையின் போது ட்ரெயினில் வந்த சாப்பாட்டை வாங்கி இருவரும் உண்டு முடித்தனர்.சஹானாவின் நினைவு முழுக்க ஊரிலேயே இருந்தது.

 

இவளிடம் சொல்லிவிட்டு கீழே சென்றவன் எப்பொழுது அவனுடைய தந்தையிடம் பேசினானோ தெரியாது.இரவு வந்து அவளிடம் சொன்ன பொழுது அவளால் நம்ப முடியவில்லை.இதோ இப்பொழுது கூட நம்ப முடியாமல் தான் ஜன்னலில் சாய்ந்து அமர்ந்து, நகர்ந்து கொண்டே இருக்கும் மரங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இனி சென்னை வரை தான் அண்ணன் உடன் இருப்பான்.அதன் பிறகு ? என்ன நடக்கும்? யார் துணை இருப்பார்கள்?எல்லாவற்றையும் தனியே தான் எதிர் கொள்ள வேண்டும்.... புது ஊர் ,புது இடம் அங்கு இருக்கும் மனிதர்கள் எப்படி பட்டவர்களாக இருப்பார்கள்?அங்கே எப்படி இருப்பது யார் அவளுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்ற கவலையுடன் தான் இருந்தாள்.

 

ஆனால் அவளுக்கு தெரியாதது ஒன்று இருந்தது...அபிமன்யு அவளுடன் அவள் பயணித்துக் கொண்டு இருக்கும் அதே ட்ரெயினில் அவளுக்கு அடுத்த கம்பார்ட்மெண்டில் தான் பயணித்துக் கொண்டு இருந்தான்.எப்பொழுது இனி சஹானா தன்னுடைய பொறுப்பு என்று சொன்னானோ அதன் பிறகு அவளை தனித்து விட முடியவில்லை.

ஊர் சுற்றி பார்ப்பதற்காக வந்து இருந்த அஞ்சலியையும் தன்னுடன் ட்ரெயினில் வருமாறு தான் அவன் அழைத்தான்.ஆனால் தன்னுடைய தோழிகளுடன் கோவாவிற்கு  சுற்றுலா செல்வதால் தான் சென்னை வரவில்லை என்று கூறி விடியற்காலையிலேயே கிளம்பி விட்டாள் அஞ்சலி.அவளை டிரைவருடன் அனுப்பி விட்டு தான் இதோ தன்னுடைய தேவதைக்காக அவள் பயணிக்கும் அதே ட்ரெயினில் பயணித்துக் கொண்டு இருக்கிறான்.

 

இரவு ஏழு முப்பது மணிக்கு சென்னையை வந்து அடைந்தனர் மூவரும்.இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் ட்ரைனை விட்டு இறங்கி பார்வையிட்ட சஹானாவிற்கு மனதில் பயம் மட்டுமே முதன்மையாக இருந்தது.எங்கு பார்த்தாலும் மனிதர்கள் தான்.வேக வேகமாக சென்று கொண்டு இருந்தனர்.

தன்னுடைய ஊரில் இரவு ஏழு மணிக்கு மேல் யாரும் வெளியே வர மாட்டார்கள் என்பதை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் சஹானா.தன்னுடைய பெட்டிகளையும்   சஹானாவுடைய பெட்டிகளையும் சேர்த்து இறக்கிவிட்டு அவளுடன் சேர்ந்து நடந்தான் சத்யன்.இருவருமே தங்கள் நினைவுகளில் மூழ்கி இருந்ததால் சிறிது இடைவெளி விட்டு,முகத்தை கர்சீப்பால் மூடிக் கொண்டு தங்களை பின் தொடர்ந்த அபிமன்யுவை இருவரும் கவனிக்கவில்லை.

 

ரயில்வே ஸ்டேஷன் வாசல் வரும் வரையிலும் அண்ணனும் தங்கையும் இரவு எங்கே தங்குவது என்று விவாதித்துக் கொண்டே வந்தனர்.ஏனெனில் சஹானாவிற்காக  சத்யன் ஏற்பாடு செய்த பெண்கள் விடுதிக்குள் இரவு எட்டு மணிக்குள் நுழைந்து இருக்க வேண்டும்.மதியம் ட்ரெயினில் வாங்கி சாப்பிட்டது தான்.இருவருமே நல்ல பசியில் இருந்தனர்.சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும்.மேலும் இப்போது ஆட்டோவில் கிளம்பினால் கூட அந்த இடத்திற்கு அரை  மணி நேரத்திற்குள் செல்ல முடியாது என்பதால் இன்று இரவு வேறு ஏதாவது ஹோட்டலில் தான் தங்கியாக வேண்டும் என்ற முடிவுக்கு இருவரும் வந்து இருந்தனர்.

 

இரவு எங்கே தங்குவது என்று இருவரும் காரசாரமாக விவாதித்துக் கொண்டு இருக்க ரயில்வே ஸ்டேஷன் வாசலில் அவர்களை உதயன் எதிர் கொண்டான்.

 

“சார் நீங்க சத்யன் சார் தானே...?”

 

“ஆமாம் ... மன்னிக்கணும் நீங்க யார்னு தெரியலியே..?” என்றான் சத்யன் கேள்வியாக

 

“சார் என்னுடைய பேர் உதயன் உங்களை அழைத்துக் கொண்டு போய் இன்று இரவு கெஸ்ட் ஹௌசில் தங்க வைக்க சொல்லி என்னுடைய பாஸ் அபி சொல்லி இருந்தார்... அது தான் உங்களை அழைத்துக்கொண்டு  போக வந்து இருக்கிறேன்.”

 

“எனக்கு உங்களை தெரியாதே....உங்களை நம்பி நாங்கள் எப்படி வருவது?”தயக்கத்துடன் மறுத்து பேசினான் சத்யன்.

 

“ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க....சார்க்கு கால் பண்ணி தரேன் நீங்களே பேசுங்க...அதன் பிறகு உங்களுக்கு என் மேல் நம்பிக்கை வரும் இல்லையா?” என்று சொன்னவன் கடகடவென போனை எடுத்து அபிமன்யுவிற்கு அழைத்துவிட்டு போனை சத்யனிடம் கொடுத்தான்.

 

போனை வாங்கி பேசிய சத்யனை எதிர் கொண்டது அபிமன்யுவின் ஆழ்ந்த குரல்.

 

“என்ன சத்யா...அவர் என்னோட பி.ஏ தான். நான் தான் உங்களை அழைத்துக்கொண்டு வருவதற்காக அனுப்பி வைத்து இருக்கிறேன்.தைரியமா அவரோட போங்க...”

 

“எதுக்கு சார் இதெல்லாம்...நான் இங்கே ஏதாவது ஒரு ஹோட்டலில் தங்கிக் கொள்ள மாட்டேனா...உங்களுக்கு எதற்கு வீண் சிரமம்?” தயங்கினான் சத்யன். அபிமன்யு செய்து இருக்கும் உதவியே பெரிது மேலும் மேலும் அவனுக்கு தொல்லை கொடுக்கிறோமோ என்ற கவலை சத்யனுக்கு.

 

“சத்யா...ப்ளீஸ் இந்த பார்மலிடீஸ் எல்லாம் வேண்டாம்.நான் தான் ஏற்கனவே  உங்களிடம் சொன்னேனே...சஹானா இனி என் பொறுப்பு என்று...இந்த நேரத்தில் நீங்கள் அவளை அழைத்துக் கொண்டு கண்ட இடத்தில் போய் தங்க வேண்டாம்.அது பாதுகாப்பும் இல்லை.சொன்னால் கேளுங்கள் சத்யா”

 

“இல்லை சார்...அது வந்து...”

 

“ஷ்...மறுபேச்சு பேச கூடாது..கிளம்பி உதயனுடன் செல்லுங்கள்...அப்புறம் சத்யா ஒரு முக்கியமான விஷயம் நான் சென்னை வருவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகும் போல இருக்கிறது...அதனால் உங்கள் தங்கையை விட்டு விட்டு நீங்கள் கிளம்புங்கள்.நான் உதயனிடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டேன் நீங்கள் பயப்படாமல் ஊருக்கு நாளை கிளம்புங்கள் சரிதானா...”

 

“இல்லை அபி சார்...நான் ஒரு ரெண்டு நாள் விஷ்வா கூட இருந்துட்டு தான் கிளம்புவேன்.புது இடம் இல்லையா இப்படி உடனே தனியா விட்டு போக மனசு இல்லை அதான்” என்று பேசிக் கொண்டே உதயனுடன் கிளம்பி அவன் வண்டியில் ஏறிக் கொண்டனர் சத்யனும் சஹானாவும்.

 

மேலும் சற்று நேரம் பேசி விட்டு போனை வைத்து விட்டான் சத்யன்.காரின் பின் இருக்கையில் சத்யனும் சஹானாவும் அமர்ந்து இருக்க முன் சீட்டில் டிரைவருடன் உதயன் அமர்ந்து வந்தான்.அவர்களின் காரை பின்னிருந்து அபிமன்யு வேறு காரில் தொடர்ந்து வந்ததை யாரும் அறியவில்லை.

 

கெஸ்ட் ஹௌசில் இருந்த வாட்ச்மேன் கதவை திறந்து விட அழகான அந்த குட்டி பங்களாவிற்குள் கார் நுழைந்தது.ஒருநாள் முழுக்க பயணித்து வந்து இருந்ததால் இருவருமே ரொம்ப அசதியாக உணர்ந்தனர்.பசி வேறு ஒருபுறம் வயிற்ரை கிள்ளியது.இனி எப்போது வெளியே சென்று உணவு வாங்கி வந்து எப்பொழுது சாப்பிடுவது என்ற யோசனையோடு நின்று இருந்தவர்களை கலைத்தது வீட்டின் உள்ளே இருந்து வந்த உணவின் மணம்.

 

“உள்ளே வாங்க சார்” என்று சத்யனிடம் சொல்லிவிட்டு பெட்டிகளை எடுத்து வருமாறு டிரைவரிடம் சொன்ன உதயன் வீட்டிற்குள் சென்றான்.அவனை பின் தொடர்ந்து வீட்டிற்குள் சென்றவர்களை முதலில் எதிர்கொண்டது உணவு மேசையும் அதில் இருந்த சாப்பாடு ஐட்டங்களும் தான்.

 

“சின்னாத்தா இங்கே வாங்க” என்று உதயன் குரல் கொடுத்ததும் உள்ளிருந்து நாற்பது வயதில் ஒரு பெண்மணி அங்கே வந்தார்.

 

“இவங்க இங்கே சமையலுக்காக இருக்காங்க...உங்களுக்கு சாப்பிட  என்ன வேணுமோ கேளுங்க..இவங்க செய்து தருவாங்க..சரிதானா” என்று சொல்லிவிட்டு வேறு ஏதேனும் வேண்டுமா என்று ஒரு முறைக்கு இருமுறையாக கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான் உதயன்.

 

அங்கிருந்து உதயன் கிளம்பியதும் பசி வேகத்தில் அண்ணனும் தங்கையும் திருப்தியாக உண்டு விட்டு கீழே இருந்த அறையில் சென்று உறங்க சென்றனர்.

 

அவர்கள் அறைக்குள் நுழைந்த அடுத்த நிமிடம் வீட்டு லேன்ட் லைனுக்கு போன் வர எடுத்து பேசிய சின்னத்தா சத்யனிடம் போனை கொடுத்தார்.

“என்ன சத்யா எல்லாம் வசதியாக இருக்கிறதா?வேறு ஏதேனும் தேவைபட்டால் கூச்சப்படாமல் கேளுங்கள் சரிதானா...”அபிமன்யுவின் குரல் தான்.

 

“ஐயோ இதுவே மிகப் பெரிய உதவி அபி சார்...இதுவரை நீங்கள் செய்ததே போதும்...மேலும் மேலும் என்னை கடனாளி ஆக்காதீர்கள்..”

 

“என்ன சத்யா...இப்படி பிரிச்சு பேசறீங்க...உங்க ஊருக்கு வந்த பொழுது எங்களை எப்படி பார்த்துக்கிட்டீங்க..அதுல பாதியாவது நான் திருப்பி செய்ய வேண்டாமா?”

 

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் ஹாலுக்கு வந்து இருந்த சஹானாவிடம் போனை கொடுத்து அபிமன்யுவிற்கு நன்றி தெரிவிக்க சொன்னான் சத்யன்.

 

போனை கையில் வாங்கிய சஹானா ஒரு நிமிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்து விட்டு , “ரொம்ப நன்றி சார்...நீங்க நிறைய உதவி செய்து இருப்பதாக அண்ணன் சொன்னாங்க...”

 

“உதவி தான் செய்து இருக்கிறேன் என்பதை மறக்காமல் என்னை நினைவில் வைத்து இருந்தால் போதும்....” என்று பூடகமாக கூறினான் அபிமன்யு.

 

அவளுக்கு அவன் சொல்லியது ஒன்றும் புரியாவிட்டாலும் , “சரிங்க” என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள் சஹானா...

 

தன்னை நேருக்கு நேராக பார்க்கும் பொழுது அவள் எப்படி ரியாக்ட் பண்ண போகிறாள்? அவளுடைய முகம் எப்படி மாறும்  என்பதை நினைத்தவன் உள்ளுக்குள் சிரித்தபடியே தன்னுடைய வீட்டிற்கு புறப்படலானான் அபிமன்யு.


 

Post a Comment

புதியது பழையவை