அத்தியாயம் 16
அபிமன்யு அதே ஊரில் இருந்து கொண்டே சத்யனை நேரில் சென்று பார்ப்பதை தவிர்த்து
வந்தான்.நேரில் அவனை பார்க்க கெஸ்ட் ஹௌசிற்கு போனால் அவனை மட்டுமா பார்க்க
முடியும் கூடவே இருக்கும் சஹானாவையும் இல்லையா பார்க்க வேண்டி இருக்கும்.
தன்னை நேரில் பார்த்த பிறகு சஹானா அதற்கு மேலும் இங்கேயே தங்க ஒத்துக்
கொள்வாளா என்பது சந்தேகமே ... சத்யா அங்கே இருக்கும் பொழுது அவனிடம் அபிமன்யுவை
பற்றி அவளது தவறான புரிதலை சொல்லிவிட்டாளோ அல்லது ஆத்திரத்தில் அவனுடன் சொந்த
ஊருக்கு திரும்பி விட்டாளோ அவள் இங்கே புறப்பட்டு வந்ததின் நோக்கமே நிறைவேறாமல்
போய்விட வாய்ப்பு உள்ளது என்று அபிமன்யு நினைத்தான்.
சகானாவிற்கு ஏற்கனவே சத்யன் ஏற்பாடு செய்து இருந்த அந்த ஹாஸ்டலை ஆயிரம்
குறைகள் சொல்லி அதில் போய் தங்க வேண்டும் என்ற எண்ணம் இருவர் மனதிலும் தோன்ற
முடியாத படி ஆயிரம் கேள்விகள் கேட்டு அதற்கு அவர்கள் சொன்ன தெளிவான பதிலையும்
குழப்பி விட்டு அவர்களை தன்னுடைய கெஸ்ட் ஹௌசிலேயே அடுத்த இரண்டு நாட்கள் தங்க
வைத்து இருந்தான் அபிமன்யு.
அபிமன்யு வர தாமதம் ஆனால் சத்யன் ஒருவேளை ஊரில் இருக்கும் வேலைப்பளு காரணமாக
அவளை விட்டு விட்டு சென்று விடுவான் என்று நினைத்துக் கொண்டு இருக்க, சத்யனோ
எத்தனை நாள் தாமதம் ஆனாலும் சரி நேரில் அபிமன்யுவை பார்த்து ஒரு வார்த்தை
சொல்லிவிட்டு சென்றால் தான் தன்னால் நிம்மதியாக இருக்க முடியும் என்பதால் அபிமன்யு
வராமல் அங்கிருந்து கிளம்ப மறுத்தான்.
அபிமன்யு வராமல் அவளை அவனுடைய அகாடமிக்கு தனித்து அனுப்பவும் சத்யன்
யோசித்தான்.புது இடத்திற்கு எப்படி சஹானாவை அபிமன்யு இல்லாத நேரத்தில் அனுப்புவது
என்பது அவனது எண்ணமாக இருந்தது.
இப்படியே இரண்டு நாட்கள் முடிந்து இருக்க அன்றும் வெளியே சென்று இரண்டு மூன்று
ஹாஸ்டல்களை பற்றி விசாரித்து வந்து இருந்தான் சத்யன். “வெளியே எங்கெல்லாமோ அலைய
வேண்டி இருக்கும்.உனக்கு எதற்கு வீண் அலைச்சல்” என்று கூறி சஹானாவை அழைத்து செல்ல
மறுத்து விட்டான் சத்யன்.
வீடு திரும்பிய அண்ணனின் முகத்தில் இருந்த களைப்பை பார்த்து சஹானாவிற்கு
உள்ளுக்குள் கொஞ்சம் குற்ற உணர்ச்சி தோன்றியது.தன்னால் தான் தேவை இல்லாமல்
அண்ணனுக்கு இத்தனை அலைச்சல் ஏற்படுகிறதோ என்று உள்ளுர வருந்தினாள்.
அந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து தினமும் காலை, மதியம், மாலை, இரவு என்று
எல்லா நேரத்திலும் அபிமன்யு போன் செய்து அவர்களுடன் பேசி அவர்களின் நலத்தை
விசாரித்துக் கொண்டு தான் இருந்தான்.அப்பொழுதும் அது போலவே பேச எண்ணி அழைத்தவனின்
போனை எடுத்து பேசியது சஹானா தான்.
“ஹலோ” என்ற ஒரு வார்த்தையில் தன்னவளை அடையாளம் கண்டு கொண்டவன் சிறிது நேரம்
அதில் லயித்து இருந்தவன் மெல்ல தன்னை மீட்டுக் கொண்டு அவளிடம் பேசத் தொடங்கினான்.
“இடம் எல்லாம் வசதியா இருக்கா ? உங்க அண்ணன் இன்று ஏதேனும் ஹாஸ்டல் பற்றி
விசாரித்தாரா?” என்று கேட்டான் ஒன்றும் தெரியாதவன் போல.
“இதோ இப்ப தான் வந்தாங்க சார்...என்ன ஆச்சுன்னு தெரியலை இனி தான்
கேட்கணும்...”
“சரி போனை சத்யாகிட்ட கொடுங்க...நான் அவர்கிட்ட பேசுறேன்.”
“சரிங்க சார்...”
போனை கையில் வாங்கிய சத்யன் இயல்பாக அபிமன்யுவிடம் உரையாட ஆரம்பித்தான்.ஏனோ
சஹானாவால் சத்யனை போல அபிமன்யுவிடம் இயல்பாக உரையாட முடியவில்லை.கிராமத்தில் அவள்
மற்ற வீட்டு ஆண்களுடன் பேச நினைத்ததும் கிடையாது,அவளது வீட்டில் அவளுக்கு அதற்கு சுதந்திரமும் கிடையாது.தெரிந்த
ஆட்களுக்கே இந்த நிலை எனில் இது வரை முகம் கூட அறியாத ஒருவரிடம் இயல்பாக பேசுவது
சஹானாவிற்கு கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது.
“அபி சார்....இன்னிக்கு போய் ஒரு ரெண்டு மூணு இடம் விசாரிச்சுட்டு வந்தேன்.
..................
ஆமா சார் உங்க அகாடமிக்கு பக்கத்தில தான் பார்த்தேன்.
........................
“ஓ ...அதெல்லாம் நல்லா விசாரிச்சுட்டேன் சார்...தண்ணீர் வசதி இருக்கு....நாமளே
வேணும்னாலும் சமைச்சு சாப்பிட்டுக்கலாம் இல்லேன்னா ஹாஸ்டல் மெஸ் இருக்கு அதுலயும்
சாப்பிட்டுக்கலாம்.ராத்திரி பத்து மணி வரை உள்ளே விடுவாங்க...தனி ரூம் வசதி
இருக்கு...எனக்கு என்னமோ இந்த அண்ணா நகர் ஹாஸ்டல் ஒத்துவரும்னு தோணுது...நாளைக்கு
போய் அதிலேயே சேர்த்து விடலாம்னு இருக்கேன்.”
“அதெல்லாம் சரி சத்யா... எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க...நானும் கொஞ்சம்
விசாரிச்சுட்டு சொல்றேன்...அதற்கு பிறகு அங்கே போய் சேர்ந்துக்கலாம்.”
“சரி சார்...நீங்க எப்போ வர்றீங்க சார்?”
“ஒரு நாளில் திரும்பி விடலாம் என்று தான் நினைத்தேன் சத்யா...ஆனால் பாருங்க
இங்கே வந்த இடத்தில் ஒரு சின்ன பிரச்சினை அது தான் கொஞ்சம் இழுக்குது...இன்னும்
ஒரு ரெண்டு நாள் ஆகும் போல...”உள்ளுரில் இருந்து கொண்டே பூசி மெழுகினான் அபிமன்யு.
“இன்னும் ரெண்டு நாள் ஆகுமா சார்?”சோர்ந்த குரலில் கேட்டான் சத்யன்.அங்கே
ஊரில் இருக்கும் வேலைகள் ஒருபுறம் என்றாலும்,தந்தையின் கோபத்திற்கு ஆளாகி விட்டால்
இந்த முறையும் அவர்களுக்கு தோல்வி தான் கிட்டும் என்ற எண்ணமே அவனுக்கு பயத்தைக்
கொடுத்தது.
“ஆமா சத்யா...நான் என்ன செய்ய இங்கே மாட்டிக்கிட்டேன்...நீங்க வேணும்னா
ஊருக்கு கிளம்புங்க சத்யா...”நயமாகப் பேசிப் பார்த்தான் சத்யன்.
“இல்லை சார் உங்களை நேரில் பார்த்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போனால் தான்
என்னுடைய மனசுக்கு நிம்மதியா இருக்கும்.நீங்கள் வரும் வரை நான் வெயிட் பண்ணுறேன்.”
“இங்கே இன்னும் லேட் ஆனா என்ன செய்வீங்க சத்யா...நீங்க கிளம்புங்க...சஹானாவை
நான் பார்த்துக்கிறேன்...”
“பரவாயில்லை சார் நான் காத்திருக்கிறேன்.நீங்க பொறுமையா வேலையை
முடிச்சுக்கிட்டு வாங்க...” என்று கூறி அந்த பேச்சை பிடிவாதமாக மறுத்து விட்டான்
சத்யன்.
இது சரிப்படாது என்ற முடிவுக்கு வந்த அபிமன்யு மாலை சத்யன் மட்டும் தனியே
கிளம்பி வெளியே செல்வதை பார்த்துவிட்டு அவன் வீட்டை விட்டு கிளம்பி ஒரு அரை மணி
நேரம் ஆன பிறகு சத்யனின் மொபைலுக்கு அழைப்பு விடுத்து அவனுடைய அகாடமிக்கு உடனடியாக
புறப்பட்டு வர சொன்னான்.
“வீட்டிற்கு போய் சஹானாவை கூட்டிகிட்டு வரேன் சார் ஒரு அரை மணி நேரத்தில்
வந்து விடுவேன்...”
‘ஆஹா அது சரிப்படாதே’ என்று உள்ளுக்குள் நினைத்தவன் , “ இல்லை சத்யா...நான்
இன்னும் ஒரு கால் மணி நேரம் தான் இருப்பேன்.எனக்கு ஒரு அர்ஜென்ட் வேலை
இருக்கு...நான் மறுபடி கிளம்பி ஆகணும்...உங்களுக்காக தான் இப்பொழுது வந்து
இருப்பதே...அதனால் இதற்கு மேலும் தாமதம் ஆக்காமல் கொஞ்சம் சீக்கிரம் வந்தீங்கன்னா
நல்லா இருக்கும்.”
‘ஏற்கனவே தன்னால் அபிமன்யுவிற்கு தேவை இல்லாத தொல்லையோ என்ற மன வருத்தத்தில்
இருந்த சத்யன் மறுபேச்சு பேசாமல் அபிமன்யுவின் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான்.
ஏற்கனவே சொல்லி வைத்து இருந்ததால் செக்யூரிட்டி முதல் பி.ஏ வரை அனைவரும்
தகுந்த மரியாதையுடன் சத்யனை உள்ளே அழைத்து செல்ல அந்த இடத்தின் அழகையும்
பிரமாண்டத்தையும் அது பராமரிக்கப்பட்டு வரும் விதத்தையும் கண்டு வியந்து பார்த்துக் கொண்டு இருந்தான் சத்யன்.
சத்யனை பார்த்தவுடன் எந்த பீடிகையும் இல்லாமல் நேரடியாக பேச தொடங்கினான்
அபிமன்யு.
“சத்யா...இன்னிக்கு நீங்க சொன்ன அந்த ஹாஸ்டல் பத்தி எல்லாம் நல்லா
விசாரிச்சுட்டேன்....ஆனா அது எதுவும் வேண்டாம் சத்யா..”
“ஏன் சார்...எல்லாமே நல்லா வசதியா தானே இருக்கு...”
“இல்லை சத்யா..நான் விசாரித்த வரை அதில் ஒன்று ஒரு அரசியல்வாதிக்கு
சொந்தமானது...இன்னொன்றில் போன வாரம் கூட ஒருத்தன் ஹாஸ்டல் சுவர் ஏறி உள்ளே
குதித்து இருக்கிறான்.மூன்றாவது இருக்கும் இடம் ஒரு பிரபல ரௌடியின் வீட்டிற்கு
பக்கத்திலேயே இருக்கிறது...அங்கெல்லாம் நம்ம வீட்டு பெண் தங்க வேண்டுமா...அதனால்
தான் வேண்டாம்னு சொல்றேன்...”
கொஞ்சம் யோசித்து விட்டு , “சரி சார்...நான் நாளைக்கு வேறு இடம்
பார்க்கிறேன்...”
“சத்யா...நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க...பேசாம உங்க தங்கச்சி
என்னோட கெஸ்ட் ஹௌசிலேயே தங்கி கொள்ளட்டுமே...அது சும்மா தான் இருக்கு..”
“இல்லை சார்...அதெல்லாம் சரி வராது...” என்று சத்யன் உடனே பதட்டமாக மறுத்தான்.
“ஏன் சத்யா...அதில் என்ன பிரச்சினை உங்களுக்கு..சும்மா..உங்களுக்கு தொந்தரவு அப்படி
இப்படின்னு காரணம் சொல்லாதீங்க....எனக்கும் சஹானா அங்கே தங்கினால் அவர்களை
பத்திரமாக பார்த்துக் கொள்வது வசதி...எந்நேரமும் என்னுடைய கண் பார்வையில்
இருப்பார்கள்...மேலும் தினமும் நானே அவர்களை என்னுடைய காரில் அழைத்துக்கொண்டு
வந்துவிட்டு மீண்டும் வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டு விடுவேன்...நீங்கள்
வெளியில் ஆயிரம் இடம் பார்க்கலாம் சத்யன்..ஆனால் அதில் எந்த பிரச்சினையும்
இப்பொழுது இல்லாமல் இருக்கலாம் .ஆனால் பின்னாளில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால்
என்ன செய்வது...நானும் சூட்டிங்கிற்காக அடிக்கடி வெளியூரோ அல்லது வெளிநாடோ செல்ல
வேண்டி இருக்கலாம்.அந்த நேரத்தில் சஹானாவுக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் என்ன
செய்வது?அதனால் தான் சொல்கிறேன்...”
“இல்லை சார்...அது சரிபடாது...”
“ஏன் சத்யா...என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா...நான் சரியாக பார்த்துக்
கொள்ள மாட்டேன் என்று நினைக்கறீங்களா???”
“ஐயோ...அப்படி எல்லாம் இல்லை சார்...”என்று தயங்கிய சத்யனை என்ன என்னவோ சொல்லி
சம்மதிக்க வைத்தான் அபிமன்யு.கிளம்பும்
முன் மறக்காமல் சத்யன் நாளை ஊருக்கு கிளம்புவதை உறுதி செய்து கொண்டான் அபிமன்யு.
வீட்டிற்கு போனதும் சத்யன் கூறியதை கேட்டு முதலில் மறுத்து பேசிய சஹானா தான் தொடர்ந்து
அந்த வீட்டிலேயே தங்க ஒத்துக்கொள்ளவில்லை.ஆனால் அப்படி தான் மறுப்பதால் சத்யன்
மேலும் சில நாட்கள் இங்கேயே தங்கி அலைவதோடு மட்டும் அல்லாமல் தந்தையிடமும் இன்னும்
ஊருக்கு வராமல் இருப்பதற்கு வாங்கிக் கட்டிக் கொள்ளுவான் என்பதால் பிறகு தன்னை
தானே சமாளித்துக் கொண்டு அங்கேயே தங்க ஒத்துக் கொண்டாள்.
மறுநாள் சத்யன் காலையிலேயே தங்கைக்கு வேண்டியது வேறு ஏதேனும் இருக்கிறதா என்று
மீண்டும் ஒரு முறை கேட்டு விசாரித்து விட்டு அவளுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி
கொடுத்துவிட்டு தங்கைக்கு ஒரு புது மொபைல் போனும் வேறு சில அத்தியாவசிய
பொருட்களையும் வாங்கி கொடுத்தவன் அன்று காலை பத்து மணி ட்ரெயினில் கிளம்பி ஊருக்கு
போய் விட்டான்.கிளம்பும் முன் அண்ணனாக ஆயிரம் அறிவுரைகள் சொல்லவும் அவன்
மறக்கவில்லை.
ஸ்டேஷன்னுக்கு கூட வருவதாக சொன்ன சஹானாவை மறுத்து விட்டு தான் மட்டும் கிளம்பி
ஊருக்கு சென்று விட்டான் சத்யன்.போகும் வழி எல்லாம் தங்கையே நினைவை ஆக்கிரமித்து
நின்றாலும் அவளின் மனதை அறிந்தவன் ஆதலால் அவள் எண்ணம் ஈடேற இறைவனை வேண்டியபடியே
ஊருக்கு சென்று கொண்டு இருந்தான் சத்யன்.
சத்யன் கிளம்பி விட்டதை உறுதிபடுத்திக் கொண்டு வீட்டிற்கு அழைத்தான்
அபிமன்யு.எதிர்பார்த்தது போல சஹானாவே போனை எடுக்க அபிமன்யு அவளிடம் சந்தோசமாகவே
பேசலானான்.
“என்ன சஹானா...அண்ணன் கிளம்பி ஊருக்கு போய்விட்டான் என்று வருத்தமாக
இருக்கிறதா?”
“அதெல்லாம் ஒன்றும் இல்லை சார்...”
“சரி இன்று முதல் வேலையில் சேர்ந்து கொள்றீங்களா???இல்லை இன்னும் ஒரு ரெண்டு
நாள் ரெஸ்ட் எடுத்துக்கறீங்களா?”
“இல்லை சார்...இன்னிக்கே வரேன்...”
“சந்தோசம் வீட்டிற்கு காரை அனுப்பி வைக்கிறேன்...அதிலேயே வந்து
விடுங்கள்...சரிதானா...”
“சரி சார்...”
“வேறு ஏதேனும் சொல்ல வேண்டுமா?”
“ஒன்றும் இல்லை சார்...போனை வைத்து விடட்டுமா...”
“சரி ...கார் வீட்டிற்கு பத்து மணிக்கு வரும் கிளம்பி ரெடியா இருங்க..” என்று
சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.
இதுவரை போனில் மட்டுமே பேசிப் பழகிய அபியை நேரில் பார்க்க போகிறோம் என்ற
பதட்டம் எதுவும் சஹானாவிற்கு இல்லை.அதற்கு பதிலாக அங்கே இருக்கும் புது மனிதர்கள்
பற்றிய எண்ணமும் தன்னுடைய எண்ணம் நல்லபடியாக ஈடேறுமா? என்ற கவலையும் தான்
அவளுக்கு.
இங்கே அபிமன்யு துள்ளி குதித்துக்கொண்டு இருந்தான்.இன்று அவளை நேருக்கு நேராக
பார்க்க போகிறேன்...என்னை பார்த்ததும் அவள் முகம் எப்படி மாறப் போகிறது என்று
பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சந்தோசமாக கிளம்பி அவள் வருவதற்கு
முன்னரே அங்கே போய் அவளுக்காக காத்திருக்க தொடங்கினான்.
கருத்துரையிடுக