அத்தியாயம் 17
வழக்கமாக வரும் நேரத்தை விட சற்று முன்னதாகவே வந்து சஹானாவிற்காக காத்துக்
கொண்டு இருந்தான் அபிமன்யு. கடிகார முள் நகராமலே நிற்பது போல அவனுக்கு தோன்ற
அடிக்கடி மணியை சரிபார்த்துக் கொண்டே இருந்தான்.அவள் இன்னும் வந்தபாடில்லை.எப்படி
வருவாள்? அவளை பத்து மணிக்கு வர சொல்லிவிட்டு இவன் எட்டு மணிக்கே அல்லவா வந்து
உட்கார்ந்து இருக்கிறான். இதில் இடையிடையே கடிகாரத்திற்கு திட்டு வேறு...
தன்னை நினைத்து அவனுக்கே வியப்பாக இருந்தது.இந்த ஒருவாரத்தில் தனக்குள் இப்படி
ஒரு மாற்றமா? இதற்கு முன் இப்படி உன்னுடைய எதிர்காலத்தில் நீ இப்படி எல்லாம் ஒரு
பெண்ணுக்காக மாறி விடுவாய் என்று யாராவது சொல்லி இருந்தால் கண்டிப்பாக அவர்களின்
பேச்சை அவன் கொஞ்சமும் காதில் வாங்கி இருக்க மாட்டான்.இன்றோ உலகமே தலைகீழாக அல்லவா
மாறிவிட்டது.
அவனை அதிகம் சோதிக்காமல் சரியாக பத்துமணிக்கு உள்ளே நுழைந்தாள் சஹானா.
வெள்ளையில் நீல நிற பூக்கள் அணிவகுத்து நிற்பதை போன்ற ஒரு சுடிதாரில் அழகிய பூவை
போல இருந்தாள் சஹானா.அதிக அலங்காரம் என்று எதுவும் இல்லை.நீண்ட பின்னல் அசைந்தாட
உள்ளே வந்தவளை அங்கே வாசலில் இறக்கிவிட்டு விட்டு டிரைவர் சென்று விட எந்த பக்கம்
செல்வது என்று புரியாமல் முதல் நாள்
பள்ளிக்கு போகும் குழந்தையை போல முகத்தை வைத்துக் கொண்டு பாவமாக நின்று கொண்டு
இருந்தாள் சஹானா.
சிசி டிவி கேமராவின் வழியாக அவளின் ஒவ்வொரு அசைவையும் தனக்குள் உள் வாங்கியவன்
தன்னுடைய மொபைலை கையில் எடுத்து பேச ஆரம்பித்தான்.அடுத்த நிமிடம் அவள் முன்பு
உதயன் நின்று கொண்டு இருந்தான்.
“வாங்க மேடம்...உங்களை உள்ளே அழைத்துக் கொண்டு வர சொல்லி பாஸ்
சொன்னார்...வாங்க போகலாம்”
அவளை அழைத்துக் கொண்டு ரிசப்ஷனுக்கு அழைத்து சென்றவன் அங்கிருந்த பெண்ணிடம்
சஹானாவை அறிமுகப் படுத்தி வைத்தான்.தன்னை நோக்கி நட்பாக சிரித்த அந்த பெண்ணை
சஹானாவிற்கு மிகவும் பிடித்து விட்டது.தன்னை சுற்றி ஆண்கள் மட்டும் தான் வேலை
பார்ப்பார்கள் என்று எண்ணி அவள் வந்திருக்க அங்கே ஒரு பெண்ணை கண்டதும் அவளின் அகம்
மலர்ந்தது.
பின்னர் உதயன் அந்த அகாடமியின் ஒவ்வொரு தளத்தையும் அவளுக்கு சுற்றிக்
காட்டினான்.ஒவ்வொரு இடத்தையும் அழகுற வடிவமைக்கப்பட்டு இருந்த விதத்தையும் வெகுவாக
ரசித்தவள் இதை எல்லாம் உருவாக்கியவனின் கலா ரசனையை உள்ளுக்குள் பாராட்டிக்
கொண்டாள்.
எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டியபடியே உதயன் அவளுக்கு அபிமன்யுவிற்கு
தொழிலின் மீது இருக்கும் அளவு கடந்த காதலைப் பற்றியும் ,அவனது கண்டிப்பு நிறைந்த
குணத்தையும்,நடனத்தில் ஆர்வம் மிகுந்த ஏழைக் குடும்பத்தினருக்கு பணம் வாங்காமல்
நடனம் சொல்லித் தருவது குறித்தும் பேச்சு வாக்கில் சொல்லிக் கொண்டே வர அபிமன்யுவை
பார்க்கும் முன்னரே அவன் மீது நல்ல மதிப்பு வந்துவிட்டது சஹானாவுக்கு.
எல்லா இடத்தையும் சுற்றி வந்தவளை கடைசியாக அபிமன்யுவின் அறைக்கு வெளியே நிற்க
வைத்து விட்டு , “இது தான் பாஸ் ரூம் மேடம்...நீங்க போய் பாருங்க...” என்று
சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான் உதயன்.
இதற்கு முன் பலமுறை போனில் பேசி இருந்தாலும் முதல் முறையாக இப்பொழுது தான்
அவரை பார்க்க போகிறோம் என்ற நினைவில் தன்னுடைய மனதை பதட்டப் படாமல் சமாளித்து
விட்டு அறை கதவை மெலிதாக தட்டினாள்.
“எஸ் கமின்” என்று உள்ளிருந்து ஒரு கம்பீரமான குரல் அவளை வரவேற்றது.
கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவளின் பார்வையில் பட்டது பேப்பரில் முகத்தை
மறைத்தவாறு அமர்ந்து இருந்தவன் தான்.முகத்தில் இருந்து பேப்பரை எடுக்காமல்
அப்படியே அவளிடம் பேசலானான் அபிமன்யு.
“உட்கார் சஹானா....” அவன் சொன்னதும் மறுத்து பேசாமல் எதிரில் அமர்ந்தாள்.
“வீட்டிலே எல்லாம் வசதியாக தானே இருக்கு ...ஏதாவது குறை இருக்கா?”
“அய்யயோ!!!! அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார்...நான் நல்லா சந்தோசமா இருக்கேன்.”
“வேறு ஏதாவது இங்கே உனக்கு பிரச்சினை என்றால் தயங்காமல் என்னிடம் இப்பொழுதே
சொல்லி விடு...”
“உங்கள் பாதுகாப்பில் இருக்கும் பொழுது என்ன குறை சார்...எல்லாம் சரியாகவே
இருக்கிறது...”
“நிச்சயமாக...”
“ஆமா சார்..”
“சரி அப்படின்னா இன்னைல இருந்தே வேலைக்கு சேர்ந்துக்கறீங்களா” என்று கேட்ட
படியே மெதுவாக முகத்தை மறைத்து இருந்த பேப்பரை எடுத்து விட்டு ரோலிங் சேரில்
நன்றாக சாய்ந்து அமர்ந்தவாறு கேட்டான்
அபிமன்யு.
அபிமன்யுவின் முகத்தை பார்த்ததும் சஹானாவின் முகத்தில் தென்பட்ட அதிர்ச்சியின்
அளவை வார்த்தைகளில் சொல்லித் தெரிய
வேண்டியது இல்லை.
“நீயா?” என்று கேட்டவள் அதிர்ந்து போய் உட்கார்ந்து இருந்த சேரை விட்டு
எழுந்து நின்றாள்.
“அது கமல் நடிச்ச படம் இல்ல...ரொம்ப பழைய படம் ஆச்சே...” அவளின் அதிர்ச்சியை
போக்க அவளை சீண்ட ஆரம்பித்தான் அபிமன்யு.
அவனின் சீண்டலில் தன்னை சமாளித்தவள் அவனை கோபமாக முறைத்தவாறே அங்கிருந்து
வெளியேற முயன்றாள்.
“என்ன பதிலை காணோம்...என்ன அன்னிக்கு உங்க ஊரில் பேசும் போது அப்படி வாய்
கிழிய பேசின...இப்போ எதுக்கு இப்படி பயந்து ஓடுற? நான் தான் அன்னிக்கே
சொன்னேனே...நீ என்னை பார்த்து பயப்படுறன்னு... எங்கே நீ தான் ஒத்துக்கொள்ளவே
மாட்டேன்னு அடம் பிடிக்கிறியே...சரி சரி... எனக்கு ஏற்கனவே தெரியும் உன்னை மாதிரி
எல்லாம் பட்டிகாடு எல்லாம் இங்கே வேலை பார்க்க முடியாது என்று...கிளம்பு
கிளம்பு... போறதுக்கு முன்னாடி நீ என்னை பார்த்து பயந்துட்டன்னு ஒத்துக்கிட்டு
அப்படியே உங்க ஊர்ல வச்சு என்னை திட்டினதுக்கு ஒரு சாரி சொல்லிட்டு அப்புறமா கிளம்பு...
”அமர்த்தலான குரலில் கூறினான்.
வெளியே செல்வதற்காக கதவின் கைப்பிடியில் கை வைத்தவள் நிதானித்தாள். ‘இவன்
சொல்கிறான் என்று இவனிடம் நான் மன்னிப்பு கேட்டு கிளம்பி விட்டால் அதன் பிறகு
எங்கே போவது? ஊருக்கா?’
‘அப்படி மீண்டும் திரும்பி ஊருக்கு போய் விட்டால் ...அதன் பிறகு என்ன
நடக்கும்? நான் எதற்காக இங்கே வந்தேன்...இவனுக்காக எல்லாம் நான் திரும்பி போனால்
என்னுடைய காரியம் எப்படி நிறைவேறும்?’.கதவின் கைப்பிடியில் கை வைத்த படியே
உள்ளுக்குள் பலத்த யோசனையில் இருந்தாள் சஹானா.
அவளின் ஒரு நிமிட யோசனையை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு மேலும் பேசினான்
அபிமன்யு. “உனக்கு இன்னிக்கு ட்ரைன்லயே டிக்கெட் புக் பண்ணிடறேன்.நீ ஊருக்கு போய்
உங்க அண்ணனிடம் நீ இத்தனை நாள் அலைந்து திரிந்தது எல்லாம் வீண்... எனக்கு அங்கே
இருக்க பிடிக்கவில்லை என்று சொல்லு...மறுபடி வேண்டுமானால் வந்து உன் அண்ணன் உன்னை
வேறு இடத்தில் வேலைக்கும் ஏற்பாடு செய்து விட்டு முன்பு போலவே நல்ல ஹாஸ்டல் தேடி
அலைந்து அதையும் கண்டுபிடிக்கட்டும்....
என்ன ஒன்று நேற்று உன் அண்ணனிடம் போனில் பேசியபோதே அவர் சொன்னார் ஊரில் நிறைய
வேலை இருக்கிறது அதனால் அடிக்கடி அப்பா போன் பண்ணி கூப்பிட்டுகிட்டே இருக்கார்னு
சொன்னார்... அதனால் உடனே வர முடியா விட்டாலும் அட்லீஸ்ட் ஒரு நாலு,ஐஞ்சு மாசம் கழிச்சு வந்து
உன்னை மறுபடி சென்னை கூட்டிக்கொண்டு வருவார்.” சரியான இடத்தில் அடித்தான்
அபிமன்யு.
ஊருக்கு கிளம்பும் முன் சத்யன் சொன்ன வார்த்தைகளை நினைவு கூர்ந்தவள் உறுதியான
முடிவோடு திரும்பி அவனுக்கு எதிரில் வந்து அமர்ந்தாள்.
“எனக்கு இங்கே என்ன வேலை?”
“என்னை பார்த்துகிறது தான் உன் வேலை....”
“என்ன” கண்கள் ஆத்திரத்தில் சிவக்க கேள்வி கேட்டாள்.
“அதாவது... எனக்கு கம்பெனி கொடுக்கணும்...எங்கே போனாலும் கூடவே வரணும்...வேறு
எதற்கும் இல்லை பேச்சு துணைக்கு தான்...”
“இதெல்லாம் ஒரு வேலையா”
“உனக்கு ... இங்கே.... இது தான் வேலை...” ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி
நிதானமாக சொன்னான்.
“உன் முகத்தை நான் எப்படி சகிச்சுப்பேன்... கொஞ்ச நேரம் பார்க்கிறதே
கஷ்டம்...இதிலே நாள் முழுக்க உன்னை எப்படி சகிச்சுகிறது?” பட்டென சொன்னாள் சஹானா.
“வேணும்னா சத்யனுக்கு போன் பண்ணி தரேன் ... அவர்கிட்ட சொல்லிட்டு இப்பவே ஊருக்கு போறியா?” அமர்த்தலாக வினவினான்.
அவனின் கேள்விக்கு மறுத்து பேச முடியாமல் பல்லை கடித்தாள் சஹானா.அவளுக்கு
தெரியும் இந்த வாய்ப்பை விட்டால் மறுபடி இது போன்ற ஒரு வாய்ப்பு அவளுக்கு
கிடைப்பது அரிது.மேலும் மீண்டும் திரும்பி ஊருக்கு போனால் சத்யன் ஒன்றும் சொல்ல
மாட்டான் தான்.
மறுபடியும் அவன் அலைந்து திரிந்து இவளுக்கு வேறு ஒரு மாற்று ஏற்பாடை செய்ய
வேண்டும்....அதற்கு அவன் கிளம்பினாலும் அவனுடைய தந்தை விட மாட்டார்.அவருக்கு லேசாக
சந்தேகம் வந்தால் கூட காரியம் கெட்டு விடும் என்பதால் பல்லை கடித்து அமைதி
காத்தாள்.
“இன்றைக்கு முதல் நாள் இல்லையா போய்
நடராஜரை வணங்கி விட்டு வா...அதோ எதிரில் இருப்பது தான் உன்னுடைய சீட்...இனி அங்கே
தான் இருக்க வேண்டும்.சரியாக ஒரு மணிக்கு சாப்பாடு நேரம்...பிறகு ஐந்து மணிக்கு நீ
கிளம்பி விடலாம்....ஸ்டுடண்ஸ் பிராக்டிஸ் பண்ணினாஅவங்க அதற்கு மேலே கூட இங்கேயே
இருப்பாங்க...வேறு ஏதாவது தெரியணுமா? உன்னோட வேலையை பத்தி....என்னை பத்தி?”
ஒன்றும் பதில் பேசாமல் மௌனமாக அமர்ந்தவளை பார்த்தவனின் மனதில் பாரமாக
இருந்தது.அபிமன்யுவிற்கு வேறு வழி தெரியவில்லை.அவளிடம் இதமாக எடுத்து சொன்னால்
நிச்சயம் அவள் இப்பொழுது இருக்கும் மனநிலையில் கண்டிப்பாக புரிந்து கொள்ள
மாட்டாள்.அவள் இங்கே இருக்க வேண்டுமானால் அவளை உசுப்பேற்ற வேண்டும்.அது தான்
அவனுக்கு தெரிந்து இப்பொழுது இருக்கும் ஒரே வழி.அதை தான் அவன் கையாண்டான்.
கருத்துரையிடுக