Kadhal kathakali tamil novels 18

 

 

 

அத்தியாயம்  18

சரியாக ஒரு மணிக்கு அவள் முன்னே வந்து நின்றான் அபிமன்யு.கேள்வியாக நிமிர்ந்து பார்த்தவளிடம், “சாப்பாடு நேரம் ஆச்சு இல்ல...சாப்பிட வேணாமா... எழுந்திரு” என்றான்.

 

"நான் சாப்பாடு கொண்டு வரவில்லை...வெளியே போய் சாப்பிட்டு விட்டு வருகிறேன்”

 

“அதெல்லாம் வேண்டாம் ...என்னோடு சேர்ந்து சாப்பிடு...”

 

“அதெல்லாம் முடியாது...”

 

“இதோ பார் என்னோடு கூடவே இருப்பது தான் உன் வேலை என்பதை மறந்து விடாதே...என்னால் தனியாக எல்லாம் சாப்பிட முடியாது...வா” என்று சொல்லிவிட்டு அவளின் பதிலுக்காக காத்திருக்காமல் அங்கிருந்து சென்று பக்கத்தில் இருந்த அவனுடைய தனி அறைக்குள் புகுந்து கொண்டான்.

 

‘திமிர் பிடித்தவன்....இவன் சொன்னா உடனே நான் கேட்கணுமா...’ என்ற எண்ணத்தோடு அங்கிருந்து நகராமல் அப்படியே அமர்ந்து இருந்தாள் சஹானா.எண்ணி ஐந்தாவது நிமிடம் அவளது அண்ணனிடம் இருந்து போன் வந்தது.அண்ணனிடம் இருந்து போன் வந்ததும் எல்லா கவலைகளையும் மறந்து விட்டு ஆவலுடன் பேச ஆரம்பித்தாள் சஹானா.

 

“அண்ணா” ஏதோ அண்ணனை பிரிந்து பல நாள் ஆனது போல அவளது குரல் தளுதளுத்தது.

“விஷ்வா...” சத்யனுக்கும் அதே நிலை தான் என்பது அவனின் குரலிலேயே தெரிந்தது.இருவரில் முதலில் சுதாரித்தது சத்யன் தான்.

 

“வேலைக்கு போய் விட்டாயா?”

 

“ம் வந்து விட்டேன் அண்ணா...” அபிமன்யு இருக்கும் இடத்தில் தன்னால் இருக்க முடியாது என்று அண்ணனிடம் சொல்லலாமா என்று யோசித்தாள் சஹானா.

 

“அபிமன்யு சார் போன் பண்ணினார் அம்மா....அவர் வீட்டில் இருந்து கொண்டு வந்து இருக்கும் சாப்பாட்டை வேண்டாம் என்று சொல்லி விட்டாயாமே... என்னிடம் சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார் விஷ்வா...”

 

‘யார் அவன் தானே?...ரொம்பவும் வருந்தி இருப்பான் தான்.’ என்று மனதுக்குள் நினைத்தவள் அண்ணனின் மனம் கோணாமல் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கையில் சத்யனே மேலும் தொடர்ந்து பேசினான்.

 

“அவர் போல ஒரு நல்ல மனிதனை பார்ப்பது அரிது விஷ்வா...அவர் எது செய்தாலும் அதில் உனது பாதுகாப்பும் நன்மையும் தான் இருக்கும்.அவர் வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவு தானே விஷ்வா...உன்னை தனியாக வெளியே சாப்பிட அனுப்பினால் அவருக்கு பாதுகாப்பாக தோன்ற வில்லையாம். உனக்காக எவ்வளவு யோசிக்கிறார் பாரேன்...”

 

சத்யனிடம் இருந்து மேலும் அபிமன்யுவின் புராணத்தை கேட்க முடியாமல் விட்டால் போதுமென்று அபிமன்யுவுடன் சேர்ந்து சாப்பிட ஒத்துக் கொண்டாள்.அண்ணனிடம் பேசி போனை வைத்து விட்டு வேண்டா வெறுப்பாக தான் கிளம்பினாள் சஹானா.

 

அவளின் வரவை எதிர்பார்த்தவன் போல ஒன்றுமே பேசாமல் அமைதியாக அமர்ந்து இருந்தான் அபிமன்யு.அவனை மனதில் திட்டிக்கொண்டே அவனுக்கு எதிரில் அமர்ந்தாள் சஹானா.

 

“என் அண்ணனை உங்கள் கைக்குள்ள போட்டுக்கிட்டு அவனை உங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கறீங்களா”

 

“உன்னை தான் கைக்குள்ள போட்டுக்க முடியல... உங்க அண்ணனையாவது கைக்குள்ள போட்டுக்கிறேனே” அமர்த்தலாக பதில் சொன்னான் அபிமன்யு.

 

“அது இந்த ஜென்மத்தில நடக்காது.”எரிச்சலாக பதில் சொன்னாள் சஹானா.

 

“சரி வேணும்னா இப்படி செய்யலாமா? உங்க அண்ணனை நான் விட்டு விடறேன்.அதற்கு பதிலா என்னை நீ உன் கைக்குள்ளே போட்டுக்கோ ...உன்  இஷ்டத்துக்கு ஆட்டி வை...என்னை பழி வாங்கலாம் சரிதானா?”நமுட்டு சிரிப்பை அடக்கியபடி பேசினான்.

 

“ஒரு மண்ணும் வேணாம்” கோபத்தில் உதடு துடிக்க பேசினாள்.

 

“சரி முதலில் உட்கார்ந்து சாப்பிடு...நாம் தான் இனி பேசிக் கொண்டே இருக்க போகிறோமே”தட்டை எடுத்து அவளுக்கு சேர்த்து பரிமாறிக் கொண்டே சாப்பிட்டான்.

“பிரைடு ரைஸ் போடவா? இந்தா இன்னும் கொஞ்சம் காளிஃபிளவர் வச்சுக்கோ... வேற என்ன வேணும்? ஜூஸ் குடிக்கறியா? ஐஸ்கிரீம் கொண்டு வரட்டுமா?” என்று அபிமன்யு அவளை விழுந்து விழுந்து கவனித்தான்.அவளுக்கு தான் அது எதுவும் பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு விட்டு எழுந்தாள்.அறையை விட்டு வெளியேற முயன்றவளை தடுத்து நிறுத்தினான் அபிமன்யு.

 

“சாப்பிட்ட உடனே நான் போய் எப்படி வேலை பார்ப்பேன்...கொஞ்ச நேரம் கழிச்சு தான் போவேன்...அது வரை என்னோடு பேசிக்கொண்டு இரு”

 

‘அழிச்சாட்டியம் பண்ணுறானே...’என்று மனதுக்குள் அவனை திட்டியவாறே அங்கே அமர்ந்தாள் சஹானா.

“சரி உன்னை பத்தி சொல்லு...உனக்கு என்ன பிடிக்கும்...பிடிக்காது?”

 

“அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது.”

 

“நான் இப்போ உனக்கு பாஸ் என்பது உனக்கு மறந்துடுச்சு போல...நான் கேட்டால் பதில் சொல்லணும். புரிந்ததா?”அழுத்தமாக சொன்னான் அபிமன்யு.

 

‘கேட்ட இல்ல சொல்றேன் இரு’ என்று மனதில் கறுவியவள், “எனக்கு நீ இல்லாத இடத்தில் இருக்க பிடிக்கும். நீ இருக்கும் இடத்தில் இருக்க பிடிக்காது போதுமா?”

 

என்ன தான் எதிர்பார்த்த ஒரு பதில் என்றாலும் அபிமன்யுவின் மனதில் வலி எழத் தான் செய்தது.நொடியில் தன்னை சமாளித்தவன் மீண்டும் அவளிடம் பேசினான்.

“வேறு எதுவும் உனக்கு பிடித்தது இல்லையா”அவளையே கூர்ந்து பார்த்தவாறு கேட்டான் அபிமன்யு.

 

பார்வையை அவன் முகத்தில் இருந்து திருப்பி கொண்டவள் இல்லை என தலையை மட்டும் ஆட்டினாள்.

 

“நான் உனக்கு உதவி செய்யத்தான் முயற்சிக்கிறேன்.அதை கொஞ்சம் புரிந்து கொள் சஹானா”

 

“உன் மூலமாக எந்த உதவியும் எனக்கு வேண்டாம்.”

 

“இப்பொழுது தானே சொன்னேன்..என்னிடம் மரியாதையாக பேச வேண்டும்.நான் உன்னுடைய முதலாளி...இது என்ன கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லாமல் நீ, வா போன்னு உன் இஷ்டத்திற்கு பேசற...”அதட்டலாக ஒலித்தது அபிமன்யுவின் குரல்.

 

அவனுடைய அதட்டலில் கண் கலங்கினாலும் அவன் சொல்வதும் சரி தானே. ஆயிரம் தான் இருந்தாலும் இப்பொழுது தான் இருப்பது அவனுடைய நிழலில் அதுவும் அவனிடம் வேலை பார்த்துக் கொண்டே எப்படி அவனுக்கு மரியாதை கொடுக்காமல் இருக்க முடியும்.

 

“சாரி சார்...இனி இப்படி நடக்காது..” என்றாள் பொங்கி வந்த அழுகையை கட்டுபடுத்திக் கொண்டு.

 

“அப்படி கூப்பிடாதே”

 

“வேறு எப்படி கூப்பிடறதுன்னும் நீங்களே சொல்லிட்டா தேவலை.” முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

அவளின் கோபத்தை ரசித்தவாறே பேசலானான்.“எங்கே அதை எல்லாம் சொன்னால் தான் உதைக்க வருவாய் போல இருக்கே...”

 

அவளின் முறைப்பை கண்டதும், “சரி சரி கண்ணை உருட்டாதே...அபின்னு சொல்லு”

 

“சம்பளம் கொடுக்கும் முதலாளியை பேர் சொல்லி கூப்பிடுவது  மட்டும் மரியாதையா?” இடக்காக கேள்வி கேட்டாள் சஹானா.

 

“என்னுடைய அனுமதியின் பேரில் தானே கூப்பிடுகிறாய்...பரவாயில்லை அப்படியே கூப்பிடு...” பெரிய மனது பண்ணி ஏதோ விட்டு கொடுத்து பேசுவது போல சொன்னான்.

 

“முடியாது” நிர்தாட்சண்யம் இன்றி மறுத்தாள் சஹானா.

 

“சரி உன்னிஷ்டம்...கொஞ்ச நேரம் ஓய்வு எடு... சாயந்திரம் உன்னை எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறேன்.”

 

“இப்ப என்ன செய்து வெட்டி முறிச்சுட்டேன்னு என்ன ரெஸ்ட் எடுக்க சொல்றீங்க”

 

“நீ இப்ப ரெஸ்ட் எடுக்கணும்னுகிறது தான் உனக்கு நான் கொடுக்கிற வேலை...முதலாளி சொல்வதை அப்படியே செய்தால் மட்டும் தான் இங்கே உனக்கு வேலை நியாபகம் இருக்கட்டும்.”கைகளை கட்டிக்கொண்டு அமர்த்தலாக பதில் சொன்னான்.

 

‘எப்படி பேசறான் பார்...திமிர் பிடித்தவன்...எல்லாம் இந்த அண்ணனை சொல்லணும்.ஊரில் உதவி செய்ய வேறு யாருமே இல்லையா? இவன் தான் கிடைத்தானா?என்று மனதுக்குள் அண்ணனை திட்டி தீர்த்தாள்.

 

அவளின் முகத்தில் இருந்த அவளது மனதை படித்தவன் ஒன்றும் பேசாது அங்கிருந்து கிளம்பி விட்டான்.இது முதல் நாள் தானே...இன்றைக்கு இது போதும்.ரொம்பவும் அவளை சீண்டக் கூடாது என்று நினைத்தவன் அத்தோடு  பேச்சை முடித்துக் கொண்டான்.

 

 

 

 

Post a Comment

புதியது பழையவை