Kadhal kathakali tamil novels 21

 

 

 

 

 

 

 

அத்தியாயம்  21

எவ்வளவு நேரம் அழுதாளோ தெரியாது.விடிய விடிய அழுது கொண்டே இருந்தாள். இரவு முடிந்து பொழுதும் விடிந்து விட்டது.அதை அவள் உணர்ந்தாள் இல்லை.இரவு முழுக்க துடைக்க துடைக்க கண்ணீர் வந்த வண்ணம் இருந்தது.இனி இங்கே இருக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தவள் விடியலின் போது இங்கிருந்து கிளம்பி விடுவது தான் நல்லது என்ற முடிவுக்கு வந்து இருந்தாள். கதவு நாசுக்காக தட்டும் ஒலியில் முயன்று குரலை சமப்படுத்திக் கொண்டு பேசலானாள்.

 

“எனக்கு டிபன் எதுவும் வேண்டாம் அக்கா...எனக்கு பசிக்கலை...தலை வலிக்குது...கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும்.” என்று குரலை சரி செய்து கொண்டு ஒருவாறு கோர்வையாக சொல்லி முடித்தாள்.

 

மீண்டும் அறைக்கதவு தட்டவும், ‘ இது என்னடா தொல்லையா இருக்கு...சாப்பாடு வேண்டாம்னு சொன்னா விட வேண்டியது தானே’ என்று எரிச்சலுடன் கதவை திறந்தவள் கதவின் வாசலில் நின்றவனை பார்த்ததும் உடனே கதவை வேகமாக சாத்த முயற்சித்தாள்.

அதை சுலபமாக தடுத்துவிட்டு அறையின் உள்ளே வந்து அங்கே இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து கொண்டு, “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்...தேவை இல்லாம கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாம இருந்தால் சொல்ல வந்ததை சொல்லிவிட்டு நானும் கிளம்பி விடுவேன்.இல்லை நான் கத்தி தான் தீருவேன்னு நீ சொன்னால் நன்றாக கத்து...அதற்கு முன் நேற்று மாலை நடந்ததையும் கொஞ்சம் நியாபக படுத்திக் கொண்டு பிறகு கத்துவதா வேண்டாமா என்று யோசித்துக் கொள்....” தெளிவான குரலில் உறுதியோடு சொன்னான் அபிமன்யு.

 

மறுபடியும் ஆத்திரத்தில் கத்த வாயை திறந்தவள் அவனின் குரலில் தெரிந்த உறுதியில் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

 

“என் மேல் உனக்கு இப்பொழுது கோபம் இருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும்...நான் ஏதோ ஆத்திரத்தில் அப்படி நடந்து கொண்டேன்...இனி அப்படி நடக்காது.இதை எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் நாளை முதல் நீ வந்து உன்னுடைய வேலையை பார்..நான் எந்த விதத்திலும் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்.”

“நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்.இனி இங்கே இருக்க எனக்கு விருப்பம் இல்லை” எங்கோ பார்வையை பதித்தபடி பேசலானாள் சஹானா.

 

“நான் தான் இனி இப்படி நடக்காது என்று உறுதி கூறுகிறேனே சஹானா ... இன்னும் என்ன? நான் உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா? நீ அதை தான் எதிர் பார்க்கிறாயா? சொல்...உன்னிடம் மன்னிப்பு கேட்பதால் நான் ஒன்றும் குறைந்து போய் விட போவதில்லை...என்னை மன்னித்து விடு சஹானா...போதுமா?இனியாவது ஊருக்கு கிளம்பும் யோசனையை விட்டு விடு.”கெஞ்சுதலாக பேசினான் அபிமன்யு.அவனுக்கும் தான் செய்த செயல் தவறு என்ற குற்றஉணர்வு நெஞ்சை கீறி ரணமாக்கி இருந்தது.

“இல்லை.... நீங்கள் எப்போ எப்படி மாறுவீங்கனு சொல்ல முடியாது... நினைச்சு நினைச்சு பேசுவீங்க... நான் ஊருக்கு போறேன்”அழுகை அவளின் குரலில் லேசாக எட்டிப்  பார்த்தது.

 

“இதோ பார் சஹானா... நான் நடந்து கொண்ட முறை தவறு தான் உன்னை பொறுத்தவரை...” என்று கூறியவன் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தான். “ஆனால் அதற்கு நான் மட்டும் காரணம் இல்லை என்பது கொஞ்சம் அமைதியாக இருந்து யோசித்து பார்த்தால் உனக்கு நன்றாக புரியும்.

இப்பொழுது கூட அன்று நடந்த நிகழ்வுக்கு நான் உணமையிலேயே வருந்துகிறேன்.உன்னுடைய அனுமதி இல்லாமல் அப்படி நடந்து கொண்டதற்காக மற்றபடி உன்னிடம் நன்றாக கவனித்துக் கொள் சஹானா  நான் காதலிக்கும் உன்னிடம்,நான் காதலியாக மனதில் ஏற்றுக் கொண்ட உன்னிடம் அப்படி நடந்து கொண்டதில் எனக்கு எந்த விதமான தவறும் இருப்பதாக தோன்றவில்லை.அதே நேரத்தில் நீ இன்னும் என்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளாத நிலையில் அப்படி அத்துமீறி நடந்து கொண்டது மிகப்பெரிய தவறு தான்”

 

“உங்ககிட்ட வேலை பார்க்க எனக்கு பிடிக்கலை.நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு உங்க எண்ணத்தை பத்தி மட்டும் தான் உங்களுக்கு நினைப்பு....நானோ என்னுடைய உணர்வுகளோ உங்களுக்கு முக்கியம் கிடையாது.இதை பற்றி மேலும் மேலும் வாதாட எனக்கு விருப்பமோ தெம்போ இல்லை .நான் ஊருக்கு போவதாக ஏற்கனவே முடிவு செய்து விட்டேன்.” சோர்வாக வந்தது வார்த்தைகள்.

 

“சரி ஊருக்கு போய் என்ன செய்வதாக உத்தேசம்?”

 

‘ஊருக்கு போய் என்ன செய்வது மீண்டும் அங்கே போனால் திரும்பி வர முடியுமா? அதற்கான வாய்ப்பு தான் மறுபடி ஒருமுறை தனக்கு கிடைக்குமா?’ உள்ளம் அதிர அப்படியே துவண்டு போய் கட்டிலில் அமர்ந்து விட்டாள் சஹானா.

“பதில் சொல் சஹானா...ஊருக்கு போய் என்ன செய்வதாய் இருக்கிறாய்?”

 

..................

 

“இனி நானாக உன்னை தேடி வந்து என்னுடைய காதலை சொல்லி உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்.நீ உன் போக்கில் இங்கே இருக்கலாம்.வீணாக பிடிவாதம் பிடிக்காதே சஹானா.உன் அண்ணன் எதற்காக அரும்பாடுபட்டு உன்னை இங்கே அனுப்பி வைத்தான் என்பதை மறந்து விடாதே”

அபிமன்யுவின் கடைசி வாக்கியத்தில் திடுக்கிட்டு போய் நிமிர்ந்து அவனை பார்த்தாள் சஹானா.

 

‘இவனுக்கு தெரியுமா?...நான் சென்னை வந்ததின் உண்மையான நோக்கம்...இல்லை கண்டிப்பாக தெரியாது.அண்ணன் இவனிடம் சொல்லி இருக்க மாட்டார்.இவன் பொய் சொல்லி என்னை ஏமாற்ற பார்க்கிறானோ’ என்று அவனின் கண்களை உற்று நோக்கினாள்.

 

அவளின் பார்வையை கொஞ்சமும் தயங்காமல் எதிர் கொண்டவனின் விழிகளில் தெரிந்த உண்மை சஹானாவை முகம் கன்ற செய்தது.

 

“எனக்கு தெரியும் சஹானா...உன் அண்ணன் என்னிடம் எல்லாவற்றையும் சொன்ன பிறகு தான் உனக்கு இங்கே தங்க நான் அனுமதி அளித்தேன்.அந்த நிமிடத்தில் இருந்து உனக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தெளிவாக யோசித்து உனக்காக எல்லாவற்றையும் நானே ஏற்பாடு செய்து வைத்து விட்டேன் அதை பற்றி சொல்வதற்காக தான் உன்னை நேற்று அங்கே அழைத்து சென்றேன்.அதற்குள்...” அபிமன்யுவின் குரலில் உண்மையான வருத்தம் தெரிந்தது.

“அண்ணன் உங்ககிட்ட என்ன சொன்னார்?” தன்னுடைய முக கன்றலை அவனுக்கு காட்டக் கூடாது என்று முகத்தை லேசாக திருப்பியவாறு கேட்டாள் சஹானா.

 

அவள் முகத்தை காட்டாவிட்டால் அவனுக்கு தெரியாதா என்ன? ஆனால் அதை பற்றி பேசி மேலும் அவளை குன்ற வைக்கவும் மனம் இல்லாமல் அவளின் கேள்விக்கு பதில் அளித்தான் அபிமன்யு.

 

“நான் தான் எல்லாத்தையும் சொல்லிட்டார்னு சொல்றேன்ல சஹானா.ஏன் மறுபடி கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறாய்? ஏற்கனவே நான் செய்து வைத்த அதே ஏற்பாடு தான் அதில் இப்பொழுது சில சின்ன மாறுதல்கள் மட்டும் தான்.மற்றபடி நான் போட்ட திட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை.நாளை முதல் நீ அகாடமிக்கு வருகிறாய்... உனக்கு பிரியப்பட்ட பரதத்தை நாளை முதல் கற்றுக் கொள்ளத் தான் போகிறாய்.” என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி சொன்னான்.

 

‘அப்படியானால் இவனுக்கு எல்லா விஷயமும் தெரிந்து தான் இருக்கிறது.இது அத்தனையும் தெரிந்த பின் இவன் என்னுடைய குடும்பத்தை பற்றி என்ன நினைப்பான்?இவன் முன்னால் என்னுடைய குடும்பம் தரம் தாழ்ந்து போவதா? இந்த அண்ணன் ஏன் இவனிடம் எல்லாவற்றையும் சொன்னார்?இப்பொழுது இவன் செய்யும் உதவிகளை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா?இவனின் பேச்சை நம்பவும் முடியவில்லை நம்பாமல் ஊருக்கு கிளம்பினால் அதன் பிறகு?’ என்று நினைத்தவளின் மனக்கண்ணில் வந்து நின்றது தாயின் கனிவு தவழும் சாந்தமான முகம் மட்டுமே. தாயிற்காக, தாயின் மரியாதையை காக்க ,தான் இதை செய்தே ஆக வேண்டும் என்ற உண்மை அவளின் முகத்தில் அறைந்தது.

 

‘சரி இப்பொழுது இந்த இடத்தை விட்டு கிளம்புவதால் மட்டும் தன்னுடைய பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்து விடுமா? இல்லையே...ஊருக்கு போனதும் அண்ணன் மீண்டும் போராட வேண்டும்.அதன் பிறகு மறுபடியும் இது போல ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் அப்படி கிடைத்தாலும் அங்கும் இன்று அபிமன்யு தன்னிடம் நடந்து கொண்டதை போல வேறு ஒரு பொறுக்கி நடந்து கொள்ள மாட்டான் என்று என்ன நிச்சயம்.

இப்படி பயந்து ஓடுவது என்று முடிவு செய்து விட்டால் எத்தனை பேருக்கு தான் பயந்து ஓடுவது?எங்கே ஓடுவது? மீண்டும் மீண்டும் அதே வீட்டிற்கு தான் சென்றாக வேண்டும்.அப்படி ஓடி ஒளிவதற்கு பதிலாக ஒருமுறை இங்கேயே இருந்து வந்த காரியத்தை முடித்துக்கொண்டு சென்றால் என்ன?’

 

ஒரு நிமிடம் கண்ணை மூடி சிந்தித்து பின் ஆழ்ந்து ஒரு முறை மூச்சை விட்டுக் கொண்டவள், “ நான் நாளையில் இருந்து வருகிறேன்.இன்று ஒருநாள் என்னை தனியாக விடுங்கள்” என்று சொன்னவள் அபிமன்யுவை திரும்பியும் பாராமல் ஜன்னலின் அருகே நின்று வெளிவானை வெறிக்க தொடங்கினாள்.கண்களில் இருந்து கண்ணீர் அவளை அறியாமல் வழியத் தொடங்கியது.

கொஞ்ச நேரம் நின்று அவளின் கண்ணீரை துடைக்க நீண்ட கைகளை கட்டுபடுத்திக் கொண்டவன் அதற்கு மேலும் அங்கே இருந்தால் தன்னையும் அறியாமல் எதையாவது செய்து அவளை வருத்தி விடுவோமோ என்ற எண்ணத்தில் மெதுவாக அங்கிருந்து நகர்ந்து விட்டான் அபிமன்யு.


Post a Comment

புதியது பழையவை