அத்தியாயம் 20
நேசமணி சொன்ன அனைத்தையும்
கேட்ட அருந்ததிக்கும், கண்ணனுக்கும் அக்னி புத்ரனின் மீது மரியாதை வந்தது. மனைவி
அவளுக்கோ அவன் மீது இரக்கமும் எழ... அவனை முதலில் சந்தித்த நாட்களில் மனக்கண்ணில்
கொண்டு வந்தாள். வேண்டுமென்றே தான் அனைத்தையும் செய்து இருக்கிறான் என்பது இப்பொழுது
அவளுக்கு தெளிவாக புரிந்தது.
நாயை விட்டு துரத்தியதும், அவளை
அடித்ததும் அவள் நினைவில் வர இப்பொழுது அவன் முன்கதையை கேட்டதனால் ஒன்றும் அது
குறைந்து விடவில்லை. அது தனிக் கதை தான். இருந்தாலும் அவளுக்கு இப்பொழுது அவன்
மீது இருக்கும் கோபம் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்திருந்தது.
அவர்கள் பேசிக்கொண்டே
அக்னியின் பெற்றோர்களின் வீடு வரை வந்திருக்க, அவர்களை அப்படியே அனுப்ப மனமில்லை
நேசமணிக்கு.
“இவ்வளவு தூரம் வந்துட்டு
இப்படியே போறதா? உள்ளே வந்துட்டு தான் போகணும் மருமகளே.”
“மாமா... தப்பா
நினைக்காதீங்க... எங்களுக்கு கல்யாணம் ஆகி நாங்க இரண்டு பேரும் ஒண்ணா வர்றது தானே
முறை... ப்ளீஸ்!” என்று கேட்க... அவள் சொல்வது புரிந்தாலும் ஏதோவொன்று அவரை
தடுத்தது.
“சரிமா... நீ உள்ளே வர
வேண்டாம். ஆனா கொஞ்சம் இப்படியே இரு.. வர்றேன்”என்றவர் தன்னுடைய பொருட்களை கூட
சேகரிக்காமல் வீட்டுக்குள் அவசர கதியில் ஓடினார்.
‘ஏன் இத்தனை வேகம்?’ என்று
மற்றவர்கள் கேள்வியாக பார்க்க...உள்ளே சென்றவர் சக்கர நாற்காலியில் வைத்து
சுபத்ராவை தள்ளிக்கொண்டு வர... அதுவரை காரில் அமர்ந்திருந்த இருவரும் வேகமாக
வெளியே வந்தார்கள்.
அக்னி அப்படியே தன்னுடைய தாயை
கொண்டு பிறந்திருந்தான். சுபத்ராவின் வாய் ஒரு பக்கம் லேசாக கோணி இருந்தது. அவரால்
எழுந்து நடமாட முடியவில்லை போலும். கண்கள் மட்டும் நிறுத்தாமல் கண்ணீரை பொழிந்த
வண்ணம் இருந்தது.
முதல்முறை பார்க்கும் மருமகளை
ஆசை தீர அவர் பார்த்த பார்வை சொன்னது மகன் மீது அவர் வைத்திருக்கும் அன்பை.
அவருக்கு பேச்சு வரவில்லை
போலும். ‘உள்ளே வா’ என்பதாக தலையையும், கையையும் ஒரு பக்கம் லேசாக இழுத்து
சொன்னவரைப் பார்க்க அவளுக்கு பாவமாக இருந்தது. ஏற்கவும் முடியாமல், மறுக்கவும்
தெரியாமல் திணறினாள் அருந்ததி.
“விடு சுபா... மருமக... உன்
பிள்ளையோட வீட்டுக்கு வரணும்னு ஆசைப்படுது” என்று சொல்ல... அவர் கண்களில் இருந்து
இன்னுமாய் கண்ணீர் வழிந்தது.
கணவரிடம் ஏதோ சைகையில்
சொல்ல... ஆமோதிப்பாய் தலை அசைத்தவர் வீட்டினுள் சென்று ஒரு தாம்பாள தட்டில்
பட்டுப்புடவை, பூ வைத்து எடுத்து வர அதை வாங்குவதா வேண்டாமா என்று அவள் தடுமாற
கண்ணன் அவளது கையை அழுத்தி வாங்குமாறு சொன்னான்.
“நீ வருவன்னு நான்
எதிர்பார்க்கல மா... இது நீ எப்பவாவது இங்கே வந்தா கொடுக்கலாம்னு வாங்கி வச்சது...
வீட்டு மருமகளை வெறுங்கையோட அனுப்ப மனசு வரலை... மறுக்காம வாங்கிக்கணும்”
“என்ன மாமா... நான் அத்தையோட
நகை ஒன்னு, இரண்டை ஆட்டையை போடலாம்னு நினைச்சேன். நீங்க வெறும் புடவையோட அனுப்பி
வைக்க பார்க்கறீங்களா?” என்று கேலி பேசி சூழலை இலகுவாக்கினாள்.
கண்ணனும் அங்கே இருக்க...
கேட்க வேண்டுமா? சூழலை அழகாக கையாண்டான். எல்லாரையும் சிரிக்க வைத்து மேலும் சில
மணி நேரம் அவர்களுடன் பேசி விட்டு மனதே இல்லாமல் இருவரும் அங்கிருந்து
கிளம்பினார்கள்.
சில மணி நேர பயணம் தான். ஏனோ
இருவரும் பயணம் முழுக்க ஒரு வித மௌனத்தில் கழித்தனர். இன்னும் சற்று தூரத்தில்
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து ஊருக்குள் சென்று விடுவார்கள்.
அருந்ததியின் மனம் முழுக்க
அக்னியை சுற்றியே ஓடிக் கொண்டிருந்தது. கண்ணன் இவர்கள் இருவரையுமே நினைத்து
அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனையில் இருந்த பொழுது, அவர்களின் காரை மறித்தபடி
இன்னொரு ஸ்கார்பியோ வந்து நின்றது.
என்ன ஏதென்று உணரும் முன்னரே
அதிலிருந்து முகமுடி அணிந்த மனிதர்கள் வேகமாக இறங்க, நொடியில் ஆபத்தை உணர்ந்த
கண்ணன் போனை எடுத்து யாருக்கோ அழைக்கும் முன் அதை தட்டி விட்டவர்கள் அவனை தள்ளி
விட்டு, அருந்ததியை இழுத்துக்கொண்டு சென்று அவர்கள் வந்த வேனினுள் தள்ள முயல,
பின்னால் யாரோ கத்தும் சத்தம் கேட்டு திரும்பிய அருந்ததி வாயை பிளந்து நின்றாள்.
அங்கிருந்தவர்களை அசால்ட்டாக
அடித்து வீழ்த்திக் கொண்டிருந்தவன் கண்ணனே தான்.
சிறுவயதில் இருந்து சிரிக்க
சிரிக்க பேசும் கண்ணனா இவன்! திறந்த வாயை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்
அருந்ததி.
அவர்கள் ஆறு பேரையும்
அடித்தவன் அவர்கள் கைகளை அவர்களின் சட்டையை வைத்தே கட்ட முயல அந்த நேரம் இன்னொரு
காரில் இருந்து நான்கு பேர் இறங்கினார்கள். அடுத்து இவனுங்க வேறயா? என்பது போல
சலித்துக் கொண்டு கண்ணன் பார்க்க, அவர்களோ கீழே கிடந்த ஆட்களை தாங்கள் கொண்டு வந்த
கயிறின் மூலம் கட்டி அருந்ததியின் அருகில் பவ்யமாக வந்து நின்றார்கள்.
“சாரி மேடம்... வர்ற வழியில்
வண்டி கொஞ்சம் ரிப்பேர் ஆகிடுச்சு” என்று சொன்னவர்களை புரியாமல் பார்த்தாள்
அருந்ததி.
“யார் நீங்க எல்லாம்?”
“நாங்க உங்களோட
பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டவங்க மேம்”
“எ... என்னோட பாதுகாப்பா?
எனக்கு என்ன ஆபத்து?” அவளையும் அறியாமல் தொண்டையில் ஏதோ சிக்கியதைப் போலிருந்தது.
“...”
“சொல்லக் கூடாதா? இல்லை
உங்களுக்கே தெரியாதா?” என்று கேட்ட கண்ணனின் கேள்விக்கும் அவர்களிடம் இருந்து எந்த
பதிலும் வரவில்லை.
“சரி அக்னி ப்ரோ கிட்டே தகவல்
சொல்லிட்டீங்களா?” என்று கேட்க இப்பொழுது அதிர்வது அருந்ததியின் முறையானது.
"அவரா... அவரா? இவங்க
மூலமா என்னை எதுக்கு பாதுகாக்கணும்? அதுவும் அவர்..."
' அவருக்குத் தான்
என்னைப் பிடிக்காதே’அருந்ததிக்கு இன்னும் நம்பிக்கை இல்லை.
அவன் அவளை மனுஷியாகக் கூட
பார்க்க மாட்டானே.
“காரணம் எனக்குத் தெரியாது...
ஆனா இவங்களை அனுப்பினது ப்ரோ தான்... இல்லைன்னு இவங்களை சொல்ல சொல்லு
பார்க்கலாம்”உறுதியாக தெரிவித்தான் கண்ணன்.
இப்பொழுதும் அவர்கள் மௌனம்
காக்க அதுவே அருந்ததிக்கு உண்மையை உணர்த்த மனதின் மூலையை அழுத்திக் கொண்டிருந்த
ஏதோவொரு பாரம் தன்னை விட்டு விலகி செல்வதைப் போன்றதொரு தோற்றம்.
‘நெருப்பு ஆபிசர் வெளியே விறைப்பா இருக்கிற மாதிரி காட்டிகிட்டாலும்
உள்ளுக்குள்ளே என்மேல அக்கறை இருக்கு போல’ தனக்குள் மூழ்கி இருந்தவளை கலைத்தது
போனின் ஒலி.
“சார் மேடம் சேப்(safe)..
அந்த ஆளுங்களை கட்டி வச்சு இருக்கோம். என்ன செய்யணும்?”
அக்னி பதில் சொல்லும் முன்
போனை அவர்களிடம் இருந்து பறித்தான் கண்ணன்.
“ப்ரோ நாங்க வீட்டுக்குத்
தான் வர்றோம். அங்கே வந்து பேசலாம். கேள்விக்கு பதில் கிடைக்கும் தானே?
கிடைக்கணும்” என்று அழுத்தமாக சொன்னான்.
அவனின் தொனியே நீ சொல்லியே ஆக
வேண்டும் என்று சொல்ல போனில் அந்தப்
பக்கம் இருந்த அக்னி மௌனமானான்.
“அப்புறம் ப்ரோ... நீங்க
காப்பாத்த அனுப்புன ஆளுங்க கொஞ்சம் லேட்டா தான் வந்தாங்க.. கார் ரிப்பேராம்.
அடுத்த முறை நல்ல காரை கொடுத்து அனுப்புங்க...” என்று சொல்ல அக்னியின் இதழ்
கடையோரம் துடித்தது.
“இந்த தர்பூசணிக்காக நான்
தான் சண்டை போட வேண்டி இருந்தது. கை, கால் எல்லாம் வலிக்குது. நாலு ஆப்பிளை காட்டி
கூப்பிட்டு இருந்தாலே பின்னாலேயே போய் இருப்பா... இவளுக்குப் போய் டெம்ப்போ
எல்லாம் வச்சு கடத்தி இருக்கானுங்க... முட்டா பசங்...” என்று அவன் பேசுவதும் அதைத்
தொடர்ந்து அருந்ததி அவனை அடிப்பதும் கேட்க எவ்வளவோ கட்டுப்படுத்தியும் முடியாமல்
அக்னிபுத்திரன் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.
அவள் அடித்து ஓயும் வரை இங்கே
இவன் சிரிப்பு ஓயவில்லை.
“சீக்கிரம் வந்து சேருங்க”
என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டான் அக்னி. பக்கத்தில் திரும்பி பார்த்தவன்
அவனையே அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்த நீமோவை கை நீட்டி அழைத்தான்.
“என்னடா பார்க்கிற... ரொம்ப
நாள் கழிச்சு சிரிக்கிறேன் நீமோ...ஜெனிபர் இறந்ததுக்கு அப்புறம் சிரிச்ச மாதிரியே
நியாபகம் இல்லை எனக்கு”
அவன் பேசுவதை எல்லாம்
கேட்டுவிட்டு ஏதோ புரிந்தார் போல தலையை ஆட்டி தன்னுடைய மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினான் நீமோ.
எதையோ நினைத்து அவன்
உதடுகளில் மெல்லியதொரு புன்னகை இருந்தது. எல்லாமே சில நொடிகள் தான். அடுத்து
வந்த கணங்களில் அவன் உதடுகள் வழக்கம் போல இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது.
‘என்னோட பொண்டாட்டின்னு
தெரிஞ்சும் அவ மேல கை வைக்கிற தைரியம் யாருக்கோ வந்து இருக்கு... யார் அது...
கையில சிக்கட்டும்...மகனே ஏன்டா பிறந்தோம்னு உன்னை நினைக்க வைக்கல...’
மனதுக்குள் சூளுரைத்துக்
கொண்டவனின் முகம் அத்தனை கடுமையாக இருந்தது அப்பொழுது.
வீட்டிற்குள் நுழைந்ததும்
அருந்ததியின் கண்கள் அவளையும் அறியாமல் அக்னியைத் தான் தேடியது. அவர்கள் கிளம்பும்
பொழுது எப்படி இருந்தானோ அதே நிலையில் சோபாவில் அமர்ந்து லேப்டாப்பில் எதையோ
நோண்டிக் கொண்டிருந்தான்.
இப்பொழுதும் அவன் பார்வை
தன்னை கண்டு கொள்ளாததை அவள் அறிந்தாலும் அதை எல்லாம் கண்டு அவளுக்கு வருத்தம்
தோன்றவில்லை. அவனையே இமைக்காமல் பார்த்தபடி அவனுக்கு எதிரில் இருந்த சோபாவில்
அமர்ந்தாள். அவளை கண்டு கொள்ளாமல் இருக்க முயற்சித்தாலும் அவளது துளைக்கும் பார்வை அவனை இம்சிக்கத் தொடங்கியது. இதற்கு
மேல் தாங்காது எழுந்து சென்று விடலாம் என்று முடிவு செய்து அவன் எழும் பொழுது அவன்
பாதையை மறித்துக்கொண்டு வந்து நின்றான் கண்ணன்.
“அதுக்குள்ளே என்ன அவசரம்
ப்ரோ... உட்காருங்க உங்க கிட்டே கொஞ்சம் பேசணும்...”
“என்கிட்டே பேச என்ன இருக்கு”
“பேச ஒன்னுமில்லை... சில
விஷயங்களை கேட்டு தெளிவு படுத்திக்கணும்”
“இவ்வளவு தூரம் கண்டுபிடிச்ச ஐபிஎஸ்
கண்ணன் சாருக்கு இன்னும் என்ன சந்தேகம்?” என்று கேட்க அன்றைய தினத்தில் இரண்டாவது
முறையாக அதிர்ந்தாள் அருந்ததி.
“கண்ணா நீ போலீசாடா...
அதுவும் ஐபிஎஸ்?” திறந்த வாயை இன்னமும் மூடவில்லை அவள்.
"இவ ஒருத்தி
பொழுதுக்கும் அனகொண்டா மாதிரி வாயை பிளந்துகிட்டே இருப்பா... ஏய்... உன்னோட கல்யாணத்தப்போ நான் போலீஸ்
அகாடமி ட்ரைனிங்ல இருந்தேன். அதான் உடனடியா கிளம்பி வர முடியல" என்றான்
அருந்ததியை சமாதானம் செய்யும் நோக்கத்துடன்.
"ஏன்டா என்கிட்ட
முன்னாடியே சொல்லல..."
"நீ இப்படி என்னையே
நோண்டி நோண்டி கேள்வி கேட்டுகிட்டு இரு... உன் புருஷன் நைசா தப்பிச்சு ஓடிருவார்.
பரவாயில்லையா?
என்று
கேட்க... பட்டென்று வாயை மூடிக்கொண்டு அக்னியிடம் பார்வையை செலுத்தினாள். அவனோ லேப்டாப்பை
விட்டு இம்மியும் பார்வையை நகர்த்தவில்லை.
"சொல்லுங்க ப்ரோ"
"என்ன சொல்லணும்?" என்று கேட்க கண்ணன்
கொஞ்சம் கோபமாக திரும்பி அருந்ததியை பார்த்தான்.
"என்னை ஏன்டா
முறைக்கிற"
"இந்த மனுசன் உனக்கு
தானே தாலி கட்டி இருக்கார். என்னை ஏன்டி நடுவுல மண்டையை பிச்சுக்க வைக்கறீங்க?
நீயும் வாயை திறந்து பேச மாட்டேங்கிற... திங்கிறதுக்கு மட்டும் தான் வாயை திறப்பியா? ஒவ்வொரு வீட்டிலையும்
பாரு...
பொண்டாட்டிங்க
எல்லாம் அவங்கவங்க புருசனை வச்சு செய்வாங்க. நீ என்னமோ வாயில் புண் வந்த
மாதிரி பேசவே மாட்டேங்கிற" என்று ஏகத்துக்கும் திட்டித் தீர்த்தான்.
"என்ன கண்ணா நீயும்
என்னை திட்டுற"
என்றாள்
முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு...
"இப்பவும் என்கிட்ட
தான் கேள்வி கேட்பியா?" என்று முறைக்க... அவசரமாக பார்வையை அக்னியின் புறம்
திருப்பினாள்.
"நீங்களா என்னோட
பாதுகாப்புக்கு ஆள் அனுப்பி வச்சீங்க"
"உனக்கு எதுக்கு நான்
ஆள் அனுப்பறேன்"
என்று
அமர்த்தலாக சொல்ல இப்பொழுது அவள் பார்வை கண்ணனை பொசுக்கியது.
"அவளை காப்பாத்த வந்த
ஆளுங்க எல்லாம் நீங்க புதுசா ஆரம்பிச்சு இருக்கிற செக்யூரிட்டி கம்பெனி யூனிபார்ம்
தான் போட்டு இருந்தாங்க"குறி பார்த்து அடித்தான் கண்ணன்.
"யூனிபார்ம் போட்டு
இருந்ததாலேயே அவங்க என் கம்பெனி ஆள் ஆகிடுவாங்களா" எதிர்கேள்வி கேள்வி கேட்டு
அவன் போட்ட பந்தை நோ பால் ஆக்கினான் அக்னி.
"ஆனா அவங்க போனில்
பேசினது உங்களுக்கு தானே?" என்று மீண்டும் கிடுக்கிப்பிடி போட அதுவரை சோர்ந்து போய்
இருந்த அருந்ததியின் முகம் மீண்டும் ஆவலாய் அவன் முகம் பார்த்தது.
"என்னோட கம்பெனிக்கு
வந்த முதல் வேலையே தன்னோட பொண்ணை பத்திரமா பார்த்துக்க சொல்லி இவங்கப்பா கொடுத்தது
தான்.
அதை
தான் நானும் செய்றேன். பியூர்லி
அபிசியல்
(Purely
official) " என்று முகத்தில்
அடித்ததைப் போல சொல்லி விட்டு நகர
கண்ணனின் முகத்திலோ அதை நம்பியதற்கான அறிகுறியே இல்லை. அருந்ததி மெல்ல அங்கிருந்து
நகர்ந்து தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
'திமிர் பிடிச்சவன்...
ஒத்துக்கவே மாட்டான்...
பொழுதுக்கும்
நாய் கூடவே கொஞ்சிக்கிட்டு திரிஞ்சா இப்படித் தான்' என்று அவனை வசை பாடினாள்.
கண்ணனோ கிச்சனில் இருந்த
அக்னியை நெருங்கி,
“அந்த
ஆளுங்களை எங்கே வச்சு இருக்கீங்க? என்ன செய்ய போறீங்க"என்று கேட்க, அக்னியின் கண்களில்
கொளுந்து விட்டு எரிந்த தீ ஜூவாலை கண்ணன் பார்க்கும் முன்னே அணைந்து போனது.
"இட்ஸ் நன் ஆப் யுவர்
பிசினஸ்" என்று பற்களை கடித்துக் கொண்டே இறுக்கமாக சொல்லி விட்டு நகர
கண்ணனின் முகம் யோசனையானது.

கருத்துரையிடுக