அத்தியாயம் 21
விடியற்காலை நேரம் அக்னி அறையிலேயே தன்னுடைய தினப்படி உடற்பயிற்சியை
செய்து கொண்டிருந்தான். என்ன தான் கண்ணன் வீட்டில் இருந்தாலும் அருந்ததியை தனியே
விட்டு வெளியே கிளம்ப அவனுக்கு மனமில்லை. நேற்றைய தினம் கண்ணன் அவளை காப்பாற்றி
இருக்கலாம். ஆனால் எப்பொழுதும் இது சாத்தியம் இல்லையே.
‘நேற்று ஆறு
பேரை அனுப்பி வைத்தவர்கள் இன்று இருபது பேரை அனுப்பி வைத்தால் என்ன செய்வது?
கண்ணனால் அத்தனை பேரையும் சமாளிக்க முடியுமா?’ என்றெல்லாம் கேள்வி மூளைக்குள்
ஓடிக் கொண்டிருக்க வீட்டில் காலிங்பெல் ஒலித்தது.
‘இந்த நேரத்தில் யார்?’ என்று
யோசனையானவன் எதற்கும் இருக்கட்டும் என்று தன்னுடைய பிஸ்டலை இடுப்பில் சொருகிக்
கொண்டான்.
அவன் அருகில் வந்து நின்று
கதவை உற்றுப் பார்த்த நீமோ கதவுக்கு கீழே மோப்பம் பிடித்து விட்டு வாலை ஆட்ட...
யாரோ தெரிந்த நபர் என்பது உறுதியானது.
கதவை திறக்க வெளியே
அருந்ததியின் தந்தை சிவநேசன் நின்று கொண்டிருந்தார்.
‘இவர் எங்கே இந்த நேரத்தில்?’
என்ற கேள்வி தோன்றினாலும் எதுவும் பேசாமல் அவருக்கு வழிவிட்டு உள்ளே வருமாறு
கூறினான்.
“உங்களுக்கு போன் செஞ்சேன்
மாப்பிள்ளை... ரிங் போயிட்டே இருந்தது. நீங்க எடுக்கல. அதான் நேர்லயே
வந்துட்டேன்.” என்று ஏதோ தப்பு செய்து விட்ட குழந்தையைப் போன்ற அவரது பாவனையில்
அவனுக்கு கோபம் வர மறுத்தது.
போனை எடுத்து ஆராய்ந்தான்.
முன்தின இரவில் போனை
சைலண்டில் போட்டதை மீண்டும் மாற்ற மறந்து போய் இருக்க, இரவில் இருந்தே அவரிடம்
இருந்து ஏகப்பட்ட தவறிய அழைப்புகள்.
“வாங்க உட்காருங்க... என்ன
விஷயம்?”
“அது பாப்பாவையும்,
உங்களையும் மறுவீட்டு விருந்துக்கு கூட்டிட்டு போகணும். அதை சொல்லத் தான் நேத்துல
இருந்து முயற்சி செஞ்சேன். ஆனா..”
“எதுக்கு இதெல்லாம்
அனாவசியமா”
“முறைன்னு ஒண்ணு இருக்கே
மாப்பிள்ளை”
“இதை எல்லாம் நீங்க
செஞ்சாலும், செய்யலைனாலும் நானோ என்னை சேர்ந்தவங்களோ உங்களை கேள்வி கேட்க
போறதில்லை. அப்புறம் எதுக்கு இதெல்லாம்... பரவாயில்லை விட்டுடுங்க”என்று சொல்ல
அவனது முதுகுக்கு பின்னால் ஒரு அலறல் குரல் கேட்டது.
“அக்னி ப்ரோ... நான்
உங்களுக்கு என்ன பாவம் செஞ்சேன்... என்னை ஏன் இப்படி பழி வாங்கறீங்க?” என்று
கேட்டபடி சிவநேசனுக்கு அருகில் வந்து அமர்ந்தான் கண்ணன்.
“டேய்! கண்ணா.. எப்போடா
வந்த... நேரா நம்ம வீட்டுக்கு வராம இங்கே வந்து என்ன செய்ற?” புதிதாக கல்யாணம்
ஆனவர்களுக்கு இடையில் இடைஞ்சலாக நிற்கிறானோ என்ற பயம் வந்தது அவருக்கு.
ஏற்கனவே இருவருக்குள்ளும்
இன்னும் சுமூகமான சூழல் இல்லை. அப்படி இருக்கையில் இவன் வேறு தொந்தரவு
கொடுக்கிறானோ என்ற பதட்டம் வந்தது.
அக்னி ஏற்கனவே கோபக்காரன்
இதில் இவன் வேறு திறந்த வாயை மூடாமல் பேசிக் கொண்டே இருப்பானே என்ற கவலையும்
வந்தது அவருக்கு.
“நான் நேத்து தான் வந்தேன்
மாமா... நம்ம பஞ்சாயத்தை எல்லாம் அப்புறமா வச்சுக்கலாம். நான் முதல்ல ப்ரோ கிட்ட
பேசிட்டு வர்றேன்”
“ப்ரோ... கல்யாணம்கிறது
ஆயிரம் காலத்துப் பயிர்... அதுலயும் இந்த மறுவீட்டு விருந்து எல்லாம் சும்மாவா...
பொண்ணு வீடு மாப்பிள்ளை வீட்டோட கலக்கணும். மாப்பிள்ளை பொண்ணு வீட்டோட பொருந்திப்
போகணும். அது மட்டும் இல்லாம மறுவீட்டு விருந்துக்குப் போறதைப் பத்தி நம்ம வள்ளுவர்
என்ன சொல்லி இருக்கார்னா...”
“உண்மையான காரணம் இன்னும்
வரலை.” என்றான் அக்னி அழுத்தமாக..
“ப்ரோ இந்த குந்தாணி
தினம் மூணு வேளையும் நூடுல்ஸ் தான் செஞ்சு கொடுக்கிறா. நாக்கு செத்து
கிடக்கேன்.”சிவநேசனின் காதுகளில் விழுந்து விடா வண்ணம் தன்னுடைய குரலை தாழ்த்தி
அவனது காதோரம் சென்று பேசினான் கண்ணன்.
“அவளும் அதையே தானே
சாப்பிடுறா” வெளிவரத் துடித்த புன்னகையை அடக்க முயன்றபடி பேசினான்.
“அந்த நாசமா போனவ சோறுன்னு
எழுதி வச்சா போதும். இலையையும் சேர்த்து முழுங்குவா... அவளும் நானும் ஒன்னா
பாஸ்... கொஞ்சம் கருணை காட்டுங்க”
அக்னி யோசிப்பது போல பாவனை
செய்ய அவனது சிந்தனையை இடைமறித்து பேசினான் கண்ணன்.
“மாமா வீட்டுக்குப் போனா ஒரு
இரண்டு நாள் நல்ல சோறு திங்கலாம். அப்படியே பஸ் பிடிச்சு ஊருக்கு ஓடிடுவேன் ப்ரோ.
போலீஸ் வேலையில் சேரப் போறவன் உடம்பை எவ்வளவு பிட்டா வச்சுக்கணும்.
இதுல வேற பாவி மக இன்னிக்கு
நெட்டில் பார்த்த எதையோ சமைக்கப் போறேன்னு சொல்லி இருக்கா... இன்னும் ஒரு நாள் இங்கே
இருந்தா இவ என்னை டெட் பாடியா ஆக்கிடுவா ப்ரோ.. ப்ளீஸ்!” என்று கெஞ்ச அவனது பாவனை
புன்னகையை வரவழைத்தாலும் இறுக்கமாகவே காட்டிக் கொண்டான் அக்னி.
“உங்களுக்கு ஹெல்ப் செய்றதால
எனக்கு என்ன பெனிபிட்?”
“பெனிபிட்...” அக்னியை
கேள்வியாய் பார்த்தான் கண்ணன்.
“அங்கே போனதும் அருந்ததி
கிட்டே பேசி டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து வாங்கித் தரணும்” என்றவன் கண்ணனின் முக
பாவனையை அளவிட... அவனோ ஒரு நிமிடம் அக்னியை கூர்ந்து பார்த்தான்.
“போற உசுரு நூடுல்ஸ்லயே
போகட்டும்” என்றவன் எழுந்து அறைக்குள் செல்வதற்கு முன், லேசாய் சரிந்து அக்னியின்
காதோரம் கிசுகிசுத்தான்.
“இப்போ என்கிட்டே சொன்ன
மொக்கை ஜோக்கை வேற யார்கிட்டயும் சொல்லி பல்ப் வாங்க மாட்டீங்கன்னு நம்புறேன்.
நான் போய் தூங்குறேன் மாமா... மாப்பிள்ளையும், மாமனாரும் பேசி ஒரு முடிவுக்கு
வந்துட்டு என்னை எழுப்புங்க” என்று சிவநேசனிடம் சொல்லி விட்டு விடைபெற முயன்றவன்
ப்ரேக் அடித்ததைப் போல நின்றான் அக்னியின் பேச்சில்.
“எத்தனை மணிக்கு அங்கே
வரணும்?”
“காலையில் 7 மணிக்கு நல்ல
நேரம்.. அப்பவே அழைச்சுட்டு போகலாம்னு தான் இவ்வளவு சீக்கிரம் வந்தேன்.”
“ஒன்னும் பிரச்சினை இல்லை ...
மணி இன்னும் ஆறு கூட ஆகலை. நான் கிளம்பிடுவேன். நீங்க உங்க பொண்ணை கிளம்ப
சொல்லுங்க” என்றவன் வழியில் நின்ற கண்ணனைப் பார்த்து லேசாய் இமை சிமிட்டினான்.
கண்ணனுக்கு தூக்கி
வாரிப்போட்டது.
‘ப்ரோ இப்போ என்னைப் பார்த்து
கண் அடிச்சாரா? இருக்காதே...’ என்று எண்ணியவன் அதே குழப்பத்துடன் அருந்ததியை
எழுப்பினான்.
கண்ணனின் குரலில்
எழுந்திராமல் அசிரத்தையாக தூக்கத்தை தொடர்ந்தவள் தந்தையின் குரலைக் கேட்டதும்
அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தாள்.
“அப்பா.. நீங்களா?” கண்களை
நன்றாக தேய்த்து விட்டுக் கொண்ட மகளை வாஞ்சையுடன் தலை கோதினார்.
“நானே தான் பாப்பா.. போ..
போயி கிளம்புடா”
“எங்கேப்பா?” அவளுக்கு
தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை.
“நம்ம வீட்டுக்குத் தான்
பாப்பா” என்று சொல்ல அவள் முகம் அதிர்ந்தது.
அக்னி வீட்டில் ஏதேனும்
ஏடாகூடமாக பேசி தன்னை ஒரேயடியாக அழைத்து
செல்வதற்கு வந்து இருக்கிறாரோ என்று பயந்து போனாள் அவள்.
“எதுக்குப்பா அங்கே எல்லாம்..
நான் வரலை” என்று தயங்கி சொல்ல அவளின் பாவனையை வைத்தே அவள் மனதை படித்து விட்டான்
கண்ணன்.
“ஹே! லூசு... உன்னையும்,
அக்னி ப்ரோவையும் மறுவீட்டு விருந்துக்கு அழைச்சிட்டு போக வந்து இருக்கார். லூசு
மாதிரி பேசாம நல்ல நேரம் முடியறதுக்குள்ளே கிளம்பு.” என்று அதட்டல் போட்டவன்
அறைக்கு வெளியே அக்னி சிவநேசனை அழைக்கும் குரல் கேட்கவும் அவரை தொடர்ந்து போகாமல்
அங்கேயே தேங்கினான்.
“அருந்ததி... உன்கிட்டே ஒரு
விஷயம் சொல்லணும்.. இல்ல கேட்கணும்” என்றான் தயங்கி தயங்கி...
“சொல்லணுமா? கேட்கணுமா?”
“அ... ரெண்டும் தான்..”
“முதல்ல கேளு.. அப்புறம்
சொல்லு” என்றவள் கொட்டாவி விட்டபடி மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.
“அக்னி ப்ரோ உன்கிட்டே க்ளோசா
எதுவும் நடந்து இருக்காரா?” என்று கேட்க அவளுக்கு சுத்தமாக அவன் என்ன கேட்க
வருகிறான் என்று புரியவில்லை.
“என்ன கேட்கிற... எனக்கு
ஒண்ணுமே புரியல...”
“ஹுக்கும்... உனக்கு
புரிஞ்சுட்டாலும்” என்று முணுமுணுத்தவன் குரலை கொஞ்சம் குறைத்து அவளிடம் பேசினான்.
“வந்து உன்கிட்டே ஆசையா...
ரொமாண்டிக்கா...” என்று இழுத்தவன் அதற்கு மேல் எப்படி கேட்பது என்று புரியாமல்
தயங்கினான்.
“அட நீ வேற கண்ணா.. அந்த பயர்
எஞ்சின் எப்பப் பார்த்தாலும் என்னை முறைச்சுக்கிட்டே தான் திரியும்.சிரிச்சு கூட
பேசுனது இல்லை. இதுல எங்கிருந்து ஆசையாஆஆஆ” என்று இழுத்து பேசியவளின் குரலின்
ஓரத்தில் அவளையும் அறியாமல் ஒரு துளி ஏக்கம் இருந்ததை கண்ணன் உணர்ந்து கொண்டான்.
“எனக்கு என்னவோ அவருக்கு வேற
ஏதோ பிரச்சினை இருக்கும்னு தோணுது.”
“அவருக்கு என்னடா
பிரச்சினை”குழப்பத்துடன் கேட்டாள் அருந்ததி.
“இப்போ இருக்கிற கால
கட்டத்தில் இதை பெரும்பாலும் யாரும் ஒரு பிரச்சினையா எடுத்துக்கிறது இல்லை தான்.
இதுவே உன்னோட அவருக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி தெரிஞ்சு இருந்தா கூட ஏதாவது
செஞ்சு இருக்கலாம். இப்போ என்ன செய்றது?” என்று அவன் தலையை சொறிய... அவன் பேச்சில்
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அம்மணி இன்னும் கொஞ்சம் குழம்பினாள்.
“உன்னோட கல்யாணத்துக்கு
முன்னாடி நான் அவரைப் பத்தி விசாரிச்சப்போ கூட இந்த மாதிரி இருக்குமோனு எனக்கு
தோணவே இல்லை. அந்த ஆங்கிளில் நான் விசாரிக்கவும் இல்லை” என்று இன்னமும் புரியாதது
போலவே பேசியவனை அடிக்க அறையில் ஏதேனும் பொருட்கள் தென்படுகிறதா என்று பார்வையிட்டாள்
அருந்ததி.
“நான் நேரா விஷயத்துக்கு
வர்றேன்... நீ கொஞ்சம் மனசை திடப்படுத்திக்கோ” என்று பீடிகை போட்டான்.
“சீக்கிரம் சொல்லித் தொலைடா
கொரங்கு”
“எனக்கு என்னவோ உன் புருசன்
கே(gay) வா இருப்பாரோன்னு தோணுது”
என்னவோ பெரிதாக சொல்லப்
போகிறான் என்று எண்ணி அவஸ்தையாய் இருந்தவள் கொட்டாவியை வெளியிட முயல , அவன் சொன்னதைக்
கேட்டு வந்த கொட்டாவி அப்படியே நின்று போனது.
“என்னடா சொல்ற!”என்றாள்
அதிர்வுடன்.
“நான் ஒண்ணும் ஆதாரம் இல்லாம
சொல்லல.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன் புருசன் என்னைப் பார்த்து கண் அடிச்சான்.
அப்போ அவன் அது தானே?” என்று கேட்க அருந்ததிக்கு தொடர்ந்து என்ன பேசுவது என்றே
புரியவில்லை.
“என்ன ஒண்ணும் சொல்ல
மாட்டேங்கிறே”
“ம்ச்... நீ சொன்ன
விஷயத்துக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்” என்றாள் கொஞ்சம் எரிச்சலுடன்.
“சரி... நல்லா யோசிச்சு
சொல்லு... அக்னி ப்ரோ உன்னைப் பார்த்து எப்பவும் கண் அடிச்சு இருக்காரா?”
“டேய்! லூசு.. அவருக்கு என்னை
பிடிக்கவே பிடிக்காது. கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறவர் என்னைப் பார்த்து எதுக்கு
கண் அடிக்கப் போறார்” என்று திட்டத் தொடங்க...
“எனக்கும் அதுதான் சந்தேகம்..
ஒருவேளை அவருக்கு பொண்ணுங்களே பிடிக்காம இருக்குமோ... அதனால தான் இதுவரை அவர்
உன்கிட்டே நெருங்கவே இல்லையோனு என்னோட உள்மனசுக்குள்ளே ஒரு பட்சி கூவுது”
“அந்த பட்சியை பிடிச்சு
குழம்பு வச்சு தின்னுடுவேன்... போடா லூசு மாதிரி உளறிக்கிட்டு...”
“அதெப்படி நீ அவ்வளவு உறுதியா
சொல்ற... உங்க இரண்டு பேருக்கு நடுவுல தான் ஒண்ணுமே நடக்கலையே”
அவனின் பேச்சையே உள்ளுக்குள்
அசை போட்டுக் கொண்டிருந்தவளுக்கு திருமணத்திற்கு முன் ஒருமுறை அக்னி அவளது அறைக்கு
வந்து அவளை தன்னுடைய அணைப்பில் வைத்திருந்த சில நொடிகள் கண் முன்னே வந்து போனது.
அந்த நொடி அவன் முகம் காட்டிய பாவனைகள்
இப்பொழுதும் கல்வெட்டாய் அவள் மனதில் பதிந்து இருக்க அவளையும் அறியாமல் அவள் முகம்
சிவந்து போனது.
“ஒய்! என்னடி மூஞ்சி கலர்
மாறுது.. அப்போ வெளியில் தெரியாம ப்ரோ ஏதோ வேலை செஞ்சு இருப்பார் போலவே... என்ன
விஷயம் சொல்லு” என்று அவளது தோள்களைப் பற்றி உலுக்க... அவனிடம் இருந்து எப்படி
தப்பிப்பது என்று எண்ணியவள் எதேச்சையாக விழி உயர்த்திப் பார்க்க... அங்கே கதவில்
சாய்ந்தபடி அக்னி நின்று கொண்டிருந்தான்.
‘ஆத்தி இவன் எப்போ வந்தான்னு
தெரியலையே’ என்று எண்ணியவள் நல்ல பிள்ளை போல முகத்தை வைத்துக் கொண்டு கண்ணன் அசந்த
நேரம் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.
‘ஷ்ஷ்ஷ்ப்ப்ப்பா.. நல்லவேளை
நான் தப்பிச்சேன்...’ என்று எண்ணியவள் குளித்து கிளம்பத் தொடங்கினாள்.
“ஏய்! தப்பிச்சா ஓடுற...
ஓடினா மட்டும் விட்டுடுவேனா... வெளியே வந்து தானே ஆகணும். இங்கேயே வெயிட் பண்ணி
கேட்டுட்டுத் தான் போவேன். நான் போலீஸ்காரன்.. என்கிட்டே இருந்து யாரும் தப்பிக்க
முடியா...” என்று பேசிக் கொண்டே திரும்பியவன் வாசலில் இருந்த அக்னியைப் பார்க்க
அவன் வாய் அத்தோடு பூட்டு போட்டுக் கொண்டது.
“குளிச்சு கிளம்பணும்னா
என்னோட ரூமை யூஸ் பண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டு போக வந்தேன்”
“ஈஈஈ... தேங்க்ஸ் ப்ரோ... இதோ
வந்துட்டேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக அவனைத் தாண்டி செல்ல முயல தன்னுடைய
கரங்களால் குறுக்கே அணை கட்டினான் அக்னி.
“நான் தான் உங்களுக்கு
தேங்க்ஸ் சொல்லணும்... அப்புறம் இனி என்னை ப்ரோனு சொல்லாதீங்க... உறவு முறை சரியா
வராது” என்று சாதாரணமாக சொல்ல கண்ணன் தான் குழம்பினான்.
“ப்ரோ சரி தானே அக்னி ப்ரோ...
அதுவும் இல்லாம நீங்க எதுக்கு எனக்கு தேங்க்ஸ் சொல்லணும்”
“இதுவரைக்கும் யாருமே
கண்டுபிடிக்காத... கண்டு பிடிக்க முடியாத ஒரு விஷயத்தை கரெக்ட்டா கண்டுபிடிச்சு
சொல்லி இருக்கீங்களே... அதுக்குத் தான்”
“நா... நானா? என்ன ப்ரோ”
“ நான் கே(gay)ன்னு கரெக்ட்டா
சொல்லிட்டீங்களே... இனி இதை மத்தவங்களுக்கு சொல்ற வேலை எனக்கு மிச்சம்.. நீங்களே
நேரம் பார்த்து எல்லாருக்கும் சொல்லிடுங்க”
அவனையே திறந்த வாய் மூடாமல்
பார்த்துக் கொண்டிருந்த கண்ணனை பார்த்து உள்ளுக்குள் பொங்கிய பெரும் சிரிப்பை உதட்டுக்குள்
மறைத்து கட்டுக்குள் கொண்டு வந்தவன் மேலும் தொடர்ந்தான்.
“அப்புறம் எனக்கு உன்னைப் பார்த்தா ப்ரோ பீல் வரலை.. ஸோ
அப்படி கூப்பிடாதே... வேணும்னா மாமான்னு கூப்பிடு... கொஞ்சம் கிக்கா இருக்கும்”
என்று சொன்னவன் அதிர்ந்து நின்ற அவனது தோளை ஒருமுறை அழுத்தி விட்டு நமுட்டு
சிரிப்புடன் வெளியேற... இங்கே கண்ணனோ உண்மையாகவே உறைந்து விட்டான்.
‘அப்போ அவனா நீ’

கருத்துரையிடுக